search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBI files chargesheet"

    குட்கா ஊழல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. #GutkaScam
    புதுடெல்லி:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அனுமதித்ததாகவும், இதற்காக கோடிக்கணக்கான பணம் லஞ்சம் பெற்றதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.

    இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 26-ந் தேதி வழங்கிய தீர்ப்பில் குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

    சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தமிழக அரசு சுகாதாரத்துறை அதிகாரி சிவகுமார் என்பவர் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் சிவகுமார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி தனது வாதத்தில் கூறியதாவது:-

    மனுதாரர் எந்தவகையிலும் குற்றவாளி கிடையாது. அவரை விசாரிக்காமலேயே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, அந்த உத்தரவு சட்டவிரோதமானது.

    மேலும் ஏற்கனவே தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு எதிராக குட்கா விவகாரத்தை சம்பந்தப்படுத்தி அவருடைய பதவி உயர்வுக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சு, குட்கா விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை குழுவை அமைத்து விசாரணை செய்வதால் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

    எனவே, சென்னை ஐகோர்ட்டின் தற்போதைய இந்த தீர்ப்பு டிவிஷன் பெஞ்சு பிறப்பித்த தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது. எனவே, அந்த தீர்ப்பை ரத்து செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தரப்பில் ஆஜரான வக்கீல் பி.வில்சன் தனது வாதத்தில் கூறியதாவது:-

    இது ஒரு மாநிலத்தின் அமைச்சர், மூத்த அதிகாரிகள் தொடர்புடைய வழக்கு. இந்த வழக்கில் ஆந்திரபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கும் தொடர்பு உள்ளது. மாநில அரசு அதிகாரிகள் மட்டுமின்றி மத்திய அரசு அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.

    வருமான வரித்துறை அளித்த புகாரின் அடிப்படையில் அமைச்சர், டி.ஜி.பி. ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த கோப்பே காணவில்லை என்று கூறுகிறார்கள். இதில் கூட்டு சதி உள்ளது.

    இந்த வழக்கின் மனுதாரர் ஒரு சாதாரண அரசு அதிகாரி. ஆனால் அவருடைய வழக்கை வாதாடுவதற்கு முன்னாள் அட்டார்னி ஜெனரலை நியமிப்பதற்கான வசதி அவருக்கு எங்கிருந்து வந்தது என்பதை எல்லாம் பார்க்கவேண்டும். எனவே, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. எனவே, சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.  #GutkaScam
    ×