search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Justice UU Lalit"

    • 2‘ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ.யின் சிறப்பு வக்கீலாக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.
    • யு.யு.லலித் நவம்பர் 8-ந்தேதி ஓய்வு பெறுவார்.

    புதுடெல்லி :

    சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி பதவி ஏற்றவர் என்.வி.ரமணா. இவர் வரும் 26-ந் தேதி பணி நிறைவு செய்கிறார். இவர் பணி ஓய்வு பெறுவதால் அடுத்த தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித்தை நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று பரிந்துரை செய்தார். இதற்கான கடிதத்தை அவர் மத்திய அரசிடம் வழங்கி உள்ளார்.

    புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுகிற யு.யு.லலித், 27-ந் தேதி பதவி ஏற்பார்.

    அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கிற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

    ஆனால் இவர் 3 மாதங்களுக்கும் குறைவாகவே பதவியில் இருப்பார். நவம்பர் 8-ந் தேதி அவர் ஓய்வு பெறுவார்.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள யு.யு.லலித் 1957-ம் ஆண்டு, நவம்பர் 9-ந் தேதி பிறந்தவர். 1985-ம் ஆண்டு வரை மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். 1986-ம் ஆண்டு டெல்லியில் வக்கீல் தொழிலைத் தொடங்கினார். 2004-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீல் அங்கீகாரம் பெற்றார்.

    நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2'ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ.யின் சிறப்பு வக்கீலாக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.

    சுப்ரீம் கோர்ட்டு சட்ட உதவி குழுவின் உறுப்பினராக இரு முறை பதவி வகித்துள்ளார்.

    2014-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

    'முத்தலாக்' சொல்லி முஸ்லிம்கள் விவாகரத்து செய்யும் முறை செல்லாது என தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அமர்வில் நீதிபதி யு.யு.லலித்தும் அங்கம் வகித்திருந்தார்.

    இவரது தலைமையிலான அமர்வுதான், கேரளாவில் உள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க பத்மநாபசாமி கோவில் நிர்வாக உரிமை, திருவிதாங்கூர் முன்னாள் அரச குடும்பத்துக்கு உண்டு என்று தீர்ப்பு வழங்கியது.

    குழந்தைகளின் உடலைத் தவறான நோக்கத்துடன் தொடுவதும், உடல்ரீதியான எந்தவொரு செயலில் ஈடுபடுவதும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவு 7-ன்கீழ் பாலியல் வன்கொடுமைதான் என தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு அமர்வு நீதிபதி யு.யு.லலித் அமர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

    ×