search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Millet Recipes"

    • வாரத்தில் 2 முறையாவது கம்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    • சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

    தேவையான பொருட்கள்:

    கம்பு - ஒரு கப்,

    வெங்காயம் - 3,

    பச்சை மிளகாய் - 6,

    கடுகு - அரை ஸ்பூன்,

    உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன்,

    கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்,

    உப்பு - ஒன்றரை ஸ்பூன்,

    கறிவேப்பிலை - ஒரு கொத்து,

    கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து,

    எண்ணெய் - 6 ஸ்பூன்.

    செய்முறை:

    * கம்பை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்க வேண்டும். பிறகு அதை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடாய் சூடானதும் சலித்து வைத்த கம்பு மாவை சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும்.

    * வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    * மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஒரு கப் கம்பிற்கு இரண்டு கப் தண்ணீர் என தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    * தண்ணீர் நன்றாக கொதித்ததும் வறுத்து வைத்துள்ள கம்பு, உப்பு சேர்த்து கலந்து விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.

    * கம்பு வெந்ததும் இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டு இறக்கி பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான கம்பு உப்புமா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • பச்சை பயறு, கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம், புரதம் அதிகம் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு - அரை கப்

    பச்சை பயறு - முக்கால் கப்

    இஞ்சி - சிறிய துண்டு

    சீரக தூள்- அரை டீஸ்பூன்

    ப.மிளகாய் - 2

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    தக்காளி - 1

    வெங்காயம் - 1

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கேழ்வரகு, பச்சை பயறை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஊறவைத்த கேழ்வரகு, பச்சை பயறை மிக்சிஜாரில் போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சீரகத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான கேழ்வரகு பச்சை பயறு தோசை ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள கார சட்னி அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிறுதானியங்களை அடிக்கடி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்தலாம்.

    தேவையான பொருட்கள்:

    சாமை, திணை, வரகு, சிவப்பரிசி, பாசிப்பருப்பு தலா - 50 கிராம்,

    மோர் - 3 கப்,

    தண்ணீர் - 4 கப்,

    சின்ன வெங்காயம் - 8,

    சீரகம் - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - தேவையான அளவு,

    பச்சைமிளகாய் - 3,

    கடுகு - 1 டீஸ்பூன்,

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    * சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கொத்தமல்லிதழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சாமை, தினை, வரகு, சிவப்பரிசி, பச்சைப்பருப்பு இவற்றைத் தனித்தனியாக கடாயில் வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு குருணையாகப் பொடிக்க வேண்டும்.

    * இதில் 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும்.

    * கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்து சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கஞ்சியில் கொட்டவும்.

    * பிறகு அதில் மோர், கொத்தமல்லிதழை சேர்த்து நன்றாக கலந்து பருகவும்.

    * உடலுக்கு ஆரோக்கியம் இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்தலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கம்பில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
    • இரத்தசோகை உள்ளவர்கள் இந்த கஞ்சியை குடித்து வரலாம்.

    தேவையான பொருட்கள்:

    கம்பு - அரை கப்,

    கேரட் - 2,

    பீன்ஸ் - 50 கிராம்,

    காலிஃப்ளவர் - ஒன்று சிறியது,

    பட்டாணி - கால் கப்,

    பட்டை - 2,

    ஏலக்காய் - 4,

    கிராம்பு - 1,

    பிரியாணி இலை - 1,

    நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்,

    பூண்டு - 5 பல்,

    கடுகு - அரை ஸ்பூன்,

    மிளகு - அரை ஸ்பூன்,

    சீரகம் - அரை ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

    மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்,

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    எலுமிச்சை பழம் - பாதி அளவு,

    உப்பு - 2 ஸ்பூன்.

    செய்முறை:

    கேரட், பீன்ஸ், கொத்தமல்லி தழை, காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பினை நன்றாக சுத்தம் செய்து, ஊற வைத்துக் கொள்ளவேண்டும்.

    பூண்டை நசுக்கி கொள்ளவும்.

    ஊறவைத்த கம்பை குக்கரில் போட்டு அதோடு கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி, இரண்டு கப் தண்ணீர், மிளகு, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, இரண்டு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

    குக்கரில் பிரஷர் குறைந்ததும், காய்கறிகளில் சேர்ந்துள்ள பிரியாணி இலையை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, மற்ற பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் நசுக்கிய பூண்டை சேர்த்து தாளித்த பின்னர் அரைத்து வைத்துள்ள கஞ்சை சேர்த்து கொதிக்க விடவும்.

    கஞ்சி நன்றாக கொதித்தவுடன் இவற்றில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி விட வேண்டும்.

    அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான கம்பு வெஜிடபிள் கஞ்சி தயார் ஆகிவிடும்.

    கம்பு வெஜிடபிள் கஞ்சி பயன்கள்: கம்பு உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சியடைய செய்கிறது. கம்பில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது. இரத்தசோகை உள்ளவர்கள் இந்த கஞ்சியை குடித்து வர மிகவும் ஆரோக்கியமாக இருக்கமுடியும். தூக்கமின்மை, உடல் சோர்வு உடையவர்கள் இதனை சாப்பிட புத்துணர்ச்சி கிடைக்கும். குழந்தைகள் முடிகள் பெரியவர்கள் வரை இந்த கம்பு வெஜிடேபிள் கஞ்சியை அடிக்கடி குடித்து வர உடல் மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

    • கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
    • கொள்ளுவை ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    கொள்ளு - 1 கப்,

    அரிசி - 1/4 கப்,

    காய்ந்த மிளகாய் - 5,

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    தாளிக்க :

    எண்ணெய் - 1 டீஸ்பூன்,

    கடுகு - 1/4 டீஸ்பூன்,

    சீரகம் - 1/4 டீஸ்பூன்,

    சோம்பு - 1/4 டீஸ்பூன்,

    உடைத்த உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,

    வெங்காயம் - பாதி

    இஞ்சி - சிறிய துண்டு,

    பெருங்காயம் - சிறிதளவு

    செய்முறை:

    * வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கொள்ளு, அரிசி இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    * அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கரைத்து 2 மணிநேரம் புளிக்க வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    * சுவையான சத்தான கொள்ளு அடை தயார்.

    • சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்:

    சாமை - அரை கப்

    பயத்தம் பருப்பு - அரை கப்

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 2

    கேரட், பீன்ஸ் - 1/4 கப்

    இஞ்சி - பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்

    தேங்காய் பால் - 100 மில்லி

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

    தனியாத்தூள் - 1/4 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    தாளிக்க

    பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை,

    கடுகு - சிறிதளவு

    செய்முறை:

    சாமை அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    பயத்தம் பருப்பை வறுத்து கொர கொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், பீன்ஸ் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிய பின், அரை லிட்டர் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    பிறகு அதில் பயத்தம் பருப்பு, சாமை, மிளகுத்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். பிரஷர் குறைந்தும், மூடியைத் திறந்து தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பின்னர் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி உடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் சேர்த்து, உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சுவையான சாமை காய்கறி கஞ்சி தயார்.

    • டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு இது.
    • சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த உணவு சிறந்தது.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு - 1 கப்

    கொள்ளு - கால் கப்

    ஜவ்வரிசி - 2 டீஸ்பூன்

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கு

    நெய் அல்லது நல்லெண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    கேழ்வரகு, கொள்ளு, வெந்தயம், ஜவ்வரிசியை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைக்கவும்.

    ஊற வைத்ததை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் உப்பு சேர்த்து புளிக்க விடவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் மாவை மெல்லிய தோசையாக வார்த்து சுற்றி நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு 1 நிமிடம் மூடி போட்டு வேக விட்டு எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கேழ்வரகு கொள்ளு தோசை ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, தக்காளி சட்னி சூப்பராக இருக்கும்.

    • கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
    • குறைவான அளவில் கலோரிகள், கொழுப்பு உள்ளது. அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கருப்பு அரிசி - ஒரு கப்,

    உளுந்து - கால் கப்,

    வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கருப்பு அரிசி, உளுந்து, வெந்தயத்தை சேர்த்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.

    நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு அரைத்து, தேவையான உப்பு சேர்த்து 8 மணிநேரம் புளிக்க விடவும். (அல்லது ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்து பயன்படுத்தலாம்).

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மாவை தோசைகளாக வார்த்து, சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

    சட்னியுடன் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கருப்பு அரிசி தோசை ரெடி.

    இந்த இட்லி, புட்டு போன்ற ஆரோக்கிய உணவுகளை தயார் செய்யலாம்.

    • அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்துள்ளது.
    • சிறுதானிய உணவுகள் உங்களை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

    சிறுதானிய உணவுகள் நமது முன்னோர்களால் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டது. உணவே மருந்து என்பதற்கு உதாரணமாக திகழ்வது தான் இந்த சிறுதானிய உணவுகளாகும். ஆனால் இன்று நாம் தான் நாகரீகம் என்ற பெயரில் பிட்சா, பர்கர் என்று மேலை நாட்டு ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டு பழக்கப்படுத்திக் கொண்டோம்.

    கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும்.

    சிறுதானியங்களில் அதிகமான அளவு நார்ச்சத்து, புரதம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனுடைய கிளைசீமிக் இன்டக்ஸ் மிகக் குறைவு. கிளைசீமிக் இன்டக்ஸ் என்பது ஒரு உணவை சாப்பிடும்போது எவ்வளவு வேகமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறதோ அதன் குறியீடு தான் கிளைசீமிக் இன்டக்ஸ். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி, நாம் சாப்பிட்ட உடனே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கப்படுகிறது.

    மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சிறுதானியங்களை தினமும் உட்கொள்பவர்களுக்கு வெறும் வயிற்றில் எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு 12 சதவிகிதம் குறைவதாகவும், உணவுக்குப் பின் எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு 15 சதவிகிதம் குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    அதனால் சிறு தானியங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நமக்கு சர்க்கரை நோய் வருவதை தாமதப்படுத்தலாம். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம்.

    சிறுதானியங்களை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்துள்ளது.

    இந்த சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் இருதய நோய் பாதிப்புகள் குறைகிறது. சரும பிரச்சனைகள், முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவை வருவதை தடுக்கவும் இந்த சிறுதானியங்கள் உதவுகின்றன. மொத்தத்தில் இந்த சிறுதானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், அழகினை மேம்படுத்தவும் உதவியாக உள்ளது. இவை உங்களுக்கு அதிகமான ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. இந்த சிறுதானிய உணவுகள் உங்களை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

    சிறுதானியங்களில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால் இது இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது. இந்த சிறு தானியங்களில் கால்சியம் உள்ளதால் இது எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.

    • அரிசியைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ளது.
    • சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம் கம்பு. 

    தேவையான பொருட்கள்:

    கம்பு - 2 கப்

    வெல்லம் - ½ கப்

    தேங்காய்த் துருவல் - ¼ கப்

    முந்திரி (பொடிதாக நறுக்கியது) - ¼ கப்

    வெந்நீர் - தேவைக்கு ஏற்ப

    உப்பு - ஒரு சிட்டிகை

    நெய் - தேவைக்கு

    ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்

    வாழை இலை - 1

    செய்முறை:

    * கம்பை சுத்தப்படுத்தி 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஈரம் போகும் வரை நிழலில் உலர்த்தவும். பின்பு பொடியாக திரித்துக் கொள்ளவும். அந்த மாவை நன்றாக சலித்து எடுக்கவும்

    * அகலமான பாத்திரத்தில் கம்பு மாவைக் கொட்டி அதனுடன் தேங்காய்த்துருவல், ஏலக்காய் பொடி, நறுக்கிய முந்திரிசேர்த்துக் கலக்கவும்.

    * சிறிதளவு தண்ணீரில் உப்பைக் கரைத்து மாவில் தெளித்து மீண்டும் கிளறவும்.

    * மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்றி கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு தயார் செய்யவும்

    * இப்போது மாவை சப்பாத்தியின் அளவுக்கேற்ப உருண்டையாக உருட்டி வைக்கவும்.

    * வாழை இலையில் சிறிது நெய் தடவி ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து ரொட்டியாகத் தட்டவும்

    * அதை தோசைக் கல்லில் போட்டு தேவையான அளவு நெய் ஊற்றி இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.

    குறிப்பு: வெல்லக் கரைசலும், கம்பு மாவும் நன்றாகக் கலந்தால் மட்டுமே ரொட்டியில் இனிப்பு சரியாக இருக்கும். கம்பு மாவு முழுமையாக வேக சிறிது நேரம் ஆகும் என்பதால் நிதானமாக சுட்டு எடுக்க வேண்டும்.

    • இந்த அல்வாவை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.
    • சிறுதானியங்களில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - 200 கிராம்,

    கருப்பட்டி - 175 கிராம்,

    முந்திரி - 30 கிராம்,

    திராட்சை - 30 கிராம்,

    பாதாம் - 20 கிராம்,

    பிஸ்தா - 20 கிராம்,

    நெய் - 100 கிராம்,

    தண்ணீர் - 200 மி.லி.,

    ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,

    சுக்கு பொடி - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை :

    தினை அரிசியை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    கருப்பட்டியை நன்றாக பொடித்து கொள்ளவும்.

    பொடித்த கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி கொள்ளவும்.

    ஊற வைத்த அரிசியை நைசாக அரைத்து பால் எடுக்கவும். எடுத்த பாலை கிண்ணத்தில் மாற்றி 15 நிமிடம் தெளிய விடவும். 10 நிமிடம் கழித்து மேலே வந்த நீரை எடுத்து விடவும்.

    ஒரு வாணலியில் 200 மி.லி. தண்ணீர் ஊற்றி தினை மாவு மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து நெய் ஊற்றி அல்வா நன்றாக சுருண்டு வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை நன்றாகக் கிளறவும்.

    பின்பு ஒரு டிரேயில் நெய் தடவி பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி சூடான அல்வாவை அதன் மேல் பரத்தவும். அல்வா முழுவதுமாக ஆறியவுடன் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான தினை கருப்பட்டி அல்வா ரெடி.

    • தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி - 200 கிராம்

    கோதுமை - 100 கிராம்

    ராகி - 100 கிராம்

    உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

    வெந்தயம் - 2 டீஸ்பூன்

    நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வரகு அரிசி, கேழ்வரகு, கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும்.

    எல்லா மாவையும் ஒன்றாக கலக்கவும்.

    இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 3 முதல் 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றி நல்லெண்ணெய் விட்டு வெந்ததும திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான கோதுமை வரகு கேழ்வரகு தோசை ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    ×