search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dredging work"

    செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரிகளில் 124 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #EdappadiPalaniswami
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டி பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.

    சென்னை-தண்டையார்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் அருகில் நேரு நகர் மற்றும் எழில் நகர் பகுதிகளை இணைக்க வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இருவழிப்பாலம்,

    பழனி, மாட்டு மந்தை அருகில் பாலாற்றின் குறுக்கே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம், செய்யூர் வட்டம், பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 9 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மறு கட்டுமானம் செய்யப்பட்ட ஒரு வழிப்பாலம் என மொத்தம் 240 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத்துறையின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    அடையாறு ஆறு மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி ஆகிய ஏரிகளில் 124 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தூர்வாரும் பணிகள் என மொத்தம் 532 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத்துறையின் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

    சென்னை, சேத்துப்பட்டு பொழுதுபோக்கு மீன்பிடிப்பு மற்றும் பசுமை பூங்கா வளாகத்தில் 6 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 20 இருக்கைகள் கொண்ட குளிர்சாதன வசதிகளுடன் கூடிய மெய்நிகர் காட்சியக அரங்கம், தொடுதிரை கணினி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன் காட்சியகத்துடன் கூடிய மெய்நிகர் காட்சியகம்,

    மாதவரம் வளாகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வண்ண மீன் வானவில் விற்பனை வளாகம் என மொத்தம் 21 கோடியே 27 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    உயர் கல்வித்துறை சார்பில் உசிலம்பட்டியில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், கருத்தரங்கக்கூடம், விடுதி, பணிமனை மற்றும் இதர கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மேலும் தேனி, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டுக்கல், வேலூர், தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 67 கோடியே 25 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

    2018-ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிங்காரவேலர் விருது, சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகளையும் 2017-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது மற்றும் 2018-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் தமிழ்ச்செம்மல் விருதுகள் என மொத்தம் 56 விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார். #EdappadiPalaniswami

    பழவேற்காடு முகத்துவாரம் தூர்வாரும் பணி காரணமாக அடைக்கப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரி, நிரந்தர முகத்துவாரம் அமைக்க கோரி ஆரம்பாக்கம் முதல் பழவேற்காடு வரையில் உள்ள மீனவர்கள் கடந்த 15 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கலெக்டர் மகேஸ்வரி, பலராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி, நிரந்தர முகத்துவாரம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்காலிகமாக ரூ. 15 லட்சம் செலவில் முகத்துவாரம் தூர்வாரப்படும் என உறுதி அளித்தார்.

    இதையடுத்து கடந்த வாரம் முகத்துவாரத்தை தூர்வாரும் பணிகளை கலெக்டர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

    நேற்று மாலை கடலையும், ஏரியையும் இணைக்கும் பகுதியில் 2 ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டது. மீன் வளத்துறை உதவி இயக்குனர் வேலன் தலைமையில், பொதுப் பணித்துறை அதிகாரிகள், மீனவர்கள் முன்னிலையில் முகத்துவாரம் திறக்கப்பட்டது.

    நீரோட்ட அடிப்படையில் மலர் தூவி கடலில் முகத்துவாரத்தில் ஏரி நீர் கலக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனால் 6 மணி நேரம் கடல் நீர் ஏரிக்கும், ஏரி நீர் கடலுக்கும் செல்வதால் மீன்வளம் பெருகும் எனவும், நிரந்தர முகத்துவாரம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி கிடைத்த உடன் விரைவில் தொடங்கப்படும் என மீன் வளத்துறை உதவி இயக்குனர் வேலன் தெரிவித்தார்.

    இதில் பழவேற்காடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் முகத்துவாரம் உடனடியாக அடைபட்டு போனதால் மீனவர்கள் இன்று கடலில் மீன் பிடிக்க முடியவில்லை. இதனால் 100-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

    பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரும் பணி இன்று தொடங்குகிறது. தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். #Fishermen
    பொன்னேரி:

    பழவேற்காடு முகத்துவாரப் பகுதி தூர்வாரப்படாததால் மணல் திட்டுகளாக காணப்படுகிறது. இதனால் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் பழவேற்காட்டை சுற்றி உள்ள 100-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். படகுகளில் சென்று முகத்துவாரத்தையும் முற்றுகையிட்டனர்.

    நேற்று மாலை மீனவ கிராம மக்கள் பழவேற்காடு பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழவேற்காடு முகத்துவாரம் தற்காலிகமாக உடனடியாக தூர்வாரப்படும், தூண்டில் விளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மீனவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கான மண் உறிஞ்சும் எந்திரம் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்திலும், எண்ணூர் துறைமுகத்திலும் உள்ளது. அதனை வரவழைத்து தூர்வாரும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    முகத்துவாரத்தை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். #Fishermen

    டெல்டா மாவட்டங்கள் ஆறுகள், நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளதால் மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கடைமடை வரை கொண்டு செல்ல ஏரி, வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #DeltaFarmers #MetturDam
    தஞ்சாவூர்:

    கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளதால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டு வருகிறது. 1 லட்சம் 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு மேட்டூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் 96 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வருகிற 19-ந் தேதி திறக்கப்படும் என்று நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கர்நாடகத்தில் பெய்த தொடர் மழையால் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணை பெற்றுள்ளது. இதனால் இந்த ஆண்டு அகண்ட காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் வக்கீல் ஜீவக்குமார் கூறியதாவது:-

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை ஏரி, குளங்களில் தேக்கி வைக்க வேண்டும். குடிமராமத்து பணிகள் 25 சதவீதம் தான் முடிந்துள்ளது.

    ஏற்கனவே டெல்டா மாவட்டங்கள் ஆறுகள், நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தற்போது மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கடைமடை வரை கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். முறைப்பாசனம் இன்றி காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், ஆறுகளில் பிரித்து அனுப்பி நீர் மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்.

    கடலில் ஒருசொட்டு நீர் கூட கலந்து வீணாக்காமல் அனைத்து நீரையும் விவசாயத்திற்கே பயன்படுத்த பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக விவசாயத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து முழுமையாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதுவரை திறக்கப்பட்ட தண்ணீர் அனைத்தும் கடைமடை பகுதி வரை சென்றது இல்லை.

    கடைமடை பகுதிகளுக்கு கூடுதலாக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். அப்போது தான் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகளும் இதில் பயன்பெற முடியும்.

    மேலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தங்குதடையின்றி செல்ல ஏரி, வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.

    விவசாயிகளுக்கு தேவையான நெற்கதிர், உரம் ஆகியவை மானிய விலையில் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க வேண்டும்.

    தற்போது தமிழக முதல்-அமைச்சர் 19-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவித்திருப்பது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவர்.

    இவ்வாறு அவர் கூறினார். #DeltaFarmers #MetturDam
    ×