search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Micro Irrigation Scheme Subsidy"

    • குறைந்தஅளவு தண்ணீரிலும், காய்கறி சாகுபடி மேற்கொள்ள முடிந்தது.
    • நுண்ணீர் பாசன கட்டமைப்புக்கான செலவுத்தொகை கணக்கிடப்பட்டது.

    மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், கிணறு மற்றும் போர்வெல் பாசன முறையில் பல ஆயிரம் ஏக்கரில் தென்னை மற்றும் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.சாகுபடியில் நீர் பாய்ச்சுவதற்கு ஆட்கள் பற்றாக்குறையால் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறையும் போது நீண்ட கால பயிர்கள் பாதித்தன. காய்கறி சாகுபடி கைவிடப்படும் சூழ்நிலை இருந்தது.இப்பிரச்சினைக்கு தீர்வாக புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டினர். அதன்படி சொட்டு நீர் மற்றும் நுண்ணீர் பாசனம், இறவை சாகுபடி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

    இப்பாசன முறைகளால் குறைந்தஅளவு தண்ணீரிலும், காய்கறி சாகுபடி மேற்கொள்ள முடிந்தது. தொழிலாளர்கள் தேவையும் இல்லை. இத்தகைய பாசன முறைகளுக்கு மத்திய, மாநில அரசு தரப்பிலும், அதிக ஊக்கம் அளிக்கப்பட்டது.அதன்படி மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் வேளாண்துறை, தோட்டக்கலை பயிர்களுக்குநுண்ணீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.மிகவும் தேவையான திட்டமாக இருந்தாலும் விலைவாசி உயர்வால் நுண்ணீர் பாசன கட்டமைப்பை ஏற்படுத்த விவசாயிகள் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    கடந்த 2013ம் ஆண்டு விலைப்புள்ளி அடிப்படையில், நுண்ணீர் பாசன கட்டமைப்புக்கான செலவுத்தொகை கணக்கிடப்பட்டது.அதன்பின் விலைவாசி உயர்ந்தும், மானியம் உயர்த்தப்படவில்லை. இதனால் 100 சதவீத மானியம் என்பது பேச்சாக மட்டுமே இருந்தது.விவசாயிக்கு 50 சதவீத மானியம் கூட கிடைக்கவில்லை என்பதே யதார்த்த நிலையானது.எனவே மானியம் தவிர்த்து தங்கள் பங்களிப்பு நிதியையும், விவசாயிகள் கூடுதலாக செலவிட்டு நுண்ணீர் பாசனம் அமைத்து வந்தனர்.

    கடந்தாண்டு உடுமலை பகுதியில் பருவமழை பொழிவு கூடுதலாக இருந்ததால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறு மற்றும் போர்வெல்களுக்கு கூடுதல் வரத்து கிடைத்தது.இதனால் பெரும்பாலான சிறு, குறு விவசாயிகள் புதிதாக காய்கறி சாகுபடி செய்ய ஆர்வம் காட்டினர்.அதற்கேற்ப விளைநிலங்களில் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க வேளாண்துறை, தோட்டக்கலைத்துறையில் விண்ணப்பம் கொடுத்தனர்.இந்நிலையில் நடப்பு நிதியாண்டு துவங்கி 3 மாதங்களாகியும் இத்திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. நுண்ணீர்பாசன மானிய திட்டம் ரத்தாகி விட்டதா என விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மானியம் ஒதுக்கீடு தாமதம் ஆவதால் தென்மேற்கு பருவமழை சீசனையொட்டி சாகுபடி செய்வது கேள்விக்குறியாகியுள்ளது.

    இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை 17.30 லட்சம் ஏக்கர் பரப்பில், நுண்ணீர் பாசன திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 2.50 லட்சம் ஏக்கரில் கட்டமைப்பை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அங்கீகாரம் பெற்ற நுண்ணீர் பாசன நிறுவனங்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. நிறுவனங்கள் நியமிக்கப்பட்டு புதிய விலைப்புள்ளி அடிப்படையில் மானிய தொகை நிர்ணயித்த பிறகு அறிவிப்பு வெளியிடப்படும் என்றனர்

    ×