search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anurag Thakur"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளைஞர்கள் இவரை பார்த்து செஸ் விளையாட ஆர்வம் பெறுவர்.
    • இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடத்துவதற்கு 100 ஆண்டுகள் ஆகி விட்டன.

    மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடம் பிடித்து அசத்திய பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். பிரக்ஞானந்தாவுடன் அவரது பெற்றோர்களும் சென்றிருந்தனர்.

    பிரக்ஞானந்தாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர்,"நான் அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்தியாவை பெருமையடைய செய்திருக்கிறார். 16 வயதிலேயே மற்றவர்களால் செய்ய முடியாததை அவர் செய்து காட்டியிருக்கிறார். பல்வேறு இளைஞர்கள் இவரை பார்த்து செஸ் விளையாட ஆர்வம் பெறுவர். செஸ் போட்டி இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடத்துவதற்கு 100 ஆண்டுகள் ஆகி விட்டன. தாமதம் ஆகிவிட்ட நிலையிலும், அது வெற்றிகரமான ஒன்றாக அமைந்தது," என்று தெரிவித்தார்.

     

    இதே நிகழ்வில் பேசிய பிரக்ஞானந்தா, "இத்தகைய ஆதரவு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், இவை எங்களை மேலும் அதிக கடினமாக உழைத்து எதிர்கால போட்டிகளில் சிறப்பாக விளையாடி, நாட்டுக்கு பெருமை பெற்றுக் கொடுக்க ஊக்குவிக்கும்," என்று தெரிவித்தார்.

    முன்னதாக பிரக்ஞானந்தாவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து, வாழ்த்து தெரிவித்தனர்.

    • இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
    • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் திரில்லிங்கான ஆட்டத்தைப் பார்த்தேன்! இடைவேளை நேரத்தில் 1-3 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த மென் இன் ப்ளூ, 4-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-3 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே வியப்பாக இருந்தது. அது போட்டியின் கடைசி நேரம் வரை எங்களை இருக்கைகளின் நுனியில் வைத்திருந்தது. இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • எந்த கட்சி ஆட்சியில் உள்ளது என்பதை பொறுத்து கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது.
    • விவாதத்தில் இருந்து தப்பிக்க என்ன காரணம்? என எதிர்க்கட்சிகளுக்கு அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பினார்.

    மணிப்பூரில் மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல், கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின்போது நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியாவில் 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து சென்றது பதிவாகியிருந்தது. நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து மணிப்பூரின் ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், பிரதமர் பதில் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளும் பாஜக தரப்பில் தொடர்ந்து பதில் அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில், மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியிருப்பதாவது:

    காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு முதல்வர் அசோக் கெலாட் ராஜினாமா செய்ய வேண்டும். கற்பழிப்பு வழக்குகளில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஒரு வருடத்தில் 22% கற்பழிப்பு சம்பவங்கள் ராஜஸ்தானில் நடந்துள்ளன.

    பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றமும் குற்றம்தான். எந்த கட்சி ஆட்சியில் உள்ளது என்பதை பொறுத்து கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. இது போன்ற குற்றங்கள் சமீபத்தில் பதிவாகியுள்ள மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் எதிர்க்கட்சிகள் தங்கள் குழுவினரை அனுப்புவீர்களா?

    மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் விவாதத்தில் இருந்து ஒதுங்கி ஓடுகின்றன.

    ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியில் இருந்தபோது மணிப்பூரில் 6 மாத கால வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்தன.

    ஆனால் நாங்கள் மணிப்பூரில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். உள்துறை மந்திரி 4 நாட்கள் அங்கு இருந்தார்.

    விவாதத்தில் இருந்து தப்பிக்க என்ன காரணம்? ஏனென்றால், எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவர் (ராகுல் காந்தி) தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், பாராளுமன்றம் செயல்படுவதை நீங்கள் விரும்பவில்லை. முதலமைச்சர்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தப்பி ஓட முடியாது.

    ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து அமைச்சர் சாந்தி தரிவாலின் கருத்து தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்? மேற்கு வங்காளத்தில் நடக்கும் வன்முறையைப் பார்த்து அவர்கள் ஏன் வாயை திறக்கவில்லை? ஹவுரா மற்றும் மால்டா ஆகிய இரு பகுதிகளிலும் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மம்தா பானர்ஜியின் தாய் அன்பு எங்கே போனது?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா, லெபனான் அணிகள் மோதின.
    • இதில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என இந்தியா வென்றது.

    பெங்களூரு:

    14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, லெபனான் அணிகள் மோதின.

    போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

    கூடுதல் நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா தனது முதல் 4 வாய்ப்புகளை கோலாக்கியது. ஆனால் லெபனான் அணி 4 வாய்ப்புகளில் 2-ஐ வீணடித்தது. இதன்மூலம் இந்திய அணி 4 - 2 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    வரும் 4 ம் தேதி நடக்க உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - குவைத் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சந்தித்தனர்.
    • ஜூன் 15-ம் தேதி வரை எவ்வித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் என சாக்ஷி மாலிக் கூறினார்.

    புதுடெல்லி:

    மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை சந்தித்த பிறகு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாசெய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

    டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுகிறது. ஜூன் 15ம் தேதிக்குள் போலீஸ் விசாரணை முடிவடையும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எப்ஐஆர்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி உள்ளோம், அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

    பாலியல் புகாரில் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன் 15-ம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீதான விசாரணை நிறைவு பெறும். ஜூன் 15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும்.

    ஜூன் 15-ம் தேதி வரை எந்தவித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் என கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போராட்டம் காரணமாக பிரிஜ்பூஷன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
    • பிரிஜ்பூஷன் சிங்கின் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.

    புதுடெல்லி:

    பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.

    ஒரு மைனர் உள்பட 7 வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறியுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும், டெல்லி போலீசார் அவரை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினிஷ் போகத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களின் தொடர் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த போராட்டம் காரணமாக பிரிஜ்பூஷன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. அவர் மீதான இரண்டு வழக்குகளில் ஒன்று போக்சோ சட்ட வழக்காகும்.

    இதற்கிடையே மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தனர். இதன் பிறகு பிரிஜ்பூஷன் சிங்கின் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். அவ ரது உதவியாளர்கள், பணியாளர்கள் என 12 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

    இந்நிலையில் மல்யுத்த வீராங்கனையுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் நேற்றிரவு வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. நான் மீண்டும் அவர்களுக்கு இது தொடர்பாக அழைப்பு விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    மத்திய அரசின் இந்த அழைப்பு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாக்ஷி மாலிக் கூறும் போது "மத்திய அரசின் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும். தங்கள் தரப்பில் அனைவருக்கும் சம்மதம் என்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்வோம்" என்றார்.

    இதற்கிடையே மத்திய அரசின் அழைப்பை தொடர்ந்து பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத்தும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

    பிரிஜ்பூஷன் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அனுராக் தாக்கூரிடம் வலியுறுத்தினார்கள்.

    • இந்த வழக்கு விசாரணையில் பாரபட்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
    • மல்யுத்த வீராங்கனைகள் குறிப்பிடும் சம்பவங்கள் 7 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி :

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் தொந்தரவு புகார் கூறும் மல்யுத்த வீராங்கனைகள், அவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள். அந்த போராட்டத்தின் ஒருபகுதியாக அவர்கள் தங்களின் பதக்கங்களை கங்கை நதியில் வீசச் சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா பொருளாதார மாநாட்டின் உரையாடல் நிகழ்வில் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    'மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு நியமித்த குழுவின் அறிக்கையை தொடர்ந்து அவர் மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறது.

    பாரபட்சமற்ற விசாரணைக்கு ஆதரவாகத்தான் அரசு உள்ளது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் உரிய சட்ட நடைமுறைக்குப் பின்பே அது நடக்கும்.

    இந்த வழக்கு விசாரணையில் பாரபட்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. டெல்லி போலீஸ் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். விரைவான விசாரணைக்கு ஆதரவாகவே நாங்கள் உள்ளோம்.

    பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு அமைப்பு, மல்யுத்த சம்மேளன நிர்வாகத்தை கவனிக்க ஒரு குழுவை நியமிக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கேட்டுக்கொண்டது என மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் ஒவ்வொரு கோரிக்கையையும் அரசு ஏற்றது. ஒரு வீராங்கனைக்கு எதிராகவோ அல்லது ஒரு பெண்ணுக்கு எதிராகவோ அராஜகம் நடந்தால், உடனடியாக அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்.

    பிரிஜ் பூஷன் தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் குறிப்பிடும் சம்பவங்கள் 7 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படுகிறது.

    அவருக்கு எதிராக எந்த போலீஸ் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யலாம் என்று மல்யுத்த வீராங்கனைகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள்தான் அரசு தலையிட வேண்டும் என்று கூறினர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ராகுல்காந்தி மன்னிப்பு கேட்டால், பாராளுமன்றம் இயங்கும்.
    • இந்திய ஜனநாயகத்தில் இருந்து காங்கிரஸ்தான் துடைத்து எறியப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனது பாதயாத்திரையில் பேசியபோது, பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றம் சாட்டி இருந்தார்.

    அதன் அடிப்படையில், அந்த பெண்களை பற்றிய விவரங்களை அளிக்குமாறு ராகுல்காந்திக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, அவரது வீட்டுக்கு நேரில் சென்றனர். சில மணி நேரங்களுக்கு பிறகு, ராகுல்காந்தி, காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இந்தநிலையில், இதை சுட்டிக்காட்டி, மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஒரு எம்.பி. என்ற முறையில், பாலியல் வன்முறை பற்றிய தகவல்களை போலீசுக்கு சொல்வது ராகுல்காந்தியின் பொறுப்பு. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் கற்பழிப்பு சம்பவம் நடந்தபோது, கார் அணிவகுப்புடன் அங்கு சென்ற ராகுல்காந்தி, இப்போது டெல்லி போலீசிடம் இருந்து பயந்து ஓடுவது ஏன்?

    என்ன நிர்ப்பந்தம்? பெண்களுக்கு நீதி கிடைப்பதை அவர் விரும்பவில்லையா?

    பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியமானது என்பதால், பாராளுமன்றம் இயங்குவதை நாங்கள் விரும்புகிறோம். ராகுல்காந்தி மன்னிப்பு கேட்டால், பாராளுமன்றம் இயங்கும்.

    இந்தியாவில் இருந்து ஜனநாயகம் துடைத்து எறியப்பட்டதாக லண்டனில் ராகுல்காந்தி பேசினார். ஆனால், உண்மையில், இந்திய ஜனநாயகத்தில் இருந்து காங்கிரஸ்தான் துடைத்து எறியப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அன்னிய மண்ணில் இருந்து இந்தியா பற்றி நீங்கள் பரப்பும் பொய்களை யாரும் நம்ப மாட்டார்கள்.
    • உள்ளூர் பிரச்சினைகளை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றது மூலம் அவரது கட்சி ஏற்கனவே இந்த தவறை செய்துள்ளது.

    புதுடெல்லி :

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகத்தின் கட்டமைப்புகள் மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட உலகின் ஜனநாயக பகுதிகள் அதை கவனிக்கத் தவறிவிட்டன என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். இதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் புகழை ராகுல் காந்தி கெடுத்துவிட்டதாக பா.ஜ.க. வினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளித்து பேசினார். அவர் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு துரோகம் செய்யாதீர்கள் ராகுல் காந்தி. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மீதான ஆட்சேபனைகள், இந்தப் பிரச்சினையை பற்றிய உங்கள் புரிதல் குறைவாக இருப்பதற்கான சான்றாகும். அன்னிய மண்ணில் இருந்து இந்தியா பற்றி நீங்கள் பரப்பும் பொய்களை யாரும் நம்ப மாட்டார்கள்.

    உள்ளூர் பிரச்சினைகளை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றது மூலம் அவரது கட்சி ஏற்கனவே இந்த தவறை செய்துள்ளது. இப்போது இந்தியாவில் தலையிடுமாறு மற்ற நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார். அவர்கள் இன்னும் அடிமைச் சிந்தனையில் இருந்து வெளிவரவில்லை.

    ராகுல் காந்தி தனது தோல்விகளை மறைக்கும் சதியின் ஒரு பகுதியாக அன்னிய மண்ணில் இருந்து இந்தியாவை அவதூறு செய்து வருகிறார்.

    இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.

    • ராகுல்காந்தி எப்போதும் சீனாவைப் பற்றி பேசுகிறார்.
    • இந்திய படைகளை இழிவாக காட்டும் போக்கை காங்கிரஸ் இன்னும் கைவிடவில்லை.

    ஐதராபாத் :

    மத்திய மந்திரி அனுராக் தாக்குர், ஐதராபாத் சென்றார். ஐதராபாத் அருகே கட்டப்பட்டுள்ள சர்வதேச விளையாட்டு மையத்தை திறந்து வைத்தார்.

    அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அனுராக் தாகூர் கூறியதாவது:-

    ராகுல்காந்தி எப்போதும் சீனாவைப் பற்றி பேசுகிறார். ஆனால், அவரது குடும்பத்துக்கு சொந்தமான ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு சீனா அளித்த நன்கொடை பற்றி அவர் எதுவும் பேசுவது இல்லை.

    அந்த நன்கொடை பற்றி கேட்ட கேள்விக்கு அவர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. சீனா நமது எல்லை பகுதியை ஆக்கிரமிக்க முயன்றபோது, அவர் சீன அதிகாரிகளுடன் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதற்கும் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    சீன ஆக்கிரமிப்புக்கு நமது பாதுகாப்பு படைகள் உரிய பதிலடி கொடுக்கும்போது, நமது படைகளை ராகுல்காந்தி இழிவுபடுத்துகிறார்.

    இந்திய படைகள் நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து ராகுல்காந்தியும், அவருடைய கட்சியினரும் சந்தேகம் எழுப்புகிறார்கள். படையினரின் மனஉறுதியை சீர்குலைக்க பார்க்கிறார்கள். இந்திய படைகளை இழிவாக காட்டும் போக்கை காங்கிரஸ் இன்னும் கைவிடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கொட்டும் பனியில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார்.
    • அனுராக் தாகூர் விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஸ்ரீநகர்:

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் காஷ்மீரில் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் விளையாட்டு போட்டிகள் பிப்ரவரி 10-ந்தேதி வரை கடும் பனிப்பொழிவு நிலவும் குல்பர்கில் நடைபெறுகிறது.

    இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 600 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    முன்னதாக போட்டிகளை முன்னிட்டு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கொட்டும் பனியில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார்.

    அனுராக் தாகூர் விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று சைக்கிள் பேரணிகள் நடைபெறுகின்றன.

    புதுடெல்லி:

    உலக சைக்கிள் தினமான இன்று, நாடு முழுவதும்  சைக்கிள் பேரணிகளுக்கு மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    உடல் பருமன், சோம்பல், மன அழுத்தம், பதட்டம், நோய்கள் போன்றவற்றில் மக்கள் இருந்து விடுபடவும், சைக்கிள்  ஒட்டுவதை ஊக்குவிக்கும் வகையிலும் சைக்கிள் பேரணி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் இருந்து இன்று காலை சைக்கிள் பேரணியை மத்திய விளையாட்டு மந்திரி  அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 750 சைக்கிள் வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் மந்திரி அனுராக் தாக்கூர் சைக்கிள் ஓட்டிச்
    சென்றார்.
    முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

    உலக சைக்கிள் தினத்தையொட்டி பிரதமர் மோடியின் செய்தியை அனைவருக்கும் எடுத்துச் செல்ல விரும்புகிறோம். ஃபிட் இந்தியா இயக்கம், கேலோ இந்தியா இயக்கம், தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் ஆரோக்கியமான இந்தியா இயக்கம் அனைத்தையும் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நிறைவேற்ற முடியும். இது காற்று மாசு அளவையும் குறைக்கும்

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 75 இடங்களில் இன்று சைக்கிள் பேரணிகள் நடைபெறுகின்றன.

    இதில் 1,29,000 இளைஞர்கள் பங்கேற்பார்கள் என்றும், இன்று ஒரே நாளில் 9,68,000 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக அவர்கள் சைக்கிள் மூலம் கடக்க உள்ளதாகவும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×