search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "man trapped with liquor"

    • வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் நண்பர்களுக்கு மதுபாட்டில்கள், இறைச்சி வாங்குவதற்காக சென்றுள்ளனர்.
    • மதுபாட்டில்களை விற்பனைக்கு எடுத்து செல்வதாக நினைத்த போலீசார் உடனடியாக அவரை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    கோவை :

    கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.

    இவர்கள் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது பாட்டில்கள் வாங்கிச் சென்று மது அருந்துவது வழக்கம்.

    இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் நண்பர்களுக்கு மதுபாட்டில்கள், இறைச்சி வாங்குவதற்காக சென்றுள்ளனர். இருவர் இறைச்சிக் கடைக்கு சென்று விட்ட நிலையில், மற்றொரு நபர் பாப்பம்பட்டியில் உள்ள டாஸ்மாக் சென்றார். அங்கு அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி பெட்டியில் வைத்து எடுத்து கொண்டு வந்தார்.

    அப்போது பாப்பம்பட்டி நால்ரோட்டில் ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகமடைந்து வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் பேசிய மொழி புரியாததால், மதுபாட்டில்களை விற்பனைக்கு எடுத்து செல்வதாக நினைத்த போலீசார் உடனடியாக அவரை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    இதற்கிடையே மது வாங்க சென்ற நண்பர் வெகு நேரமாக வராததால் அவருடன் வந்த மற்ற நண்பர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வாங்கிய இறைச்சியுடன் நேராக போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றனர்.

    அப்போது அவர்கள் தேடி வந்த நண்பர் போலீசின் கட்டுப்பாட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருவரும் தங்களுக்கு தெரிந்த தமிழில் போலீசாரிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அனுப்பினர்.

    மொழி புரியாததால் வடமாநில தொழிலாளி விற்பனைக்காக பெட்டியில் மதுபாட்டில்களை வாங்கி சென்றதாக எண்ணி தவறுதலாக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ருசிகர சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×