search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric motor"

    • பல்லடம் நகராட்சிக்கு தினசரி 46 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்க வேண்டும்.
    • நகரில் பல்வேறு இடங்களில் பற்றாக்குறையாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் மின் மோட்டாா் வைத்து குடிநீா் உறிஞ்சியது கண்டறியப்பட்டால் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் கூறியதாவது:- பல்லடம் நகராட்சிக்கு தினசரி 46 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்க வேண்டும். ஆனால் தற்போது 10 லட்சம் லிட்டருக்கும் குறைவாக தான் தண்ணீா் வருகிறது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் பற்றாக்குறையாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கிடைக்கின்ற தண்ணீரை அனைத்து வாா்டு பகுதிக்கும் ஏற்றத்தாழ்வு இன்றி வழங்கிடவும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப கூடுதல் குடிநீா் பெற்றிடவும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டியில்11-வது வாா்டு பெரியாா் நகா் பகுதியில் குடிநீா்க் குழாய் இணைப்பில் மின் மோட்டாா் பொருத்தி தண்ணீா் உறிஞ்சி எடுக்கப்படுவதால் தங்களுக்கு போதிய குடிநீா் கிடைப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் புகாா் மனுவில் கூறியிருந்தனா்.

    அதைத்தொடா்ந்து நகராட்சி அலுவலா்கள் அப்பகுதியில் ஆய்வு செய்த போது 3 குடிநீா்க் குழாய் இணைப்புகளில் மின் மோட்டாா் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நகராட்சி அலுவலா்கள் அந்த இணைப்புகளைத் துண்டித்து மோட்டாா்களை பறிமுதல் செய்துள்ளனா். பல்லடம் நகராட்சி பகுதியில் மின் மோட்டாா் வைத்து குடிநீா் குழாயில் தண்ணீா் உறிஞ்சி எடுத்தால் உடனடியாக குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பல்லடம் நகராட்சி பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றாா்.

    வாசுதேவநல்லூர் டவுண் பஞ்சாயத்து பகுதிகளில் அனுமதியின்றி தண்ணீர் பிடிக்க பயன்படுத்திய 38 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் டவுண் பஞ்சாயத்து பகுதிகளில் வீட்டு தண்ணீர் இணைப்புகளில் மின்மோட்டார் மூலம் குடிநீரினை உறிஞ்சுவதாகவும் இதனால் மின்மோட்டார் இணைப்பு இல்லாதவர்களுக்கு தண்ணீர் சப்ளை சரியாக கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் மாநில, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பினர்.

    இதையடுத்து பேரூராட்சிளின் இயக்குநர் பழனிச்சாமி, கலெக்டர் ஷில்பா, பேரூராட்சிகளின் இணை இயக்குநர் மாஹின் அபூபக்கர் ஆகியோர்களின் உத்தரவின் பேரில் வாசுதேவநல்லூர் பகுதிகளில் மின்மோட்டார் மூலம் குடிநீரினை உறிஞ்சும் குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து மின் மோட்டாரை பறிமுதல் செய்ய ஆய்வுப்பணி நடந்தது.

    பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் லெனின், கண்மணி, வெங்கடகோபு, கலாராணி, முரளி, ஆதம், அப்துல்கலாம் ஆசாத் மற்றும் தலா 5 பேர்கள் வீதம் குடிநீர் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் உள்ள 2,3,11,14,15 ஆகிய வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    இதில் 38 வீடுகளில் தண்ணீரை உறிஞ்சும் மோட்டார்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வருங்காலங்களில் மின்மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்ணீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும் என எச்சரித்தனர். #tamilnews
    குயிலம் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சுற்றித்திரிந்து வருகின்றனர்.
    வாணாபுரம்:

    வாணாபுரம் அருகே உள்ள குயிலம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு பிறகு பொது மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று குடங்களில் குடிநீர் எடுத்து வருகின்றனர். மேலும் விவசாய நிலங்களுக்கு சென்றும் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே, ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரை சீரமைத்து சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×