search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athikadavu- Avinasi project"

    • 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
    • சோலார் ஆற்றலில் இயங்கும் சென்சார் அவுட்லெட் சிஸ்டம் எனப்படும் உபகரணங்களும் பொருத்தப்பட்டு வருகின்றன.

    அவிநாசி :

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது. இதில் 32 பொதுப்பணித்துறை குளம், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்டு 42 குளங்கள், கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 971 குட்டைகள் என 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.தேர்வு செய்யப்பட்டுள்ள குளம், குட்டைகளில் சோலார் ஆற்றலில் இயங்கும் சென்சார் அவுட்லெட் சிஸ்டம் எனப்படும் உபகரணங்களும் பொருத்தப்பட்டு வருகின்றன.

    மொத்தமுள்ள 1,045 குளம் குட்டைகளில் 947 குளம், குட்டைகளில் இந்த உபகரணம் பொருத்தப்பட்டு விட்டது.இதன் மூலம் ஒரே இடத்தில் இருந்தபடியே குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்பட்ட தண்ணீரின் அளவு உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள முடியும். திட்டப்பணி 95 சதவீதம் முடிந்துள்ள நிலையில், நீர் செறிவூட்டப்பட வேண்டிய குளம், குட்டைகளை தூர்வாருவதுடன் அதில் செறிவூட்டப்படும் தண்ணீரை நிலத்தடிக்குள் செலுத்தும் வகையில் உறிஞ்சுக்குழி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் கூறியதாவது:-அத்திக்கடவு நீர் செறிவூட்டப்பட உள்ள பெரும்பாலான குளம், குட்டைகள் புதர்மண்டிக் கிடக்கின்றன. குளம், குட்டைகளில் நிரம்பும் தண்ணீர், வெயில் காலங்களில் விரைவில் ஆவியாகிவிடும் என்பதால் அக்குளம், குட்டைகளை தூர்வாரி தேங்கும் நீரை நிலத்தடிக்குள் செலுத்தும் வகையில் உறிஞ்சு குழிகளை அமைக்க வேண்டும்.அந்தந்த கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குளம், குட்டைகளில், 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் இத்தகைய பணிகளை மேற்கொண்டால், செறிவூட்டப்படும் தண்ணீர் நிலத்தடியை சென்றடையும்.குறைந்தபட்சம் பொதுப்பணித்துறை குளங்களிலாவது இப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 2003ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • 6 நீர் மேலாண்மை திட்டங்கள் பரிந்துரைக்கு எடுக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    மக்களின் சமூக மேம்பாட்டுக்கு பயன்தரும் வகையில், நாடு முழுக்க செயல்பட்டு வரும் தனி நபர்கள், பொது மற்றும் அரசுத்துறை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் அவரவர் துறை சார்ந்து சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஸ்கோச் என்ற அமைப்பு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

    கடந்த 2003ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. பல துறைகளை சேர்ந்த வல்லுனர்களை தேர்வாளர்களாக கொண்டுள்ள இந்த விருதுக்குழு தற்போது சிறந்த நீர் மேலாண்மை திட்டத்தை தேர்வு செய்து வருகிறது. இதற்கான போட்டி கடந்த 12ந் தேதி துவங்கியது. தமிழக அளவில் 6 நீர் மேலாண்மை திட்டங்கள் பரிந்துரைக்கு எடுக்கப்பட்டுள்ளது.இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி, 1,752 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டமும் இடம் பிடித்துள்ளது.

    மேலும் தாமிரபரணி- நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு திட்டம், மேட்டூர் - சரபங்கா நீரேற்று திட்டம்,திருச்சி முக்கொம்பு கதவணை திட்டம், நாகபட்டினம், ஆதனூர் -குமாரமங்கலம் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் திட்டம், கரூர் அருகே காவிரியாற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களும் போட்டிக்கான பரிந்துரை பட்டியலில் உள்ளன.முதற்கட்டமாக இத்திட்டங்கள் சார்ந்த விரிவான அறிக்கையை நீர்வளத்துறை அதிகாரிகள், விருது கமிட்டியிடம் சமர்பித்துள்ளனர். இரண்டாம் கட்டமாக இத்திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவை அறிந்துகொள்ளும் வகையில் இணைய வழி ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது.இன்று வரை ஓட்டளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
    • கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம், மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு சென்றார். அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் மத்தியில் அவர் பேசியதாவது:

    கடந்த சட்டமன்ற தேர்தலில் நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து, தி.மு.க. ஆட்சியை பிடித்தது. ஆனால் பதவி ஏற்ற 14 மாதங்கள் ஆகியும், கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. குடும்ப தலைவிகளுக்கு, மாதம் தோறும் ரூ.1,000 வழங்குவோம் என்றதை இன்றளவும் செயல்படுத்த வில்லை. சமையல் எரிவாயு விலையை குறைப்போம் என்பதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

    அத்திக்கடவு -அவினாசி திட்டம் நியாயப்படி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பே நிறைவேறி இருக்க வேண்டும். ஆனால் வேண்டும் என்றே, அந்த திட்டத்தை இன்றளவும் நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு காலம் கடத்தி வருகிறது. பெருந்துறை தொகுதியின் தாகம் தீர்க்கும் திட்டமான கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டமும், இன்றுவரை மக்களின் பயன்பாட்டுக்கு வந்து சேரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    • அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் 2019 டிசம்பா் மாதம் தொடங்கப்பட்டது.
    • தி.மு.க. ஆட்சியில் இப்பணிகள் தொய்வு பெற்று, 3.5 சதவீத பணிகள் நிலுவையில் உள்ளது.

    அவிநாசி :

    அத்திக்கடவு திட்ட போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் 2019 டிசம்பா் மாதம் தொடங்கப்பட்டது. 2021 ஜனவரியில் நிறைவு பெற வேண்டிய நிலையில் 96.5 சதவீத பணிகள் மட்டும் நிறைவு பெற்றுள்ளன. தி.மு.க. ஆட்சியில் இப்பணிகள் தொய்வு பெற்று, 3.5 சதவீத பணிகள் நிலுவையில் உள்ளது. வரும் பருவ காலத்துக்குள் திட்டம் நிறைவேற்றப்பட்டால் உரிய பயனடையலாம். இல்லாவிட்டால் வறட்சியை சந்திக்கக் கூடும்.

    போதுமான நிதியும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் வெறும் 4 கி.மீ தொலைவுக்கு முள்ளம்பட்டி, நல்லகவுண்டம்பாளையம், காளிங்கராயன்பாளையம் நில உரிமையாளா்களுக்கு நிதி வழங்க அரசாணை வெளியிடாததால் கடந்த 3 மாத காலமாக பணி தடைபட்டு நிற்கிறது. மேலும் விடுபட்டுள்ள 800 குட்டைகளை விரைவில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே, நில உரிமையாளா்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகைக்கான அரசாணையை வெளியிடாவிட்டால் ஆகஸ்ட் 12ந்தேதி அவிநாசியில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முடிவு செய்துள்ளோம் என்றாா்.

    • திட்டப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
    • அரசின் சார்பில் இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

    அவினாசி:

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி, 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை குளங்கள், 42 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 971 குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையிலான அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது.

    மாநில அரசின் 1,652 கோடி ரூபாய் செலவில், கடந்த 2019 டிசம்பர் 25ல் திட்டப்பணி துவங்கியது. 6 நீரேற்ற நிலையங்கள், குளம், குட்டைகளுக்கு குழாய் பொருத்தும் பணி உட்பட 94 சதவீத பணிகள் இதுவரை நடந்து முடிந்துள்ளது என திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இத்திட்டத்துக்கென திட்டம் சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு அரசின் சார்பில் இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சில பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டிய நிலையில் அந்த தொகையை ஒதுக்க அரசின் சார்பில் நிர்வாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் திட்டப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

    இது குறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியம், குருசாமி உள்ளிட்டோர் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து, மனு வழங்கியுள்ளனர்.அதில், கூறியிருப்பதாவது:-

    அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தி வரும் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இத்திட்டத்திற்கு குழாய் பதிக்க நிலம் வழங்கிய விவசாயிகள் சிலருக்கு, இழப்பீடு தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.எனவே அதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட்டு இழப்பீடு வழங்கவும், தற்போதைய பருவமழை காலத்திற்குள் பணியை முடித்து திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    ×