search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hockey World Cup"

    • சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
    • மாலை 3 மணிக்கு ஆஸ்திரேலியா-பிரான்ஸ் (ஏ பிரிவு) அணிகளும் மாலை 5 மணிக்கு இங்கிலாந்து-வேல்ஸ் (டி பிரிவு) அணிகளும் மோதுகின்றன.

    ரூர்கேலா:

    15-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி இன்று ஒடிசாவில் தொடங்குகிறது. ரூர்கேலா, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் 29-ந்தேதி வரை நடக்கிறது.

    இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவைகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெறும். 2 மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் விளையாடும். அதில் இருந்து மேலும் 4 அணிகள் கால் இறுதியில் தேர்வாகும்.

    தொடக்க நாளான இன்று 4 ஆட்டங்கள் நடக்கிறது. பகல் 1 மணிக்கு நடக்கும் போட்டியில் அர்ஜென்டினா-தென் ஆப்பிரிக்கா (ஏ பிரிவில்) மோதுகிறது. மாலை 3 மணிக்கு ஆஸ்திரேலியா-பிரான்ஸ் (ஏ பிரிவு) அணிகளும் மாலை 5 மணிக்கு இங்கிலாந்து-வேல்ஸ் (டி பிரிவு) அணிகளும் மோதுகின்றன.

    இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா-ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணியில் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், மன்பிரீத்சிங், ஹர்திக் சிங், மன்தீப்சிங், அமித் ரோகிதாஸ், ஆகாஷ் தீப்சிங் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும். இளம் வீரர்களை கொண்ட ஸ்பெயின் அணி வெற்றி முனைப்பில் உள்ளது. இதனால் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13 முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
    • உலக கோப்பையை இந்தியா வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்றார் ஒடிசா முதல்வர்.

    புவனேஷ்வர்:

    15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற உள்ளது.

    மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்தியா, தனது தொடக்க ஆட்டத்தில் ஜனவரி 13-ம் தேதி ஸ்பெயினைச் சந்திக்க உள்ளது.

    இந்நிலையில், ஹாக்கி உலக கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

    • நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா உள்பட 16 நாடுகள் பங்கு பெறுகிறது.
    • 15-வது உலக ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் ரூர்கேலாவில் வருகிற ஜனவரி 16-ந் தேதி தொடங்குகிறது.

    சென்னை:

    15-வது உலக ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் ரூர்கேலாவில் வருகிற ஜனவரி 16-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் இந்தியா இங்கிலாந்து ஸ்பெயின் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், பெல்ஜியம், தென் கொரியா, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா உள்பட 16 நாடுகள் பங்கு பெறுகிறது.

    ஹாக்கி விளையாட்டு போட்டி துவங்குவதையொட்டி இதில் வழங்கப்படும் உலக கோப்பையை தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


    அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    உலக கோப்பை ஹாக்கி அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. #HockeyWorldCup2018 #Netherlands

    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோற்று வெளியேறியது.

    மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 என்ற கோல்ணக்கில் ஜெர்மனியை தோற்கடித்து முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    அரை இறுதிக்கு நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகியவை தகுதி பெற்றன. அரை இறுதி போட்டிகள் நாளை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு நடக்கும் முதல் அரை இறுதியில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இதுவரை கோப்பையை பெறாத இங்கிலாந்து அணி 2-வது முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பெல்ஜியம், இங்கிலாந்துக்கு கடும் சவால் அளிக்கும்.

    மாலை 6.30 மணிக்கு நடக்கும் 2-வது அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இரு அணிகளும் தலா 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. கடந்த உலக கோப்பை (2014) இறுதிப் போட்டியில் ஆஸ்ரேலியாவிடம் நெதர்லாந்து தோற்றது.

    அதற்கு பலி தீர்க்க நெதர்லாந்துக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

    சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #HockeyWorldCup2018 #Netherlands

    ஒடிசாவில் சரண் அடைந்த மாவோயிஸ்டுகளுடன் இணைந்து முதல்வர் நவீன் பட்நாயக் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை கண்டுகளித்தார். #NaveenPatnaik #SurrenderedNaxals #HockeyWorldCup
    புவனேஸ்வரம்:

    ஒடிசாவில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு திருந்தி வாழ வேண்டும் என்று அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு திருந்தி வாழ முன்வரும் மாவோயிஸ்டுகளுக்கு தேவையான உதவிகளையும் புனர்வாழ்வு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அதன்படி பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்டுகள் சரண் அடைந்து திருந்தி வாழ தொடங்கி உள்ளனர்.

    இந்நிலையில், சரண் அடைந்த மாவோயிஸ்டுகளை சமூகத்தின் மையநீரோட்டத்தில் இணையச் செய்யும் முயற்சியாக, அவர்களுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அமர்ந்து உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை கண்டுகளித்தார்.

    ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று காலிறுதி ஆட்டம் நடைபெற்றபோது, சரண் அடைந்த 30 மாவோயிஸ்டுகளுடன் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தார். இவர்களில் 16 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சரண் அடைந்த மாவோயிஸ்டுகள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை பார்க்க விரும்புவதாக தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற மால்கங்கிரி போலீஸ் சூப்பிரெண்டு, இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளிடம் பேசி, முதல்வருடன் சேர்ந்து போட்டியை காண ஏற்பாடுகளை செய்திருந்தார்.



    முதல்வருடன் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தவர்கள், இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், இது தங்களின் வாழ்நாளில் சிறந்த அனுபவம் என்றும், உண்மையில் தாங்கள் சமூக மையநீரோட்டத்தின் ஒரு அங்கமாக உணர்வதாகவும் கூறினர்.

    இதுபற்றி முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், ‘இந்த இளைஞர்கள் அனைவரும் மாவோயிச பாதையை கைவிட்டு மையநீரோட்டத்திற்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் நிறைய பேர் திரும்பி வருவார்கள் என நம்புகிறேன்’ என்றார். #NaveenPatnaik #SurrenderedNaxals #HockeyWorldCup
    உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. #HockeyWorldCup2018
    புவனேஸ்வரம்:

    14-வது உலக கோப்பை  ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

    இதில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் கடைசி காலிறுதி ஆட்டத்தில் 1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி, 3 முறை சாம்பியனான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. முதலில் மாலை 4.45 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் நேரடியாக காலிறுதிக்குள் நுழைந்தது. நெதர்லாந்து அணி லீக் சுற்றில் ஜெர்மனியிடம் தோல்வியை சந்தித்தது. 2-வது சுற்றில் அந்த அணி கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்குள் கால் பதித்தது. தற்போதைய உலக தரவரிசையில் இரு அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. இந்திய அணியை (5-வது இடம்) விட நெதர்லாந்து அணி (4-வது இடம்) ஒரு இடம் தான் முன்னணியில் உள்ளது.

    ஒட்டுமொத்தத்தில் இரு அணிகளும் 105 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் நெதர்லாந்து அணி 48 முறையும், இந்திய அணி 33 தடவையும் வென்று இருக்கின்றன. 24 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தியது இல்லை. இந்த போட்டியில் இரு அணிகளும் 6 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் நெதர்லாந்து அணி 5 முறை வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

    நெதர்லாந்துக்கு எதிரான முந்தைய மோசமான நிலையை மாற்றி உள்ளூரில் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரு அணிகளும் தாக்குதல் பாணியை கடைப்பிடிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த காலங்களில் எங்களுக்கு எதிராக நெதர்லாந்து அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால் சமீப காலங்களில் நெதர்லாந்து அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். நாங்கள் அவர்களை வீழ்த்தி இருக்கிறோம். கடந்த ஜூன் மாதம் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அவர்களுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தோம். இந்திய  ஹாக்கி அணி நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஆட்டம் சவால் நிறைந்ததாக இருக்கும்.’ என்றார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் அளித்த பேட்டியில், ‘130 கோடி இந்திய மக்களின் விருப்பம் என்னவோ? அது தான் எங்களுடைய விருப்பமாகும். இந்த போட்டிக்கு இந்திய வீரர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக இருக்கிறார்கள். நெதர்லாந்து அணியின் எத்தகைய சவாலையும் சமாளிக்க ஆயத்தமாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

    நெதர்லாந்து அணியின் கேப்டன் பில்லி பாக்கெர் கூறுகையில், ‘ஆட்டம் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இருந்தாலும் எப்பொழுதும் நாங்கள் எங்களுக்குரிய பாணி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பது எங்களுக்கு முக்கியமல்ல. எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம். இந்திய அணிக்கு நிறைய நெருக்கடி இருக்கிறது. உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் இந்திய அணிக்கு இருக்கிறது. எங்களை விட இந்திய அணிக்கு அதிக நெருக்கடி இருப்பதாக நினைக்கிறேன்’ என்றார்.

    முன்னதாக மாலை 4.45 மணிக்கு அரங்கேறும் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #HockeyWorldCup2018
    உலக கோப்பை ஆக்கி போட்டியை வெற்றியுடன் தொடங்க விரும்புகிறோம் என்று இந்திய ஆக்கி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறினார். #HockeyWorldCup #HarendraSingh
    உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதையொட்டி நேற்று பேட்டி அளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங்கிடம், ‘ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடிய 7 இளம் வீரர்கள் இந்த போட்டியில் இடம் பெற்று இருப்பது குறித்து’ கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    இந்தியாவை இளம் அணி என்று சொல்ல முடியாது. இந்த அணியால் வெற்றி பெற்று வரலாறு படைக்க முடியும். நீங்கள் பொறுத்து இருந்து பாருங்கள். இளம் வீரர்கள் இந்திய சீனியர் அணியின் சீருடையை அணிய போதிய தகுதி படைத்தவர்கள் என்று தேர்வாளர்கள் கருத்தில் கொண்டு இருக்கிறார்கள். எனவே வீரர்களை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் அதனை உணர்ந்து இருக்கிறார்கள். வீரர்கள் அடிப்படை ஆட்ட யுக்தியை சரியாக பின்பற்ற வேண்டும் என்பதே எனது ஆலோசனையாகும். ஆட்டத்தை காண வரும் ரசிகர்களை 12-வது வீரராக கருதி அவர்களின் ஆற்றலை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இந்த ஆண்டில் நடந்த பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் அயர்லாந்து அணியும், உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று யாரும் நினைத்து இருப்பார்களா?. எல்லா அணிகளும் தங்களுக்கென்று தனி யுக்தியை வகுத்து செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாள் எப்படி அமைகிறதோ? அதனை பொறுத்தே முடிவு இருக்கும். லீக் சுற்றில் முதலிடத்தை பிடித்து நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்பதே எங்களது இலக்காகும்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் கண்ட தோல்வியை நாங்கள் மறந்து விட்டோம். நீங்களும் அதனை மறந்து விடுங்கள். எல்லா போட்டிகளிலும் முதல் ஆட்டம் முக்கியமானது என்பதை புரிந்து இருக்கிறோம். முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் 40 முதல் 50 சதவீதம் நெருக்கடி விலகும். முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று முழு புள்ளியை பெற விரும்புகிறோம். எந்தவொரு அணிக்கு எதிராகவும் தாக்குதல் ஆட்டத்தை தொடுப்பதில் சமரசம் செய்யமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #HockeyWorldCup #HarendraSingh
    ஒடிசாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் துவக்க விழாவிற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. #HockeyWorldCup #HockeyIndia #HockeyTickets
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் 28-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன.

    புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 27-ம் தேதி துவக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. கட்டாக்கில் உள்ள பாரபட்டி ஸ்டேடியத்தில் உலகக்கோப்பை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஷாரூக் கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.



    இந்நிலையில், துவக்க விழாவிற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

    துவக்க விழாவிற்கு சுமார் 10500 டிக்கெட்டுகளும், மறுநாள் நடைபெறும் உலகக் கோப்பை கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு 30 ஆயிரம் டிக்கெட்டுகளும் விற்பனை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #HockeyWorldCup #HockeyIndia #HockeyTickets
    ×