என் மலர்
நீங்கள் தேடியது "Kadhambam"
- இனிமையான வார்த்தைகளால் பிற மக்களை நம்மால் நேசிக்க முடியும்.
- சக மனிதர்கள் நம்முடன் உறவாட நாம் பிரயோகிக்கும் நல்ல வார்த்தைகள்தான் என்றான்.
அரசனுக்கு ஒரு சந்தேகம்!
உலகத்திலேயே இனிமையானது எது?
கசப்பானது எது? என்று தண்டோரா போட்டு ஊர் மக்களுக்கு அறிவிப்பு செய்தான்.
உலகத்திலேயே மிக மிக இனிமையான பொருள் ஒன்றையும், மிகவும் கசப்பான பொருள் ஒன்றையும் எடுத்து வர வேண்டும். அரசனின் மனதிற்கு திருப்தி அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும்.
ஆளாளுக்கு ஒவ்வொன்றை எடுத்து வந்தார்கள்..
இனிப்பிற்கு லட்டு, ஜாங்கிரி, குலாப் ஜாமூன், மைசூர்பா உள்ளிட்ட ஏராளமான இனிப்பு வகைகள்.
கசப்பிற்கு பாகற்காய் முதல் தங்களுக்கு தெரிந்த அத்துனை கசப்பானதையும் எடுத்து வந்தார்கள்.
அரசன் மனம் திருப்தி அடையவில்லை!
கடைசியாக கோமாளி தோற்றத்தில் இருந்த ஒருவன் ஆட்டினுடைய "நாக்கை மட்டும்" எடுத்து வந்திருந்தான்.
அங்கிருந்தவர்கள் பரிகாசமாக சிரித்தார்கள். பார்ப்பதற்கு அருவருப்பாய் இருந்த ஆட்டு நாக்கை பார்த்து முகம் சுளித்தார்கள்.
இவன் ஏதோ சொல்ல வருகிறான் என்று கருதி, அரசன் அவனை அருகில் அழைத்து என்ன இது என்று கேட்க,
கோமாளி, நாக்குதான் உலகத்திலேயே மிகவும் இனிமையானது. கடவுள் புண்ணியத்தால் நாம் பேசுகிறோம் என்றால் அதற்கு இந்த நாக்குதான் காரணம். இனிமையான வார்த்தைகளால் பிற மக்களை நம்மால் நேசிக்க முடியும். சக மனிதர்கள் நம்முடன் உறவாட நாம் பிரயோகிக்கும் நல்ல வார்த்தைகள்தான் என்றான்.
பேஷ்! ஃபேஷ்!
சரி, கசப்பான பொருளை காட்டு என்று அரசன் கேட்கிறான்.
மன்னா! உலகத்திலேயே மிகவும் கசப்பான பொருளும் இதே நாக்குதான்! நாம் கோபத்தில் பேசுவதால் எத்தனை மனிதர்களின் மனங்களை காயப்படுத்துகிறோம்.
தெரிந்தோ தெரியாமலோ நாம் பேசும் பேச்சுக்களால் பகைமையை வளர்த்துக் கொள்கிறோம். எதிரிகளை சம்பாதிக்கிறோம்.
இந்த நாக்கு மிக கெட்டது மன்னா! மிக மோசமானது! மிக கசப்பானது!
-பாலு சுப்பிரமணியன்
- இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம்.
- எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.
இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.
திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள்.
ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் பிரசுரிக்க விரும்பினார்.
நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.
இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.
"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக ஷிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம்.
அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது.
அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இதுதான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இதுதான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.
மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்றுவிட்டாயே? அறிவில்லையா?" என்று கேட்டேன்.
அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள்.
அவ்வளவுதான். அதன்பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர்.
-ஓஷோ
- பெரும்பான்மை மக்களின் பிரதிநிதியான மக்களவை இயற்றும் சட்டங்களை அவர்கள் தம் விருப்பப்படி எதிர்த்து வாக்களிக்க இயலும்.
- இப்ப அவர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு சட்ட மசோதாக்களை இரண்டு ஆண்டுகள் வரை தாமதிக்க மட்டுமே இயலும் என கூறப்பட்டுள்ளது.
"ஜனநாயகம் என்பது இரு ஓநாய்களும், ஒரு ஆடும் டின்னருக்கு என்ன சாப்பிடலாம் என ஓட்டு போட்டு முடிவெடுப்பது" என எழுதினார் பெஞ்சமின் பிராங்க்ளின்.
அதனால் அமெரிக்கா ஜனநாயக நாடாக இல்லாமல் குடியரசு நாடாக இருக்கும்படி அரசியல் சட்டம் எழுதப்பட்டது.
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்பது ஜனநாயகம் (Democracy). ஆனால் அமெரிக்க அரசியல் சட்டம் தனிமனிதனின் அடிப்படை உரிமைகளை பெரும்பான்மை மக்களிடம் இருந்தும், அவர்களின் பிரதிநிதியான அரசிடம் இருந்தும் காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதனால் அது குடியரசு (Republic)
பிரிட்டன் ஜனநாயக நாடும் அல்ல, குடியரசும் அல்ல. அது முடியாட்சி நாடு. மக்களின் பிரதிநிதியாக பிரதமர் இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை (House of commons) உள்ளது. ஆனால் பிரபுக்கள் சபை (House of Lords) என மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இன்னொரு சபையும் உள்ளது.
பிரபுக்கள் சபை கிபி 1215ம் ஆண்டில் உருவானது. அதன் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது கிடையாது. அதில் 26 உறுப்பினர்கள் சர்ச் ஆஃப் இங்கிலாந்தால் நியமிக்கப்படுவார்கள். 1215ல் இருந்து தலைமுறை தலைமுறையாக பிரபுக்களும், அவர்களின் வாரிசுகளும் தான் பதவிக்கு வருவார்கள். அவர்கள் எந்த கட்சிக்கும், பிரதமருக்கும் கட்டுபட்டவர்கள் கிடையாது. மக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பவர்களும் கிடையாது.
அதனால் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதியான மக்களவை இயற்றும் சட்டங்களை அவர்கள் தம் விருப்பப்படி எதிர்த்து வாக்களிக்க இயலும். இப்ப அவர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு சட்ட மசோதாக்களை இரண்டு ஆண்டுகள் வரை தாமதிக்க மட்டுமே இயலும் என கூறபட்டுள்ளது.
முழுக்க பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைந்த சபை என்பதால் பெண்கள் அதில் உறுப்பினர் ஆக 1958 வரை அனுமதி இல்லை. மிக, மிக தன்மையாக நடக்கும் சபை. மக்களவை மாதிரி கூச்சல், குழப்பம், கலாட்டா எதுவும் இருக்காது. யாராவது பிரபு இறந்தால் அவருக்கு பதிலாக இன்னொரு பிரபுவை நியமிக்க தேர்தல் எதுவும் நடக்காது. "நான் ஏன் பிரபுக்கள் சபையில் சேர தகுதியானவன்?" என பிரபுக்கள் கவிதை, கட்டுரை என எழுதுவார்கள். அதை வைத்து ஒரு பிரபு தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஆக ஜனநாயகம் என்பது மக்களின் சர்வாதிகாரமாக மாறாமல் தடுக்கும் மெக்கானிசம் உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது வியப்பான விசயம் தான்.
- நியாண்டர் செல்வன்
- சும்மா என்பது சும்மா இல்ல! நாவலர் நெடுஞ்செழியன் ஒரு சொற்பொழிவில் “சும்மா” என்ற தலைப்பில் பேசினார்.
- சும்மா சொல்லுவோம் தமிழின் சிறப்பை... அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான்.
சும்மா என்பது சும்மா இல்ல! நாவலர் நெடுஞ்செழியன் ஒரு சொற்பொழிவில் "சும்மா" என்ற தலைப்பில் பேசினார்.
உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன! தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
"சும்மா" சொல்லுவோம் தமிழின் சிறப்பை! அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான், இந்த "சும்மா". அதுசரி "சும்மா" என்றால் என்ன?
பேச்சுவழக்குச் சொல்லாக இருந்தாலும், தமிழ்மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை தான் இந்தச் "சும்மா".
"சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15க்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு என்றால் பாருங்களேன்... வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த "சும்மா" என்ற வார்த்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது.
1. கொஞ்சம் "சும்மா" இருடா? (அமைதியாக )
2. கொஞ்சநேரம் "சும்மா" இருந்துவிட்டுப் போகலாமே? (களைப்பாறிக்கொண்டு)
3. அவரைப் பற்றி "சும்மா" சொல்லக்கூடாது! (அருமை)
4. இது என்ன "சும்மா" கிடைக்கும் என்று நினைத்தாயா? (இலவசமாக)
5. "சும்மா" கதை விடாதே? (பொய் )
6. "சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக்கொள். (உபயோகமற்று )
7. "சும்மா, சும்மா கிண்டல் பண்ணுகிறான்". (அடிக்கடி)
8. இவன் இப்படித்தான், சும்மாசொல்லிக்கிட்டே இருப்பான். (எப்போதும்)
9. ஒன்றுமில்லை "சும்மா" தான் சொல்லுகிறேன்- (தற்செயலாக)
10. இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை "சும்மா" தான் இருக்கின்றது. (காலி )
11. சொன்னதையே "சும்மா" சொல்லாதே. (மறுபடியும் )
12. ஒன்றுமில்லாமல் "சும்மா" போகக்கூடாது (வெறுங்கையோடு)
13."சும்மா" தான் இருக்கின்றோம். (வேலையில்லாமல்)
14. அவன் "சும்மா" ஏதாவது உளறுவான். (வெட்டியாக)
15. எல்லாமே "சும்மா" தான் சொன்னேன். (விளையாட்டிற்கு)
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த "சும்மா" என்கிற ஒரு சொல், நாம் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றபடியும், தொடரும் சொற்களுக்கு ஏற்றபடியும் பலவிதமான அர்த்தங்களை, இங்கே கொடுக்கிறது என்றால், அது "சும்மா" இல்லை.
-ராஜகோபால்
- அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன். கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது.
- மோட்டார் மன்னர் ஹென்றி போர்டு தெரியுமில்லே, அவரு தன்னுடைய ஆராய்ச்சியிலே தோல்வி கண்டு வந்தப்போ பக்கத்துலே இருந்தவங்கள்லாம் அவரை பைத்தியம்ன்னு கேலி பண்ணாங்க.
"கையிலே என்ன பொட்டலம்?"
"மல்லிகைப் பூ சார்! மனைவிக்கு வாங்கிட்டுப் போறேன்....!"
"அவ்வளவு பிரியமா உங்களுக்கு?"
"ஆமா சார்.... என்னுடைய வெற்றிக்கெல்லாம் அவதானே காரணம்!"
"உங்க வெற்றிக்கு மட்டுமா... அமெரிக்க ஜனாதிபதியா இருந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன். கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அவருக்கு படிக்கச் சொல்லிக் கொடுத்து... அவருக்கு அமெரிக்க ஜனாதிபதியா ஆகக்கூடிய தகுதியை ஏற்படுத்தினதே அவருடைய மனைவி தானே!"
"அப்படியா?"
"மோட்டார் மன்னர் ஹென்றி போர்டு தெரியுமில்லே, அவரு தன்னுடைய ஆராய்ச்சியிலே தோல்வி கண்டு வந்தப்போ பக்கத்துலே இருந்தவங்கள்லாம் அவரை பைத்தியம்ன்னு கேலி பண்ணாங்க!"
"அய்யோ பாவம்!"
"அந்த சமயத்துலே அவரு மனைவி தான் அவருக்கு உற்சாகம் ஊட்டினாங்க... மனது சோர்ந்து போயிடாதீங்க...நீங்க நிச்சயம் வெற்றி பெறுவீங்க... அதுக்கான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு... அப்படின்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க. அதனாலேதான் அவரு கடைசியிலே மோட்டார் காரைக் கண்டு பிடிச்சார்!"
"பார்த்தீங்களா? ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள்ன்னு சொல்றது எந்த அளவுக்குச் சரியா இருக்கு பாருங்க!"
"சரி... இப்போ நீங்க அடைஞ்ச வெற்றி என்ன?"
"அருமையா ஒரு நாவல் எழுதி முடிச்சிருக்கேன் சார்!"
"இதுக்கு உங்க மனைவி ரொம்ப ஒத்தாசையா இருந்தாங்களா ?"
"ஆமாங்க!"
"எப்படி?"
"அதை நான் எழுதி முடிக்கிற வரைக்கும் அவ தன்னுடைய அம்மா வீட்டுக்கு போயிருந்தா சார் !"
- தென்கச்சி கோ.சுவாமிநாதன்
- இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், கோழி, பால், வெண்ணெய், முட்டை போன்றவற்றையே ஹன்ஸா இன மக்கள் சாப்பிடுகிறார்கள்.
- வாழ்வதற்குத் தேவையான அளவு மட்டுமே சாப்பிடுகிறார்கள். ரசாயன உரங்கள் பற்றி இவர்களுக்கு என்னவென்றே தெரியாது.
காஷ்மீரைத் தாண்டி காரகோரம் மலைத் தொடர்களின் மடியில் இருப்பதுதான் ஹன்ஸா பள்ளத்தாக்கு. இங்கு வாழும் மக்களின் சராசரி வயது 120 என்பதையும், பெண்கள் 90 வயதிலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் சொன்னால் நம்புவீர்களா?
பெண்களே இப்படி என்றால் ஆண்களை பற்றி சொல்ல வேண்டுமா என்ன.. நூற்றியிருபது வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இதில் அதிசயம் என்னவென்றால், நூறு வயது என்பது இங்கே நடுத்தர வயது தான்.. நூறு வயதிலும் இவர்கள் அப்பாவாகிறார்கள்.
இது எப்படி சாத்தியம்? இந்த விஷயம் வெளி உலகுக்கு எப்படி தெரியவந்தது? என்று கேள்வி எழுப்பினால் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கைப் பார்த்துவிடலாம். 1984-ம் ஆண்டில் ஹன்ஸா இனத்தைச் சேர்ந்த அப்துல் என்பவர், லண்டன் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தார்.
'பிறந்த வருடம் 1932 என்பதற்குப் பதிலாக 1832 என்று தவறாக அச்சாகியிருக்கிறது' என்று அதிகாரிகள் அப்துலிடம் கேட்டார்கள். 'இல்லை... 1832 என்பது தான் சரி' என்று அப்துல் சொன்னதும் கோபம் கொண்ட அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரணம், அப்துல் நடுத்தர வயது மனிதராகவே தோன்றினார்.
அப்துலுக்கு வயதை உறுதிப்படுத்த மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு வயது 152-தான் என்பது உறுதியானதும் உறைந்துபோனார்கள் அதிகாரிகள். ஹன்ஸா இன மக்கள் பற்றிய ரகசியம் அதன் பிறகே உலகுக்குத் தெரியவந்தது. பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது இன்னும் பல அதிசயங்கள் வெளிவந்தது.
இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், கோழி, பால், வெண்ணெய், முட்டை போன்றவற்றையே ஹன்ஸா இன மக்கள் சாப்பிடுகிறார்கள். அதுவும் வாழ்வதற்குத் தேவையான அளவு மட்டுமே சாப்பிடுகிறார்கள். ரசாயன உரங்கள் பற்றி இவர்களுக்கு என்னவென்றே தெரியாது. சுவாசிக்க தூய்மையான மலைக்காற்று, பகல்முழுவதும் உழைப்பு, ஜீரோ டிகிரி குளிராக இருந்தாலும் குளிர்ந்த ஆற்றுநீரிலேயே குளிப்பது போன்ற நல்லவாழ்க்கை முறையே அந்த ரகசியம் என்பதை ஆய்வு புரிய வைத்தது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் இதெல்லாம் நமக்கும் சாத்தியம்தானே!
-சரவணகுமார்
- முல்லா ஒரு சிறந்த சிந்தனையுடன் நகைச்சுவையும் கூட்டி நல்வழிகாட்டுபவர். அவர் வீட்டில் ஒரு வேலைக்காரர் இருந்தார்.
- அவருக்கு ஒரு பழக்கம், அன்றாடம் ஒவ்வொரு பொருளைத் திருடிச் சென்றபடி இருப்பார்.
அவ்வையார் எளிதாக எழுதிய வைத்துச் சென்றுவிட்டார். சினம் கொள்ளாமல் இருந்து விட முடிகிறதா? முடியவில்லையே!
"தீராக் கோபம் போதாய் முடியும்" என்பது முதுமொழி.
ஆண்களுக்கு எளிதாக சினத்தைக் காட்டும் இடம் மனைவிதானே!
மனைவி மட்டும் தான், "இது இப்படி தான், முதலில் பாயும் அப்புறம் பதுங்கும்" என்று நினைத்து அமைதி காப்பவர்.
தலைமை ஆசிரியர் என்னை அழைத்துச் சினந்தார். "உங்களால் தான் பள்ளிக்கூடமே கெடுகிறது. மாணவர்களை அடக்கவே தெரியவில்லை. நீங்கள் எல்லாம் ஏன் வாத்தியாரா வந்தீங்க?" என்றெல்லாம் கூறி, யார் மேலோ உள்ள கோபத்தை என்னிடம் வெளிப்படுத்தினார்.
அவர் அப்படிப் பேசலாம். நான் அவரிடம் அவ்வாறு பேச முடியுமா? அமைதியாக வீடு வந்தேன்.
மனைவி காப்பி ஆற்றியவாரே வந்தார். நான் வாங்கிய வசவை யாரிடமாவது கொட்டியாக வேண்டுமே!
"காப்பியாடி இது..? கழனித்தண்ணி மாதிரி இருக்கு!" என்று சீறினேன்.
என் மனைவி புரிந்து கொண்டார். "இது எங்கேயோ வாங்கினதை இங்கே வந்து இறக்கி வைக்குது" என்று பக்குவமாகக் கேட்டார்.
"ஏங்க.. உங்க எச்.எம். ஏதாவது திட்டிட்டாரா?"
புரிந்து கொண்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன். நடந்ததை விவரமாகக் கூறி மனச்சுமையை இறக்கினேன்.
ஆண் நெருப்பு என்றால் பெண் தண்ணீர். ஆம், நான் நெருப்பாகச் சுட்ட போது, என் மனைவி தண்ணீராக மாறி அதை அணைத்தார்.
கொள்ளிக்கட்டையின் மீது நீரை ஊற்றினால், சுறுசுறுவென்று சத்தம் வரும். கூடவே கொஞ்சம் புகையும் வரும்.
அதனால் தான் அடுத்த வீட்டுக்காரர், "பக்கத்து ஊட்டுல என்னா புகையுது?" என்று அவர் மனைவியிடம் கேட்கிறார். இதனால் தான் நெருப்பை "அக்னி பகவான்" என்று ஆணாக்கிக் கூறுகிறார்கள்.
காவிரி கங்கை ஆறுகளை, "காவிரி அன்னை" என்று பெண்ணாக்குகிறார்கள். "கங்கா மாதா" என்று நெகிழ்கிறார்கள்.
முல்லா ஒரு சிறந்த சிந்தனையுடன் நகைச்சுவையும் கூட்டி நல்வழிகாட்டுபவர். அவர் வீட்டில் ஒரு வேலைக்காரர் இருந்தார். அவருக்கு ஒரு பழக்கம், அன்றாடம் ஒவ்வொரு பொருளைத் திருடிச் சென்றபடி இருப்பார்.
முல்லா வேலைக்காரர் திருடிச் செல்வதை அறிந்து கொண்டார். ஆயினும் அவரிடம் கோபமாகப் பேசாமல் நயமாகவே திருத்த நினைத்தார்.
ஒவ்வொன்றாக நிறையப் பொருளை எடுத்துப்போய் விட்டார். கடைசியாக ஒரு நாள் ஒரு தம்ளரை எடுத்து மறைவாக மடியில் கட்டிக் கொண்டு, முல்லாவிடம் விடைபெற்று வீடு சென்றார். அவர் பின்னாலயே முல்லாவும் பணியாள் வீட்டுக்குச் சென்றார்.
வீடு சென்ற பணியாள் திரும்பிப் பார்க்கிறார், முல்லாவும் பின்னாலயே வருகிறார்.
"முல்லா நீங்க எங்கே வாரிங்க?" என்றார் வேலைக்காரர்.
"நானும் உங்க வீட்டுக்கே வந்துடறேனே" இது முல்லா.
"ஏன் முல்லா இப்படிச் சொல்றீங்க?"-வேலையாள்
"வேற என்னப்பா? என் பொருளெல்லாம்தான் இங்கே வந்துட்டு, நான் மட்டும் அங்கே இருந்து என்ன செய்யப்போறேன்? நானும் வந்துடறேன். அதான் வந்துட்டேன்"
முல்லா இவ்வாறு கூறியதைக் கேட்டதும் வேலைக்காரர் வெட்கப்பட்டுத் தலைகுனிந்தார்.
கோவமாகப் பேசி இருந்தால், வேலைக்காரர் தலைகுனிவாரா?
ஒரு திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ்.கே.யும் மதுரமும் கணவன் மனைவியாய் நடிப்பார்கள்.
பல ஆண்டுகளாகியும் அவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லை. ஒரு நாள் கலைவாணர் சினத்துடன் சொல்வார், "பத்துவருசமாப் புள்ளை இல்லே. வேற கல்யாணம் பண்ண வேண்டியது தான்."
மதுரம் சொல்லுவார், "புள்ளை இல்லேன்னா என்னாங்க? கல்யாண எல்லாம் வேணாங்க"
கலைவாணர்,"அதலெல்லாம் முடியாது, வேற கல்யாணம் பண்ணியே ஆகனும்" என்று பிடிவாதம் பிடிப்பார்.
மதுரம் கடைசியாகச் சொல்லுவார், "நான் வேணாம் வேணாம்னு சொல்லுறேன். நீங்க என்ன கேட்க மாட்டேங்கறீங்க. சரிங்க நீங்களே சொல்றீங்க, வேற என்ன செய்றது? நல்ல மாப்பிள்ளையாப் பாருங்க. கல்யாணம் பண்ணிடலாம்" என்றதும் கலைவாணர் கலங்கி நிப்பார்.
இது வெறும் சிரிப்பு மட்டுமா? சிந்திக்க வேண்டிய செய்தி. சினம் ஒரு சேர்ந்தாரைக் கொல்லி. சினம் தவிர்ப்போம் சிறக்க வாழ்வோம்!.
-புலவர் சண்முகவடிவேல்
- திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.
- கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம்.10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும்.
ஒன்பது நவக்கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணைபடி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெறலாம்.
1. திங்களூர் (சந்திரன்): - காலை 6 மணி
நவக்கிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும் வேண்டியது திங்களூர்தான். நீங்கள் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.
2. ஆலங்குடி (குரு): - காலை 7.30 மணி
ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம். காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்.
3. திருநாகேஸ்வரம் (ராகு): - காலை 9.30 மணி
கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம்.10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.
4. சூரியனார் கோவில் (சூரியன்): - மதியம் 11.00 மணி
நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவக்கிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
5. கஞ்சனூர் (சுக்கிரன்): - மதியம் 12.15
சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15 மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
6. வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்): - மாலை 4 மணி
நவக்கிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
7. திருவெண்காடு (புதன்): - மாலை 5.15 மணி
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00 மணிக்கு கிளம்ப வேண்டும்.
8. கீழ்பெரும்பள்ளம் (கேது): - மாலை 6.15 மணி
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். 45 நிமிஷ நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00 மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்.
9. திருநள்ளாறு (சனி): - இரவு 8.00 மணி
நவக்கிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00 மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால் 8.00 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.
9.30 மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு புறப்படலாம்.
- உன் குடும்பத்தைவிட்டு என்னோடு வருவதால் மட்டும் பெரிய பயன் விளைந்து விடாது. அது தற்போது இயலாத காரியமும் கூட.
- உலகியல் வாழ்க்கை அனைத்திலும் ஈடுபட்டபோதும், இந்த உலகிலேயே நீ மட்டும் தனி ஒருவனாக வாழ்வது போன்ற உணர்வு நிலையில் வாழ்.
இந்த "சாமி'' யார்... எந்த ஊர்... என்ன பேர்...? என்று அந்த கிராமத்தில் யாருக்குமே தெரியாது.
பல வருடங்களுக்கு முன்னால், சின்னக்குப்பம் கிராமத்துக்கு வந்தவர், ஊருக்கு வெளியே குடிசை போட்டு தனியாக வசிக்கிறார்.
ஊருக்குள் அவராக வரமாட்டார். விவசாய வேலைகளுக்கு கிராம மக்கள் அவரை வேலைக்கு கூப்பிடுவர்.
ஆனால், செய்த வேலைக்காக பணமோ பொருளோ வாங்கிக் கொள்ளமாட்டார். உணவு கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்வார்.
எனவே, பெயரில்லாத அவரை "சாமி" என்று பெயரிட்டு அழைக்கவும் தொடங்கினர்.
இன்று அவரிடம் கேட்டு விட வேண்டியதுதான் என்ற முடிவோடு அந்த "சாமியை'ப் பார்க்க வந்தான் முத்து.
அவன் அவருடைய குடிசையில் நுழைந்தபோது, சாமி ஆனந்தமாய் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தார்.
அவருடைய மாற்று உடை ஒன்றைத்தவிர குடிசையில் வேறு எந்தப்பொருளும் இல்லை.
ஆள் நுழையும் சப்தம் கேட்டு,
"வா, முத்து வா'' என்று அழைத்தார்.
"சாமி, நேற்று நான் பட்டினம் போயிருந்தேன்.
அங்கே என் உறவினர் ஒருவர் இறக்கும் தருவாயில் பட்ட கஷ்டங்ளைப் பார்த்தேன்.
அதிலிருந்து என் மனம் கலவரமடைந்திருக்கிறது.
நான் இறக்கும்போது அது போன்ற கஷ்டங்ளை அனுபவிக்க விரும்பவில்லை. ஆனந்தமாக இறக்க வேண்டும்.
அதற்கு வழி ஏதேனும் இருக்கிறதா..? சொல்லுங்க சாமி,'' என்றான்.
"அது மிகவும் எளிமையானது, ஆனால், சுலபமானதல்ல.''
"உன்னிடம் எத்தனை மேலாடைகள் உள்ளன''...?
"இருபதுக்கும் மேல் இருக்கும்.''
அதில் மிகப்பழைய, விலை மிகக்குறைவான ஒன்றை எடுத்து இப்போது நான் செய்வது போல் செய்துவிட்டு நாளை வா என்றவர்,
தன் மேலாடையைக் கழற்றித் தூக்கியெறிந்தார்.
அதனை அவன் கண் எதிரே தீயிட்டுக் கொளுத்தினார். அதைப் பார்த்து சிரித்தார்.
"இது என்ன பெரிய காரியம்'' என்று நினைத்த முத்து, வீட்டுக்கு வந்ததும் தன்னிடம் இருந்த பத்து வருட பழைய சட்டை ஒன்றை எடுத்தான்.
அது பல இடங்களில் நைந்து கூட போயிருந்தது.
அதனை தூக்கி எறியலாம் என்று நினைத்தபோது, அது அவன் பாட்டி அவனது பிறந்த நாளுக்குக் கொடுத்த பரிசு என்பது நினைவுக்கு வந்தது. அதை வைத்து விட்டான்.
இவ்வாறாக ஒவ்வொரு ஆடையை எடுக்கும்போதும் ஒவ்வொரு ஞாபகம்...
மறுநாள் சாமியின் கால்களில் விழுந்தான்.
"அய்யா...., ஒரு பழைய ஆடையைக்கூட என்னால் தூக்கி எறிய முடியவில்லை. என்னை எவ்வாறேனும் காத்தருளுங்கள். இதற்காக என் குடும்பத்தைவிட்டு உங்களோடு வந்து விடவும் நான் சித்தமாயிருக்கிறேன்,'' என்றான்.
"ஒரு பழைய ஆடையைக்கூட தூக்கி எறிய முடியாத உன்னால், இந்த உலக ஆசைகள் எனும் ஆடையை எவ்வாறு சுலபமாக கழற்றிவிட முடியும்''..?
"பசித்திரு,
தனித்திரு,
விழித்திரு''
இதுவே உனக்கான என் உபதேசம்.
பசித்திரு என்றால் உன் ஆன்மிகப்பசியினை வளர்த்துக்கொள் என்று அர்த்தம்.
உன் குடும்பத்தைவிட்டு என்னோடு வருவதால் மட்டும் பெரிய பயன் விளைந்து விடாது. அது தற்போது இயலாத காரியமும் கூட. உலகியல் வாழ்க்கை அனைத்திலும் ஈடுபட்டபோதும், இந்த உலகிலேயே நீ மட்டும் தனி ஒருவனாக வாழ்வது போன்ற உணர்வு நிலையில் வாழ்.
அதுவே தனித்திரு என்பதன் பொருள்.
"ஒரு பழைய ஆடையைக்கூட தூக்கி எறிய முடியாத நிலையில் நான் உள்ளேன். இது போன்று இன்னும் எத்தனை எத்தனை கர்மவினையின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறேனோ' என்ற விழிப்புணர்வுடன் வாழ்.
இதுவே விழித்திரு என்பதன் பொருள்.
இந்த மூன்று உபதேசத்தினை கடைபிடி. மற்றவை தானே நிகழும்,'' என்று ஆசிர்வதித்து அவனை அனுப்பி வைத்தார்.
அந்த சாமி தான் வள்ளலார் பெருமகனார்.
- நெல்லை கேசவன்
- ஏராள காரணங்கள் என்னைப் பேசவிடாமல் வைத்திருக்க...
- நேற்றிரவு நண்பன் அழைத்தான் அலைபேசியில்..
பெண்ணுக்கு செய்த
முறைமாமன் சீரில்
மூன்று கிராம்
குறைந்ததற்கு
மூக்கு சிந்தி அழுது போன
மூத்தவள்
இன்று வரை -
பேசவில்லை
சீமந்தக்காப்பு
சின்னதாய் இருந்தது கண்டு
கோபித்துக்கொண்ட
சின்னவள்
இன்றுவரை -
பேசவில்லை
சின்னமச்சானுக்கு கொடுத்த
சீர்வரிசைத்தட்டில்
இருந்த
பட்டுவேட்டியின்
விலை பார்த்து
விரக்தி சிரிப்போடு போன
பெரிய மச்சான்
இன்றுவரை -
பேசவில்லை
பிறந்த அன்றே
தன் குழந்தையை
பார்க்க வரவில்லை என்று
கோபித்துக்கொண்ட
பெரிய தம்பியும்
இரண்டு முறை
அழைத்தும்
அலைபேசியை
எடுக்காத காரணஞ்சொல்லி
சின்னதம்பியும்
இன்றுவரை -
பேசுவதில்லை
மருமகளுடனான
சண்டையில்
நான்
மனைவிபக்கமே இருப்பதாக
ஒரு காரணஞ்சொல்லி
பெற்றவளும்
இன்றுவரை -
பேசுவதில்லை
அழைப்பிதழ் கொடுக்க
நேரில் வராமல்
அலைபேசியில் மட்டுமே
தகவல் சொல்லி
அழைத்த
அவமானம் தாங்காமல்
உறவுக்காரர்கள் பலரிடம்
நானும் -
பேசுவதில்லை....
இப்படியாக...
என்னைச் சுற்றியே
ஏராள காரணங்கள்
என்னைப்
பேசவிடாமல் வைத்திருக்க...
நேற்றிரவு
நண்பன் அழைத்தான்
அலைபேசியில்..
முப்பதாண்டுகளுக்கு முன்
பிரிந்துபோன
நண்பர்கள் எல்லாம்
கூடிப்பேச
ஏற்பாடு செய்திருப்பதாக...
இதோ நான்-
கிளம்பிக்கொண்டிருக்கிறேன்...!
-அழ. இரஜினிகாந்தன்
- இன்றைக்கு என்ன வேண்டும் என்றால் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்ற இயற்கையின் நியதியை மனிதன் உணர்ந்து கொள்ள வேண்டும்.
- சிறுவயதிலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்துவிட வேண்டும்.
நம் முன்னோர்கள் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்து சிலவற்றைச் செய்யலாம் சிலவற்றைச் செய்யக் கூடாது என்னும் முறையிலே அனுமதி கொடுத்தும் தடை விதித்தும் வந்துள்ளார்கள். அவைகளெல்லாம் அந்தக் காலத்தை ஒட்டிய வாழ்க்கை முறைக்கு பொறுத்தமாக இருந்திருக்கும்.
நாம் இன்னும் அதிகமாக ஆழமாகப் போனால் அந்தக் காலத்தில் இதைச் செய், அதைச் செய்யாதே என்று சொல்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டது 'சொர்க்கம், நரகம்' என்ற இரண்டு கற்பனைகளே.
நல்லவை செய்தால் கடவுள் ஒருவனுக்கு நல்லதை கொடுப்பான், தீயவை செய்தால் தண்டிப்பான் என்று ஆசை காட்டியும் அச்சுறுத்தியும் நல்லன செய்யவும், தீயன தடுக்கவும், வேண்டிய அளவிற்கு மக்களுக்குப் போதித்து வந்தார்கள்.
விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்றுவரும் இந்தக் காலத்திலே அந்த முறை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து பயன்படும்?
இன்றைக்கு என்ன வேண்டும் என்றால் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்ற இயற்கையின் நியதியை மனிதன் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு சிறுவயதிலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்துவிட வேண்டும்.
இதைச் செய்தால் அதன் விளைவு இதுவாகத் தான் இருக்கும், அந்த விளைவைத் தாங்கிக் கொள்வதற்கு தான் தயாரா? என்ற உண்மையை உணர்ந்து கொள்ளக்கூடிய முறையில் உள்ள கல்விதான் இன்றைக்கு அவசியம்.
செயலிலேயே விளைவு இருக்கின்றது என்பது தெளிவாகவும் உறுதியாகவும் உணர்ந்து கொள்ளப் பெற்றால், ஒரு ஆசை எழும்போது, அதனை நிறைவேற்றிக் கொள்ளச் செயலில் இயங்கும் போது நல்லது அடைவோம் என்று நன்மை செய்வான், தீமை வரும் என்று அஞ்சி அதைத் தடுத்துக் கொள்வான். இந்த முறையிலே தான் தற்காலத்திற்கு கல்வி முறை அவசியம்.
-வேதாத்திரி மகரிஷி.
- வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன.
- ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.
எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.
வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.
வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?
எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?
வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?
இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.
வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.
தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட மாட்டீர்கள்.
நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள்.
தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.
நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.
- ஆறுமுகம்