search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant protest"

    புரசைவாக்கத்தில், நாளை மெட்ரோ ரெயில் வழித்தடத்தை கண்டித்து வியாபாரிகள், பொது மக்கள் போராட்டம் நடைபெறுகிறது.
    சென்னை:

    புரசைவாக்கம் பெரிய வியாபார ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான கடைகள் செயல்பட்டு வருகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு தேவைக்காக கூடும் பகுதியாக உள்ளது.

    இந்தநிலையில் மெட்ரோ ரெயில் வழித்தடம் புரசை வாக்கத்தில் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு புரசை வியாபாரிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    மெட்ரோ ரெயில் வழித்தட திட்டத்தை மாற்று பாதையில் அமைக்க வலியுறுத்தி நாளை (17-ந்தேதி) செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடை அடைப்பு போராட்டம் புரசை வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெறுகிறது.

    போராட்டத்தில் வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்குகிறார். புரசை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.நாகபூ‌ஷணம், செயலாளர் வி.ராமலிங்கம், பொருளாளர் பி.கே.ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதுகுறித்து புரசை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.நாகபூ‌ஷணம் கூறியதாவது:-

    புரசைவாக்கத்தில் பல தலைமுறைகளாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ வியாபாரிகள் ஒற்றுமையாக வியாபாரம் செய்து வருகிறார்கள். மாதவரத்தில் இருந்து சிறுசேரிக்கு செல்லும் மெட்ரோ வழித்தட பாதை பெரம்பூர், அயனாவரம், ஓட்டேரி, பிரிவுகளின் சாலை, மில்லர்ஸ் சாலை சந்திப்பு வழியாக கீழ்ப்பாக்கம் நோக்கி அமைவதாக இருந்தது.

    தற்போது புதிய வரை படத்தில் அயனாவரத்தில் இருந்து பட்டாளம், பெரம்பூர், பேரக்ஸ் ரோடு, டவுடன் ஜங்‌ஷன், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, மில்லர்ஸ் ரோடு சந்திப்பு வழியாக கீழ்ப்பாக்கம் செல்வதாக திட்டம் தயாரித்துள்ளார்கள். இதில் ஏதோ சதிவேலை நடைபெற்று உள்ளது. இதனால் புரசைவாக்கத்தில் 5 ஆயிரம் வியாபாரிகள் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். எனவே பழைய திட்டத்தின் படியே மெட்ரோ ரெயில் வழித்தட பாதை அமைக்க வேண்டும். இதற்கு கண்டனம் தெரிவித்து நாளை (17-ந் தேதி) புரசை வாக்கம், பட்டாளம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×