search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Festivel"

    • மகாமாரியம்மன் தேர்திருவிழாவை முன்னிட்டு பைக்கில் சிவன்-பார்வதியும் வீதி உலா வந்தனர்
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    பெரம்பலூர் குன்னம்: பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு மகா மாரியம்மன் உள்ளிட்ட 10 சாமிகளின் வீதி உலா நடைபெற்றது. இதையொட்டி வாணவேடிக்கையுடன் 10 டிராக்டர்களில் சிறப்பு அலங்காரத்தில் எலி வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் முருகன், கையேந்தியில் பெருமாள், மோட்டார் சைக்கிளில் சிவன்-பார்வதி, அன்ன வாகனத்தில் ஆண்டாள், சிம்ம வாகனத்தில் காளியம்மன், சரஸ்வதி, மீனாட்சி, ராஜேஸ்வரி எழுந்தருள வீதி உலா நடைபெற்றது. இதில் மோட்டார் சைக்கிளை சிவன் ஓட்டுவது போலவும், பின்னால் பார்வதி அமர்ந்து வருவது போலவும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது.

    • பூலாம்பாடி ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவிலில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது
    • 23-ந் தேதி வருடாபிஷேகம் நடைபெறுகிறது

    அரும்பாவூர், 

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் வரும் 23-ந்தேதி தேதி நடைபெற உள்ளது.அதனை யொட்டி கோவிலில் தினந்தோறும் சிறப்பு பூஜைகளும் பாரதம் படிக்கும் நிகழ்வும் நடைப்பெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பச்சமலை அடிவாரம் வாவடி ஆற்றங்கரையில் ஸ்ரீ திரெளபதி அம்மனுக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது ஆற்றங்கரையில் சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக வந்தனர்.வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டிருந்து வரவேற்று வழிபட்டனர்.அதனைத்தொடர்ந்து கோவிலில் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.வரும் 21-ந்தேதி காலையில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் சுவாமி ஊர்வலமும் நடைபெறுகிறது. 22-ந்தேதி நாட்டுக்கல் மனக்காட்டிலிருந்து தீர்த்தகுடம், அக்னி சட்டி எடுத்தல் அழகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.அன்றிரவு விஜய்டிவி புகழ் ஈரோடு மகேஷ் மற்றும் ஆக்காட்டி ஆறுமுகம் பங்குபெறும் மாபெரும் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் மற்றும் டத்தோ பிரகதீஸ்குமார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்துவருகின்றனர்.

    பூலாம்பாடி ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவிலில் வருடாபிஷேக திருவிழா கடந்த 6ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவி ன் முக்கிய நிகழ்வான வருஷாபிஷேகம் வரும் 23-ந்தேதி நடைபெறஉள்ளது.அன்றுகாலை அனைத்து சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படும்,பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். மாலை 4-மணிக்கு மேல் நல்லதண்ணி குளத்திலிருந்து அருளோடு புறப்பட்டு வந்து தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24-ந்தேதி மாலை பொங்கல் மாவிலக்கு பூஜையும்,இரவு வானவேடிக்கையுடன் ஏழு வாகனங்களில் சுவாமிகளின் ஊர்வலம் நடைபெறும்போது,ஒயில் கும்மி மற்றும் கோலாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக 25-ந்தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து மாலையில் ஸ்ரீ தர்மராஜா பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது என விழாக்ழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் பூலாம்பாடி மண்ணின் மைந்தன் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றுவருகிறது.

    ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு கரூரில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

    கரூர், 

    கரூர் நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள அஷ்டாதசபுஜ மகாலெட்சுமி, துர்க்கா தேவி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதேபோல் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில், தோட்டக்குறிச்சி சொக்கநாதர் கோவில்களிலும் ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 39 கிராமங்களில் நடைபெற்றது
    • வேட்டையாடப்பட்ட முயல்கள் அம்மனுக்கு படையலிடப்பட்டது

    பெரம்பலூர்,

    நாவலூர், லாடபுரம், பாளையம், குரும்பலூர், களரம்பட்டி, கீழக்கணவாய், தம்பிரான்பட்டி, செல்லியம்பாளையம், விளாமுத்தூர், நொச்சியம், எசனை, புதுநடுவலூர், அரணாரை, சத்திரமனை, செஞ்சேரி, சிறுவாச்சூர், அம்மாபாளையம், வேலூர், மேலப்புலியூர், கோனேரிபாளையம் ஆகிய 20 கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது.பாடாலூர் பகுதியில் கண்ணப்பாடி, நத்தக்காடு, நக்கசேலம், குரூர், சிறுவயலூர், பாடாலூர், டி.களத்தூர், பொம்மனபாடி, செட்டிகுளம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், அடைக்கம்பட்டி, விஜயகோபாலபுரம், தெரணி, தேனூர் ஆகிய 15 கிராமங்களிலும், மருவத்தூர்பகுதியில் அய்யலூர், கல்பாடி எறையூர், கல்பாடி ஆகிய 3 கிராமங்களிலும், அரும்பாவூர் பகுதியில் விசுவக்குடி கிராமத்திலும் முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது.வேட்டையாடியதில் கிடைத்த முயல்களுடன் அவர்கள் கிராமத்தின் ஒரு பகுதியில் மாலை கூடினர். அப்போது அங்கு வேட்டைக்கு சென்றவர்களின் குடும்பத்திலுள்ள பெண்கள், அவர்களுக்கு உணவு மற்றும் புத்தாடை எடுத்துக்கொண்டு அப்பகுதிக்கு வருகை புரிந்தனர். வேட்டைக்கு சென்ற அனைவரும் குளித்து, புத்தாடை அணிந்து, பின்னர் அங்கிருந்து முயல்களை குச்சிகளில் தோரணமாக கட்டி தொங்கவிட்டு, மேளதாளங்களுடன் ஆடிப்பாடி தெருக்களில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். ஊர்வலத்தின் போது, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, கண் திருஷ்டி நீங்கவும், நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக இருக்கவும், அவர்களுக்கு முகம் மற்றும் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, ஊர்வலமாக அழைத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு முயல்களை பலி கொடுத்து படையல் செய்யப்பட்டது. பின்னர் முயல் இறைச்சி சமமாக பங்கு பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது. இதனை சமைத்து வீட்டிலேயே அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்து, உண்டு மகிழ்ந்தனர்.

    • பகவதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    கரூர்

    கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே பாண்டிபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 9-ந்தேதி பூச்சூட்டுதல், வடி சோறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 10-ந்தேதி திரளான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களில் புனிதநீர் எடுத்து கொண்டு மேள தாளங்கள் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.பின்னர் மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை கோவிலில் தயாராக இருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு வாண வேடிக்கை நடைபெற்றது.அதன் பின்னர் கிடா வெட்டு பூஜையும், மதியம் மஞ்சள் நீராடலுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ஈசன் அம்பாளுக்கு திருமாங்கல்யம் சூட்டினார்
    • ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில் குடமுழுக்கு விழா நேற்றைய முன் தினம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து தேரோடும் வீதியில் பட்டனப் பிரவேசமும், பரதநாட்டிய அரங்கேற்றமும் நடைபெற்றது.இதையடுத்து, ஈசன் நாமபுரீஸ்வரருக்கும், அம்பாள் தர்மஸம்வர்த்தினிக்கும் நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன.சந்தன காப்பு அலங்காரத்தில் ஈசன் காட்சியளித்தார். சிவனடியார்களால் திருவாசகம், முற்றோதுதல் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறிய ரச தேரில் திருமண மேடை அமைக்கப்பட்டது. இதில், உற்சவ மூர்த்திகளான ஈசன், அம்பாள் திருவுருவங்கள் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவன் கோவில் அருகே உள்ள நாடியம்மாள் கோவிலிருந்து திருமாங்கலியம், பட்டு வஸ்திரங்கள், தேங்காய், பழங்கள், இனிப்புகள் போன்ற சீர்வரிசைகளோடு மேள தாளம் முழங்க மணமேடைக்கு கொண்டு வரப்பட்டது. ஈசன்- அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்களால் அலங்காரம் ெ சய்யப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன. சிவச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதினர். பல சடங்குகளுக்கு பின் புதிய திருமாங்கல்யம் கொண்டு ஈசன்- அம்பாளுக்கு திருமாங்கல்யம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலங்குடி சொர்ண பைரவ சிவாச்சாரியர் குழுவினர் தெய்வானை திருக்கல்யாண விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • விழாக்காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

    அரியலூர்,

    அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான அருள்மிகுகலியுகவரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொருஆண்டும் 10 நாட்கள் பெருந்திருவிழா நடை பெறுவது வழக்கம்.இந்த ஆண்டு நாளை (வியாழக்கிழமை) ராமநவமி அன்று கொடிஏற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா வரும் 7-ந் தேதியும், 8-ந் தேதி ஏகாந்தசேவையும் மிகசிறப்பாக நடைபெறும். திருவிழா காலங்களில் தினசரி நாதசுர இசை, திருமஞ்சனம், கிளாரினட், பொய்க்கால் குதிரைஆட்டம், நாட்டியம், வேதபாரண்யம், பஜனைகள், கிராமியகலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.பக்தர்கள் வருகையை முன்னிட்டு தண்ணீர்பந்தல், அன்னதானம், தங்கும் வசதி, குடிநீர்வசதி, மருத்துவவசதிகள் அமைத்து தரப்படுகிறது. அரசுபோக்குவரத்துகழகம் சார்பில் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், சேலம், துறையூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், திட்டகுடி, ஆகிய பகுதிகளிலிருந்து விழாக்கால சிறப்பு பஸ் இயக்கப்படவுள்ளது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவினை முன்னிட்டு மாவட்டகலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவின் பேரில் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படும். அரியலூர் மாவட்டபோலீஸ் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.

    • 4 கிராம மக்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்
    • கட்லா, விரால், ஜிலேபி வகை மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி

    பொன்னமராவதி

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்று வட்டாரத்தில் மதியாணி, தேனூர்,ரெட்டியபட்டி, கண்டியா நத்தம் புதுப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.நெல் அறுவடைக்கு பின்னர் ஊர் விவசாய பாசன கன்மாய்களில் தண்ணீர் வற்றத் தொடங்கும்.அப்போது ஊர் முக்கியஸ்தர்களால் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மீன்பிடித் திருவிழா நடைபெறும். இவ்வாறு நடைபெறும் மீன்பிடித் திருவிழாவில் ஊர் முக்கியஸ்தர்களால் வெள்ளை வீசப்பட்ட பின்னர் கிராம மக்கள் கம்மைகளில் துள்ளி குதித்து தங்கள் கையில் வைத்திருந்த மீன்பிடி உபகரணமான கூடை ,வலை போன்றவற்றை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர்.இதில் நாட்டு வகை மீன்களான 5 கிலோ எடை கொண்ட கட்லா மீனும் , 3 கிலோ எடை கொண்ட விரால் வகை மீன்களும் ஜிலேபி கெண்டை அயிரை மீன்கள் கிடைத்தன இதனை மகிழ்ச்சியோடு பிடித்துச் சென்றனர்.பொன்னமராவதி அருகில் உள்ள உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் இன்று இரவு நடைபெறுவதால் காப்பு கட்டப்பட்ட 15 தினங்களுக்கு எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளோ சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறாது. அவ்வாறு நடைபெறும் சுப தினங்கள் 15 தினங்களுக்குப் பின்னர் தான் நடைபெறும் ஆகையால் இன்று பொன்னமராவதி சுற்று வட்டாரத்தில் நான்கு கிராமங்களில் இன்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. 

    • சிறப்பு வழிபாட்டில் பல்வேறு அபிஷேகங்கள்
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள பெரியநாயகி உடனுறை ஏழுமலைநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் நந்திக்கு பால், தயிர், மோர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரித்து வதிவாதரனை காட்டப்பட்டது. பிரதோஷ வழிபாட்டுக்கு ஜெயங்கொண்டம் சுற்று பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டு சென்றனர்.


    • அழகர்கோவிலில் மாசி திருவிழா நடந்தது.
    • பொய்கைகரைப்பட்டி தெப்பக்குளத்தில் அன்னப்பறவை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    அலங்காநல்லூர்

    தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்ப டுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதுமான மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் நடை பெறும் திருவிழாக்களில் மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் முக்கியமானது. இந்த விழா நேற்று மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று காலை நடந்தது. ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பட்டார்.

    மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு வழி நெடுகிலும் நின்று சேவை சாதித்தார். பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தில் காலை 10.50 மணிக்கு தெப்பத்தின் கிழக்கு புறமுள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அன்னப்பறவை வாகனத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பகல் முழுவதும் தெப்பத்தில் இருக்கும் கள்ளழகர் இன்று மாலை பூஜை முடித்து மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளுவார். தெப்ப உற்சவத்தை காண சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபாடு செய்தனர்.

    இன்று இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு இருப்பிடம் சேருகிறார்.

    • வருகிற 3-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.
    • 6-ந்தேதி 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. காலை, இரவு என இருவேளையில் சாமி வீதி உலா நடைபெறும்.

    7-ம் நாளான வருகிற 3-ந்தேதி மகா தேரோட்டமும் 6-ந்தேதி அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள சாமி சன்னதி அருகில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    விழாவினை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நான்கு வாயில்களில் உள்ள ராஜகோபுரம், அம்மனிஅம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய கோபுரங்களை சுத்தம் செய்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் பிராண்டோ ஸ்கை லிப்ட் 54 மீட்டர் உயரம் வரை செல்லும் அதாவது 162 அடி உயரத்திற்கு மேல் செல்ல கூடிய ராட்சத தீயணைப்பு மீட்பு எந்திரத்தின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    கார்த்திகை தீப திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடக்கிறது. இதற்காக தேர்கள் சீரமைக்கப்படுகின்றன. இன்று காலையில் அருணாசலேஸ்வரர் பவனி வரும் பெரிய தேர் சீரமைப்பு பணி தொடங்கியது.

    தேர் சக்கரம், அச்சு, உச்சி பகுதிகளில் சீரமைப்பு பணிகள் செய்யப்படுகிறது.

    • சமையலுக்கு எண்ணெய் பயன்படுத்த மாட்டார்கள்.
    • வீட்டில் அரிசி சோறு சாப்பிட மாட்டார்கள்.

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி கிராமத்தில் அலவாய்மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற ஆயா கோவில் என்று அழைக்கப்படும் அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை இரவு தொடங்கி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருவிழா நடக்கிறது. இதில், வேண்டுதலை நிறைவேற்ற வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர், ஆடுகளை பலியிட்டு விருந்து அளிப்பர்.

    திருவிழாவை ஒட்டி, செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்கள் கூனவேலம்பட்டி, கூனவேலம்பட்டி புதூர், பாலப்பாளையம், தோனமேடு, ஆனைகட்டி பாளையம், குறுக்கபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் பொங்கல் வைப்பவர்கள் குடும்பத்திலும், வெளியூர்களில் இருந்து பொங்கல் வைக்க வருபவர்களின் குடும்பத்திலும், சமையலுக்கு எண்ணெய் பயன்படுத்த மாட்டார்கள்.

    வீட்டில் அரிசி சோறு சாப்பிட மாட்டார்கள். கேழ்வரகு, கம்பு, சோளம், திணை போன்றவற்றால் சமைக்கப்பட்ட உணவு வகைகளை தான் சாப்பிடுவர். மேலும் பொங்கல் வைக்கும் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி கொள்வர். கட்டிலில் படுத்து உறங்க மாட்டார்கள். திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கிராம மக்கள் அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்த்து கம்பு, கேழ்வரகு போன்ற உணவு வகைகளை சாப்பிட தொடங்கி உள்ளனர்.

    ×