search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "L.Murugan"

    • வ.உ.சி.யின் தற்சார்பு கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்.
    • அப்துல் கலாம் கண்ட கனவுபடி, இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக திகழும்.

    'ஓலம்' சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற தலைப்பிலான காணொளி வெளியீட்டு விழா சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஸ்ணவா கல்லூரியில் நேற்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது: 


    உலகின் தலை சிறந்த நாடாக இந்தியா உள்ளது. குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் இந்த நாடு அடைந்துள்ள வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக காண முடியும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி கப்பலை இயக்கிவர் வ.உ. சிதம்பரனார்.

    அவரது தற்சார்பு கனவை இன்று பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி கொண்டு இருக்கிறார். நாடு 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், வ உ சி யின் 150 ஆவது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது. பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வரும் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்.

    இது ஆங்கிலேயர்கள் தாக்குதலின்போது தேசிய கொடியை கீழே விழாமல் காத்த திருப்பூர் குமரனுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கையாக இருக்கும். இளைஞர் மத்தியில் அக்னிபத் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது, லட்சக்கணக்கான இளைஞர்கள் தாமாகவே முன்வந்து அக்னிபத் திட்டத்திற்கு பதிவு செய்து வருகின்றனர்.

    அப்துல் கலாம் கண்ட கனவுபடி, இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக திகழும். ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பு எப்படி இந்தியர்கள் உலகுக்கே வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் இருந்தார்களோ, அதேபோல நாட்டின் 100-வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும் 2047-ம் ஆண்டு இந்தியா மீண்டும் உலக நாடுகளை வழிநடத்தும் வல்லமையை பெற்றிருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பிரபலப்படுத்துகிறார்.
    • இளைஞர்கள் மற்றவர்களுக்கு வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கௌரவ விருந்தினராக பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பிரபலப்படுத்துகிறார். ஐநா சபையில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற தமிழ் இலக்கியத்தை மேற்கோள் காட்டி பிரதமர் தமது உரையை தொடங்கினார். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் மகாகவி பாரதியார் இருக்கை தொடங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.

    உலகம் முழுவதும் இந்தியர்கள் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பரவலாக இருக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இருக்கிறார். அனைவரும் தாய்மொழியில் கற்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் தமிழ் போன்ற மாநில மொழிகள் உட்பட தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரகாசிக்கின்ற இளம் தொழில்முனைவோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இளைஞர்களே நாட்டின் எதிர்காலம். அவர்கள் இந்தியாவை உலக அளவில் முன்னேற்றுவார்கள். இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் மற்றவர்களுக்கு வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்.

    கொரோனா நெருக்கடியிலிருந்து பல நாடுகள் மீளமுடியாத நிலையில், இந்தியா இதிலிருந்து மீண்டு வந்திருப்பதோடு இதுவரை நாட்டில் கட்டணமில்லாமல் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கலின்போது ஓ.பி.எஸ், தம்பிதுரை பங்கேற்றனர்
    • எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

    குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளரிடம் திரவுபதி முர்மு நேற்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த வேட்புமனுதாக்கலின்போது அதிமுக சார்பில் ஓ.பி.எஸ், தம்பிதுரை உள்ளிட்டோரும் பாஜக ஆளும் பிற மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் சால்வை அணித்து ஆதரவு தெரிவித்தார். இதேபோல் மத்திய இணை மந்திரி எல் முருகனும் திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    அப்போது, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி., ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ பி.எச்.மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    கடல்சார் மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் மீனவ சங்கங்களின் ஆலோசனை பெறப்பட்டு அனைவரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும்.
    சென்னை:

    மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை மந்திரி எல்.முருகன், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (100 நாள் வேலை திட்டம்) கீழ் தமிழக அரசுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

    இந்த திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரத்து 565 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான நிலுவைத்தொகை ரூ.1,178 கோடியை விடுவிக்க வேண்டும் என்று அக்டோபர் 27-ந் தேதி மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரியை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தியபோது ஒரு வாரத்தில் நிலுவைத்தொகை விடுவிக்கப்படும் என்று மத்திய மந்திரி உறுதி அளித்தார்.

    ஆனால் 5 நாட்களிலேயே, தமிழக அரசு கோரியதைவிட அதிகமாக ரூ.1,361 கோடி நிதி விடுவிக்கப்பட்டது.

    மத்திய அரசை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர். தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சுமார் ரூ.246 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வெறும் ரூ.1 கோடியே 85 லட்சம் வரை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்


    இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 2 ஆயிரத்து 500 லட்சம் மனித வேலை நாட்கள் ஒதுக்கப்பட்டபோதிலும், தமிழக அரசு 2 ஆயிரத்து 190 லட்சம் மனித வேலை நாட்களை மட்டுமே பயன்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின்படி மாவட்டத்துக்கு ஒரு குறைதீர் அதிகாரி, சமூக தணிக்கை குழு நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் அதுபோன்று எந்த ஒரு அதிகாரியும் நியமிக்கப்படவில்லை.

    இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது.

    கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் மத்திய அரசு கோரியபோதிலும், கடந்த மாதம் 25-ந் தேதி வரை தமிழக அரசு இந்த விவரங்களை அளிக்கவில்லை. தமிழக அரசின் அலட்சியப் போக்கால் மீனவர்கள் விடுவிக்கப்படுவது தாமதமாகி வருகிறது.

    கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருச்சியில் என்னைச் சந்தித்து முறையிட்டனர். மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.

    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம்கூட நடைபெறவில்லை.

    கடல்சார் மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் மீனவ சங்கங்களின் ஆலோசனை பெறப்பட்டு அனைவரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சென்னை பத்திரிகை தகவல் மையத்தின் இயக்குனர் பி.குருபாபு உடன் இருந்தார்.

    ×