search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindi"

    • இளைஞர்களின் வேலை வாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும்.
    • இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து சட்டசபையில் இன்று அரசின் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இந்த தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். தீர்மானம் குறித்து அவர் பேசியதாவது:-

    மத்திய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்ற குழுத் தலைவராகவும் உள்ள அமித்ஷா தலைமையிலான குழு சமீபத்தில் ஜனாதிபதியிடம் அளித்துள்ள அறிக்கை இன்று நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

    குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்த நேரு அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பல பரிந்துரைகளை அளித்துள்ளது.

    அந்த பரிந்துரைகளில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்க ளில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். இந்தியை பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்சி மொழியாக ஆக்கப்பட வேண்டும்.

    இளைஞர்களின் வேலை வாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவையும் அடங்கும்.

    இந்தியின் அடிப்படையில் நாட்டை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

    இப்படி ஆங்கிலத்தை புறந்தள்ளி, அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள இந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளையும் அடியோடு ஒதுக்கி வைத்து, எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கும் வகையில், அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரான, நம் நாட்டின் பன்மொழிக்கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகளை ஏற்க கூடாது. நடைமுறைப்படுத்த கூடாது என பிரதமருக்கு கடந்த 16-ந்தேதி அன்று தமிழக அரசால் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

    இந்த மாபெரும் அவையில் அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை தீர்மானத்திற்கு எதிராக பிரதமராக இருந்த நேரு இந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, 1968 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப்படையில், ஆங்கில மொழிபயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதற்கும் எதிராக, இப்போது அளிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியதாக இப்பேரவை கருதுகிறது.

    அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, ஏன் அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழு தலைவரால் கடந்த 9.9.2022 அன்று ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டு உள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டு உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசினை இந்த பேரவை வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். அதன்பிறகு இந்தி திணிப்புக்கு எதிரான தனித் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
    • இந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்த கட்சி தி.மு.க. நாங்கள் சொல்லும் ஒரு வார்த்தை இந்தி தெரியாது போடா.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் பாரதிய ஜனதாவை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள 6 மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியினர் மற்றும் மாணவர் அணியினர் குவிந்தனர்.

    மத்திய அரசை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாணவர் அணி செயலாளர் டாக்டர் எழிலரசன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். மத்திய அரசுக்கு எதிராகவும், இந்தி திணிப்பு நடவடிக்கையை எதிர்த்தும் முழக்கங்களை எழுப்பினார்.

    தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் எப்போதும் இந்தி திணிப்புக்கு எதிராக போராடுவோம். மீண்டும் ஒரு மொழிப்போர் சூழலை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டாம். தொடர்ந்து இந்தி திணிப்பை மேற்கொண்டால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம். முதல் கட்ட போராட்டம் இன்று நடந்துள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். 2019-ம் ஆண்டு நிலை தான் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்படும்.

    மோடி, அமித்ஷா நினைப்பது போல இங்கு நடப்பது அ.தி.மு.க. ஆட்சி அல்ல. இப்போது தமிழகத்தை ஆட்சி செய்பவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இந்த ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறுமா? என்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது.

    இந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்த கட்சி தி.மு.க. நாங்கள் சொல்லும் ஒரு வார்த்தை இந்தி தெரியாது போடா. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு துவக்கமாக இருக்கும்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கவில்லை என மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். எப்போதும் நுழைய விட மாட்டோம். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் உதயநிதி ஸ்டாலின் காரில் புறப்படும்போது அவரிடம் நிருபர்கள், "டெல்லியில் போராட்டம் எப்போது நடத்தப்படும்" என்று கேட்டனர். அதற்கு அவர், "தி.மு.க. தலைவர்தான் முடிவு செய்து அறிவிப்பார்" என்று பதிலளித்தார்.

    முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், இரா.கிரிராஜன், கனிமொழி சோமு, இளைஞர் அணி துணை செயலாளர்கள் தூத்துக்குடி ஜோயல், ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ., தாயகம் கவி, மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம் மூர்த்தி, கருணாநிதி, எபிநேசர், மோகன், பரந்தாமன், பிரபாகர்ராஜா, மயிலை வேலு, மாவட்ட செயலாளர்கள் இளைய அருணா, மாதவரம் சுதர்சனம், மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, தா. இளைய அருணா, மண்டல குழு தலைவர் நேதாஜி யு. கணேசன், பகுதி செயலாளர்கள் சேப்பாக்கம் மதன் மோகன், காமராஜ் அன்புதுரை, வி.எஸ்.ராஜ் கண்ணன், ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், மாவட்டத் தலைவர் வெற்றி வீரன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் க.கோவிந்தசாமி, இளைஞர் அணி அமைப்பாளர்கள் பொன் இளவரசன், எஸ்.கிருஷ்ணன், தி.நகர் லயன். சக்திவேல், மயிலை வேலு, சேப்பாக்கம் பகுதி பொருளாளர் வி.பி. சிதம்பரம், சேப்பாக்கம் ரகமத்துல்லா உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்தி மொழியை கொண்டு வரும் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது.
    • காலை 9 மணிக்கு தாராபுரம் அண்ணா சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. திருப்பூர் தெற்கு இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் தாராபுரத்தில் நாளை (சனிக்கிழமை) காலை நடக்கிறது.

    இது குறித்து தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தி மொழியை கொண்டு வரும் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. இந்த திட்டத்தை தி.மு.க. இளைஞர் அணியும், மாணவர் அணியும் கடுமையாக எதிர்க்கிறது. இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மத்திய அரசை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தாராபுரம் அண்ணா சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், இளைஞர் அணி மாணவர் அணி நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட கழக பிரதிநிதிகள், துணை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வெற்றியடைய செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியையும், மாநில மொழிகளையும் முன்னிறுத்துவதில் எந்த தவறும் இல்லை.
    • ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள தாய்மொழியை மோடி அரசு ஊக்குவித்து வருகிறது.

    புதுடெல்லி :

    இந்தி பேசும் மாநிலங்களில், ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களில் மாநில மொழிகளே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு சிபாரிசு செய்துள்ளது.

    இதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியை திணித்து இன்னொரு மொழிப்போருக்கு வித்திட வேண்டாம் என்று அவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனும் ஆட்சேபனை தெரிவித்தார். பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்தநிலையில், இந்த எதிர்ப்புகளை பா.ஜனதா நிராகரித்துள்ளது. பா.ஜனதா பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பா.ஜனதாவின் மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி கூறியதாவது:-

    நாடாளுமன்ற குழு, ஆங்கிலத்துக்கு மாற்றாகத்தான் இந்தியை முன்னிறுத்துகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற மாநில மொழிகளுக்கு மாற்றாக இந்தியை சிபாரிசு செய்யவில்லை.

    ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியையும், மாநில மொழிகளையும் முன்னிறுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள தாய்மொழியை மோடி அரசு ஊக்குவித்து வருகிறது.

    கடிதம் எழுதிய தலைவர்கள், தமிழின் பெருமையையோ, மலையாளத்தின் பெருமையையோ வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தால், பா.ஜனதா அதை வரவேற்கும்.

    ஆனால் அவர்கள் ஆங்கிலத்துக்கு ஆதரவாக கடிதம் எழுதி இருப்பது சரியல்ல. ஆங்கிலத்தை பயன்படுத்தும் மனப்பான்மையுடன் உள்ளனர். அவர்கள் காலனி மனப்பான்மையில் இருந்து வெளியே வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீண்ட நாட்களுக்கு முன்பே அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்தியை அறிமுகப்படுத்தி விட்டனர்.
    • இந்தி மொழி மீது மத சாயமோ, அரசியல் சாயமோ பூசுவது உகந்தது அல்ல.

    திருப்பூர் :

    இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கே.கோபிநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்தி மொழியை அறிமுகப்படுத்துவதை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது. நீண்ட நாட்களுக்கு முன்பே அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்தியை அறிமுகப்படுத்தி விட்டனர். இந்தி மொழியை ஒரு மொழியாக அனைவரும் பார்க்க வேண்டும். அம்மொழி மீது மத சாயமோ, அரசியல் சாயமோ பூசுவது உகந்தது அல்ல. இந்தியை எதிர்க்கும் தலைவர்களின் மகன், மகள்களும் மற்றும் பேரக்குழந்தைகளும் இந்தி மொழியை கற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மேலும் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வகையில் தமிழகம் மட்டுமல்லாது பரந்த நமது இந்தியாவில் பயணம் செய்வதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது. எனவே நம்முடைய எதிர்கால குழந்தைகளின் அறிவு மற்றும் அவர்களின் நலன் கருதி இந்தி மொழியை அரசியல் ஆக்காமல் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன.
    • ஒரு மொழியை மட்டும் நாட்டின் மொழியாக அறிவிக்க முடியாது.

    திருவனந்தபுரம் :

    இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பது, அந்த மொழி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் ஒரு அறிக்கை அளித்தது. அதில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்றவற்றிலும், மத்திய பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்; ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெற செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

    இதுகுறித்து பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது இந்தி திணிப்பு முயற்சியாக பார்க்கப்படுவதால், இந்தி பேசாத மாநிலங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் எதிர்ப்புக்குரலை பதிவு செய்தார். இந்த முயற்சிக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருந்த முக்கிய அம்சங்கள்:-

    * இந்திய துணை கண்டத்தின் பெருமையும், வலிமையும் பன்முகத்தன்மைதான். 'ஒரே நாடு' என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதாகும்.

    * 'பாரத் மாதா கீ ஜே' என்று நாடாளுமன்ற அவையில் அதனை ஒரு அரசியல் கோஷமாக்கி குரல் எழுப்பிக்கொண்டே இந்திக்கு தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியது.

    * வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியை கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இதன் எதிரொலியாக இந்த விவகாரத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது கண்டனத்தை பதிவுசெய்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

    * நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன. அப்படி இருக்கும்போது ஒரு மொழியை மட்டும் நாட்டின் மொழியாக அறிவிக்க முடியாது. உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியை முக்கிய பயிற்றுமொழி ஆக்க முடியாது.

    * இது வேலை தேடுவோர்களையும், மாணவர்களையும் பயத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே மத்திய அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் வினாத்தாள்கள் அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளிலும் இருக்க வேண்டும்.

    * இளைய தலைமுறையினர் தங்கள் தாய்மொழி தவிர்த்து பிற மொழிகளைக் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தலாம். அதே வேளையில் ஒரு மொழியை திணிக்கும் முயற்சி என்பது பொதுவாக மக்களிடமும், குறிப்பாக வேலை தேடுவோர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி விடும்.

    'பிரதமர் தலையிட வேண்டும்'

    * மற்ற மொழிகளை காட்டிலும், எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் பயிற்றுமொழியாக்க முன்னுரிமை தரக்கூடாது. அப்படி செய்வது திணிப்பாகவே பார்க்கப்படும். அது, நமது கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு நல்லதல்ல.

    * இந்த விவகாரத்தில் நீங்கள் கூடிய விரைவில் தலையிட்டு, தேவையான, சரிப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

    தெலுங்கானாவும் எதிர்ப்பு

    இந்தி திணிப்பு முயற்சிக்கு தெலுங்கானா மாநிலமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, அங்கு ஆளுங்கட்சியாக உள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவரும், முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகனுமான கே.டி.ராமாராவ் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவுக்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது. பிற அலுவல் மொழிகளுடன் இந்தியும் ஒன்று. ஐ.ஐ.டி.களிலும், பிற மத்திய வேலை வாய்ப்பு தேர்வுகளிலும், இந்தியை கட்டாயமாக திணிப்பதின்மூலம், பா.ஜ.க. கூட்டணி அரசு கூட்டாட்சி உணர்வினை மீறுகிறது.

    மொழியை தேர்வு செய்வதற்கு இந்தியர்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும். இந்தி திணிப்பு கூடாது என்றே நாங்கள் சொல்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தி திணிப்பு தமிழகத்தில் ஒரு நாளும் வெற்றி பெறாது என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்தார்.
    • யார் வேண்டுமானாலும் தேவர் நினைவிடத்துக்கு வரலாம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பிறகு திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு பிரதமர் வருவது என்பது அவருடைய முடிவு. யார் வேண்டுமானாலும் தேவர் நினைவிடத்துக்கு வரலாம்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் எந்த அணியையும் சாராமல் நடுநிலைமையாகத்தான் உள்ளனர். பிரசாரத்துக்கு வரும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பது அந்தந்த நிர்வாகிகளின் முடிவை பொருத்தது.

    மத்திய அரசு இந்தியை மீண்டும் திணிக்க முயற்சி செய்வது கண்டனத்துக்குரியது. இந்தி திணிப்பு தமிழகத்தில் ஒரு நாளும் வெற்றி பெறாது. அவ்வாறு முயற்சி செய்தால் போராட்டம் வெடிக்கக்கூடிய சூழல் ஏற்படும்.

    சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வினருக்கு இருக்கை ஒதுக்குவது தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் என்ன முடிவு எடுக்க உள்ளார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாவட்ட வளர்ச்சி 

    • மாநில மொழிகளுக்கு எதிராக இந்தியை நிறுத்த தவறான பிரசாரம் நடந்து வருகிறது.
    • நாட்டில் உள்ள எந்த மொழிக்கும் இந்தி போட்டியாளராக இருக்க முடியாது.

    சூரத் :

    குஜராத் மாநிலம் சூரத்தில் அகில இந்திய அலுவல் மொழி மாநாடு நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    மாநில மொழிகளுக்கு எதிராக இந்தியை நிறுத்த தவறான பிரசாரம் நடந்து வருகிறது. இந்தியும், குஜராத்தியும் போட்டியாளர்கள், இந்தியும், தமிழும் போட்டியாளர்கள், இந்தியும், மராத்தியும் போட்டியாளர்கள் என அவர்கள் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    நாட்டில் உள்ள எந்த மொழிக்கும் இந்தி போட்டியாளராக இருக்க முடியாது. நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் இந்தி நண்பன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்தி செழுமை அடையும்போதுதான் மாநில மொழிகளும் செழுமை அடையும். இந்தியையும் ஒன்றாக வைத்துக்கொண்டே மாநில மொழிகளை வலுப்படுத்துவது அவசியம்.

    மொழிகள் இணைந்து இருப்பதன் அவசியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற மொழிகளில் இருந்து வார்த்தைகளை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இந்தியை நெகிழ்வுத்தன்மை கொண்டதாக ஆக்க வேண்டும்.

    மொழிகளின் ஒருங்கிணைப்பை நாம் ஏற்றுக்கொள்ளாதவரை நமது சொந்த மொழியில் நாட்டை வழிநடத்தும் கனவை நனவாக்க முடியாது.

    அனைத்து மொழிகளையும், தாய்மொழியையும் உயிர்ப்புடனும், செழிப்பாகவும் வைத்துக்கொள்வது நமது நோக்கமாக இருக்க வேண்டும். எல்லா மொழிகளின் செழிப்பில்தான் இந்தியும் செழிப்பாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளாக அரபு, சீனம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ரஷியா, ஆங்கிலம் ஆகியவை உள்ளன.
    • ஐக்கிய நாடுகள் தலைமை செயலகத்தின் அலுவல் மொழிகளாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகள் உள்ளன.

    ஜெனீவா:

    ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 6 மொழிகள் தவிர இதர மொழிகளிலும் ஐ.நா.வின் அறிக்கைகள், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 80 நாடுகள் சார்பில் ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

    இதற்கிடையே, இந்தத் தீர்மானம் ஐ.நா. பொதுசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பன்மொழி பயன்பாட்டை முன்மொழியும் இந்தத் தீர்மானத்தில் இந்தி, உருது மற்றும் வங்க மொழி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இந்திய அரசு இதனை வரவேற்பதாக ஐ.நா.விற்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    பன்மொழி பயன்பாடு என்பது ஐ.நா.வின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐ.நா. பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என கூறினார்.

    அபுதாபி கோர்ட்டுகளில் இந்தி 3-வது அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தி மொழி பேசக்கூடிய தொழிலாளர்கள் தங்களது குறைகளை எளிதில் தெரிவித்து தீர்வு காண உதவியாக இருக்கும். #AbuDhabi #Hindi
    அபுதாபி:

    அபுதாபி நீதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அபுதாபி நீதித்துறை செயல்பாட்டில் கடந்த ஆண்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நீதிமன்றத்தில் வாதி, பிரதிவாதிகளுக்கு ஆவணங்கள் அரபி மொழியில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து அனைத்து சிவில் மற்றும் வர்த்தகம் தொடர்புடைய வழக்குகளில் ஆவணங்கள் கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் முதல் ஆங்கில மொழியிலும் வழங்கப்படுகிறது. மேலும் அமீரகத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்கள் எளிதில் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும், தங்களது வழக்குகள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளவும், குறைகளை தெரிவிக்கும் வகையிலும் இந்தி மொழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    அரபி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக 3-வது மொழியாக இந்தி மொழி பயன்படுத்தப்படுகிறது. இணையதளம் மூலமும் இந்தி மொழியில் கருத்துக்களை கூறவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தி மொழி பேசக்கூடிய தொழிலாளர்கள் தங்களது குறைகளை எளிதில் தெரிவித்து தீர்வு காண உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AbuDhabi #Hindi
    நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். #PrakashJavadekar #Hindi #School
    புதுடெல்லி:

    நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பும் கிளம்பியது.



    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

    தேசிய கல்விக் கொள்கையின்படி எந்த மொழியையும் கட்டாயப் பாடமாக்குவதற்கு இடமில்லை. ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார். #PrakashJavadekar #Hindi #School
    ‘பிராந்திய மொழிக்கு நிகராக தென்னிந்தியாவில் இந்தி மொழி வளர்ச்சி அடைந்து வருகிறது’ என்று சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசினார். #Hindi #IndiaCulture #SushmaSwaraj
    சென்னை:

    தென்னிந்திய இந்தி பிரசார சபையின் 82-வது பட்டமளிப்பு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள சபை வளாகத்தில் நேற்று நடந்தது. சபை தலைவரும், வேந்தருமான நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமை தாங்கினார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    பின்னர் பட்டங்களை வழங்கி மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:-

    தென்னிந்திய இந்தி பிரசார சபை நூறு ஆண்டுகள் சேவை செய்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. மொழி என்பது கடவுள் மனிதனுக்கு கொடுத்த வரப்பிரசாதமாகும். மொழி மூலம் தான் ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய கருத்துகளை பரிமாறிக் கொள்ள முடியும். மொழியின் வளர்ச்சியில் தான் நாட்டின் வளர்ச்சி இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியால் கலாசார வளர்ச்சி, நாகரிகத்தின் வளர்ச்சிகள் அடங்கி உள்ளன.

    வடஇந்தியாவில் பல பகுதிகளில் பேசுவதற்கும், புரிந்து கொள்வதற்கும் இந்தி மொழி உதவுகிறது. ஆனால் தென்னிந்தியாவில் சில பகுதிகளில் இந்தி மொழி பேசப்படுவதில்லை. 1918-ம் ஆண்டு தென்னிந்திய இந்தி பிரசார சபை ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 1964-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தென்னிந்திய இந்தி பிரசார சபை நாட்டு நலன் கருதி தேசிய நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.

    நாட்டுக்கு சேவையாற்றி வரும் சபை இந்தி மட்டும் அல்லாது பிராந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பதுடன், பிராந்திய மொழி நூல்களையும் வெளியிட்டு வருகிறது.

    இதுவரை 32 ஆயிரத்து 199 பேர் விஷாரத் பட்டமும், 22 ஆயிரத்து 6 பேர் பிரவின் பட்டமும் பெற்றுள்ளனர். குறிப்பாக தற்போது 4 ஆயிரத்து 112 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது. தொலைத்தூர கல்வி பயின்ற 2 ஆயிரத்து 337 பேருக்கும், ரெகுலர் படிப்பு மூலம் பயின்ற 1,799 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் 26 பேர் தங்கப்பதக்கமும் பெற்றுள்ளனர்.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடியும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியில் பேசி உள்ளார். நானும் ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்தியில் தான் பேசுகிறேன். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களிடமும் இந்தியில் தான் பேசுகிறோம். இதன் மூலம் உலகளவில் இந்தி மொழிக்கு நாளுக்கு நாள் ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி பல வெளிநாட்டினர் தாங்களும் இந்தி படிப்பதற்காக தங்கள் நாடுகளில் இந்தி அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

    இந்தி மொழி படித்தால் வேலை கிடைக்காது என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. தற்போது அந்த நிலை மாறி ஊடகங்கள் மற்றும் விளம்பரத்துறைகளில் இந்தி படிப்பவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகிறது. டுவிட்டர், பேஸ் புக் ஆகியவற்றிலும் இந்தி மொழி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தென்னிந்தியாவிலும் பிராந்திய மொழிக்கு நிகராக இந்தி மொழியும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பட்டம் பெற்றவர்கள் இந்தி மொழியை பரப்புவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    விழாவில் ‘சுப பிரபாத்’ (‘குட்மார்னிங்-365’) என்ற நூலை மந்திரி சுஷ்மா சுவராஜ் வெளியிட்டார். தொடர்ந்து பிராந்திய மொழி இலக்கியவாதிகள் மாலன் நாராயண் (தமிழ்), வேம்பள்ளி ரெட்டி நாகராஜலு (தெலுங்கு), சின்னப்பா அங்காடி (கன்னடம்), மாலூர் ஸ்ரீதரன் (மலையாளம்) ஆகியோருக்கு விருதும், சான்றிதழும் மந்திரி சுஷ்மா சுவராஜ் வழங்கினார்.

    தொடர்ந்து மூத்த இந்தி ஆசிரியர்கள் பி.வத்சலா, ஆர்.பாலமீனாட்சி, ஜி.விஜயலட்சுமி, எம்.எல்.கீதா, மகேஷ்வரி ரெங்கநாதன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    முன்னதாக துணைவேந்தர் அனுமந்தப்பா வரவேற்றார். பொதுசெயலாளர் எஸ்.ஜெயராஜ், பொருளாளர் சி.என்.வி. அண்ணாமலை, பதிவாளர் பிரதீப் கே.சர்மா, கல்விக்குழு தலைவர் எஸ்.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் வாட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தனி அதிகாரி கே.தீனபந்து நன்றி கூறினார்.  #Hindi #IndiaCulture #SushmaSwaraj 
    ×