search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "companies"

    • பல்வேறு வகைகளில் மறுசுழற்சி ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
    • ஆடை ரகங்களின் மதிப்பு மென்மேலும் உயரும்.

    திருப்பூர்:

    சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கைகொடுக்கும்வகையில், உலகளாவிய நாட்டு வர்த்தகர்கள் தங்கள் ஷோரூம்களில், மறுசுழற்சி ஆயத்த ஆடை ரகங்கள் விற்பனையை படிப்படியாக அதிகரித்து வருகின்றனர்.ஆடை தயாரிப்பில் வீணாகும் கழிவு துணியை மீண்டும் பஞ்சாக மாற்றியும், பிளாஸ்டிக் பாட்டில்களை சிதைத்து என பல்வேறு வகைகளில் மறுசுழற்சி ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

    தமிழக நூற்பாலைகள், கடந்த மே மாதம் வரை 18 மாதங்கள் தொடர்ந்து ஒசைரி நூல் விலையை உயர்த்தி வந்தன.உற்பத்தி செலவினம் அதிகரிப்பு, நிதி நெருக்கடி, வர்த்தகர்களிடம் ஆடைகளுக்கு போதிய விலை உயர்வு பெறமுடியாமை உள்ளிட்ட காரணங்களால் திருப்பூரில் பல நிறுவனங்கள் மறு சுழற்சி ஆடை தயாரிப்பில் புதிதாக அடியெடுத்துவைத்துள்ளன.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:-

    கட்டிங் வேஸ்ட்ஐ சிதைத்து, பஞ்சாக மாற்றி அதனுடன் 50 சதவீதம் பாலியெஸ்டர் இழை கலந்து ஓ.இ., மில்களில், மறுசுழற்சி நூல் தயாரிக்கப்படுகிறது. இந்த நூலில், குளிர் கால ஆயத்த ஆடை ரகங்கள் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.சாயமேற்றிய துணியே சிதைத்து பஞ்சாக மாற்றப்படுகிறது.அதனால், மறுசுழற்சி ஆடை தயாரிப்பில் சாயமேற்றுதல் தவிர்க்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.மறுசுழற்சி நூலிழை ரகங்கள் விலை குறைவாக உள்ளதால் ஆடை தயாரிப்பு செலவினம் சீராகவே உள்ளது. கடந்தாண்டு நிர்ணயித்த அதே விலைக்கே இந்தாண்டும் ஆடை விலையை நிர்ணயிக்கமுடிவதால், வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்றுவதும் எளிதாகிறது.

    குறிப்பிட்ட நிறங்களில் மட்டுமே ஆடை தயாரிக்க முடியும் என்பதுதான் மறுசுழற்சி ஆடை தயாரிப்பில் உள்ள குறையாக பார்க்கப்படுகிறது.ஆனாலும் எதிர்காலத்தில் சர்வதேச அளவில் மறுசுழற்சி ஆடை ரகங்களின் மதிப்பு மென்மேலும் உயரும் என்பதில் சந்தேகமில்லை. பிரான்டட் நிறுவனங்கள், மறுசுழற்சி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் தரச்சான்று பெற்றிருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் அமைக்கப்படுவதாக கூறிய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், இதில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். #GIM2019 #EdappadiPalaniswami #NirmalaSitharaman
    சென்னை:

    தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் கடந்த 2015-ம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

    2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது.

    2 நாள் மாநாட்டின் தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. மாநாட்டிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

    இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019 என்ற விளக்க கையேட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பல நூற்றாண்டு காலமாகவே நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் பண்பாடு, கலாசாரம், வெளிநாட்டினரை ஈர்க்கக் கூடியதாக விளங்குகிறது. பல நூற்றாண்டுக்கு முன்பே கடல் தாண்டி வணிகம் நடத்தியவர்கள் தமிழ் மன்னர்கள்.

    வெளிநாடுகளில் உள்ள கட்டிடக்கலை, ஆலயங்கள் கூட தமிழ்நாட்டில் உள்ளன. திறமையான தொழிலாளர்களை கொண்ட முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இங்கு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளேன்.

    உலக அளவில் தொழில் துறையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. நாட்டின் உணவுஉற்பத்தி, பணவீக்கம் சீராக நிர்வகிக்கப்படுகிறது. மின்னணு நிர்வாகம், கால நிலை மாற்றம் ஆகியவற்றில் இந்தியா சிறந்து விளங்குகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக பராமரிக்கப்படுகிறது.

    60 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக ஜி.எஸ்.டி. வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி. மூலம் நாடு முழுவதும் ஒரே சந்தை, ஒரே விலை என்ற அளவில் உள்ளது.

    ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் இந்தியாவில் 2 இடங்களில் அமைக்கப்படுகிறது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைய இருக்கிறது. ராணுவ தளவாடங்களை பெறுவதில் இந்தியா மிகப்பெரிய நுகர்வோராக உள்ளது. தமிழகத்தில் சென்னை, ஓசூர், கோவை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

    யார் முதலீடு செய்ய முன்வந்தாலும் அவர்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். தமிழகம் தொழில்தொடங்க உகந்த மாநிலமாக திகழ்கிறது. தமிழக மாணவர்கள் தொழில் தொடர்பான பயன்பாட்டிற்காக ஜப்பானிய மொழி, கொரியா மொழி உள்ளிட்டவற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முதலீட்டாளர்களை வரவேற்று பேசினார்.

    இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.

    இதேபோல், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான தொழில் கண்காட்சியும் நடைபெறுகிறது. இதற்காக 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெரும் நிறுவனங்களுக்கு 140 அரங்குகளும், சிறு குறு நிறுவனங்களுக்கு 110 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

    மதியம் 2 மணிக்கு முதலீட்டு கருத்தரங்கங்களும், வெளிநாட்டு கருத்தரங்கங்களும் பல்வேறு தலைப்புகளின் கீழ் நடைபெறுகிறது. ஒவ்வொரு கருத்தரங்கத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டின் நிறைவு நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதேபோல், ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கமும் நடக்க இருக்கிறது. மாலை 3 மணிக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றுகிறார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    இதில் முக்கிய நிகழ்ச்சியாக தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கின்றன.

    2 நாள் மாநாட்டினை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.98 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம் வரை சாலைகள் புதுப்பிக்கப்பட்டன.

    சென்னை வர்த்தக மையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்காக பிரத்யேகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை முழுவதும் ஆங்காங்கே, மாநாடு தொடர்பான விளம்பரங்கள் முதலீட்டாளர்களை கவரும் வகையில் வைக்கப்பட்டு இருந்தன.

    விமானம், உணவு, வாகனம், பெட்ரோல், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர் உள்ளிட்ட 11 துறைகள் மீது, தொழில் துறை அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி உள்ளனர்.

    இந்த துறைகளில், வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய வைக்கவும், முயற்சி எடுத்தனர். அதற்கு, பலன் கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், இந்த மாநாட்டில், அதிக முதலீட்டிற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

    மேலும், ஒரு முறை பயன்படுத்தியதும் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருள் தயாரிக்க ஏராளமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த துறையில் மட்டும், ரூ.35 ஆயிரம் கோடி முதலீடுகள் வரலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

    2 நாள் மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கொரியா, சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் பங்கேற்கிறார்கள். #GIM2019 #EdappadiPalaniswami #NirmalaSitharaman
    தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்கப்படும் என்றும், இதற்காக ஒற்றை சாளர முறை கடைபிடிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #GIM2019 #EdappadiPalaniswami
    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    2015-ம் ஆண்டு நடைபெற்ற மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது, அதில் 98 திட்டங்கள் ஒப்பந்தம் போடப்பட்டன. 3 முதல் 7 வருடங்கள் தொழில் நிறுவனங்கள் வருகைக்காக நிர்ணயிக்கப்பட்டன, அதன் மூலம் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு கிடைத்தன. முதல் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்கள், உற்பத்தியை தொடங்குவதற்கான செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்க ஒற்றை சாளர முறை கடைபிடிக்கப்படுகிறது.

    இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலம் தமிழகம். சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகம், மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. உள்கட்டமைப்பிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது, தமிழகத்தில் 48% பேர் உயர்கல்வி பயின்றுள்ளனர்.


    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் உலகத் தரத்திலான போக்குவரத்து வசதியை உறுதிப்படுத்தி உள்ளது. சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி ஆகிய துறைகளில் சமூக நல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #GIM2019 #EdappadiPalaniswami
    தரமற்ற 490 குடிநீர் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே கூறியுள்ளார். #AshwiniChoubey
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே, தரமற்ற குடிநீர் நிறுவனங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசும்போது, கடந்த ஆண்டு 1,123 குடிநீர் நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்கள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



    அதில், 490 நிறுவனங்களின் குடிநீர் தரமற்றவை என கண்டறியப்பட்டது. அந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். #AshwiniChoubey
    நீரா பானம் உற்பத்தி செய்ய 3 நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிமங்களை வழங்கினார்.
    சென்னை:

    தென்னை சாகுபடி பரப்பில் அகில இந்திய அளவில், தமிழ்நாடு முதலிடத்திலும், தென்னை உற்பத்தியில் 2-ம் இடத்தையும் வகிப்பதோடு, லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு தென்னை வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.

    தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும், அவர்களது வருமானத்தை உயர்த்தவும், தமிழ்நாடு அரசு தென்னை மரத்தின் மலராத தென்னம்பாளையில் இருந்து ‘நீரா’ பானத்தை இறக்கவும், அதனை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய உதவிடும் வகையில், ‘தமிழ்நாடு நீரா விதிகள், 2017’-ஐ வடிவமைத்து, அறிவிக்கை செய்துள்ளது.

    நீரா பானத்தில் இருந்து நீரா வெல்லம், நீரா பாகு, நீரா சர்க்கரை, நீரா சாக்லேட்டுகள், நீரா கூழ், நீரா கேக் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பை பெருக்கவும், விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.



    மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்திடம் பதிவு செய்த தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மட்டுமே நீரா பானத்தையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படுவர்.

    இதன் தொடக்கமாக, கோவை மாவட்டத்தில் உள்ள விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், கோவை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களுக்கு, நீரா பானம் உற்பத்தி செய்யவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உரிமங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    மேலும், தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களில் உள்ள விவசாயிகளுக்கு நீரா வடிப்பது தொடர்பாகவும், நீரா பானத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு பயிற்சிகள் வழங்கும். தமிழ்நாடு அரசு குளிர்பதன அலகுகள், பிற எந்திரங்கள் அமைக்கவும், நீரா பானம் மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யவும் உதவிபுரியும்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, இரா.துரைக்கண்ணு, டாக்டர் சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தென்னை வளர்ச்சி வாரியத்தின் உயர் அதிகாரி டி.பால சுதாஹரி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 
    ×