search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "forest officer death"

    ஆந்திர மாநில எல்லையில் காட்டு யானை தாக்கி வனத்துறை அதிகாரி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Elephant

    சித்தூர்:

    ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் பல கிராமங்கள் உள்ளன. அங்கு, ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் தமிழ்நாடு எல்லையையொட்டி, ஆந்திர மாநில பகுதியில் உள்ள நூனேப்பள்ளி கிராமத்தில் காட்டு யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்தன.

    இதுபற்றி ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும், இரு மாநில வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் குழுக்களாக சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சற்று தூரம் சென்று, அங்குள்ள நீரோடையில் படுத்துக் கொண்டன. அதனை ஏராளமான மக்கள் வேடிக்கை பார்த்தனர்.

    அப்போது ஒரு யானை வேகமாக ஓடி வந்து, ஆந்திர மாநில வனத்துறை அதிகாரி மாரப்பா என்பவரை தாக்கியது. அதில் அவர், படுகாயம் அடைந்தார். அவரை, சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மாரப்பா பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி நூனேப்பள்ளி கிராம மக்கள் கூறுகையில், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லையோரம் வனப்பகுதியில் பல கிராமங்கள் உள்ளன. அங்கு, ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கர்நாடகத்தில் இருந்து வரும் காட்டு யானைகள் நூனேப்பள்ளி கிராமத்தில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. காட்டு யானைகளால் விவசாயிகள், கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர். #Elephant

    ×