search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marist communist secretary balakrishnan"

    அரசியல் லாபத்துக்காக பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி உள்ளார் என்று மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #edappadipalanisamy #pmmodi

    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயல் தாக்கி 2 வாரத்திற்கும் மேலாகி விட்டது. ஆனால் பல குடும்பங்களுக்கு நிவாரண உதவி கிடைக்க வில்லை.

    இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை சந்தித்து ரூ.15 ஆயிரம் கோடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நிதி வழங்க வேண்டும் என கேட்டுள்ளதாக கூறினார்.

    ஆனால் தற்போது கணக்கெடுப்பு பணி நடைபெறவில்லை என கூறுகின்றனர். எனவே இதில் முரண்பாடு உள்ளது. அவர்கள் சந்தித்த சில நாட்களிலேயே தேர்தல் கமி‌ஷன் 20 தொதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுவது சாத்தியமா? என கேள்வி எழுப்பி உள்ளது.

    எனவே முதல்வர் மக்களுக்காக பிரதமரை சந்திக்க வில்லை. அரசியல் லாபத்திற்காக சந்தித்துள்ளார் என்பது தெரிகிறது. மத்தியில் பா.ஜனதா அரசு பதவி ஏற்றதில் இருந்து இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.97,356 கோடி மாநில அரசால் கோரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ரூ.4,242 கோடி நிதியே வழங்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வில் மொழி பெயர்ப்பில் தவறு ஏற்பட்டுள்ளதால் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் தடை செய்து ஆங்கில மொழியில் படித்து விடை அளித்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேகதாதுவில் அணை கட்ட காவிரி மேலாண்மை வாரியத்துக்குதான் உரிமை உள்ளது. ஆனால் தற்போது மத்திய அரசு வருகிற பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அணை கட்ட அனுமதி வழங்கி உள்ளது.

    டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்காதது மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் ஒன்றி ணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் 2 வருடங்களாக அனைத்து கட்டமைப்புகளும் சரியாக இயங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சபரிமலை அய்யப்பன் கோவில் தீர்ப்பு சமூக நீதிக்கான போராட்டம். இதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை கேரள அரசுக்கு உள்ளது. எனவே அவர்களை குற்றம் சொல்லக்கூடாது.

    மக்கள் விரோத போக்கில் மத்திய மாநில அரசுகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசு லோக்ஆயுதா சட்டம் அமல்படுத்த அக்கரை காட்டவில்லை. எனவே அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்தால் வருகிற சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில செயலாளர் சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி உள்பட பலர் உடன் இருந்தனர். #edappadipalanisamy #pmmodi

    ×