search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namakkal Child"

    நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். #RasipuramNurse #CBCID
    சென்னை:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக வெளியான ‘வாட்ஸ்-அப்’ உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் ராசிபுரத்தை சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி (வயது 50), அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி செவிலியர் பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர்களாக செயல்பட்ட அருள்சாமி (47), ஹசீனா (26) ஆகிய 6 பேரை ஏற்கனவே கைது செய்தனர்.

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செல்வி (29), லீலா (36) ஆகியோரும் புரோக்கர்களாக செயல்பட்டது தெரியவந்தது. அவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

    குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பரிந்துரை செய்தார்.



    இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.

    அதன்படி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குழந்தைகள் கடத்தல் தொடர்பாக 8 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்த வழக்கினை சி.பி.ஐ.சி.டி. விசாரணைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டார். எனவே இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RasipuramNurse #CBCID

    ×