search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul News: Flood in church"

    கொடைக்கானலில் தொடர்மழையால் தேவாலயத்தில் புகுந்த நீரால் பொதுமக்கள் தவிப்பு
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கோடைவிழா நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நேற்று மாலையில் சுமார் 2 மணிநேரம் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    பாக்கியபுரம் பகுதியில் உள்ள தேவாலயத்திற்குள் தண்ணீர் புகுந்தது. வில்பட்டி அருகில் உள்ள பேத்துப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பெய்த கனமழையினால் ஆற்றை கடக்க முடியாமல் கிராம மக்கள் சிரமம் அடைந்தனர். இதனால் கயிறுகட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்றனர்.

    மேலும் மூடைகளில் கட்டிய விளைபொருட்களையும் கயிறு மூலம் கட்டி கடத்தினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், கனமழை பெய்யும் சமயங்களில் எல்லாம் இப்பகுதி மக்கள் உயிரை பணயம் வைத்து ஆற்றை கடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பெரியாற்றின் குறுக்கே பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்து செல்பி எடுத்து செல்கின்றனர்.

    கோடைவிழா தொடங்கி 2 நாட்கள் சற்று சுற்றுலா பயணிகள் குறைந்திருந்த நிலையில் இன்றுமுதல் மீண்டும் அவர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் அனைத்து சுற்றுலா இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    ×