search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrest"

    • கோபமடைந்த சாபி, கணவருக்கு பாடம் கற்பிக்க தனது சகோதரர்களை அழைத்ததாக கூறப்படுகிறது.
    • சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவருக்கு திருமணமாகி சாபி என்ற மனைவி உள்ளார். மிஸ்ராவின் தங்கை திருமணம் வருகிற 26-ந்தேதி நடைபெற இருந்தது. இதையடுத்து தங்கையின் திருமணத்திற்கு தங்க மோதிரம் மற்றும் டி.வி., ஒன்றை பரிசாக வாங்கி கொடுக்க சந்திர பிரகாஷ் முடிவு செய்தார். இதனை அறிந்த அவரது மனைவி கோபமடைந்தார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது.

    இதனால் கோபமடைந்த சாபி, கணவருக்கு பாடம் கற்பிக்க தனது சகோதரர்களை அழைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் வந்து நடத்திய பேச்சுவார்த்தை முற்றி தகராறாக மாறியுள்ளது. இதில் சந்திர பிரகாஷை சாபியின் சகோதரர்கள் சுமார் 1 மணிநேரமாக தாக்கியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திர பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக சந்திர பிரகாஷின் மனைவி சாபி உள்பட 5 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போன், பணம் மற்றும் தங்க செயின் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
    • கைது செய்யப்பட்ட கலையரசன் பந்தல் கட்டும் தொழிலாளி எனவும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    வள்ளியூர்:

    திருவாரூர் மாவட்டம் சேர்ந்தமங்கலத்தை சேர்ந்தவர் ஞானவேல் (வயது23). இவர் சென்னையில் வெல்டராக பணிபுரிந்து வருகின்றார்.

    இவரும் நெல்லை மாவட்டம் டோனாவூரை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் செல்போனில் பேசி வந்தனர்.

    இந்நிலையில் தேர்தல் முடிந்த மறுநாள் தனது காதலன் ஞானவேலை வள்ளியூரில் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வருமாறு அந்த பெண் அழைத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து ஞானவேல் தனது நண்பர்கள் 2 பேருடன் வள்ளியூருக்கு வந்து அந்த பெண்ணை சந்தித்ததோடு அவருடன் சாமி கும்பிட்டு விட்டு அருகில் உள்ள கல்மண்டபத்தில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அங்கு வந்த 3 பேர் காதலர்களை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போன், பணம் மற்றும் தங்க செயின் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ஞானவேல் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டியதாக வள்ளியூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மகன் கலையரசன், அதே பகுதியை சேர்ந்த குட்டி மற்றும் கால் கரையை சேர்ந்த கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதில் கைது செய்யப்பட்ட கலையரசன் பந்தல் கட்டும் தொழிலாளி எனவும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி காதலி மல்லிகா பேகத்திடம் கிருஷ்ணன் தகராறு செய்தார்.
    • கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணன். இவரது காதலி மல்லிகா பேகம் ரஹமான்சா அப்துல் ரஹ்மான். ஏற்கனவே திருமணமான கிருஷ்ணன், மல்லிகா பேகத்தையும் காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி காதலி மல்லிகா பேகத்திடம் கிருஷ்ணன் தகராறு செய்தார்.

    வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி காதலியை சரமாரியாக தாக்கினார். மதுபோதையில் இருந்த கிருஷ்ணன் காதலியின் தலையை சுவரில் மோத வைத்தும், முகத்தில் அறைந்தும், விலா எலும்பில் குத்தியும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மல்லிகா பேகம் இறந்தார். இதையடுத்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த வாரம் கோர்ட்டில் விசாரணையின்போது கிருஷ்ணன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் காதலியை கொன்ற வழக்கில் கிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    • 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கலைமணி, தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • வழக்கில் தலைமறைவாகி உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கரின் மனைவி சங்கீதா. இவர் ராமாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவியாக உள்ளார். அதே ஊரில் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மகன் கலைமணி. இவர் மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இடத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றிக்கொண்டதாகவும், இதனை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அங்கு ஆஸ்பத்திரி கட்ட சங்கீதா முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஜெய்சங்கர்-சங்கீதா தம்பதியரின் மகள் ஜெயப்பிரியா, கடந்த 19-ந் தேதி வாக்களித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த கலைமணி தரப்பினர், ஜெயப்பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல் அறிந்த ஜெய்சங்கர், அவரது அண்ணன் ஜெயக்குமார், அவரது மனைவி கோமதி, மகன்கள் ஜெயப்பிரகாஷ், சதீஷ்குமார் ஆகியோர் கலைமணி தரப்பினரை தட்டிக்கேட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த கலைமணி, அவரது மனைவி தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் உள்ளிட்ட 10 பேர் ஜெய்சங்கர் தரப்பினரை உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே கோமதி துடிதுடித்து இறந்து போனார். படுகாயமடைந்த மற்றவர்களை அப்பகுதியினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார், கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கலைமணி, தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இளம்பெண் ஜெயப்பிரியா, பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால் அவரிடம் கைது செய்யப்பட்டவர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும், மேலும், இதனை தட்டிக்கேட்ட அவரது உறவினர்களும் பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் கோமதி இறந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இத்தகவலை சமூக வளைதலங்களில் பரப்பியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் "வட இந்தியர்" என்ற பெயரில் ரோஷன் என்பவர் இதனை வெளியிட்டது தெரியவந்தது. மேலும், இதனை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரி பிரபாகரன் ஷேர் செய்ததும், பிரபல யூடியூபர் சண்முகம் இது குறித்து கருத்து வெளியிட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறுகையில், இது போன்று தவறான கருத்துக்களை பதிவிடுபவர்கள், பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தார்.

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால், கடலூர் மாவட்டத்தில் பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் வடமாநில சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே ஒருவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்.பி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் ஏட்டு ராம்குமார் சேதுபதி மற்றும் போலீசார் போடி புதூர் ரெயில்வே லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு மகன் கார்த்திக் (வயது 42) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    இதில் உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர் எதற்காக இதனை பதுக்கி வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயமடைந்த டிரைவர் உள்பட 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • பஸ்சில் புகுந்து டிரைவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பஸ் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருவாய்ப்பாடியை சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இந்த பஸ் கும்பகோணம் பாலக்கரை அருகே வந்து கொண்டிருந்த போது பஸ்சுக்கு முன்பு சிலர் தகராறில் ஈடுபட்டிருந்தனர். இதனை கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது திடீரென பஸ்சை ஏன் நிறுத்தி இருக்கிறாய்? எனக்கூறி 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பஸ்சின் உள்ளே சென்று டிரைவர் ரமேஷை சரமாரியாக தாக்கினர். இதில் ரமேஷின் மூக்கு, கண், முகம் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சை விட்டு வெளியே ஓடினர்.

    அந்த கும்பல் டிரைவரை எட்டி உதைத்து கீழே தள்ளியதுடன், மேலும், 2 பேரையும் தாக்கினர். வலி தாங்காமல் டிரைவர் கூச்சலிடுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் டிரைவரை மீட்க சென்றனர். அப்போது 2 பேர் பொதுமக்களிடம் சிக்கினர்.

    தகவல் அறிந்து வந்த கும்பகோணம் நகர கிழக்கு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்த சுதர்சன், ஜனார்த்தனன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரின் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    காயமடைந்த டிரைவர் உள்பட 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பஸ்சில் புகுந்து டிரைவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
    • தேர்தல் துறை அதிகாரி சண்முகவேல் தலைமையிலான குழுவினர் சென்று பைக்கில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகர் 11-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் புரந்தரதாசன். இவர் அரசியல் இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    3 மாடி கொண்ட வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் இவரது வீட்டுக்குச் சென்ற தேர்தல் பறக்கும் படையினர் அங்கு அதிரடியாக சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு பிடித்தனர். இது குறித்து அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் ஒரு பெண் அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் புரந்தரதாசன் வீட்டில் இருந்த ரூ. 64 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த தொகை கடந்த ஆண்டு நிலம் விற்பனை செய்ததின் மூலம் கிடைத்ததாக அங்கிருந்த புரந்தரதாசன் தெரிவித்தார். மேலும் அதற்கான சில ஆவணங்களையும் காண்பித்தார்.

    ஆனால் அதனை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். ரூ.10 லட்சத்துக்கு மேல் பதுக்கி வைத்திருக்க கூடாது என்று கூறி பணம் எண்ணும் எந்திரத்தை கொண்டு வந்து பணத்தை எண்ணினர். பின்னர் ரூ. 64 லட்சத்து 60 ஆயிரத்தை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தேர்தல் துறை அதிகாரி சண்முகவேல் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று பைக்கில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனையிட்டனர்.

    அவர்கள் 500 ரூபாய் நோட்டுகள் ரொக்கமாக ரூ.25 ஆயிரம் வைத்திருந்தனர். அவர்களை லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் மற்றும் தருமன் என்பது தெரியவந்தது. இருவரும் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை தேர்தல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோல் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அரசியல் கட்சியை சேர்ந்த மேலும் 2 பேரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சதீஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • 3 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா ஒன்னப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 23). இவர் பூனப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடன் மதுரை மாவட்டம் சாலைபுதூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரும் அந்த நிறுவனத்தில் பேக்கேஜ் பிரிவில் வேலை செய்து வந்தனர்.

    அஜித்குமாரும் அவரது நண்பர்களும் பேளகொண்டப்பள்ளி பகுதியில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி சதீசிற்கும், அஜித்குமாருக்கு நிறுவன வளாகத்தில் தகராறு ஏற்பட்டது.

    இதனால் அஜித்குமார் வெளியே இருந்த தனது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அஜித்குமாரின் நண்பர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் அந்த நிறுவன வளாகத்திற்கு வந்தனர்.

    அங்கு அவர்கள் சதீஷ் குமாரை சரமாரியாக தாக்கி கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து சதீஷ்குமாரின் தந்தை முனிராஜ் மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரணை நடத்தி, சதீஷ்குமாரை குத்தியதாக மதுரை சாலைபுதூர் அஜித்குமார் (27) பெத்தனபுரம் சச்சின் (19), மத்திகிரி பேளகொண்டப்பள்ளி சுனில்குமார் (26), திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி அஜித்குமார் (24), மதுரை விலவன்குடி அஜய் (22), பொம்மண்டப்பள்ளி வினய் (24), மதுரை முத்துராமலிக தேவர் தெரு அருண்பாண்டி (32), மதுரை விளங்காமுடி வீரபாண்டிகுமார் (20), கடலூர் மாவட்டம் விருதாசலம் பிரகாஷ்ராஜ் (24) ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், கலகம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனது. இவர்களில் அருண்பாண்டி, வீரபாண்டி குமார், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 6 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • குட்கா, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 16-ந்தேதி முதல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 8 ரவுடிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    மேலும் திருச்சி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி.வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 22.3 கிராம் கஞ்சா, குட்கா பொருட்கள் 136.6 கிலோ கிராம், மதுபான வகைகள் 276.2 லிட்டர், கள்-346லிட்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பல்வேறு கட்சியினர் மீது 11 தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா, குட்கா, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் வாகன விதிமீறல்கள் தொடர்பாக 12,723 வழக்குகளும் ரூ.1,23,64,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மேற்பார்வையில், நிலையான கண்காணிப்பு குழு-19, பறக்கும்படை குழு-19, சோதனை சாவடிகள்-15 அமைக்கபட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட எஸ்.பி வருண்குமார், மேற்பார்வையில் 3 கூடுதல் எஸ்பிக்கள், 11 துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், 37 இன்ஸ்பெக்டர்கள், 253 எஸ்.ஐ, 1292துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.

    மேலும் திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் குறித்த தகவல்களை திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் 9487464651 என்ற எண்ணில் 24மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கு வங்கத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
    • ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 3 பேர் கைது.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்படைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களை மேற்கு வங்கத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

    குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.

    முன்னதாக, வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவாடங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஜப் என்பவர், கடந்த மார்ச் 27ம் தேதி் கைது செய்யப்பட்டார்.

    ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் என்ஐஏ இதுவரை 3 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • 50 கிலோ அளவிலான 452 மூட்டைகளில் 22 ஆயிரத்து 600 கிலோ ரேசன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது.
    • அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தருமபுரி:

    உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காவேரிப்பட்டணம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டனர்.

    அதில், 50 கிலோ அளவிலான 452 மூட்டைகளில் 22 ஆயிரத்து 600 கிலோ ரேசன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது. அதை தொடர்ந்து லாரிக்கு பாதுகாப்பாக கார் வந்ததும் தெரிந்தது. இதையடுத்து லாரி, கார்களில் இருந்த விருதுநகர் மாவட்டம், வெள்ளியம்பலத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 48), தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த சேட்டு (28), ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சுதாகர் (34), கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை நாகராஜ் (58), சேலம் மாவட்டம், ஓமலூர் ராமச்சந்திரன் (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ரேசன் அரிசியை வாங்கி, கர்நாடக மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றது தெரிந்தது. அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ரேசன் அரிசி, லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    • பாலியல் புகாரில் சிக்கியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
    • தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரன் 4 நாட்களுக்கு பிறகு கைது.

    பழனி அருகே புஷ்பத்தூரில் லை உணவு திட்ட பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், முன்னாள் பாஜக நிர்வாகி மகுடீஸ்வரன் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    புஷ்பத்தூர் ஊராட்சி தலைவரின் கணவரும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான மகுடீஸ்வரன் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டது.

    தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரன் 4 நாட்களுக்கு பிறகு கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மகுடீஸ்வரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட பாஜக செயலாளராக இருந்த மகுடீஸ்வரன் பாலியல் புகாரில் சிக்கியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×