search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "investment"

    • அமேசான் நிறுவனம், அடுத்த ஏழு ஆண்டுகளில் கூடுதலாக 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.
    • குஜராத்தில் உலகளாவிய பின்டெக் செயல்பாட்டு மையத்தைத் திறக்க உள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அங்கு சுற்றுப்பயணம் செய்தார். அங்கு ஹைடெக் ஹேண்ட்ஷேக் என்ற பெயரில் வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், மென்பொருள், செமிகண்டக்டர்கள், உற்பத்தி, விண்வெளி, மற்றும் ஸ்டார்ட்-அப் உட்பட பல துறைகளின் நிறுவன தலைவர்கள் மற்றும் வல்லுனர்களை மோடி சந்தித்தார். இதன் பலனாக அந்நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருகின்றன.

    அமேசான் நிறுவனம், அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் கூடுதலாக 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. இதன்மூலம் அதன் மொத்த இந்திய முதலீடு 26 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும். மேலும், 10 மில்லியன் சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கவும், 20 பில்லியன் டாலர் ஏற்றுமதியை செயல்படுத்தவும், 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 2 மில்லியன் வேலைகளை உருவாக்கவும் அது உறுதியளித்துள்ளது. அமேசான் இந்தியா, ஏற்கனவே 6.2 மில்லியன் சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கி வழங்குவதற்கான முயற்சியை செய்து வருகிறது. தவிர, 7 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி மற்றும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

    மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமருடனான சந்திப்பின்போது, மைக்ரோசாப்ட் இந்திய தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அந்நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் அரசாங்க உதவிக்காக, "ஜூகல்பந்தி" (Jugalbandi) எனும் மொபைல் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் உந்தப்பட்டு செயல்படும் சாட்போட் ஒன்றை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    கூகுள் நிறுவனம் இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான நிதியில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்திருப்பதாகவும், குஜராத் மாநிலத்தின் கிஃப்ட் (GIFT) நகரத்தில் எங்கள் உலகளாவிய பின்டெக் செயல்பாட்டு மையத்தைத் திறக்க உள்ளதாகவும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

    மைக்ரான் டெக்னாலஜி நிறுவனம், 'இந்திய செமிகண்டக்டர் மிஷன்' நிறுவனத்துடன் இணைந்து, குஜராத்தில் 2.75 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் சோதனை வசதியை உருவாக்குவதாகக் கூறியுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், ஃப்ளெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரேவதி அத்வைதி, ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், எஃப்.எம்.சி. கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் டக்ளஸ், ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    மேலும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க்கை நியூயார்க்கில் பிரதமர் மோடி சந்தித்தார்.

    இந்திய தொழில்துறை வளர்வதற்கும், இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், இந்த அறிவிப்புகள் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த நிறுவனம் ரூ.10 லட்சத்தில் டிரோன் வாங்க உள்ளது.
    • 300 பேர் ரூ.2 ஆயிரம் செலுத்தினார்கள் என்றால் முதலீடு ரூ. 6 லட்சமாகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சீனிவாசன்பி ள்ளை ரோட்டில் உள்ள தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட்டில் வேளாண் வணிகத்தை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுப்பது, பொருட்களை உற்பத்தி செய்வது மட்டு மின்றி சந்தைப்படுத்துவதில் சிறந்து விளங்குவது எப்படி என்பது குறித்து விவசாயிக ளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) அனீஸ்குமார் தலைமை தாங்கினார்.

    தஞ்சை தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் சேர்மன் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

    இதில் ஈரோடு ஆதார நிறுவனம் திட்ட அலுவலர் முனைவர் வடிவேல் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பத்தாயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை இந்தியா முழுவதும் உருவாக்குகிற மத்திய அரசின் சிறப்பு திட்டம்.

    இதில் 10 ஆயிரத்தில் 3000 நிறுவனங்களை நபார்டு வங்கி மூலம் உருவாக்குவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் விவசாயிகளுக்கு உற்பத்தி தளத்தில் தலைமுறை தலைமுறையாக அனுபவ அறிவு இருக்கும்.

    ஆனால் சந்தைப்படுத்துதல் என்ற தளத்தில் அவர்களுக்கு அனுபவம் மிகவும் குறைவு.

    இதனால் 300 விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து நிறுவ னத்தை உருவாக்கினால் சந்தைபடுத்துதலில் ஒரு வலிமையை கொடுக்கும்.

    இந்த திட்டம் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் சந்தையிலும் ஒரு வியாபாரி போல் பொருட்களை விற்க முடியும்.

    இந்த திட்டத்தில் குறைந்தபட்ச உறுப்பினர்கள் 300 பேர்.

    கம்பெனியின் ஒரு பங்கு என்பது ரூ.100 ஆகும்.

    ஒவ்வொரு விவசாயியும் 20 பங்கு வாங்கலாம். அப்படி என்றால் ரூ.2000 செலுத்த வேண்டும்.

    300 பேர் 2000 செலுத்தினார்கள் என்றால் முதலீடு ரூ.6 லட்சமாகும்.

    இதில் இணைப்பங்காக மத்திய அரசு ரூ.6 லட்சம் கொடுக்கிறது. இதனால் முதலீடு ரூ.6 லட்சமாகிவிடும். இது 750 நபர் வரை கொடுப்பார்கள்.

    உச்சபட்ச முதலீடு ரூ.30 பங்காகும்.

    இந்த கம்பெனியில் 10 பேர் கொண்ட இயக்குனர் குழு வந்துவிடும். அதில் முதன்மை செயல் அலுவலர், அக்கவுண்ட் மேனேஜர் நியமனம் செய்யப்படுவார்கள்.

    இவர்கள் விவசாயிகள் இடம் அறுவடை காலத்தில் பொருட்களை வாங்கி விடுவார்கள்.

    பின்னர் அந்த பொருட்களை சுத்தப்படுத்தி விலை ஏறும் போது மதிப்புக்கூட்டி சந்தைபடுத்துவார்கள்.

    வணிகத்தை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இது 3 ஆண்டுகளுக்கான நிதி வழங்கும் திட்டமாகும்.

    இவர்களை வழி நடத்துவதற்கு ஆதார நிறுவனங்கள் என்று 247 பேரை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.

    ஈரோடு துள்ளியல் பண்ணை உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்பது ஆதார நிறுவனம் ஆகும்.

    தஞ்சாவூர் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட்டை வளர்த்து எடுக்கும் பொறுப்பை நாங்கள் எடுத்துள்ளோம்.

    நாங்கள் இவர்களுடன் 5 ஆண்டு பயணம் செய்வோம்.

    ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ரூ.18 லட்சத்தை மத்திய அரசு கொடுக்கிறது.

    ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ரூ.2 கோடி வரைக் கடன் உதவி வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர் நிறுவனமானது தென்ன ங்கன்று, நாற்றங்காலை கையில் எடுத்துள்ளது. கண்டிதம்பட்டு அருகே சொக்காலி கிராமத்தில் அரை ஏக்கரில் தென்னை நர்சரி அமைக்கப்பட்டுள்ளது.

    அடுத்த திட்டம் என்னவெ ன்றால் தேங்காயைடன் கணக்கில் கொள்முதல் செய்து பெரிய கம்பெனிகளுக்கு கொடுப்பது. குறிப்பிட்டு சொல்வது என்னவென்றால் இந்த நிறுவனம் ரூ.10 லட்சத்தில் டிரோன் வாங்க உள்ளது.

    அனைத்து பயிர்களுக்கும் இந்த டிரோன் மூலம் மருந்து தெளிக்கலாம்.

    அதேபோல் தென்னைக்கு வேர் வழி நுன்னூட்டம் கொடுப்பதால் தென்னை செழித்து வளரும்.

    தென்னை மற்றும் பிற பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டல் உணவுப் பொருட்கள் தயாரிப்பது மற்றொரு திட்டமாகும். இதற்கான எந்திரங்கள் ரூ.4 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது.

    இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் வந்த பிறகு தரமான உணவு பொருட்கள் தயார் செய்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு சந்தைப்படுத்த முடியும்.

    எதிர்கா லத்தில் தஞ்சாவூரில் உள்ள இந்த கம்பெனி விவசாயிகளுக்கு பொருளாதார வளர்ச்சியை கொடுக்கும்.

    வேளாண் வணிகத்தை விவசாயிகளுக்கு கற்று கொடுப்பது அடிப்படை நோக்கமாகும்.

    ஜூலை மாதத்தில் சென்னையில் உணவு உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் முதன்மை செயல் அலுவலர் நவீன் அரசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க இதுவரை எந்த திட்டமும் இல்லை.
    • உலகிலேயே சிறந்த சமவெளி பகுதியான நமது டெல்டா பகுதியை நாம் முறையாக பாதுகாக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் தலைமை தாங்கினார்.

    உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, பேரூராட்சித் தலைவர்ம.க.ஸ்டாலின், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜசேகர், சமூகநீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட தலைவர் அமிர்த.கண்ணன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. மாநில தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- அரை நூற்றாண்டுகளுக்கு மேல் தி.மு.,க அ.தி.மு.க மாறிமாறி ஆட்சி செய்துள்ளது.

    திராவிட மாடல் என்று தற்போது புதியதாக ஒரு வார்த்தை உருவாகி வருகிறது. அந்த திராவிட வார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

    நம்முடைய மாடல் பாட்டாளி மாடல் மட்டுமே. பா.ம.க 2.0 என்பது அனைவருக்குமான வளர்ச்சி. திராவிட மாடல் ஆட்சி என்பது அ.தி.மு.க, தி.மு.க.விற்கு உள்ளடக்கியதா என்பதை விளக்க வேண்டும்.

    கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க எனது தலைமையில் போராட்டம் நடைபெறும்.

    அதற்கு முன்னரே கும்பகோணத்தை மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

    உணவு பற்றாக்குறையை போக்க உணவு பாதுகாப்பு சேமிப்பு கிடங்குகள் ஏற்படுத்த வேண்டும், தாயை பாதுகாப்பது போல் காவிரியாற்றையும் நாம் பாதுகாக்க வேண்டும், உலகிலேயே சிறந்த சமவெளி பகுதியான நமது டெல்டா பகுதியை நாம் முறையாக பாதுகாக்க வேண்டும்.

    கடந்த இரண்டு மாதங்களில் 240 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது.

    கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க இதுவரை எந்த திட்டமும் இல்லை. தடுப்பணைகள் அதிகளவில் கட்ட வேண்டும்.

    நீர் மேலாண்மை முதலீடு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன்.

    பா.மக ஆட்சியில் தற்போது இருந்தால் நிச்சயமாக

    ரூ. 1 லட்சம் கோடிக்கு நீர் மேலாண்மைக்காக முதலீடு செய்து இருப்போம். வாக்கை விலை கொடுத்து வாங்குவதுதான் திராவிட மாடல். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவது பா.ம.க தான்.

    இந்தியாவிலேயே நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் தான் அதிகம். இதனை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்

    தமிழக இளைஞர்களை மது, சூது போன்றவற்றால் சீரழிந்து வருகின்றனர்.

    ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை தமிழகத்தில் 28 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

    வாக்காளர்களே ஐந்தாண்டு ஆட்சியை எங்களிடம் கொடுங்கள். அடுத்த 50 ஆண்டு வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம், சமூக நீதிப் பேரவை, இளைஞர் அணியினர், மாணவரணியினர், உழவர் பேரியக்கத்தினர், மகளிர் அணியினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாநகர செயலாளர் குமார் நன்றி கூறினார்.

    முன்னதாக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அணைக்கரையில் மாவட்ட தலைவர் அமிர்த.கண்ணன், மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் ஆகியோர் தலைமையில் வெடி வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    • காரைக்குடி நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களுடன் புகார் செய்யலாம் என மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளது.
    • இந்த வழக்கு புலன்விசாரணையில் இருந்து வருகிறது.

    மதுரை

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நியூ ரைஸ் அலயம் சுமால் பைனான்ஸ் பேங்கிங், நியூ ரைஸ் அலயம் குரூப் நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைந்த 7 நிறுவனங்களை பொன்னுசாமி மகன் ராஜா, மாதவன், மகேந்திரன், தங்கேசுவரி, பழனியப்பன், பவுல் ஆரோக்கியசாமி, அன்வர்உசேன் மற்றும் 40 பேர் கூட்டு சேர்ந்து மேற்கண்ட நிதிநிறுவனங்களை தொடங்கி நடத்தினர்.

    இந்த நிறுவனங்களில் பல கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் அந்தபகுதி மக்களிடம் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்து முதிர்வு காலம் முடிந்த நிலையில் எந்த பணத்தையும் திருப்பிதராமல் நம்பிக்கை மோசடி செய்து விட்டனர்.

    இதுகுறித்து காரைக்குடி டவுன் சிக்கரி குடியிருப்பை சேர்ந்த சகாதேவன் மனைவி சந்திரா கொடுத்த புகாரின் பேரில் மதுரை பொருளாதாரக்குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்த வழக்கு புலன்விசாரணையில் இருந்து வருகிறது. எனவே மேற்கண்ட நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அசல் ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, கதவு.எண்.4/425ஏ, சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க்டவுன் பஸ் நிறுத்தம் எதிர்புறம், மதுரை -14 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்க வேண்டும். அதன்பேரில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அன்னிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடைபெற்று வரும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க கடந்த 22-ந்தேதி சென்றார். அவர் கர்நாடகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு தொழில் நிறுவன அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல நிறுவனங்களின் நிறுவனங்களை கர்நாடகத்தில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாவோஸ் நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    இந்தியாவில் தொழில் தொடங்க கர்நாடகம் பாதுகாப்பான மாநிலம். நாங்கள் பிற மாநிலங்களுடன் போட்டியிடவில்லை. முதலீடுகளை ஈர்ப்பதில் சர்வதேச அளவில் போட்டி போடுகிறோம். இந்தியாவில் உள்ள மொத்த வெளிநாட்டு நிறுவனங்களில் 50 சதவீதம் கர்நாடகத்தில் உள்ளது.

    இந்த நிறுவனங்கள் தங்களின் நிறுவனத்தை விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளன. இதற்கு கர்நாடகத்தில் இருக்கும் உள்கட்டமைப்பு, திறமையான மனித வளம் மற்றும் தொழில் தொடங்க எளிமையான நடைமுறைகள் இருப்பது தான் காரணம் ஆகும். நடப்பு ஆண்டில் மேலும் 4 விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. பெங்களூரு மீதான அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு அருகில் உள்ள நகரங்கள் மற்றும் 2, 3-வது நிலை நகரங்களில் தொழில் தொடங்க அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது.

    பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தின் வரலாறு வேறுபட்டது. இந்த தாவோஸ் பயணம் என்க்கு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. இங்கு வந்த சர்வதேச முதலீட்டாளர்கள், பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பதை அங்கீகரித்துள்ளனர். குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய சூழ்நிலை, சீனாவின் வீழ்ச்சி போன்றவற்றால் உலக நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றன. அந்த நிறுவனங்கள் கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் தொழில் தொடங்க முன்னுரிமை அளிக்கின்றன.

    ஏனென்றால் இங்கு உயர்ந்த தொழில்நுட்ப சுற்றுச்சூழல், அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சி-வளர்ச்சி நிறுவனங்கள், விமானவியல், பாதுகாப்பு, உபகரணங்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுடன் கர்நாடகத்திற்கு நீண்ட காலமாக நல்லுறவு இருந்து வருகிறது.

    கடந்த ஓராண்டாக அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு வந்த அன்னிய நேரடி முதலீடுகளில் 42 சதவீதம் கர்நாடகத்திற்கு வந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள் உற்பத்தி, பேட்டரி சேமிப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. காலநிலை மாற்றத்தை தடுக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.தீ மூலம் வெளியேறும் வாயுவால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் தான் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.

    கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 63 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகும். கர்நாடகத்தில் உள்ள எந்த நிறுவனமும் வேறு மாநிலத்திற்கு செல்லாது. ஏனென்றால் இங்குள்ள சுற்றுச்சூழல் மற்றும் தொழில் செய்வதற்கான உகந்த சூழல் இருக்கிறது. கர்நாடகத்தில் அடுத்தப்படியாக செமிகண்டக்டர், ஹைட்ரஜன் எரிபொருள், அம்மோனியா வாயு உற்பத்திக்கு நாங்கள் அதிக முன்னுரிமை செலுத்துகிறோம்.

    ஹைட்ரஜன் எரிபொருள் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் கர்நாடக அரசுடன் பேசி வருகின்றன. அதற்கு சில குறிப்பிட்ட இடங்கள் மற்றும் வசதிகள் தேவைப்படுகின்றன. அதை செய்து கொடுப்பதாக அரசு உறுதி அளித்துள்ளது. கர்நாடக அரசு ஏற்கனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கையை அமல்படுத்தியது. ஹைட்ரஜன் எரிபொருளை அதிகளவில் உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தப்படுகின்றன. பெங்களூருவை தவிர்த்து மாநிலத்தின் பிற பகுதிகளில் இந்த நிறுவனங்களை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
    தொழில் அதிபர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். #IndustrialLeader #Investment #EdappadiPalanisamy
    சென்னை:

    பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுத்துதல் கலந்தாய்வு கூட்டம், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை-2018 வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி. கல்வி நிறுவன வளாகத்தில் திறன்மேம்பாட்டு சிறப்பு பயிற்சி மையமும் மற்றும் 5 பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் திறன்மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் அரசால் நிறுவப்பட்டுள்ளன.



    சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் ஆகிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ரூ.546 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் இச்சிறப்பு பயிற்சி மையங்கள் மூலமாக தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்வி உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் திறன்களை மாணவர்களிடையே மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை பெறுதலுக்கான திறனை அதிகரிக்கச் செய்தல், தொழிற்சாலைகளின் தற்கால எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு திறனை மேம்படுத்துதல் ஆகிய முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இத்திட்டத்தின் மூலம் பட்டய மற்றும் பட்ட வகுப்புகளில் பயின்றுவரும் தொழில்நுட்ப மாணவர்களுக்கும் தொழிலகங்களில் இருந்து கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களுக்கும் திறன்மேம்பாட்டு பயிற்சி அளித்து, அவர்கள் எளிதாக வேலைவாய்ப்பு பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா அறிவித்த அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 15 நாட்கள் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் திட்டத்தின்படி, 2016-17 மற்றும் 2017-18 கல்வியாண்டுகளில் 191 மாணவர்கள், 15 நாட்களுக்கு ஸ்பெயின், தைவான், ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப பயிலகங்களில் தொழில்நுட்ப பயிற்சி பெற அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

    இப்பயிற்சிக்காக ஆண்டொன்றிற்கு 100 மாணவர்களுக்கு ரூ.1.5 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த பயிற்சி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

    தமிழ்நாட்டிலுள்ள 7 கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப கல்வி தரமேம்பாட்டுத் திட்டம் - 3 மூலம், இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட தமிழ்நாடு தெரிவு செய்யப்பட்டு அக்கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

    புதிய கல்லூரிகளை பின்தங்கிய மாவட்டங்களில் அரசு தொடங்கிவருவதாலும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கிவருவதாலும், விலையில்லா மடிக்கணினி, பின்தங்கிய மாணவர்களுக்கான உதவித்தொகை போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியதாலும், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் 48.6 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தேசிய சேர்க்கை விகிதமான 25.8 சதவீதத்தைவிட உயர்ந்ததாகும்.

    தேசிய அளவில் ஆராய்ச்சி படிப்பில் தமிழ்நாடு தான் முதன்மையான இடத்தில் உள்ளது என மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 2017-2018-ம் ஆண்டில் 29,778 ஆராய்ச்சியாளர்கள் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், நிர்வாக மேலாண்மை ஆகிய துறைகளில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் பல்வேறு பொறியியல் சார்ந்த துறைகளில் 6,914 மாணவர்கள் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளவும், திறன்மேம்பாட்டை வளர்த்துக்கொள்வதற்கும் உரிய உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

    இம்மாணவர்களுக்கான பயிற்சியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. படித்த மாணாக்கர்கள் அனைவருக்கும் அவர்களுடைய தகுதியை மேம்படுத்தவும், அத்தகுதிக்கு உரிய வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும்.

    தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட என்ஜினீயர்களும், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட டிப்ளமோ கல்வி பெற்றவர்களும் வெளியேறுகின்றனர்.

    தமிழக அளவிலான வேலைவாய்ப்பு திட்டம் மூலம் அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தி வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பை மேலும் அதிகப்படுத்துவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் கருத்துகளை வழங்க வேண்டும்.

    உலகளாவிய முதலீட்டாளர் 2-வது மாநாடு வரும் ஜனவரியில் நடைபெற உள்ளது. பல்வேறு துறைகளில் இருந்து முதலீட்டை ஈர்க்க இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இங்கு வந்துள்ள தொழில் அதிபர்கள் அனைவரும் தமிழகத்தில் புதிய முதலீடுகளை செய்து அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

    இந்த முதலீடுகள் மூலம் தமிழகத்தின் உள்நாட்டு ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜி.டி.பி.) விரைவாக அதிகரிக்கும். அதன்மூலம் தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், பி.பென்ஜமின், நிலோபர் கபில், டாக்டர் எம்.மணிகண்டன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசுத் துறை செயலாளர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர்நிலை அலுவலர்கள், உயர்கல்வி நிறுவன நிறுவனர்கள், கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #IndustrialLeader #Investment #EdappadiPalanisamy

    ×