search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "increase in power generation"

    முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் 4 ஜெனரேட்டர்களிலும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டி உள்ளது. இன்று காலை நிலவரப்படி 140.65 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 2802 கன அடி நீர் வருகிறது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர்களில் 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது நீர் திறப்பு 2300 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 4 ஜெனரேட்டர் களிலும் மின் உற்பத்தி செய்யப்பட்டு 168 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் விரைவில் 142 அடியை எட்டும் என்பதால் தமிழக அரசு கண்காணித்து நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

    மழை கைகொடுத்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. மேலும் வருசநாடு, வெள்ளிலை, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து 2627 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 69.36 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 2668 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடியிலேயே நீடிக்கிறது. அணைக்கு வரும் 142 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. இதேபோல் சோத்துப்பாறை அணையும் முழுமையாக நிரம்பி 126.41 அடியாக உள்ளது. இதனால் அணைக்கு வரும் 82 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    பெரியாறு 10.4, தேக்கடி 13.4, கூடலூர் 13.3, உத்தமபாளையம் 6.3, சண்முகாநதி அணை 5.2, வைகை அணை 1.8, மஞ்சளாறு 1, சோத்துப்பாறை 14, கொடைக்கானல் 3.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×