search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dengue mosquito"

    டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்ததற்காக 5 தொழிற்சாலைகளுக்கு 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. #DenguFever
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் துப்புரவு மற்றும் சுகாதாரப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காக்களூர் தொழிற்பேட்டையில் இன்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் தலைமையில் அதிகாரிகள் டெங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

    தொழிற்சாலைகளில் உள்ள குடோன், தண்ணீர் தொட்டிகளில் அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்ததற்காக 5 தொழிற்சாலைகளுக்கும் 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள 350 தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    அபராதம் விதித்த தொழிற்சாலைகள் சீர் செய்யாவிட்டால் மேலும் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.

    தமிழக அரசின் ஆவின் பால் தொழிற்சாலையில் ஆய்வில் டெங்கு உற்பத்தியாகக் கூடிய வகையில் இல்லாவிட்டாலும், தூய்மையாக வைத்திருக்க நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

    ஆய்வின் போது வட்டாட்சியர் தமிழ் செல்வன், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, விஜயகுமாரி மண்டலா துணை அலுவலர் சபாநாயகம் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் உடன் இருந்தனர். #DenguFever
    கடலூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிக்கும் பணியில் களப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
    கடலூர்:

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் பெருநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக 100 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வார்டுகள் தோறும் உள்ள அனைத்து வீடு மற்றும் வணிகவளாகங்களுக்கு சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன்படி சுகாதார ஆய்வாளர்கள் பாக்கியநாதன், சிவா, மேற்பார்வையாளர்கள் தண்டபாணி, பக்கிரிராஜா, தூய்மைபாரத இயக்க பரப்புரையாளர் ஆனந்தன் மற்றும் களப்பணியாளர்கள் நேற்று திருப்பாதிரிப்புலியூர் சஞ்சீவிநாயுடு தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டனர்.

    அப்போது ஒரு சில வீடுகளின் தோட்டம் மற்றும் உபயோகமற்ற கழிப்பறைகளில் உள்ள பாத்திரம் மற்றும் தேங்காய் மட்டைகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுப்புழுக்கள் வளர்ந்துள்ளதா? என பார்வையிட்டனர். அப்போது கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் பிளாஸ்டிக் பேரல்கள், குடங்களில் தண்ணீரை சேமித்து வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்களிடம், சேமித்த தண்ணீரை உடனே அகற்றவதோடு, வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கை செய்தனர்.

    இது குறித்து தூய்மைபாரத இயக்க பரப்புரையாளர் ஆனந்தன் கூறும்போது, தூய்மைபாரத இயக்கத்தின் மூலம் கடலூர் பெருநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி, பொது இடங்களில் குப்பைகளை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக 100 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 100 பணியாளர்கள் வீடு வீடாக சென்று பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டெங்கு கொசு புழு ஒழிப்பு குறித்து கலெக்டர் கந்தசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த சமயத்தில் டெங்கு போன்ற விஷ காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள மாடவீதியில் டெங்கு கொசு புழு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி நடைபெற்றது. இதனை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தார். அப்போது மாட வீதியில் உள்ள கடைகள், காலி இடங்களில் இருந்த தேவையற்ற டயர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த அவர் உத்தரவிட்டார்.

    பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலிலும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது கோ சாலையை பார்வையிட்டார். அங்கு இருந்த பழைய டயர் போன்றவற்றை அப்புறப்படுத்தினார். மேலும் அங்கிருந்த காலி நெய் டின்களில் தேங்கியிருந்த மழைநீரில் கொசு புழுக்கள் இருந்தது தெரியவந்தது. அதனை அகற்றவும், கோவில் வளாகத்தில் கொசு மருந்து அடிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் அங்கு கொசு மருந்து அடிக்கப்பட்டது.

    மேலும் கோவிலில் இருந்து வெளியே வரும்போது அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி இருப்பதை பார்த்தார். இதையடுத்து, இங்கு சக்கர நாற்காலி இருப்பது யாருக்கும் தெரியாது. அதனால் கோவிலில் மக்கள் வரும் வழியில் சக்கர நாற்காலி உள்ளது என்று அறிவிப்பு பலகை வைக்க கோவில் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், நகராட்சி ஆணையர் பாரிஜாதம், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
    ×