search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kosasthalaiyar river"

    வெங்கல் அருகே கொசஸ்தலை ஆற்று மணலில் புதைந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே காதர்வேடு மாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். விவசாயியான இவர் ஆடு வளர்த்து வருகிறார்.

    கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தன் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற ஒரு ஆடு எதிர்பாராதவிதமாக ஆற்றில் இருந்த ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டது.

    பின்னர் அது மேலே ஏறி வரமுடியாமல் தவித்தது. இதனால் கோவிந்தன் அந்த பள்ளத்தில் இறங்க முயன்றார். ஆனால், அவர் அந்த பள்ளத்தில் விழுந்து விட்டார். பின்னர் அவராலும் மேலே ஏறி வர முடியவில்லை.

    பள்ளத்தில் சிக்கிய விவசாயி சிறிது நேரத்தில் மணலில் புதைந்து உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு வெளியே எடுத்தனர். ஆனால், அதற்குள் அவர் மூச்சு திணறி இறந்து போனார்.

    இதுகுறித்து வெங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 15 தடுப்பணைகளை ஆந்திர மாநில அரசு கட்டி வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. #Kosasthalaiyarriver

    சென்னை:

    ஆந்திர மாநிலத்தில் லவா, குசா என 2 ஆறுகள் உற்பத்தியாகின்றன. அவை கொசஸ்தலை ஆற்றில் கலக்கின்றன.

    இந்த நிலையில் லவா ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை ஆந்திர மாநில அரசு கட்டி வருகிறது. எஸ்.ஆர்.புரம்- பள்ளிப்பட்டு வரை 15 கி.மீ. தூரத்தில் 15 தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    தலா ரூ.40 லட்சம் செலவில் இந்த தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. அவற்றில் பல இடங்களில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

    தடுப்பணைகள் கட்டுமான பணி முடிவடையும் நிலையில் கொசஸ்தலை ஆற்றுக்கு வரும் லவா ஆற்றின் நீரின் அளவு குறையும். அதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவில் குறையும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அதே நேரத்தில் குசா ஆற்றில் தடுப்பணைகள் கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் நீரின் அளவு மிக அதிக அளவில் குறையும். #Kosasthalaiyarriver

    மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொசஸ்தலை ஆற்றில் இறங்கி பெண்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அருகே உள்ள லட்சுமி விலாசபுரம் கொசஸ்தலை ஆற்றில் குவாரி மூலம் மணல் எடுக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பே இதனை தடை செய்ய வேண்டும் என்று பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த குவாரியில் தற்போது மணல் அள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

    குவாரியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் மணல் எடுத்தால் லட்சுமி விலாசபுரம், பொன்னாங்குளம் மற்றும் பாகசாலை, குப்பம் கண்டிகை, மணவூர் போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றி குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்றும் புகாரில் தெரிவித்திருந்தனர்.

    எனினும் மணல் அள்ளுவதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கொசஸ்தலை ஆற்றில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்து ஜே.சி.பி. எந்திரத்தை சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருத்தணி வட்டாட்சியர் நரசிம்மன் மற்றும் திருவாலங்காடு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை நீடிக்கிறது. இதனால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    கொசஸ்தலை ஆற்றில் தடுப்பு அணை பணிகளை ஆகஸ்டு மாத இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் ‌ஷட்டர்கள் வழியாக தண்ணீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம்.

    அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஓதப்பை, சோமதேவன்பட்டு, கொரகண்தண்டலம், மோவூர், மெய்யூர், செம்பேடு, தாமரை பாக்கம், அணைக்கட்டு வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.

    கடந்த 2015-ம் வருடம் பெய்த மழைக்கு அணை முழுவதுமாக நிரம்பியதால் அதிகபட்சமாக வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. மொத்தம் 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.

    பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகள் பயன்படும் விதத்திலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காகவும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஓதப்பை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட ரூ. 6.70 கோடி ஒதுக்கப்பட்டது.

    இந்த நிதியை கொண்டு 200 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு அணை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்கப்பட்டது.

    கடந்த செப்டம்பர் மாதம் பலத்த மழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தடுப்பு அணை கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டன.

    தற்போது கோடை வெயில் காரணமாக கொசஸ்தலை ஆறு வறண்டு காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து தடுப்பு அணை கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஆகஸ்டு மாத இறுதிக்குள் தடுப்பு அணை பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews

    ×