search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harassment"

    • பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை.
    • சராசரியாக தினமும் 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

    பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் இதே நிலை நீடிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை ஐக்கிய நாடுகளின் பொது சபை (ஐ.நா) வெளியிட்டுள்ளது.

    * ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியா குடரெஸ் கூறுகையில், "ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கு ஒரு பெண் அல்லது சிறுமி நெருங்கிய உறவினர் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார்.

    * உலகளவில் 30 சதவீத பெண்கள் பாலியல் வன்முறையை அனுபவிக்கின்றனர்.

    * 15 முதல் 19 வயதுடைய இளம்பெண்களில் 24 சதவீதம் பேர் நெருங்கிய உறவில் இருக்கும் நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்.

    * ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்குள்ளும் 5-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமி கள் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படுகிறார்கள்.

    * 2021-ம் ஆண்டு உலகளவில் கொலை செய்யப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளில் (81,100) பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 56 சதவீதம் (45,000) பேர் கணவர்கள், நண்பர்கள் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

    * ஆசியாவில் சுமார் 17,800 பெண்கள் தங்கள் உறவினர்களால் கொல்லப்பட்டனர்.

    * இதற்கு நேர்மாறாக, 2021-ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட ஆண்களில் 11 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் வாழ்க்கை துணை அல்லது உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்களை பொறுத்தவரை குடும்பத்திற்கு வெளியே மற்றவர்களால் கொல்லப்படும் அபாயம் அதிகம் உள்ளது.

    * இந்தியாவில், 2021-ம் ஆண்டில் 31,677 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக தினமும் 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

    * பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கு 49 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

    * 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 15.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) தெரிவித்துள்ளது.

    * இந்தியாவில் 2021-ம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் பெண்கள் இறந்ததாக 6,589 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2020-ம் ஆண்டை ஒப்பிடும்போது 3.85 சதவீதம் குறைந்துள்ளது.

    • பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடூமையை கூறி கதறி அழுதுள்ளாள்.
    • பெற்றோர் மாட்டுங்கா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர்.

    மும்பை :

    மும்பை மாட்டுங்கா பகுதியில் மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. எனவே சிறுமியின் தாய் அவளிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். அப்போது சிறுமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டாள்.

    கடந்த திங்கட்கிழமை சிறுமியுடன் படிக்கும் மாணவ-மாணவிகள் ஆண்டு விழா நடன நிகழ்ச்சி ஒத்திகைக்காக வெளியே சென்று இருந்தனர். வகுப்பறையில் இந்த மாணவி தனியாக இருந்து உள்ளாள். இந்த சந்தர்ப்பத்தில் சிறுமியுடன் 8-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அங்கு வந்து உள்ளனர்.

    அந்த மாணவர்கள் 2 பேரும் வகுப்பறையில் தனியாக இருந்த மாணவியிடம் அத்துமீறினர். மேலும் அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் சம்பவம் குறித்து வெளியே சொன்னால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக்கூறி மிரட்டி சென்றுள்ளனர்.

    இதனால் பயந்துபோன சிறுமி நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளாள். உடல்நல பாதிப்பை தொடர்ந்து பெற்றோர் கேட்டபோது தான், தனக்கு நேர்ந்த கொடூமையை கூறி கதறி அழுதுள்ளாள்.

    தங்களது மகள் கூறிய தகவல் பெற்றோரின் தலையில் இடியாக விழுந்தது. அவர்கள் நொறுங்கி போனார்கள்.

    பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்ட தங்களது மகளுடன் மாட்டுங்கா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை பலாத்காரம் செய்த 2 மாணவர்கள் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கூட்டு பலாத்காரம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு டோங்கிரியில் உள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.

    மும்பையில் பள்ளி வகுப்பறையிலேயே மாணவி ஒருவர், உடன் படிக்கும் மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ஆதித்யா மற்றும் அதர்வா ஆகிய 2 பேர் அவரை காப்பாற்றினர்.
    • அவர்களுடன் செல்பி எடுத்து டுவிட்டரில் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

    மும்பை :

    தென்கொரியா நாட்டை சேர்ந்த பெண் ஹயோஜியோt இரவு 11.30 மணி அளவில் கார் பகுதியில் வீடியோ எடுத்து அதனை சமூகவலைத்தளத்தில் (லைவ்) நேரலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் பெண் யூ-டியூபருக்கு தொல்லை கொடுக்க தொடங்கினர். அப்பெண் அவர்களிடம் இருந்து நைசாக நழுவ தொடங்கினார். இருப்பினும் வாலிபர்கள் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தனர்.

    இந்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். பாலியல் தொல்லை கொடுத்ததாக பாந்திரா பகுதியை சேர்ந்த மொபீன் சந்த் முகமது, முகமது நக்யூப் அன்சாரி ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அப்பெண், தனது கையை பிடித்து தொல்லை கொடுத்தவர்களிடம் இருந்து இந்திய இளைஞர்கள் ஆதித்யா மற்றும் அதர்வா ஆகிய 2 பேர் தன்னை காப்பாற்றியதாக டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். தன்னை காப்பற்றிய அவர்களை கவுரவிக்க ஓட்டலுக்கு வரவழைத்து மதிய விருந்து கொடுத்தார். மேலும் அவர்களுடன் செல்பி எடுத்து டுவிட்டரில் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

    • இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவத்தொடங்கியது.
    • பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்தார்.

    மும்பை :

    தென்கொரியா நாட்டை சேர்ந்த பெண் ஹியோஜியோங் பார்க். யூ-டியூப் பிரபலமான இவர், கடந்த மாதம் மும்பைக்கு வந்திருந்தார். இவர் மும்பையை சுற்றி பார்த்து பல வீடியோக்களை பதிவு செய்து உள்ளார். இந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் கர் பகுதியில் வீடியோ எடுத்து அதை சமூகவலைத்தளத்தில் 'லைவ்' (நேரலை) செய்து கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர் பெண் யூ-டியூபருக்கு தொல்லை கொடுக்க தொடங்கினார். எனினும் பெண் அவரிடம் இருந்து நழுவி செல்ல முயன்றார். ஆனால் அவர் பெண்ணின் கையை பிடித்து இழுத்து அத்துமீறினார். ஒரு கட்டத்தில் அவர் பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்தார். எனினும் பெண் அந்த வாலிபரிடம் இருந்து தப்பித்து சென்றார்.

    இந்தநிலையில் சில வினாடிகளில் மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் வந்த அந்த வாலிபர், பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு அழைத்தார்.

    இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவத்தொடங்கியது. நெட்டிசன்கள் வெளிநாட்டு பெண் யூ-டியூபருக்கு தொல்லை கொடுத்த வாலிபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதையடுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, வெளிநாட்டு பெண் யூ-டியூபருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மும்பை பாந்திரா பகுதியை சேர்ந்த மொபீன் சந்த் முகமது சேக் (வயது19), முகமது நக்யூப் அன்சாரி (21) என்ற 2 வாலிபர்களை அதிரடியாக கைது செய்தனர்.

    இந்தநிலையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண் யூ-டியூபர் ஹியோஜியோங் பார்க் கூறியதாவது:-

    கர் பகுதியில் நான் வீடியோ எடுத்து கொண்டு இருந்தபோது, திடீரென 2 வாலிபர்கள் என்னை பார்த்து 'ஐ லவ் யூ' சொன்னார்கள். நான் அவர்களை கண்டு கொள்ளாமல் சென்றேன். அப்போது ஒருவர் எனது கையை பிடித்து தொல்லை கொடுத்தார். மேலும் அவருடன் மோட்டார் சைக்கிளில் வருமாறு கூறினார். நான் மறுத்தபோது, அவர் கையை எனது கழுத்தில் போட்டு கன்னத்தில் முத்தம் கொடுக்க முயற்சி செய்தார். நான் அதிர்ச்சி அடைந்தேன். அங்கு இருந்து வர முயற்சி செய்தேன். அப்போது அந்த வாலிபர் என்னை கையை பிடித்து மோட்டார் சைக்கிள் வரை இழுத்து சென்றார். ஒருவழியாக அங்கு இருந்து தப்பித்து வந்தேன். ஆனால் அந்த வாலிபர்கள் என்னை ஓட்டல் வரை பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் என்னிடம் செல்போன் எண்ணை கேட்டனர். அப்போது நான் அவர்களிடம் இருந்து தப்பிக்க பொய்யான செல்போன் எண்ணை கூறினேன். இதுபற்றி அறிந்து பலர் எனக்கு உதவி செய்ய முன்வந்தனர். இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காது என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மும்பையில் வெளிநாட்டு பெண்ணுக்கு நடந்த பாலியல் தொல்லை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததற்கான சான்று இல்லை.
    • இன்று வரை பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

    பெண்கள் நாட்டின் கண்கள் என்று கூறி வரும் உலகில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் நிகழ்கின்றன. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமம் என்று கூறி வந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததற்கான சான்று இல்லை. இன்று வரை பல்வேறு வகையான குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு பெண்களுக்கு நிகழும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்ற சிறப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    உலகளவில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகளை வெளி உலகிற்கு எடுத்து கூறி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுக்க வழிவகுப்பதே இந்நாளின் நோக்கமாகும். 1960-ம் ஆண்டு நவம்பர் 25-ந் தேதி டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் என்று அழைக்கப்படும் 3 சகோதரிகள் அரசியல் செயல்பாடுகளுக்காக அந்நாட்டின் ஆட்சியர்கள் உத்தரவின்பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் 'மறக்கமுடியாத வண்ணத்துப்பூச்சிகள்' என்று பெண்களுக்கு எதிரான வன்முறை கொடுமையின் சின்னமாக மாறினார்கள். மிராபெல் சகோதரிகளை நினைவு கூறும் விதமாக அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நவம்பர் 25-ந் தேதி (இன்று) ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

    ஐ.நா.சபையானது 1999-ம் ஆண்டில் இத்தினத்தை சட்ட பூர்வமாக அங்கீகரித்தது. பாலியல் வன்கொடுமைகள், அடிமைத்தனம், குடும்ப வன்முறை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதை இந்நாள் வலியுறுத்துகிறது. மேலும் பிரச்சினையின் அளவு மற்றும் உண்மை தன்மை பெரும்பாலும் மறைக்கப்படுவதை எடுத்து கூறுகிறது. 1993-ம் ஆண்டில் நடைபெற்ற மனித உரிமை மாநாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை மனித உரிமை மீறலாக அங்கீகரித்து இந்த வகையான பிரச்சினைகளை வெளிப்படையாக கூறுவதற்கான வழியை அமைத்து கொடுத்தது.

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவீதம் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்களால் தான் ஏற்படுகிறது என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, கண்டிப்பது, பெண்கள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். வருங்கால தலைமுறைக்கு பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவோம் என்று இந்நாளில் உறுதி கொள்வோம்.

    • தனியார் பள்ளிக்கு இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • மாணவர்கள், பெற்றோரிடம் போலீசார் பலமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருநின்றவூர் :

    ஆவடியை அடுத்த திருநின்றவூர் இ.பி. காலனி பகுதியில் ஏஞ்சல் என்ற தனியார் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியின் தாளாளரான வினோத் (வயது 34), பிளஸ்-2 படிக்கும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் கூறினர். அவர்கள் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பள்ளி தாளாளர் வினோத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ-மாணவிகளின் பெற்றோரும், அந்த பகுதி பொதுமக்களும் அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடு பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலையில் நின்றிருந்த அனைவரையும் பள்ளி வளாகத்துக்குள் செல்ல வைத்தனர்.

    அப்போது அவர்கள், தாளாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று கூறி பள்ளி வராண்டாவில் மாணவ-மாணவிகள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மாணவர்கள், பெற்றோரிடம் போலீசார் பலமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ராதாகிருஷ்ணன், ஆவடி தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்டோரும் அங்கு வந்தனர்.

    மாலை 3 மணிவரை பேச்சுவார்த்தை நீடித்தது. பள்ளி தாளாளர் மீது வழக்குப்பதிவு செய்வதாக போலீசார் உறுதி அளித்ததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பள்ளியில் இருந்து கலைந்து சென்றனர்.

    இது தொடர்பாக திருநின்றவூர் போலீசார், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று மற்ற வகுப்பு மாணவர்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அந்த தனியார் பள்ளிக்கு இன்று(வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் திங்கட்கிழமை முதல் பள்ளி செயல்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களின் பெற்றோருக்கு 'வாட்ஸ் அப்' மூலம் தகவல் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

    • சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த ஆச்சான் குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி பகுதியில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது வழக்கு செய்தனர்.
    • இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த ஆச்சான் குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் செல்வம் என்பவர் சிறுமி ஒருவரை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர், செல்வத்தை கண்டித்தனர். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் அந்த சிறுமி குளித்து கொண்டிருந்ததை செல்வம் மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகிறார்கள்.

    • டியூசன் வகுப்புக்கு சென்ற அந்த சிறுமி வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார்.
    • பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அவுரங்காபாத்:

    மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் இருந்து, 17 வயது சிறுமி, திடீரென வெளியே எகிறிக் குதித்துள்ளார். இதனால் அவரது தலையில் பலத்த அடிபட்டது. அவர் வந்த ஆட்டோ வேகமாக சென்றுவிட்டது. கீழே விழுந்து கிடந்த அவர் மீது, பின்னால் வந்த ஒரு கார் மோதும் அபாயம் இருந்தது. ஆனால் அந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அந்த வழியாக நடந்து சென்றவர்கள் சிலர் உதவி செய்து சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆட்டோ டிரைவரின் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க அந்த பெண், ஆட்டோவில் இருந்து குதித்தது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

    டியூசன் வகுப்புக்கு சென்ற அந்த சிறுமி வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் சையத் அக்பர் ஹமீத், அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுகொடுத்து பொதுவான சில கேள்விகளை கேட்டுள்ளார். சிறுமியும் சாதாரணமாக பதில் அளித்துள்ளார். அதன்பின் ஆட்டோ டிரைவர் படிப்படியாக அந்த சிறுமியை அச்சம் கொள்ள செய்யும் வகையில் ஆபாசமாக பேசியிருக்கிறார். ஆட்டோவையும் மிக வேகமாக ஓட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன சிறுமி, கீழே குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    காயமடைந்த சிறுமி உள்ளூர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சாலையில் இருந்த சுமார் 40 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஆட்டோ டிரைவரின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட ஹமீத் மும்பையைச் சேர்ந்தவர். அவர் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அவுரங்காபாத் வந்து ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    • மாணவிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • சிறுமிகள் அளிக்கும் புகார்களுக்கு போலீசாரும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கின்றனர்.

    இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டமாகும். 18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர்.

    குழந்தையின் சாட்சியம்

    ஆண் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும் இச்சட்டம் பாயும். பாலியல் தாக்குதல், வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாச படமெடுக்க குழந்தைகளை பயன்படுத்துதல் போன்றவற்றை குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.

    இந்த சட்டத்தில் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும். இதில் குற்றம் புரிபவர்களுக்கு சாதாரண சிறை தண்டனையில் இருந்து கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது.

    ஆனால் நமது நாட்டில் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் மீது யாரும் புகார் கொடுக்க முன்வருவது இல்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த சட்டம் தீவிரப்படுத்தப்பட்ட பிறகு, பள்ளி படித்து வரும் குழந்தைகள் மத்தியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பாலியல் சீண்டல்கள்

    இருப்பினும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசுவதற்கு குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இன்னமும் தயக்கம் உள்ளது. மேலும் குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தாலே இந்த சட்டத்தின் கீழ் வருவதால், பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீசாரும், தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, சைல்டு லைன் ஆகியோருடன் இணைந்து போக்சோ சட்டம் குறித்தும், எவை பாலியல் சீண்டல், எது நல்ல தொடுதல் (குட் டச்), தீய தொடுதல் (பேட் டச்) என்பது குறித்து மாணவிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    விழிப்புணர்வு

    இதன் பலனாக தமிழகத்திலேயே வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் கடலூர் மாவட்டத்தில் தான் அதிகளவில் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு காரணம், போலீசார் மற்றும் பல்வேறு ஆசிரியர்கள், சமூக நலத்துறையினர் தினசரி ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வே ஆகும்.

    இதனால் பாலியல் சீண்டல்கள் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு மாணவிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மாணவிகள், அது தொடர்பாக தங்களின் பெற்றோரிடமோ அல்லது ஆசிரியரிடமோ தெரிவிக்கின்றனர். இதன் மூலம் குற்றம் புரிபவர்களை, போலீசார் கைது செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர், மாணவிகள், பெற்றோர் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

    அச்சமில்லா மாணவிகள்

    ஆசிரியை ஈஸ்வரி:- மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சிதம்பரம் பகுதியில் போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போக்சோ சட்டம் குறித்தும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் வீட்டை விட்டு தனியாக வெளியே வர அச்சப்பட்ட மாணவிகள், தற்போது தனியாக சாலையில் அச்சமின்றி நடந்து செல்கின்றனர். மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீதும், பள்ளி, கல்லூரி முடிந்து செல்லும் மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் மீதும் போலீசார் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதால், தற்போது மாணவிகளை கண்டாலே கேலி செய்ய அச்சப்படுகின்றனர். இதற்கெல்லாம் காரணம், மாணவிகளிடம் போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வே ஆகும்.

    கடும் தண்டனை

    திட்டக்குடி மாணவி கயல்விழி:- நான் முன்பு பள்ளிக்கு தனியாக செல்லவே அச்சப்பட்டு வந்தேன். ஆனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் எங்கள் பள்ளிக்கு வந்து ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தற்போது நான் துணிச்சலுடன் இருக்கிறேன். மேலும் பள்ளியில் நடக்கும் சம்பவம் குறித்து எப்போதும் எனது பெற்றோரிடம் கலந்துரையாடுகிறேன். அவர்களும் எனக்கு தைரியம் அளிக்கின்றனர். மேலும் மாணவிகளுக்கு எதிராக குற்றம் புரிபவர்கள் மீது போக்சோ சட்டத்தில் கடும் தண்டனை அளிக்கப்படுவதால், 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகளை பின்தொடரவே சமூக விரோதிகள் அச்சப்படுகின்றனர்.

    தயங்காமல் புகார்

    ஜெனோவியா:- 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறுமிகள் அனைவரும் தற்போது தைரியமாக இருக்கிறார்கள். முன்பு பாலியல் தொல்லை உள்ளிட்ட பாதிப்புகள் நேர்ந்தால் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்தது. மேலும் பாலியல் சீண்டல் குறித்து வெளியே சொன்னால் தங்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பமாட்டர்கள் என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது மாணவிகளிடம் அந்த பயம் இல்லை. இதனால் பலர் தங்களுக்கு ஏதேனும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் நேர்ந்தால் உடனடியாக பெற்றோரிடமோ அல்லது போலீசிலோ தயங்காமல் புகார் அளிக்கின்றனர்.

    முற்றுப்புள்ளி

    சந்திரா:- கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை பண்ருட்டியில் தான் அதிகளவில் சிறுமிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடக்கிறது. அதற்கு அடுத்தபடியாக கடலூர், விருத்தாசலத்தில் தான் ஏராளமான சிறுமிகள் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர், சைல்டு லைன் அமைப்பினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால், சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்துள்ள கொடுமைகள் குறித்து தயங்காமல் புகார் அளிக்கின்றனர். இல்லையெனில் சிறுமிகள் பாதிக்கப்படுவது குறித்து வெளி உலகுக்கு தெரியாமலே போய்விடும். மேலும் குற்றவாளிகள் தாங்கள் என்ன செய்தாலும் தப்பி விடலாம் என்ற எண்ணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    வாழ்க்கையே வீண்

    கடலூர் மாணவன்:- 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினால், அவர்கள் மீதும் போக்சோ சட்டம் பாயும். அதனால் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை தவறான நோக்கத்துடன் தொட்டால் நமது வாழ்க்கையே வீணாகி விடும் என இப்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. மேலும் இதுதொடர்பாக மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    சிறுவா்களுக்கும் சட்டம் பொருந்தும்

    வக்கீல் அஜிதா:- போக்சோ சட்டம் என்பது 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு மட்டுமல்லாமல், பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் சிறுவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். போக்சோ சட்டம் குறித்து கடலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் நீதிபதிகள், போலீசார், வக்கீல்கள் மற்றும் சமூக நலத்துறையினர் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட சட்ட உதவி மையம் மூலமாகவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் இன்றைய காலத்தில் சிறுமிகள் அனைவரும் துணிச்சலுடன் தனியாக செல்கின்றனர். சிறுமிகள் அளிக்கும் புகார்களுக்கு போலீசாரும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கின்றனர்.

    மேலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, புகார் அளிக்கும் சிறுமிகளின் பெயர், புகைப்படம், முகவரி உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படாது. அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். இதனால் தற்போதுள்ள சிறுமிகள் மத்தியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படும் சிறுமிகள், அச்சமின்றி புகார் அளித்து வருகின்றனர். மேலும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் சிறுமிகளின் வாழ்வாதாரம், மறுவாழ்வு உள்ளிட்டவற்றுக்காக இழப்பீடும் வழங்கப்பட்டு வருகிறது.

    • அந்த பெண்ணை அடிக்கடி தனியாக வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது.
    • பெண்ணின் ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் எழில்பரதன் பதிவிட்டதாக தெரிகிறது.

    விழுப்புரம் :

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் அந்த பெண்ணுக்கும் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று கள்ளக்காதல் ஜோடி மரக்காணம் அருகே உள்ள தைலமர தோப்பில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு மரக்காணம் பகுதியை சேர்ந்த எழில் பரதனும் அவரது நண்பரும் வந்தனர். அவர்கள், கள்ளக்காதலனை கொன்று விடுவதாக மிரட்டி அங்கிருந்து விரட்டினர். இதனால் பயந்து போன அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதன்பின் தனியாக சிக்கிக்கொண்ட அந்த பெண்ணை மிரட்டி எழில்பரதனும், அவரது நண்பரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அதனை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்.

    இந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும் உனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என அந்த பெண்ணை மிரட்டிவிட்டு அங்கிருந்து அவர்கள் சென்றனர். இதனால் பயந்துபோன அந்த பெண், தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் கூறவில்லை.

    இதை சாதகமாக பயன்படுத்தி, எழில்பரதன் மற்றும் அவரது நண்பர் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி, அந்த பெண்ணை அடிக்கடி தனியாக வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் அந்த பெண் பணம் தராததால், அவரை மிரட்டும் வகையில் பெண்ணின் ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் எழில்பரதன் பதிவிட்டதாக தெரிகிறது. இதை அறிந்த அந்த பெண் மனவேதனை அடைந்தார்.

    இந்தநிலையில் தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழில்பரதன் மற்றும் அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருவிரல் சோதனை நடத்தக்கூடாது.
    • பாலியல் பலாத்கார வழக்குகளில் இருவிரல் பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்குவது நடைமுறையாக உள்ளது.

    புதுடெல்லி :

    பாலியல் பலாத்கார வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் இருவிரல் பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்குவது நடைமுறையாக உள்ளது.

    இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பெண் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு செசன்ஸ் கோர்ட்டு தண்டனை விதித்தது. ஆனால், இருவிரல் சோதனை முடிவு அடிப்படையில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு மாற்றி, குற்றவாளியை விடுதலை செய்தது.

    ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஜார்கண்ட் மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    விசாரணை முடிவில் குற்றவாளிக்கு செசன்ஸ் கோர்ட்டு வழங்கிய தண்டனை தீர்ப்பை உறுதி செய்தும், ஐகோர்ட்டு வழங்கிய விடுதலை தீர்ப்பை ரத்துசெய்தும் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர்.

    அந்த தீர்ப்பில், கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருவிரல் சோதனை நடத்தக்கூடாது. இதை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அனைத்து அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் வழங்க வேண்டும்.

    இதை மீறி இரு விரல் சோதனையை நடத்தும் எந்தவொரு நபரும் தவறான நடத்தை குற்றவாளியாக கருதப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

    • நிலத்தகராறில் 5 பேரை சிக்க வைக்க நாடகம் அரங்கேற்றியது அம்பலம்.
    • அவர் கற்பழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    புதுடெல்லி :

    டெல்லியை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், தன்னை 5 பேர் கடத்தி 2 நாட்களாக கூட்டாக கற்பழித்ததாக சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியிட்டார். அவர் சாக்குமூட்டை ஒன்றில் கட்டி வீசப்பட்டு இருந்ததாகவும், அவரது மர்ம உறுப்பில் இரும்பு கம்பி சொருகியதுடன், கை-கால்கள் கட்டப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.

    உடலில் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் காசியாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

    நிலத்தகராறு காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் இந்த பாதக செயலை அரங்கேற்றியதாக போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் அந்த கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசாரும் கைது செய்தனர்.

    கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் அரங்கேறிய நிர்பயா சம்பவம் போல, நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் அந்த பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர் மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலத்தில் பெரிய அளவில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

    இதை நேற்று முன்தினம் காசியாபாத் போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக அந்த ஆதாரமும் சிக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

    மேலும் இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத்துக்கு போலீசார் அறிக்கை அளித்து உள்ளனர். அதன்படி நிலத்தகராறு காரணமாக அந்த 5 பேரை போலீசில் மாட்டி விடுவதற்காக நடந்த நாடகம் இது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இதற்காக கற்பழிப்பு செய்தியை ஊடகங்களில் பரபரப்பாக்குவதற்காக ரூ.5 ஆயிரம் கைமாறப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

    இதைப்போல, அந்த பெண்ணின் மர்ம உறுப்பில் வெளிநாட்டு பொருள் எதுவும் இருந்ததாக முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டவில்லை என கூறியுள்ள போலீசார், டெல்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரை குடும்பத்தினர் சாதராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அந்த பெண்ணின் உடல்தகுதியில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும், இரண்டொரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியுள்ளது.

    அதேநேரம் அவரது உடலில் இருந்து உயிரணு எதுவும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளது. இதன் மூலம் அவர் கற்பழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இந்த தகவல்களை டெல்லி மகளிர் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

    இதற்கிடையே இந்த விவகாரத்தில் பெண்ணின் கூட்டாளிகளான 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வரும் அவர்கள், இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

    டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கற்பழிப்பு புகார், வெறும் நாடகம் என போலீசார் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×