search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DGP Sylendra Babu"

    • கடந்த சில நாட்களாக புதிய வகையிலான `கூகுள் பே' மோசடியை அரங்கேற்ற சைபர் கிரைம் குற்றவாளிகள் அப்பாவி பொது மக்களுக்கு வலைவிரித்துள்ளார்கள்.
    • ஏமாற்று பேர்வழிகள் செல்போன் வழியாக அனுப்பும் லிங்க்கை பொதுமக்கள் தொட வேண்டாம்.

    ஆன்லைன் மூலமாக புதுவிதமான மோசடிகள் விதவிதமான வடிவங்களில் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

    இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கைவரிசை காட்டுவதால் அவர்களை கண்டுபிடித்து நெருங்குவது என்பது போலீசுக்கு மிகப் பெரிய சவாலாகவே மாறி இருக்கிறது.

    இதனால் `வந்தபின் அலறுவதை விட வரும் முன் காப்பதே மேல்' என்பதற்கிணங்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களையும் மேற் கொண்டு வருகிறார்கள்.

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்களும் இருந்துகொண்டே தான் இருப்பார்கள் என்பார்கள். அந்த வகையில் ஆன்லைன் மோசடி பேர்வழிகள் புதுப்புது வழிகளில் ஊடுருவி மக்களை ஏமாற்றிக் கொண்டே வருகிறார்கள்.

    இதன்படி கடந்த சில நாட்களாக புதிய வகையிலான `கூகுள் பே' மோசடியை அரங்கேற்ற சைபர் கிரைம் குற்றவாளிகள் அப்பாவி பொது மக்களுக்கு வலைவிரித்துள்ளார்கள்.

    குறிப்பிட்ட தொகையை உங்கள் வங்கி கணக்கில் தூண்டில் போல போட்டு அதன்மூலம் பெரிய தொகையை கறக்கும் மோசடி வேலையில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடி வலை எப்படி விரிக்கப்படுகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.

    கூகுள் பே என்று அழைக்கப்படும் `ஜி பே' மூலமாக பணம் அனுப்புவது என்பது இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாததாகவே மாறி இருக்கிறது. இப்படி கூகுள் பே மூலமாக பணம் அனுப்பும் நேரங்களில் சில நேரங்களில் தவறுதலாக நாம் வேறு யாருக்காவது பணத்தை அனுப்பிவிட்டு திருப்பி கேட்டிருப்போம்.

    அதேநேரத்தில் யார் என்றே தெரியாத மற்றவர்களும் நமது வங்கி கணக் குக்கு பணத்தை அனுப்பி விட்டு திருப்பி கேட்டிருப்பார்கள். இந்த நடை முறையை பின்பற்றித்தான் புதிய மோசடி கும்பல் மக்களின் சேமிப்பு பணத்தை களவாட களமிறங்கி உள்ளது.

    சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை பிடிக்கும் தந்திரசாலிகள் போல மோசடி ஆசாமிகள் செயல்படுகிறார்கள். உங்கள் வங்கி கணக்கில் சில ஆயிரங்களை ஜி பே மூலம் அனுப்பி விட்டு உங்கள் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

    `எனது வங்கி கணக்கில் இருந்து நண்பர் ஒருவருக்கு பணம் அனுப்பி உள்ளேன். அது தெரியாமல் உங்களுக்கு வந்துவிட்டது. அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் பிளீஸ்...' என்று கூறுகிறார்கள். இப்போதுதான் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    இதன் பின்னர் எதிர் முனையில் பேசும் நபர் ஒரு `லிங்'க்கை அனுப்புகிறேன். அதில் போய் எனது பணத்தை அனுப்புங்கள் என்று கூறி குறிப்பிட்ட லிங்கையும் அனுப்பி வைக்கிறார்கள். இந்த லிங்க்கை நீங்கள் கிளிக் செய்ததும் ஓ.டி.பி. எண் வரும் அந்த எண்ணை எதிர் முனையில் பேசும் நபர் கேட்பார்.

    நீங்கள் ரகசிய குறியீட்டு எண்ணான ஓ.டி.பி.யை சொன்னதும் அடுத்த நொடியே உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த சேமிப்பு தொகையும் காணாமல் போய் இருக்கும். இது போன்ற நூதன மோசடி கடந்த ஒருவாரமாகவே அதிகமாக அரங்கேற்றப்பட்டு வருவதாகவும், எனவே பொதுமக்கள் உஷாராக இருக்குமாறும் காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

    ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. நானும் அடிக்கடி வீடியோக்கள் மூலமாக பேசி வருகிறேன். உங்கள் வங்கி கணக்கையோ, ரகசிய குறியீட்டு எண்ணையோ வங்கிகளில் இருந்து யாரும் கேட்கமாட்டார்கள்.

    இதனை பலமுறை பொது மக்களிடம் எடுத்துக் கூறி உள்ளோம். ஆனால் வங்கி விவரங்களை கொடுத்து பொதுமக்கள் பணத்தை இழந்துகொண்டே இருக்கிறார்கள். தற்போது கூகுள் பே மூலம் தெரியாமல் பணம் அனுப்பிவிட்டேன் என்று ஏமாற்றி பொதுமக்களின் வங்கி கணக்கை குறிவைத்து ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை காட்டி செயல்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக ஏமாற்று பேர்வழிகள் செல்போன் வழியாக அனுப்பும் லிங்க்கை பொதுமக்கள் தொட வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் உஷாராக இல்லை என்றால் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் இழக்க நேரிடும்.

    தமிழக காவல் துறையில் உள்ள `காவல் உதவி செயலி மற்றும் 1930 எனும் அவசர உதவி எண் ஆகியவற்றின் மூலமாக பணத்தை இழந்தவர்கள் உடனடியாக புகார் செய்தால் இழந்த பணம் திரும்ப கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்த நபரின் வங்கி கணக்குக்கு பணம் சென்ற 24 மணிநேரத்தில் விரைந்து செயல்பட்டால் மட்டுமே பணம் திரும்ப கிடைக்கும்.

    எனவே அறிமுகம் இல்லாத நபர்கள் செல்போனில் பேசி வங்கி தொடர்பான தகவலை கேட்டால் இணைப்பை துண்டித்து விடுங்கள். `கூகுள் பே'யில் தெரியாமல் பணம் அனுப்பிவிட்டேன் என்று யாராவது போனில் தெரிவித்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை அணுகி விவரத்தை தெரிவியுங்கள். சம்பந்தப்பட்ட நபர் உண்மையிலேயே தெரியாமல் பணத்தை அனுப்பி இருந்தால் நிச்சயம் நேரில் வருவார்.

    அப்போது பணத்தை திருப்பி கொடுத்துவிடலாம். இதுபோன்று உஷாராக செயல்பட்டு பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

    இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • வட மாநிலத்தவர்களின் இடங்களுக்கே சென்று நம்பிக்கை ஊட்டுகிறோம்.

    சென்னை:

    வட மாநிலத்தவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    * தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை.

    * வட மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய் மொழியிலேயே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    * வட மாநிலத்தவர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை.

    * வாட்ஸ் அப் குரூப் மூலமும் வட மாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    * வட மாநிலத்தவர்களின் இடங்களுக்கே சென்று நம்பிக்கை ஊட்டுகிறோம்.

    * வதந்தி தொடர்பாக வட மாநில டி.ஜி.பி.க்களுடனும் பேசியுள்ளேன். பீகார் குழு ஆய்வு செய்யும்போது மேலும் நம்பிக்கை அதிகரிக்கும்.

    * வட மாநிலத்தவர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் காவலர்களின் பங்கு அளப்பரியது. அதில் ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது.
    • காவலர்களுக்கு உடல் நலம், மிக மிக முக்கியம்.

    திருச்சி:

    தமிழ்நாடு மாநில காவல் துறை மண்டலங்களுக்கு இடையேயான 62-வது தடகளம், சைக்கிளிங் மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டிகள் திருச்சியில் இன்று தொடங்கியது. இதனை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜாதி சண்டை கிடையாது. மத கலவரங்கள் இல்லை. கள்ளச்சாராயம், துப்பாக்கி சூடு கலவரங்கள் இல்லை. மொத்தத்தில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இத்தனை பெருமைக்கும் முக்கியமானவர்கள் தமிழகத்தில் பணியாற்றும் 1.34 லட்சம் காவலர்கள் தான்.

    பல்வேறு கட்டங்களில் உதவி ஆய்வாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 444 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மார்ச் 1-ந்தேதி பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. இன்னும் கூடிய விரைவில் அடுத்த பேட்ச் உதவி இன்ஸ்பெக்டர்கள் சுமார் 500 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    இந்திய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் காவலர்களின் பங்கு அளப்பரியது. அதில் ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது. 1956, 1960-ம் ஆண்டுகளில் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் ஆக்கி போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. அதில் இரண்டு வீரர்கள் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த காவலர்கள் என்பது சிறப்புமிக்கது.

    1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணியம் என்ற காவலர் இந்திய அணியின் சார்பாக 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கு கொண்டார். சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நாகநாதன் என்னும் காவலர் இந்திய அணி சார்பில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரிலே ரேசில் கலந்து கொண்டார் என்பது பெருமைக்குரியதாக தமிழ்நாடு காவல்துறை கருதுகிறது.

    2020-ம் ஆண்டு நடந்த மாநிலங்களுக்கு இடையேயான காவல்துறை போட்டியில் தமிழக காவல்துறை 5 தங்கப்பதக்கம், 4 வெள்ளிப்பதக்கம், 5 வெண்கலப் பதக்கம் என 14 பதக்கங்களை பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தை பெற்றது. விளையாட்டு நம் அனைவருக்கும் அவசியமாக இருக்கிறது.

    காவலர்களுக்கு உடல் நலம், மிக மிக முக்கியம். விளையாட்டு வீரர்கள் மற்ற காவலர்களுக்கு இன்றைக்கு ஒரு ரோல் மாடல்களாக உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும், சுறுசுறுப்புக்கும், நேர்மைக்கும் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறீர்கள் என்பதை மனதில் கொண்டு நீங்கள் சிறப்பாக விளையாடவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது என்று ஐ.ஜி. கண்ணன் அவ்வப்போது தகவல் தெரிவித்துக்கொண்டே இருந்தார்.
    • வழக்கு விசாரணை விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

    திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம். மையங்களை குறி வைத்து அரியானா கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காட்டிய வேகம்... வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணனின் வியூகம் ஆகியவை குற்றவாளிகளை உடனடியாக பிடிப்பதற்கு பேரூதவியாக இருந்துள்ளன.

    கடந்த 12-ந்தேதி அதிகாலையில் நடைபெற்ற கொள்ளை குறித்து காலையில்தான் போலீசுக்கு தெரியவந்தது. ஒரே நேரத்தில் 4 ஏ.டி.எம்.களை குறி வைத்து கைவரிசை காட்டிய கும்பல் கண்டிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்கிற முடிவுக்கு போலீசார் உடனடியாக வந்து விட்டனர்.

    இது போன்று கொள்ளையடிப்பவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களாகவே இருக்க முடியும் என்று யூகித்த ஐ.ஜி. கண்ணன் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார். கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவ்வப்போது தகவல்களை கேட்டு... கேட்டு வெளிமாநில போலீஸ் டி.ஜி.பி.க்களை தொடர்பு கொண்டு உடனுக்குடன் பேசினார். இதன்படி குஜராத், அரியானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களுக்கும் தனிப்படை விரைந்தது.

    போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தடயவியல் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினார்.

    இதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அரியானா கொள்ளை கும்பல் என்பதை உறுதிபடுத்திய ஐ.ஜி.கண்ணன் மற்றும் அதிகாரிகள் குற்றவாளிகளின் செல்போன் எண்கள் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்து பின் தொடர்ந்தனர். அரியானா மாநில போலீசாரின் உதவியையும் நாடினர்.

    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்ற ஐ.ஜி. கண்ணன் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் நெருங்கும் வரையில் அங்கேயே முகாமிட்டு உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டே இருந்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது என்று ஐ.ஜி. கண்ணன் அவ்வப்போது தகவல் தெரிவித்துக்கொண்டே இருந்தார்.

    இதன் மூலம் வழக்கு விசாரணை விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இப்படி சொல்லி அடித்தது போல ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் போலீசார் "கில்லி"யாக செயல்பட்டு சாதித்துக் காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து நவீன முறையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் போலீசாருக்கு பெரிய சவாலை உண்டாக்கி உள்ளது.
    • ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை போன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் முகத்தை தெளிவாக காட்டும் வகையிலான நவீன கேமராக்களை பொருத்த வேண்டும்.

    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

    கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து நவீன முறையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் போலீசாருக்கு பெரிய சவாலை உண்டாக்கி உள்ளது.

    அரியானா போன்ற வட மாநிலங்களில் இருந்து வந்த கொள்ளையர்கள் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் வங்கி ஏ.டி.எம். மையங்களில் நவீன பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து சென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாட்டில் செயல்படும் 50 வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் 3 முக்கிய அறிவுரைகள் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவுரைகளை உடனடியாக செயல்படுத்துமாறு வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    அந்த அறிவுரைகள் பின்வருமாறு:-

    * அனைத்து ஏ.டி.எம். மையங்களையும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுடன் இணைத்து போலீஸ் நிலையங்களில் அலாரம் கருவிகள் பொருத்த வேண்டும். ஏ.டி.எம். மையங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கருவியில் அபாய சத்தம் ஒலிக்கும். எனவே போலீசார் உடனடியாக அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்று நடவடிக்கை எடுப்பார்கள்.

    * ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை போன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் முகத்தை தெளிவாக காட்டும் வகையிலான நவீன கேமராக்களை பொருத்த வேண்டும்.

    * இவ்வாறு பொருத்தப்படும் கேமராக்கள் வெளிப்படையாக தெரியாமல் ரகசியமாக இருக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறும்போது, "மேற்கண்ட பாதுகாப்பு வசதிகளை ஏ.டி.எம். மையங்களில் செயல்படுத்துவதற்கு வங்கிகளுக்கு பெரியளவில் செலவுகள் ஏற்படாது. எனவே இந்த 3 அறிவுரைகளையும் உடனடியாக செயல்படுத்த வங்கி அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

    • சென்னையிலும் அரியானாவை சேர்ந்த கொள்ளையர்கள் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இதுபோன்று ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
    • ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் எல்லைப்பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வங்கி ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. இதில் தொடர்புடைய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறோம் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த வங்கி ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அரியானா போன்ற வடமாநிலங்களில் ஏற்கனவே நடைபெற்றுள்ளது.

    சென்னையிலும் அரியானாவை சேர்ந்த கொள்ளையர்கள் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இதுபோன்று ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைதானார்கள்.

    ஆனால் இந்த சம்பவம் வெல்டிங் எந்திரம் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அரங்கேற்றப்பட்டு உள்ளது. இதில் கை தேர்ந்த கொள்ளையர்கள் திட்டமிட்டு பல நாட்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டி உள்ளனர்.

    இதில் தொடர்புடைய கொள்ளையர்கள் வடமாநிலத்துக்கு தப்பி சென்றுவிட்டார்களா? அல்லது திருவண்ணாமலை மாவட்டத்திலேயே பதுங்கி இருக்கிறார்களா? என்பது பற்றியும் கண்காணித்து வருகிறோம்.

    ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் எல்லைப்பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மீண்டும் இது போன்று இன்னொரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஏ.டி.எம். மையங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஐ.ஜி. கண்ணன், டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் அங்கேயே முகாமிட்டு விசாரித்து வருகிறார்கள். கை தேர்ந்த கை ரேகை நிபுணர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்யும் தலைசிறந்த நிபுணர்கள் சென்னை மற்றும் கோவையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

    வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.

    • ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதிவேடு ஒன்று பராமரிக்க அறிவுறுத்த வேண்டும்.
    • பதிவேடு நிலைய எல்லையில் வாழும் ஓய்வு பெற்ற காவலர்கள் பதிவேடு என்று பெயரிடப்பட வேண்டும்.

    சென்னை:

    போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து மாநகர, மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எவரேனும் இறக்க நேரிட்டால் காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வண்ணம், அன்னாரது இறுதி சடங்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்து கொண்டு காவல்துறை தலைமை இயக்குனர், காவல் படைத்தலைவர் சார்பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும்.

    மேலும் இந்நிகழ்வை தவறாது கடைபிடிக்க ஏதுவாக அனைத்து காவல் நிலையங்களிலும், அக்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதிவேடு ஒன்று பராமரிக்க அறிவுறுத்த வேண்டும். இந்த பதிவேடு நிலைய எல்லையில் வாழும் ஓய்வு பெற்ற காவலர்கள் பதிவேடு என்று பெயரிடப்பட வேண்டும்.

    இந்த பதிவேடு பராமரிக்கப்படுவதையும், காலம் சென்ற முன்னாள் காவலர்களுக்கு துறை மரியாதை செய்யும் நிகழ்வுகளையும் உயர் காவல் அதிகாரிகள் ஆய்வின்போது சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாற்று நடுதல், அறுவடை போன்ற முக்கிய விவசாயப் பணிகளை உரிய நேரத்தில் கவனிக்க இயலாமல் போவதோடு, தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • விவசாயப் பணிகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

    சென்னை:

    விவசாய டிராக்டர்களை பறிமுதல் செய்யும் விவகாரத்தில் போலீசார் வேளாண் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக கிராமப் புறங்களில் விவசாயப் பணிகளுக்காக வேலை ஆட்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர்களை வாகன தணிக்கையின் போது போலீசார் பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஒப்படைத்து விடுவதாகவும் அதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு விவசாய அமைப்புகளால் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

    வாகன தணிக்கையின் போது டிராக்டர்களில் விவசாய பணிகளுக்காக செல்லும் விவசாய தொழிலாளர்களை காத்திருக்க வைக்கப்படுவதாகவும், இதனால் நாற்று நடுதல், அறுவடை போன்ற முக்கிய விவசாயப் பணிகளை உரிய நேரத்தில் கவனிக்க இயலாமல் போவதோடு, தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே மாநகர போலீஸ் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள், வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் அலுவலர்களுக்கு இது தொடர்பாக தேவையான அறிவுரைகளை வழங்கி, விவசாயப் பணிகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல் நிலைய பதிவேடுகளையும், குற்ற நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்த சைலேந்திராபு வழக்குகளில் புலன் விசாரணை நிலையை பற்றி கேட்டறிந்தார்.
    • மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்று காவல் நிலைய அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

    சென்னை:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சென்னை காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட நொளம்பூர் போலீஸ் நிலையத்துக்கு இன்று காலை திடீரென சென்றார். பின்னர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். 

    காவல் நிலைய பதிவேடுகளையும், குற்ற நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்த சைலேந்திராபு வழக்குகளில் புலன் விசாரணை நிலையை பற்றியும் கேட்டறிந்தார்.

    குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். 

    மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்களின் குறைகளை உடனுக்குடன் களையவும் காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    காவல் நிலைய கோப்புகளை சிறப்பாக பராமரித்ததற்காக காவல் நிலைய துணை எழுத்தர் பெண் காவலர் லலிதாவிற்கு ரூ. 5 ஆயிரம் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.

    காவலர்களுக்கு முறையாக வாராந்திர ஓய்வு வழங்கப்படுகிறதா? என்பதை கேட்டறிந்து காவலர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    • 2022-ம் ஆண்டு சவால் நிறைந்ததாகவும், வெற்றிகரமாகவும் இருந்தது.
    • 13,491 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை :

    டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் 2022-ம் ஆண்டு சவால் நிறைந்ததாகவும், வெற்றிகரமாகவும் இருந்தது. கடந்த ஆண்டு முழுவதும் எந்தவொரு சாதி அல்லது வகுப்புவாத மோதல், காவல்துறை துப்பாக்கிச்சூடு உள்பட பெரிய குற்றச்சம்பவங்களும் நிகழாமல் பாதுகாக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு, தேவர் குரு பூஜை, இம்மானுவேல் சேகரன் நினைவு நாள், மதுரை சித்திரை விழா, விநாயகர் சதுர்த்தி, திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா ஆகியவை அமைதியாக நடைபெற்று முடிந்தன. மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் உள்பட 2 ஆயிரம் வெளிநாட்டினருக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கினோம். போட்டி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

    ஆபரேஷன் ரவுடி வேட்டையில் 3,949 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கடுமையான நடவடிக்கையினால் மாநிலத்தில் திட்டமிட்ட குற்றங்களை செய்யும் குழுக்களின் தீயத்திட்டங்கள் பெரிய அளவில் தடுக்கப்பட்டு உள்ளன.

    ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டதன் காரணமாக 9,906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 13,491 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 24 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 4,141 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 22.09.2022 அன்று டி.ஜி.பி. அலுவலகம் வந்து போலீசாரிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதன்படி 1,500 பேரின் குறைகள் உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் தீர்க்கப்பட்டு உள்ளன. இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அனைத்து போலீசாருக்கும் இரவு ரோந்துப்படி வழங்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்தது இதுவே முதல் முறை.

    பணியின்போது உயிரிழந்த 1,132 போலீசாரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் மற்றும் போலீஸ் நிலைய வரவேற்பாளர் பணிகள் வழங்கப்பட்டன. காவல் பணியில் உள்ள பொது பணி நிலைமைகள், காவலர் குடியிருப்பு, காவலர் நலன்கள் உள்ளிட்டவை குறித்து ஆராய நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சாதனைகள் அனைத்தும் தமிழக காவல்துறையின் ஒவ்வொரு அதிகாரியாலும் மற்றும் ஆண் மற்றும் பெண் காவலர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடமையின்பால் கொண்ட பற்றின் காரணமாகவே சாத்தியமானது. காவல்துறை பணியில் வரும் காலங்கள் சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

    நமது பாரம்பரியம் மற்றும் காவல் பணியில் தொழில் சார்ந்த உயர் தரத்தை பராமரிக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழ்நாடு காவல்துறையின் கொடி உயர்ந்து பறந்திட உறுதி ஏற்போம்.

    இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர்.
    • போலீஸ் வேலையில் உடல் உழைப்பு அதிகம்.

    சென்னை :

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நரம்பியல் துறை நடத்தும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான 'டிரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்' உடற்கூறியல் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மேலும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில், நரம்பியல் துறை சார்பில் போலீசாருக்கு முதுகு வலி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்க புதிய பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரியின் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மேடையில் கூறியதாவது:-

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி 1,000 படுக்கை வசதிகளுடன், 5 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் வகையில் பொதுமக்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவையை வழங்குகிறது. நேர்மையான அரசு ஊழியர்களுக்கான புகலிடம் அரசு ஆஸ்பத்திரி. ஏனென்றால் சமீபத்தில் மூத்த போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் உடல் நலக்குறைவு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரை போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

    டாக்டர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பொதுமக்கள் நலமுடன் வாழ முடியும். உண்மையான சேவை மனப்பான்மை கொண்டுள்ள டாக்டர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள்.

    எனக்கும் டாக்டராக வேண்டும் என ஆசை இருந்தது. அதற்காக 4 ஆண்டுகள் முயற்சித்தேன் ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள் டாக்டராக வேண்டும் என நினைக்கிறார்கள் இது ஆரோக்கியமான விஷயமாகும்.

    பொதுவாகவே போலீஸ் வேலையில் உடல் உழைப்பு அதிகம். அதனால் அவர்களுக்கு முதுகு, உடல் வலி அதிகம் ஏற்படும். சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர். அவர்களுக்கு மாதம்தோறும் 3-வது திங்கட்கிழமைகளில், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக தொடங்கப்படும் முதுகு வலி சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. இதனை அனைத்து போலீசாரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குட்கா கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 769 மோட்டார்சைக்கிள்களும், 679 கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • கஞ்சா வேட்டை 3.0 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட போலீசாரும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதன்படி கடந்த 1 ஆண்டில் ரூ.71 கோடியே 58 லட்சத்து 97 ஆயிரத்து 800 மதிப்பிலான குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே 1-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரையில் 17 மாதங்களில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 53,235 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடமிருந்து 7 லட்சத்து 95 ஆயிரத்து 442 கிலோ மதிப்பிலான குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது.

    குட்கா கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 769 மோட்டார்சைக்கிள்களும், 679 கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 52 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குட்கா விற்பனை தொடர்பாக 13,534 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

    இதே போன்று 1½ ஆண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 18,569 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.40 கோடியே 47 லட்சத்து 18 ஆயிரத்து 253 மதிப்பிலான 35 ஆயிரத்து 496 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகளின் 4023 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    1648 இரு சக்கர வாகனங்களும், 239 நான்கு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 564 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து உள்ளது.

    இதற்கிடையே கஞ்சா வேட்டை 3.0 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 12-ந்தேதி தொடங்கிய இந்த வேட்டையில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இப்படி போலீஸ் நடவடிக்கை தீவிரமாக இருந்த போதிலும் கஞ்சா, குட்கா கடத்தல் ஆசாமிகள், கடல் வழியாகவும், பஸ், ரெயில் வழியாகவும் கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    ×