search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadambur Raju. கருணாஸ் எம்எல்ஏ"

    எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மக்களிடம் பீதியை உருவாக்கும் நிலையை ஏற்படுத்த கூடாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கருணாஸ் மீதான நடவடிக்கை குறித்து கூறினார். #Karunas #KadamburRaju
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் எஸ்.வி.சேகர், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா, கருணாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கருணாஸ் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் வகையில் சாதிப் பிரச்சினையை வைத்து பேசிய காரணத்தால் பலரது கண்டனத்துக்கு ஆளாகிவிட்டார். பத்திரிக்கை என்றால் பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் தான். அதிலேயும் சாதிப்பிரச்சினை வைத்து பேசியுள்ளார். சாதி-மதத்துக்கு அப்பாற்பட்டு தான் அரசியலுக்கும், பொதுவாழ்வுக்கும் வரும் தலைவர்கள் இருக்க முடியும்.

    தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது. எச்.ராஜா எம்.எல்.ஏ. கிடையாது. அவரது பேச்சுக்கள் மக்களிடம் பிரதிபலிக்காது. ஆனால் கருணாஸ் எம்.எல்.ஏ. அவரது ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் பிரதிபலிக்கும். நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்காமல் பணியாற்றுவோம் என சத்திய பிரமாணம் எடுத்து தான் சட்டபேரவை உறுப்பினராக பதவி ஏற்கிறோம்.

    எம்.எல்ஏ.வாக இருப்பவர் மக்களிடம் பீதியை உருவாக்கும் நிலையை ஏற்படுத்த கூடாது. அதை மறந்து பேசியதால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு வந்துள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தமிழக அரசு அந்தக் குழுவை அழைக்கவில்லை. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அந்தக் குழு வந்துள்ளது. வந்தவர்கள் நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர் என்பதால் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது.

    அவர்களும் மக்களிடம் மனுக்கள் பெற்றுள்ளனர். மக்களின் ஒட்டுமொத்த உணர்வும் எதிர்ப்பாக இருக்கும் நேரத்தில் அவர்களும் அதை தான் பிரதிபலிக்கும் முடியுமே தவிர, மக்களின் கருத்துக்கு மாற்றாக எதுவும் செய்ய முடியாது.

    ஆலை மூடியது மூடியதுதான். இதை முதல்வரும் தெளிவுபடுத்தியுள்ளார். அரசு உறுதியாக உள்ளது. இந்த ஆய்வுகளுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களின் குறைகளை கேட்க தனியாக இடம் தேர்வு செய்து மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என அரசு ஏற்பாட்டை செய்துள்ளது.

    அ.தி.மு.க. வலுவாக இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் 92 சதவீதம் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். பால்வள கூட்டுறவு சங்கத்தில் உள்ள 62 இடங்களில் 58 இடங்களில் அ.தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. சண்முகநாதன் எம்.எல்.ஏ. கூறிய கருத்துக்களை கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பார்த்துக் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Karunas #KadamburRaju
    ×