search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health department"

    • பொது இடங்களில், சளியுடன் தும்மல் போடுவதால், மற்றவர்களுக்கு காய்ச்சல் எளிதாக பரவுகிறது.
    • கொரோனா காலத்தில் இருந்தது போன்று மக்கள் முகக்கவசம் அணிய துவங்கியுள்ளனர்.

    மடத்துக்குளம் :

    தற்போது பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுஇடங்களில் கவனமுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சளி, காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் குணமடைந்தாலும், சளி, தொண்டை வலி குணமாக ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. வீட்டில் ஒருவருக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவுகிறது.

    பொதுஇடங்களில், சளியுடன் தும்மல் போடுவதால், மற்றவர்களுக்கு காய்ச்சல் எளிதாக பரவுகிறது. இதனால், கொரோனா காலத்தில் இருந்தது போன்று மக்கள் முகக்கவசம் அணிய துவங்கியுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :- காய்ச்சல், சளி பரவுவது அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். கொதிக்க வைத்த குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்திருக்கும் குளிர்ச்சியான பானங்கள், குடிநீரை பருக வேண்டாம்.காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். டாக்டர் பரிந்துரைக்கும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மருந்துக்கடைகளில் தன்னிச்சையாக மாத்திரை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பொதுஇடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றனர்.  

    • சுகாதாரத்துறையில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க தொடர்ந்து மத்தியஅரசு முயற்சி செய்து வருகிறது.
    • ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட அமல்படுத்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெறும் வகையில் 12 தலைப்புகளில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதில் இன்று உடல்நலம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசினார்.

    கொரோனா தொற்று போன்ற நெருக்கடியான சூழல் ஏற்படும் போதெல்லாம் வளமான நாடுகள் கூட வீழ்ச்சி அடைவதை நாம் பார்க்கிறோம். இதனால் உலகமே இப்போது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறது.

    இந்தியாவில் சுகாதார பாதுகாப்புடன் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தின்போது மருந்து, மாத்திரைகள், தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள் போன்றவை உயிர் காக்கும் ஆயுதங்களாக இருந்தது. சுகாதாரத்துறையில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க தொடர்ந்து மத்தியஅரசு முயற்சி செய்து வருகிறது.

    இந்தியாவில் மலிவு விலையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பது தான் அரசின் முதன்மையான நோக்கமாகும். அரசு சுகாதார பாதுகாப்பில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. குடிமக்களின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறது.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே சிறந்த மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் தயாராகி வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் மருத்துவ சிகிச்சைக்காக செலவிடப்ப டும் சுமார் 80 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியா எந்த ஒரு தொழில் நுட்பத்தையும் இறக்குமதி செய்ய வேண்டியது இல்லை. இதில் தன்னிறைவு பெறுவதை நமது தொழில்முனைவோர்கள் உறுதிப்படுத்த வேண்டும். தொழில் முனைவோரை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.
    • பேரூராட்சி ஊழியர்கள் தெருக்கள் தோறும் புகை மருந்து அடிக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆலங்குளம்:

    தொடர்மழை காரணமாக ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதன் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    காய்ச்சல்

    சமீபத்தில் 10 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் முற்றியதில் மூளைக்காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளாகி நெல்லை அரசு மருத்தவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து இவ்வட்டாரத்தில் சுகாதாரத்துறை ஆய்வு செய்து டெங்கு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் அதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், 5 நாள் தொடர் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனையை நாடினால் அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாகவும், சில நேரத்தில் பணியாளர்களே சிகிச்சை மேற்கொள்கின்றனர் எனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    கோரிக்கை

    மழை நீடிப்பதால் ஆங்காங்கே தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. பேரூராட்சி ஊழியர்கள் தெருக்கள் தோறும் புகை மருந்து அடிக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வீடுகளில் தொட்டிகள், குடங்களில் நீண்ட நாட்களாக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் மழைநீரில்தான் டெங்குவை பரப்பும் கொசு இனப்பெருக்கம் செய்கிறது.

    எனவே தண்ணீரை நாள் கணக்கில் சேமித்து வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தொட்டிகளை 6 நாட்களுக்கு ஒரு முறை உரிய மருந்து தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். அதை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
    • செவிலியர்களுக்கு ரூ.14 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. தற்காலிக பணியில் சேர்ந்தால் ரூ.18 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்படும்.

    சென்னை:

    கொரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 6,282 நர்சுகள் தற்காலிக முறையில் ஒப்பந்த நர்சுகளாக நியமிக்கப்பட்டனர். அதில், 3000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது.

    இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி 810 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீதமிருந்த 2,472 செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி பணி நீட்டிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ந் தேதியில் இருந்து ஒப்பந்த செவிலியர்கள் பணி பாதுகாப்பு, நிரந்தர பணி கோரி தமிழகம் முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். அதை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

    இது குறித்து சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்ட சுகாதார மையம் மூலமாக 3,949 காலிப் பணியிடங்களை மாவட்ட கலெக்டர்கள் நேர் முகத்தேர்வு மூலம் நிரப்ப உள்ளனர். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு இந்த காலிப்பணியிடங்கள் நிரப்புவதில் முன்னுரிமை கொடுக்கப்படும். தேர்வில் 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் பெற்றுவிட்டாலே பணிகிடைத்து விடும். 20 மாதம் கொரோனா காலத்தில் பணியாற்றி இருந்தால் மாதத்துக்கு 2 மதிப்பெண் வீதம் மொத்தம் 40 மதிப் பெண்கள் கொடுக்கப்படும்.

    ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களும் இந்த தேர்வில் பங்கேற்கலாம். கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கு மதிப்பெண் கொடுக்கப்படுவதால் 2,600 செவிலியர்களுக்கு எளிதாக பணி கிடைத்துவிடும்.

    இதற்கு முன்பு செவிலியர்களுக்கு ரூ.14 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. இந்த பணியில் சேர்ந்தால் ரூ.18 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்படும். இது தற்காலிக ஒப்பந்த பணியாகும். இந்த வாய்ப்பை செவிலியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கொரோனா கால செவிலியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறினால், வேறு புதிய செவிலியர்கள் பணியில் சேர்ந்துவிடுவார்கள். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் செவிலியர்களில் சுமார் 500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எம்.ஆர்.பி. கொரோனா செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.ராஜேஷிடம் கேட்ட போது, "கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் தற்காலிக ஒப்பந்த பணி தேவையில்லை. பணி பாதுகாப்பு, நிரந்தர பணிதான் வேண்டும். எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தகட்டமாக நாளை (12-ந்தேதி) கோட்டை நோக்கி பேரணி செல்ல இருக்கிறோம்" என்றார்.

    • சீனாவில் இருந்து சேலம் வந்த மகுடஞ்சாவடியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜவுளி வியாபாரியை கண்காணிப்பதற்காக மகுடஞ்சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

    மகுடஞ்சாவடி:

    சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் நமது நாட்டிலும் அந்த வகை தொற்று பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவைக்கு விமானத்தில் வந்த சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அவருக்கு இருப்பது புதிய வகை கொரோனாவா? என்பது குறித்து கண்டறிய சளிமாதிரிகள் மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த ஜவுளி வியாபாரி, மகுடஞ்சாவடியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் நோய் தொற்று அறிகுறி இல்லை. எனினும் அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் கொரோனா பாதித்த ஜவுளி வியாபாரியை காலை மற்றும் மாலை இருவேளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுதவிர, அந்த நபரின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய் தொற்று அறிகுறியுடன் யாரேனும் வசிக்கிறார்களா? என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    எனவே, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மகுடஞ்சாவடி பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து மகுடஞ்சாவடி பகுதியில் கண்கா ணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. சுகாதார, மருத்துவ துறை யினர் மகுடஞ்சாவடியில் முகாமிட்டுள்ளனர்.

    • சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது.
    • அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர்.

    திருப்பூர் :

    அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கவில்லையெனில் 104க்கு தொடர்பு கொள்ளுங்கள் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்துள்ள போதும் சில நேரங்களில், குறிப்பிட்ட சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது. விலை உயர்வாக இருக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

    இந்நிலையில் அரசு மருத்துவமனை, மேம் படுத்தப்பட்ட, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் குறிப்பிட்ட சில மருந்துகள் இல்லையென தெரிவித்தால் அந்த மருந்து குறித்து 104 என்ற அரசின் இலவச உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.உடனே, அவர்கள் அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர். மருந்து கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவர் என திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
    • 100க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு மருத்துவமனை கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்குபல்லடம், பொங்கலூர்,சுல்தான்பேட்டை,செஞ்சேரிமலை,ஜல்லிபட்டி,செஞ்சேரிப்புத்தூர்,வேலம்பாளையம்,காமநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    மேலும் இந்த மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.அப்போது அவரிடம் நோயாளிகள் குளியலறை மற்றும் சுகாதார வளாகத்தில் கடந்த பல நாட்களாக தண்ணீர் வருவது இல்லை. துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனையில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. குடிப்பதற்கு குடிநீரும் இல்லை என சரமாரியாக புகார் தெரிவித்தனர். அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் பிரேமலதா தெரிவித்தார்.

    • சங்கராபுரம் அருகே சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 19 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சாா்பில் 2-வது தவணை செலுத்தி 6 மாதம் முடிந்த தகுதியுடைய அனை வருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. பேரூராட்சி மன்றதலைவர் ரோஜாரமணிதாகப்பிள்னள தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செங்குட்டுவன், பேரூராட்சி துணைத் தலைவர் ஆஷாபி ஜாகிர்உசேன் ஆகியோர் முன்னிலையில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில், ராமச்சந்திரன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சாா்பில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். முகாமில் 19 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

    • இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,25,047 ஆக உயர்ந்துள்ளது.
    • நாடு முழுவதும் 197 கோடியே 31 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    பண்டிகை காலம் வருவதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் காற்றோட்ட வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 5 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறையிடம் ஆஸ்பத்திரி டீன் விளக்கம் அளித்துள்ளார். #MaduraiGovernmenthospital
    மதுரை:

    அரசினர் ராஜாஜி மருத்துவமனையின் புதிய விரிவாக்க கட்டிடத்தில் தலைக்காய சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. இங்கு கடந்த 7-ந் தேதி இரவு 15 படுக்கைகளிலும் நோயாளிகள் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் அன்று மாலை கடும் இடியுடன் கூடிய மழை பெய்தது. பலத்த காற்றுக்கு மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் மதுரை ஆஸ்பத்திரியில் மாலை 6.20 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. ஆஸ்பத்திரி முழுவதும் இருளில் மூழ்கியது.

    ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஜெனரேட்டரை இயக்க முயன்றனர். அது கோளாறு காரணமாக இயங்கவில்லை. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் இயங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

    அப்போது அங்கு சிகிச்சை பெற்ற பூஞ்சுத்தியைச் சேர்ந்த மல்லிகா (வயது 55), திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (60), விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (52) ஆகிய 3 பேரும் செயற்கை சுவாசம் கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த செல்லூர் மீனாம்பாள்புரம் செல்லத்தாய் (வயது 55), பல்லடம் ஆறுமுகம் (48) ஆகியோரும் இறந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

    இதனால் உறவினர்கள் ஆஸ்பத்திரிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீஸ் உதவி கமி‌ஷனர் சசிமோகன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே 5 பேரும் உயிரிழந்தனர் என்று புகார் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தியும், விளக்கம் அளிக்கவும், சுகாதாரத்துறை, மதுரை ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு உத்தரவிடட்டது.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் வனிதா கூறியதாவது:-

    மதுரை அரசு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் மின்தடை காரணமாக 5 பேர் இறந்ததாக கூறப்படுவது உண்மை அல்ல. எந்த நிர்வாக அலட்சியமும் ஏற்படவில்லை.

    ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்ட போதிலும் அங்குள்ள வெண்டிலேட்டர் கருவிகள், பேட்டரியின் உதவியுடன் இயக்கப்பட்டன. 2 மணி நேரம் வரை மின்தடை வந்தாலும் வெண்டிலேட்டர் இயங்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த பேட்டரிகள் உள்ளன.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளருக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். விரைவில் அறிக்கை அனுப்புவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MaduraiGovernmenthospital

    சுகாதாரத்துறை குறித்து விமர்சிக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministervijayabaskar #mkstalin #hivblood

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நேற்று மாலை தனியார் பேருந்து கவிழ்ந்து 30 பேர் காயமடைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் விபத்துகளை குறைப்பதற்காக அவசர கால சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75 இடங்களில் 190 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் சென்னையில் மட்டும் கடந்த 11 மாதங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக விபத்து கால சிகிச்சை இறப்பு சதவீதம் என்பது 8.5 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மொபைல் சி.டி. ஸ்கேன் தமிழகத்தில் 15 கோடி மதிப்பில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழக சுகாதாரத்துறை உலக நாடுகள் சுகாதாரத்துறைக்கு இணையாக வளர்ந்து வருகிறது.


    தி.மு.க. ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறைக்கு என எதுவுமே செய்யவில்லை. ஒரு சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. தற்போது சுகாதாரத்துறை குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருவது கண்டனத்துக்குரியது. அவருக்கு சுகாதாரத்துறை குறித்து விமர்சனம் செய்வதற்கு எந்த வித அருகதையும் கிடையாது

    சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் மனதிற்கு மிகவும் வேதனை தரக்கூடிய சம்பவமாக இருந்தாலும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள். இதை வைத்து அரசியல் செய்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministervijayabaskar #mkstalin #hivblood

    தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என விளக்கம் அளிக்குமாறு சுகாதாரத்துறைக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. #Dengue
    மதுரை:

    மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தற்போது டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட உயிரை பாதிக்கும் காய்ச்சல்கள் வேகமாக பரவிவருகிறது. இதில் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்துள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு, மருத்துவமனைகளில் போதுமான மருந்து மாத்திரைகள் இருப்பு வைப்பதோடு, சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள், சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.


    அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்தும், டெங்கு-பன்றி காய்ச்சல் நோய் பாதிப்புக்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? என்பது குறித்தும் அறிக்கையை வருகிற 20-ந் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    மேலும் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டு வருகிற 20-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். #Dengue
    ×