search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dinakaran office burn case"

    மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #MadrasHCBench
    மதுரை:

    மதுரையில் கடந்த 2007-ம் ஆண்டு தினகரன் பத்திரிகை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அலுவலகம் தீப்பற்றி எரிந்தது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் வினோத், கோபிநாத், காவலாளி முத்து ராமலிங்கம் ஆகியோர் உடல் கருகி பலியானார்கள்.

    சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து அட்டாக் பாண்டி, ஊமச்சிகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலை செய்து உத்தரவிட்டது.

    இதனை எதிர்த்து கடந்த 2011-ம் ஆண்டு சி.பி.ஐ. தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பிறப்பித்தனர்.

    அதில், பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் கீழ்கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்கிறோம். வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அட்டாக் பாண்டி, பிரபு என்ற ஆரோக்கியபிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன், ரூபன், மாலிக் பாட்சா ஆகிய 9 பேருக்கும் தலா 3 ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



    இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தப்பிக்க அரசு ஊழியரான துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் துணையாக இருந்துள்ளார். எனவே இந்திய தண்டனை சட்டம் 217 மற்றும் 221 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளியாகிறார். அவர் வருகிற 25-ந்தேதி (இன்று) கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அப்போது தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று கூறினர்.

    அதன்படி இன்று ராஜாராம் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி முன்பு ஆஜரானார்.அப்போது நீதிபதிகள், நீங்கள் நினைத்து இருந்தால் பத்திரிகை அலுவலக எரிப்பு சம்பவத்தை தடுத்து இருக்கலாம் என்று ராஜாராமிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், சம்பவம் நடந்தபோது நான் அந்த இடத்தில் இல்லை என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், சம்பவம் நடந்து முடிந்த பிறகாவது நீங்கள் உங்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கூட்டத்தை கலைத்து இருக்கலாமே? என கேட்டனர். அதற்கு ராஜாராம், துப்பாக்கியை ஜீப்பில் வைத்திருந்தேன் என்றார்.

    எது எப்படி இருந்தாலும் நீங்கள் உங்கள் கடமையை செய்ய தவறி விட்டீர்கள். எனவே இந்த வழக்கில் நீங்கள் குற்றவாளி. உங்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று ராஜாராமிடமே நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அவர் தற்போது எனக்கு 62 வயது ஆகிறது. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

    இதையடுத்து நீதிபதிகள், உங்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 217 (பொது ஊழியராக இருக்கும் நபர் சட்டத்திற்கு கீழ்படியாத நபர்களை காப்பாற்றுதல்), 221 (குற்றவாளி தப்பிக்க துணையாக இருத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே 2 பிரிவுகளுக்கும் சேர்ந்து மொத்தம் 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்படுகிறது. இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

    தண்டனை பெற்றுள்ள ராஜாராம் சம்பவம் நடந்த போது டி.எஸ்.பி.யாக இருந்து பின்னர் ஏ.டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. #MadrasHCBench
    ×