search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flyover"

    • ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் திணறி வருகின்றன.
    • பாலம் அமைக்கப்பட்டதற்கு அர்த்தம் இல்லாமல்போய் விடும்.

    தாம்பரம்:

    பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே மாநில நெடுஞ்சாலை, ரெயில்வே நிர்வாகம் இணைந்து ரூ.234 கோடி செலவில், மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொண்டு உள்ளன.

    ஜி.எஸ்.டி. சாலையில், செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கமான ஒரு வழிப்பாதை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதை சில நாட்களுக்கு முன்பு வாகன பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பால சாலை, சர்வீஸ் சாலை, ரவுண்டானா ஆகிய இடங்கள் தற்போது தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளன. இரவு நேரங்களில் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் திணறி வருகின்றன. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ஆரம்பத்திலேயே இதனை தடுக்க வேண்டும். இல்லையெனில், பாலம் அமைக்கப்பட்டதற்கு அர்த்தம் இல்லாமல்போய் விடும். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க முடியாது' என்றார்.

    • எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியாக கட்டிடங்கள் இடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    • சஹாரன் பூர் மேம்பாலத்துக்காக சாலையை விரிவுபடுத்த கோவில் மற்றும் தர்கா அகற்ற வேண்டி இருந்தது.

    புதுடெல்லி:

    டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள பகுஜன் புராவில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து சாலையில் இருந்த கோவில் மற்றும் தர்கா கட்டிடங்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி இன்று காலை பஜன்புரா மெயின் ரோட்டில் கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

    இதில் அனுமன் கோவில் மற்றும் தர்கா உள்ளிட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. போலீசார், துணை ராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    போலீசார் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறையினர் கட்டிடங்களை அகற்றினர். எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியாக கட்டிடங்கள் இடிக்கப்பட்ட தாக போலீசார் தெரிவித்தனர்.

    கோவில் மற்றும் தர்காவை அகற்ற இரு தரப்பினரிடமும் பொதுப் பணித்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி சம்மதத்தை பெற்ற பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது.

    இதுகுறித்து டெல்லி வட கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் ஜாய் டிர்கி கூறும்போது, 'பஜன்புரா பகுதியில் அமைதியான முறையில் கோவில் மற்றும் தர்கா அகற்றப்பட்டன. சஹாரன் பூர் மேம்பாலத்துக்காக சாலையை விரிவுபடுத்த கோவில் மற்றும் தர்கா அகற்ற வேண்டி இருந்தது.

    இதுதொடர்பாக இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டன. உள்ளூர் தலைவர்கள் சிறிது கால அவகாசம் கேட்டனர்.

    அதன்பின் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இரு மத கட்டமைப்புகளும் அனைவரின் ஒத்துழைப்போடு அகற்றப்பட்டன. அக்கட்டிடங்கள் அகற்றப்படுவதற்கு முன்பு பூஜைகள் செய்தனர்' என்றார்.

    • கொளத்தூரில் பல்வேறு திட்டப் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • செங்கை சிவம் மேம்பாலத்தால் மக்கள் பெரும் பயனடைவார்கள்.

    சென்னை கொளத்தூரில் உள்ள ஸ்டீபன் சாலையில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் மேம்லாத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

    இதைத் தவிர, கொளத்தூரில் பல்வேறு திட்டப் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பூங்கா, நூலக கட்டடம், ஒருங்கிணைந்த வளர்ச்சி மையம் உள்ளிட்ட திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    இதைதொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    செங்கை சிவம் மேம்பாலம் திறப்பு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. செங்கை சிவம் மேம்பாலத்தால் மக்கள் பெரும் பயனடைவார்கள். சென்னையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டது திமுக ஆட்சியில் தான்.

    ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் செங்கை சிவம். இவர் இரு முறை எம்எல்ஏவாக இருந்து மக்கள் பணியாற்றினார்.

    கலைஞர் கருணாநிதி அண்ணா மேம்பாலத்தை கட்டினார். அது 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

    ஒமந்தூரார் மருத்துவமனை, கிண்டி மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம், மெட்ரோ ரெயில் திட்டம் என பல திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டன.

    ஓமந்தூரார் மருத்துவமனை முதலில் சட்டப்பேரவை வளாகமாக கருணாநிதி பார்த்து பார்த்து கட்டினார். ஆனால் சூழல் காரணமாக அது மருத்துவமனையா மாறியது.

    மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி.

    கடந்த ஆண்டு சென்னை மாநகரம் வெள்ளத்தி்ல இருந்து காப்பாற்றப்பட்டது. மழைநீர் வடிகால் கால்வாய்களை அமைத்து அந்த நிலையை திராவிட மாடல் ஆட்சி மாற்றியது.

    மெட்ரோ திட்டங்களால் சில சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன, விரைந்து சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் உட்கட்டமைப்பு. மக்களின் நாளைய தேவைகளை கருதியும் பணியாற்றி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடபழஞ்சி பகுதியில் புதிய உயர்மட்ட ெரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பொதுமக்களிடம் அதிகாரி உறுதியளித்துள்ளார்.

    மதுரை

    மதுரை-போடி அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்தபோது வடபழஞ்சி-நாகமலை புதூர் பகுதியில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.ஆனால் மழை காலங்களில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் தண்ணீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது.இதனை சரி செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ரெயில்வே சுரங்கப் பாதையை மூடிவிட்டு உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ரெயில்வே துறையிடமும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் வடபழஞ்சிக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழக பகுதியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் அருகே ரெயில்வே துறை ஒப்புதல் பெற்று புதிய உயர்மட்ட பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்ககப்படும் என பொதுமக்களிடம் வருவாய் அலுவலர் உறுதி யளித்தார்.

    ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் சர்மிளா, மதுரை மேற்கு தாசில்தார் நாகராஜன், மண்டல துணை வட்டாட்சியர் வீரக்குமார், சர்வேயர் பழனி, வருவாய் ஆய்வாளர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர் பாண்டி மற்றும் ரெயில்வே கோட்ட பொறியாளர் வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் ரெயில்வே மேம்பால பணிகளை எம்.எல்.ஏ., ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் பி.ஆர்.சி. ராஜா சங்கங்கோட்டை சந்திரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகளை வெங்கடேசன் எம்.எல்.ஏ., ரெயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர், துணைத்திட்ட மேலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் இரவில் ஆய்வு செய்தனர். இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தி.மு.க. பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாளம் செந்தில், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி நிஷா கவுதமராஜா, முத்துச்செல்வி சதீஷ், செல்வராணி, ஜெயராமச்சந்திரன், அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் பி.ஆர்.சி. ராஜா சங்கங்கோட்டை சந்திரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்திய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வருகிற 5-ந் தேதி திறக்க ஏற்பாடு செய்தார்.
    • வார்டு செயலாளர் மதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோடு ரெயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பாலமுருகனுடன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஆய்வு செய்து பணிகளை முடுக்கிவிட்டார்.

    இந்த நிகழ்வில் தலைமை பொறியாளரிடம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல ஏதுவாக ரெயில்வே மேம்பாலத்தை திறக்க வேண்டும்.

    அதன்பின்னர் 2 மாதத்தில் சர்வீஸ் ரோடு பணியை முடித்து முதல்-அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மூலம் முறையாக திறப்பு விழா நடத்த வேண்டும் என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியதுடன் பணிகளை விரைவு படுத்தினார். அதற்கு தலைமை பொறியாளர் கண்டிப்பாக மேம்பால பணியை விரைவு படுத்தி ஜூன் 5-ந்தேதி மேம்பாலம் மட்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.

    இதில் கண்காணிப்பு பொறியாளர் ஜவகர்முத்து, கோட்டப்பொறியாளர் லிங்கசாமி, உதவிக்கோட்ட பொறியாளர்கள் ஜெகன்செல்வராஜ், காவு மைதீன், உதவிப்பொறியாளர் முரளி, தி.மு.க. நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் கார்த்திக், குணா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து, வார்டு செயலாளர் மதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • ஈரடுக்கு மேம்பாலத்தின் பராமரிப்பு பணி ரூ.2.83 கோடியில் நடை பெற்று வருகிறது.
    • பாலத்தின் சுவர் எப்படி இடிந்து விழுந்தது என்ற உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் இன்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது மாவட்ட கலெக்டர் கார்த்திகேய னிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் பராமரிப்பு பணி மாநகராட்சி நிர்வாக த்தால் ரூ.2.83 கோடியில் நடை பெற்று வருவதாக அறிகிறோம். அந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தாரர் எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ அல்லது பாதுகாப்பு வளையங்களோ ஏற்படுத்தாமல் திறந்த வெளியில் மக்கள் நடமா ட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் இது போன்ற பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தொந்தரவு ஏற்படும் என்ற அடிப்படை எண்ணம் கூட இல்லாமல் ஒப்பந்ததாரர் மற்றும் அதை கண்காணிக்க கூடிய மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தின் காரணமாக கடந்த 3-ந் தேதி கொக்கிர குளத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற முதியவர் இந்த பாலத்தின் அருகே சென்றபோது அதன் பக்கவாட்டு சுவரில் கல் இடிந்து விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த உயிரிழப்புக்கு காரணமான ஒப்பந்தக்காரர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது அலட்சியப் போக்கு மற்றும் மரணத்தை உண்டாக்குதல் போன்ற பிரிவுகளில் நடவடி க்கை எடுக்க வேண்டி அவரது உறவி னர்கள் மனு அளித்தும் நடவடிக்கை எடுப்பதில் தா மதம் செய்து வருகின்றனர்.

    அந்த பாலத்தின் சுவர் எப்படி இடிந்து விழுந்தது என்ற உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். அலட்சியப்போக்கால் ஏற்பட்ட இந்த உயிரிழப்பி ற்கு தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் இழப்பீடாக அந்த முதியவரின் குடும்பத்தி னருக்கு வழங்க வேண்டும். மேலும் அலட்சி யமாக செயல்பட்ட அதிகா ரிகள் மீது துறை ரீதியான நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    அப்போது அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட துணை செய லாளர் பள்ளமடை பால முருகன், கூட்டுறவு நகர வங்கி தலைவர் பால் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி. ஆதித்தன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துபாண்டி, பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், காந்தி வெங்கடா சலம், திருத்து சின்னத்துரை, ஒன்றிய செயலாளர் ராம சுப்பிர மணியன், கவுன்சிலர் சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் நிர்வாகிகள் ஜெய்சன் புஷ்பராஜ், பாறையடி மணி, டால் சரவணன், தாழை மீரான், மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் விக்னேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி சூரியசக்தி பயணிகள் நிழற்கு டை அமைக்கப்பட்டது.
    • மேலூர் நான்கு வழிச்சாலையில் விபத்தை தவிர்க்க ரூ.100 கோடியில் 7 மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

    மேலூர்

    மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு நாடாளு மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி சூரியசக்தி பயணிகள் நிழற்கு டை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில் மதுரை எம்.பி. வெங்கடேசன் கலந்து கொண்டு நிழற்குடையை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மேலூர், கொட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.10 கோடியில் பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற உள்ளது. மேலூர் பகுதியில் அதிக சாலை விபத்துகளும், அதன் மூலம் மாதத்தில் 15 உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் ரூ.100 கோடியில் மதிப்பீட்டில் 7 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது.

    மேலூர் அரசு மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவு நிறுவப்பட்டு அவசர சிகிச்சைக்காக வருப வர்களை மதுரைக்கு அனுப்பாமல் மேலூர் அரசு மருத்துவ மனையிலேயே சிகிச்சை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மதுரை மாவ ட்டத்தில் 73 பள்ளிகள் தற்போது தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்ப ட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேலூர் பள்ளிகளையும் இந்த திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவில் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், துணைத் தலைவர் இளஞ்செழியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர்கள் பாலா, பொன்னுத்தாய், தாலுகா செயலாளர் கண்ணன். மேலூர் தாலுகா குழு உறுப்பினர் மணவாளன், முன்னாள் நகர் மன்ற தலைவர் கென்னடியான், கவுன்சிலர் பாண்டி, தி.மு.க. நிர்வாகிகள் மலம்பட்டி ரவி, முருகானந்தம், ஒப்பந்ததாரர் லத்தீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம்‌ மாவட்டம்‌, கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட காகாபாளையம்‌ பகுதியில்‌ சேலம்‌- கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
    • பாலப்‌பணியானது கடந்த ஆண்டு 2022 மார்ச்சுக்குள்‌ முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால்‌ கிட்டதட்ட காலக்கெடு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும்‌ பாலப்பணி ஆமை வேகத்தில்‌ நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டம், கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட காகாபாளையம் பகுதியில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்தும், உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் காகாபாளையம் பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசின் ஒப்பந்த அடிப்படையில் ரூ.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகிறது.

    இந்த உயர்மட்ட மேம்பாலமானது சேலத்தில் இருந்து 16-வது கிலோ மீட்டரில் செல்லியம்பாளையம் - கனககிரி ஏரி வரை 1 கிலோ மீட்டர் தூரம் வரை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலப்பணியானது கடந்த ஆண்டு 2022 மார்ச்சுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கிட்டதட்ட காலக்கெடு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் பாலப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த பாலம் பணி நடைபெறும் வழியாக ஈரோடு, கோவை , கொச்சின், கேரளா, உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், ஆம்புலன்சில் செல்லும் நோயாளிகள் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல் கனரக வாகனங்கள் இவ்வழியே ஊர்ந்து சென்று வருவதால் இவ்விடத்தில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்தும், உயிரிழப்பும் நடைபெற்று வருகிறது.

    பாலம் கட்டுமான பணி நடைபெறும் அருகாமையில் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இப்பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் ஏராளமான பள்ளி கல்லூரி வாகனங்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலதாமதமாக செல்கின்றன.சேலத்தில் இருந்து மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் கோவை நோக்கி செல்ல இந்த சாலையை பயன்படுத்து வதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக மிக காலதாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

    இது குறித்து நிர்வாக தரப்பில் கூறியதாவது:

    இந்த பாலவேலை ஒரு ஆண்டு காலதாமதமாக காரணம் மண் அள்ளுவதில் கடும் சிக்கல் எழுந்துள்ளது.ஏனெனில் நாங்கள் முறையாக ஆவணம் பெற்று மண் எடுத்தால் தனிநபர் தன் செல்வாக்கை பயன்ப டுத்தி அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கிறார்.அதிகாரிகள் எங்கள் வாகனங்களை பறிமுதல் செய்துவிடுகின்றனர்.

    இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மாநில, மத்திய அரசின் டெண்டர் வேலைகளுக்கு தேவையான மண் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் பாமரர்கள் முதல் பெரும் ஒப்பந்த நிறுவனங்கள் வரை கடும் சிக்கலில் உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை முறைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுவாக எந்த பணிகள் என்றாலும் குறித்த காலத்தில் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது. அதற்கான தடைகளை சரிசெய்து மேம்பாலம் பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

    • இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • வாகனங்கள் வளைத்து நெளித்து ஓட்டுவதால் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

    பூதலூர்:

    திருக் காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி நெடுஞ்சா–லையில் பூதலூரில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது.

    இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான இரண்டு சக்கர வாகனங்கள், பஸ்கள், மணல் ஏற்றி வரும் லாரிகள் சென்று வருகின்றன, இந்த மேம்பாலத்தில் மேற்புறத்தில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இதனால் அவற்றிலிருந்து விலகி பாதுகாப்பாக வாகனங்களை செலுத்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    வாகனங்களை வளைத்து நெளித்து ஓட்டுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. உடனடியாக பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    அதேபோல விண்ணம ங்கலம் அருகே இதே சாலையில் வெண்ணாற்றில் அமைந்துள்ள பாலத்திலும் குண்டும் குழியுமாகவே காணப்படுகிறது.

    வழுவிழந்த பாலம் என்று இரண்டு பக்கமும் அறிவிப்பு பலகைகளை வைத்துவிட்டு குண்டும் குழியுமாக வைத்திருப்பதால் மேலும் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.

    செங்கிப்பட்டி -திருக்காட்டுபள்ளியை இனணப்பதற்கு விண்ணமங்கலம் வெண்ணாற்றுபாலம் பிரதானமான பாலமாக உள்ளதால் இந்த பாலத்தில் மேற்பகுதியில் உள்ள சாலையில் குண்டும் குழியுமான பகுதிகளை தற்காலிக மாகவேனும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • பாலம் 600 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டது.
    • பாலத்தில் செல்வதற்காக மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதியும் செய்துதர திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மாம்பலம் ரெயில் நிலையத்தை தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகிறார்கள். மேலும் ஆயிரக்கணக்கானோர் இந்த வழியாக தி.நகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு வந்து செல்கிறார்கள்.

    எனவே ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் மேட்லி சாலை சந்திப்புக்கு நடந்து செல்லும் வகையில் ரூ.23 கோடி செலவில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

    மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட இந்த பாலம் வழியாக பொது மக்கள் நெரிசலில் சிக்காமல் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் மேட்லி சாலையை அடைய முடியும்.

    இந்த பாலம் 600 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டது. கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக இந்த நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தாமதமானது. தற்போது முழு வீச்சில் பணிகள் நடந்து வருகிறது. 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. லிப்ட் அமைக்கும் பணி மட்டும் பாக்கி உள்ளது.

    இன்னும் ஒரு வாரத்தில் இந்த பணிகள் முடிந்துவிடும். எனவே விரைவில் இந்த பாலத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த பாலத்தில் செல்வதற்காக மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதியும் செய்துதர திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த நடைபால பணிகளை துணை மேயர் மகேஷ்குமார் பார்வையிட்டார். மீதமுள்ள பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நடை மேம்பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக நடைபாதை வியாபாரிகள் இதை ஆக்கிரமித்துள்ளார்களா? என்பதை கண்டறியவும் அதிகாரிகள் தினமும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    • போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் முடிச்சூர்-ஜி.எஸ்.டி., வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
    • அரசு ஒப்புதல் அளித்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

    சென்னை:

    சென்னையின் நுழைவாயிலாக தாம்பரம் இருந்து வருகிறது. கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் தாம்பரம் வழியாக செல்கிறார்கள்.

    மேலும் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். அலுவலகம் செல்பவர்கள் தினமும் தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.

    வார இறுதி நாட்களில் பலர் வெளி மாவட்டங்களுக்கு செல்வதால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் முடிச்சூர்-ஜி.எஸ்.டி., வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த மேம்பாலம் ஜி.எஸ்.டி. சாலையில் சுரங்கப் பாதையை ஒட்டி இறங்குகிறது. கிழக்கு பகுதியில் ரெயில்வே பஸ் நிறுத்தத்தை ஒட்டி ஏறுகிறது. இந்த இரண்டு இடங்களிலும் மேம்பாலம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை வழியாக வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் இணைவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    மேலும் வடக்கு பகுதியில் உள்ள மேம்பாலத்தின் முனையில் ஏராளமான ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. ஆம்னி பஸ் மற்றும் மாநகர பஸ்களும் நிற்பதால் சாலையின் இரு புறமும் மக்கள் நிற்கிறார்கள்.

    சாலையின் கிழக்கு பகுதியில் நடை மேம்பாலம் அருகே உணவு பொட்டலங்கள், தண்ணீர், குளிர் பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.

    இதனால் ராஜாஜி சாலை, காந்தி சாலை, சண்முகம் சாலை, அப்துல் ரசாக் சாலை, முத்துரங்கம் முதலி சாலை போன்ற முக்கிய சாலைகள் மட்டுமின்றி உட்புற சாலைகளிலும் நெரிசல் ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தாம்பரம் பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடைந்தாலும் போக்குவரத்து நெரிசலும் தொடர்ந்தபடியே உள்ளது.

    மேம்பாலம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலையை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், அப்பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம் வகுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வடக்கு பகுதியில் மேம்பாலத்தை மேலும் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சியிடம் ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளார்.

    இத்திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தவுடன் பணிகள் தொடங்கப்படும். ஜி.எஸ்.டி. சாலையின் இரு புறத்திலும் ஏறும், இறங்கும் மேம்பாலத்தை வள்ளுவர் குருகுலம் வரை நீட்டிக்க மாநகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் சண்முகம் சாலை, ராஜாஜி சாலை மற்றும் காந்தி சாலை செல்லும் வாகன ஓட்டிகள் நெரிசலில் இருந்து விடுபட லாம். பஸ்கள் மட்டும் ஜி.எஸ்.டி. சாலையை பயன்படுத்தும். பிற வாகனங்கள் தடையின்றி மேம்பாலம் வழியாக செல்லலாம்.

    தாம்பரம் மார்க்கெட்டை பல மாடி வணிக வளாகமாக மாற்றவும், அங்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த வணிக வளாகத்தில் சிறுவர் பூங்கா, கடைகள், ஓட்டல்கள், அரசு அலுவலகங்கள் அமைக்கப்படும் என்றும் பல மாடி கட்டிடத்தின் 3-வது தளத்துடன் இணைக்கப்படும். அங்கு லிப்ட், எஸ்கலேட்டர்கள் கூடுதலாக பார்க்கிங் இடம் வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×