search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drivers"

    • அரசு பஸ்சின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிறை பிடித்தனர்.
    • பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

     பல்லடம் : 

    பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்றிரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. டிரைவர் ராஜன் பஸ்சை ஓட்டினார். பல்லடம் பனப்பாளையம் சோதனைச்சாவடி பகுதியில் சென்றபோது அந்த பஸ் நிறுத்தத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி(வயது 21),உதயசந்திரன்(23) ஆகியோர் திருப்பூர் செல்வதற்காக பஸ்சிற்கு காத்துக் கொண்டிருந்தனர்.

    வாலிபர்கள் தகராறு

    அவர்கள் பஸ்சை நிறுத்துமாறு கை காட்டினர். இடை நில்லா பஸ் என்பதால் அந்த பஸ் நிற்காமல் சென்றது. இந்தநிலையில் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, உதயசந்திரன் ஆகியோர் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் சென்று ராயர்பாளையம் பஸ் நிறுத்தம்அருகே, அரசு பஸ்சின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிறை பிடித்தனர். மேலும் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை பார்த்த அந்த வழியாக சென்ற அரசு பஸ் டிரைவர்கள் சாலையிலேயே பஸ்களை நிறுத்தி டிரைவர் ராஜனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் - பல்லடம் சாலையில் இருபுறமும் சுமார் 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டது.

    டிரைவர்கள் போராட்டம்

    தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசார், இரு தரப்பினிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அரசு பஸ் ஓட்டுநர்கள், சிரஞ்சீவி, உதயச்சந்திரன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசார் சமாதானம் செய்ததையடுத்து டிரைவர்கள் பஸ்களை அங்கிருந்து எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருப்பூர்- பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    • செல்போன் பார்த்துக்கொண்டே பஸ்சை ஓட்டி செல்லும் டிரைவர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • சாலைகளை கடந்து செல்ல பொது மக்களுக்கு உதவி புரிவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மதுரை

    மதுரையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். சில அரசு பஸ் டிரைவர்கள் செல்போனை பார்த்துக் கொண்டே பஸ்சை ஓட்டி செல்கின்றனர்.

    நேற்று மதியம் மதுரை ரெயில் நிலையம்-பெரியார் பஸ் நிலையம் இடையே அரசு பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவர் விபத்து அபாயத்தை உணராமல் செல்போனில் காட்சிகளை பார்த்தபடி ஓட்டிச் சென்றார். பஸ் டிரைவரின் அலட்சியத்தை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் சில பஸ்டிரைவர்கள் மற்றும் ஆட்டோ, கார் வாகன டிரைவர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் செல்போனை பார்த்தபடி வாகனங்களை ஓட்டுவதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களால் விலை மதிப்பில்லாத மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பார்த்து கொண்டு இயக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரையில் சில போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தினர்.

    இருசக்கர வாகனங்களை அடிக்கடி நிறுத்தி சோதனை செய்து அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார், விபத்து ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளை மீறும் பெரிய வாகனங்கள் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதில்லை.

    சாலைகளை கடந்து செல்ல பொது மக்களுக்கு உதவி புரிவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    • பாதியில் நின்ற சாலை பராமரிப்பு பணிகளை சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • பாலம் கட்டிய தோடு விட்டுவிட்டு சரளை கற்களை கொட்டி விட்டு சென்றுவிட்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தாளில் இருந்து மேட்டு நீரேத்தானுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதில்பெரியாறு பாசன கால்வாய் துருத்தி ஓடை வழியாக வடகரை கண்மாய்க்கு தண்ணீர் செல்கிறது.அந்த ஓடையின் குறுக்கே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஓடையில் தண்ணீர் அதிக அளவில் வரும் போது பாலம் மூழ்கிவிடும். அப்போது 2 கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து தடை ஏற்பட்டு வந்தது. பாலத்தில் தண்ணீர் வற்றிய பிறகுதான் நடந்தோ, வாகனங்களோ செல்ல முடியும். இந்தப் பாலத்தை உயர்த்தி கட்டிட பலமுறை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாலம் உயர்த்தி கட்டும் கட்டுமான பணி நடந்தது. கடந்த மாதம் பால கட்டுமானபணி முடிந்த பின் பாலத்தில் இருபுறத்திலும் சரளை கற்கள் கொட்டி தார் சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பாலம் கட்டிய தோடு விட்டுவிட்டு சரளை கற்களை கொட்டி விட்டு சென்றுவிட்டனர்.

    இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்கும் போது சரளை கற்களில் சறுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். சைக்கிள், மொபட், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பாலப்பணி முழுமை பெறுவதற்கு போர்க்கால அடிப்படையில் தார் சாலை உடனே அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அவிநாசி அருகே பைக்கில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர் விபத்தில் பலியானார்.
    • நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், வேகக்கட்டுப்பாடு அவசியமானது.

    திருப்பூர் :

    அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், மது குடித்துவிட்டு ஓட்டுதல், இருசக்கர வாகனங்களில் செல்வோர் ெஹல்மெட் அணியாமல் செல்லுதல், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல்கள் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

    சமீபத்தில் அவிநாசி அருகே பைக்கில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர் விபத்தில் பலியானார். அவர் ெஹல்மெட் அணிந்திருக்கவில்லை. பைக்கில் சக நண்பர்கள் 2பேர் உடன் வந்தனர். ெஹல்மெட் அணிந்திருந்தால்விதிமுறையைப் பின்பற்றியிருந்தாலும் குறைந்தபட்ச காயங்களுடன் மாணவர் தப்பியிருக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல், திருப்பூரில் நடைபெறும், பல விபத்துகளுக்கு விதிமீறல்களே காரணமாக அமைகின்றன.இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ெஹல்மெட் அணிவதை சுமையாக கருதத் தேவையில்லை. அது உயிர்க்கவசம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது சுலபமான விஷயம்தான். ஆனால் பலர் இதைப் பொருட்படுத்துவதில்லை.

    நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், வேகக்கட்டுப்பாடு அவசியமானது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, திருப்பூரில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிரதான ரோடுகளில் கூட, பலர்வாகனங்களை விதிமுறைப்படி இயக்குவதில்லை.விபத்து நேரும்போதுதவறாக விதிமுறை பின்பற்றுபவர் மட்டும் பாதிக்கப்படவில்லை. விதிமுறையை முறையாக கடைபிடித்து செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். அப்பாவிகள் உயிரிழக்க நேர்கிறது.

    திருப்பூரின் ரோடுகள் பரந்து விரிந்தவை அல்ல.பரபரப்புடன் இயங்கும் மாநகரில் வாகனங்களை நிதானமாக இயக்கியாக வேண்டிய கட்டாயம் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் உள்ளது. ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்களில் பறப்பவர்கள் பலர். தற்போது பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் 18 வயது நிரம்பாத மாணவர்கள் பலர் பைக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.போலீசார் அறிவுறுத்தினாலும்ப ள்ளிகளுக்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இது தொடர்கதையாக உ ள்ளது. பெற்றோர் நினைத்தால், வாகனங்களை மாணவர்கள் எடுத்துச்செல்லாமல் தடுக்க முடியும்.கவனமின்மையால் விபத்துகள் கண நேரத்தில் நிகழ்ந்துவிடுகின்றன. ஆனால்ஒவ்வொரு விபத்துகளும், விலை மதிக்க முடியாத இழப்பை ஏதேனும் ஒரு குடும்பத்திற்கோ, விபத்தால் பாதிக்கப்பட்டவரை சார்ந்திருப்பவர்களுக்கோ ஏற்படுத்தி விடுகின்றன.எனவே வாகன விதிமுறைகளை பின்பற்றி விபத்துக்களை தடுக்க வேண்டுமென போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

    லாரியை வழிமறித்து போலீஸ் எனக்கூறி டிரைவர்களிடம் 2 பேர் பணம் பறித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை 4 வழிச்சாலையில் உள்ளது கல்குறிச்சி. இங்கு நேற்று இரவு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அதனை சேலம் மாவட்டம் ஆத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்த கோபால் (வயது 32) ஓட்டி வந்தார்.

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இருந்து சிமெண்டு பாரம் ஏற்றிக் கொண்டு அந்த லாரி சென்றது. கல்குறிச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் லாரியை வழிமறித்தனர்.

    அவர்கள் தங்களை போலீஸ் எனக்கூறி டிரைவர் கோபாலிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ. 450-ஐ பறித்தனர். மேலும் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த 2 பேரும் மற்றொரு டிரைவரான சதீஷ் என்பவரிடம் இருந்த ரூ. 2 ஆயிரத்து 200-ஐயும் பறித்தனர்.

    அதன்பிறகு அவர்கள் சென்றுவிட்ட நிலையில் கோபால் மற்றும் சதீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் நெடுஞ்சாலை ரோந்து பாதுகாப்பு போலீசார் அங்கு வந்தனர்.

    அவர்களிடம் நடந்த சம்பவங்களை லாரி டிரைவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

    போலீசாரின் அதிரடி சோதனையில் லாரி டிரைவர்களிடம் பணம் பறித்த 2 பேரும் சிக்கினர். அவர்களை அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரித்தபோது போலீஸ் என்ற பெயரில் பணம் பறித்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களது பெயர் கருப்பசாமி (வயது 31), பன்னீர் செல்வம் (40) என்பதும் காரியாபட்டி அருகே உள்ள கணக்கநேந்தலை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. இவர்கள் இதுபோல மேலும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இருக்கலாமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்காலில் இருந்து வேன்களில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த திருப்பூரை சேர்ந்த 3 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். #AlcoholSmuggling
    நாகூர்:

    காரைக்காலில் இருந்து வேன்களில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த திருப்பூரை சேர்ந்த 3 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் உத்தரவின்பேரிலும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுரையின்படியும், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஏட்டு தங்கராசு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை வாஞ்சூர் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 சுற்றுலா வேன்களை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதில் 3 வேன்களிலும் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேன் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் பெரியார் காலனி பிச்சைகனி மகன் சுபேர்சேட் (வயது31), திருப்பூர் அவினாசி சீனிவாசபுரத்தை சேர்ந்த ஜான் மகன் இமானுவேல் (38), திருப்பூர் கூணம்பாடி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் ஜெயசீலன் (24) ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய டிரைவர்கள் சுபேர்சேட், இமானுவேல், ஜெயசீலன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், 3 வேன்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பஸ்களை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லாததால் 400 பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. #Bus #MTCBus
    சென்னை:

    சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பெருநகர போக்குவரத்து கழகம் மூலம் டவுண் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு 3 ஆயிரத்து 300 பஸ்கள் பெருநகர போக்குவரத்து கழகத்தில் உள்ளன.

    ஆனால் இத்தனை பஸ்களை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லை. இதன் காரணமாக 400 பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. தற்போது 2 ஆயிரத்து 900 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    பெருநகர போக்குவரத்து கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 500 ஊழியர்கள் பதவி ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. 2015-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஊழியர் கூட நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக தற்போது 1500 ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.

    மேலும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராமல் விடுமுறை எடுப்பதும் மிக அதிகமாக இருக்கிறது. அவர்களில் பலர் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    தொழில் ரீதியான நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு, மாசுவினால் ஏற்படும் நோய்கள், அதிக பணிச்சுமையால் ஏற்படும் பாதிப்புகள், முறையாக சாப்பிடாதது, தூங்க முடியாதது போன்றவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் விடுமுறை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    ஒரு பக்கம் ஆள் பற்றாக்குறை அதிகமாக இருக்க டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு வருவது குறைவாக இருப்பதால் அனைத்து பஸ்களையும் இயக்க முடியவில்லை. இதனால் முழுமையாக பஸ்களை இயக்க முடியாமல் அவற்றை நிறுத்தி உள்ளனர். மேலும் பல பஸ்கள் இயக்க முடியாத அளவிற்கு பழுதாகி இருக்கின்றன. எனவே அவையும் நிறுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு பஸ்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் ஒரு நாளைக்கு 40 லட்சம் ரூபாய் பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சென்னை சாலை போக்குவரத்து கழக இன்ஸ்டிடியூட் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டர்களுக்கு உரிய பணியை வழங்காமல் அலுவலக வேலை, குடிநீர் பாட்டில் விற்பனை, காவலாளி வேலை போன்றவற்றை கொடுக்கப்படுவதாகவும் மற்றவர்களை மட்டுமே வேலை வாங்குவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

    ஆள் பற்றாக்குறையால் இருக்கிற ஆட்களையே தொடர்ந்து வேலை செய்ய சொல்வதால் ஊழியர்கள் அதிக பணிச்சுமையை ஏற்க வேண்டியது இருப்பதாக தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த பிச்சை கூறினார்.


    அரசு விதிகள் படி ஒரு பஸ்சை முழுமையாக இயக்குவதற்கு 6.5 லிருந்து 7.5 சதவீதம் ஊழியர்கள் தேவை. ஆனால் சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் இந்த விகிதாச்சாரம் மிக குறைவாக உள்ளது.

    நேதாஜி போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்த அன்பழகன் கூறும் போது, ஆள் பற்றாக்குறை, பணிக்கு வராமை போன்றவை மட்டும் பஸ்கள் நிறுத்தத்துக்கு காரணம் இல்லை. பல பஸ்கள் இயக்க முடியாத அளவிற்கு மோசமாக இருக்கின்றன. இதனால் அவற்றை இயக்காமல் நிறுத்தி விடுகிறார்கள். பணிக்கு வரும் கண்டக்டர், டிரைவர்களை கூட பணி இல்லாமல் திருப்பி அனுப்புகிறார்கள். ஆனால் இந்த வி‌ஷயத்தை நிர்வாகம் மூடி மறைக்கிறது என்று கூறினார்.

    ஆனால் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஊழியர்கள் பணிக்கு வராததால் மட்டுமே தினமும் 250 பஸ்களை இயக்க முடியவில்லை என்றார்.

    மேலும் பஸ்கள் உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று திரும்ப முடியவில்லை. இதனால் ஒரு நாளைக்கு ரூ.20 லட்சம் நஷ்டமடைவதாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றி டிரைவர் ஒருவர் கூறும்போது சென்னையை பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. எந்த இடத்துக்குமே குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்சை ஓட்டிச்செல்ல முடிவதில்லை. பயணிகள் சிறிது நேரம் பஸ் வருகிறதா? என பார்த்து விட்டு வேறு வாகனங்களில் சென்றுவிடுகிறார்கள் என்று கூறினார்.

    இதற்கிடையே மாநகர போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக ஏராளமான பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், பஸ் கண்டக்டர்கள் மற்றும் போதிய தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லை என்று போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த சம்பத் கூறினார். #Bus#MTCBus
    ×