search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Experimental"

    பாம்பன் ரெயில்வே பாலத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையின் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் பாம்பன் ரெயில் பாலத்திற்கு நேற்று மதுரையில் இருந்து வந்த ரெயில்வே பாதுகாப்பு படையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ராமேசுவரம் ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பர்சாபிரவீன் மற்றும் 5 பேர் கொண்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வருகை தந்தனர்.

    அங்கு அவர்கள் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் நவீன கருவி மற்றும் மோப்ப நாய் மாயா உதவியுடன் 2 கிலோ மீட்டர் நீளமுடைய ரெயில் பாலத்தில் தண்டவாளம், இரும்பு கர்டர் உள்ளிட்ட பாலம் முழுவதும் தீவிர சோதனை செய்தனர். சுமார் 1½ மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டது.

    சோதனையின் போது ரெயில் பாலத்தில் தூண்டில் நரம்பு மற்றும் வலை வீசி மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் பாலத்தில் உள்ளே வந்து மீன் பிடிக்க அனுமதி கிடையாது என எச்சரிக்கை செய்து பாலத்தை விட்டு வெளியேற்றினார்கள்.

    இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு கட்டுப்பாட்டில் பாம்பன் ரெயில்பாலம், மதுரை வைகை ரெயில் பாலம், சாத்தூரில் உள்ள ரெயில் பாலம் மற்றும் நெல்லை தாமிரபரணி ஆற்றில் உள்ள பாலம் முக்கியத்துவம் வாய்ந்த பாலங்கள். அதிலும் கடலில் உள்ள பழமையான பாம்பன் ரெயில் பாலம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாலமாகும்.

    முக்கிய பாலங்களில் ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மூலமாக சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் பாம்பன் ரெயில் பாலத்தில் முழுமையாக வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கும் கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டுஉள்ளது.இதில் சந்தேகப்படும் படியான எந்தவொரு ஒரு பொருளும் இல்லை என்பது சோதனையில் தெரியவந்தது.

    இவ்வாறு அவர் கூறினார். பாம்பன் ரெயில் பாலத்தில் இதுவரையிலும் ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் மூலம் திடீரென சோதனை நடத்திஉள்ளது. பாலத்திற்கு வேறு ஏதேனும் எச்சரிக்கை வந்திருக்கலாம். அதன் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
    ×