search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adani"

    • காரைக்கால் துறைமுகம் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.9.5 கோடி வீதம் 14 ஆண்டுகளில் மொத்தம் ரூ.133.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
    • புதிய ஒப்பந்தத்தில் புதுவை அரசுக்கு 10 சதவீத ஈவுத்தொகை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 2006-ம் ஆண்டு துறைமுகம் அமைக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    காரைக்கால் துறைமுகத்திற்காக 600 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி தந்தது. துறைமுகத்தின் வருவாயில் ரூ.100-க்கு ரூ.2.6 சதவீதம் அரசுக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.

    மார்க் என்ற தனியார் நிறுவனம் புதுவை அரசுடன் ஒப்பந்தம் செய்து துறைமுகத்தை 2009-ல் தொடங்கியது. கடந்த 14 ஆண்டாக மார்க் நிறுவனம் துறைமுகத்தை நடத்தி வந்தது.

    காரைக்கால் துறைமுகம் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.9.5 கோடி வீதம் 14 ஆண்டுகளில் மொத்தம் ரூ.133.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    தனியாருக்கு துறைமுகத்தை வழங்கும்போதே அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசின் ஈவுத்தொகையை கூடுதலாக பெற வேண்டும் என்றும், அப்பகுதி இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தன.

    இந்த விவகாரம் அவ்வப்போது சட்டசபையிலும் எதிரொலித்து வந்தது. இதனிடையே காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படு வதால் அப்பகுதியில் மக்கள் காற்று மாசுபாடால் பாதிக்கப்படுவதாக புகாரும் எழுந்தது.

    மேலும் காரைக்கால் துறைமுகத்தை இறக்குமதி, ஏற்றுமதியை கண்காணிக்க சரியான அமைப்புகள் இல்லை என்ற குற்றச் சாட்டும் எழுந்தது. காரைக் கால் துறைமுகம் கடத்தல் கேந்திரமாக மாறிவிட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

    இதனிடையே காரைக்கால் மார்க் துறைமுக நிறுவனம் தொழில் நஷ்டம் காரணமாக நலிவடைந்து விட்டதாக அறிவித்தது. இதனால் துறைமுகத்தை விற்பனை செய்ய தொழில் தாவா தீர்ப்பாயத்தை அணுகியது.

    இந்த தீர்ப்பாயம் மார்க் நிறுவனம் வங்கிகளில் பெற்ற கடனை ஈடுசெய்யும் வகையில் துறைமுகத்தை தனியாருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    காரைக்கால் துறைமுகத்தை அதானி நிறுவனம் நடத்துவதற்காக முன்வந்துள்ளது.

    இதற்கான ஒப்பந்தம் விரைவில் போடப்பட உள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தில் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் விதிகளை உருவாக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

    புதிய ஒப்பந்தத்தில் புதுவை அரசுக்கு 10 சதவீத ஈவுத்தொகை வழங்க வேண்டும். காரைக்கால் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் பெரும் பகுதியை வழங்க வேண்டும். காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு ஒரு சதவீத நிதி வழங்க வேண்டும் என்பது உட்பட முக்கிய விதிகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    இந்த விதிமுறைகளோடு புதிய ஒப்பந்தந்தை நிறைவேற்ற தலைமை செயலருக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார்.

    • ஒவ்வொரு வாரமும் ரூ.3000 கோடி இழப்பை அதானி சந்தித்து வருகிறார்.
    • இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி உள்ளார்.

    புதுடெல்லி:

    'ஹுருண் இந்தியா' ஆய்வு நிறுவனம், எம்3எம் மனை வணிக நிறுவனம் ஆகியவை இணைந்து உலக பணக்காரர்கள், இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.

    இதில் அகமதாபாத்தை சேர்ந்த 60 வயதான இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு மார்ச் 15-ந்தேதி நிலவரப்படி ரூ.4.37 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

    2022-23ம் நிதியாண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 60 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதாவது ஒவ்வொரு வாரமும் ரூ.3000 கோடி இழப்பை அதானி சந்தித்து வருகிறார்.

    அதானி நிறுவனம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட தாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதன் காரணமாக அதானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

    அதேநேரத்தில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.6.77 லட்சம் கோடி ஆகும். இவரது சொத்து மதிப்பும் 20 சதவீதம் சரிவை கண்டு உள்ளது.

    கடந்த 2021-2022ம் நிதியாண்டில் சுமார் ரூ.10 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அதானி முதலிடத்தில் இருந்தார். இப்போது அவர் அந்த அந்தஸ்தை இழந்து 2-வது இடத்துக்கு வந்து உள்ளார்.

    இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சீரம் இந்தியா நிறுவன தலைவர் சைரஸ் பூனாவாலா ரூ.2.23 லட்சம் கோடி சொத்துகளுடனும், எச்.சி.எல். நிறுவனர் சிவ் நாடார் ரூ.2.14 லட்சம் கோடி சொத்துகளுடனும், தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ரூ.1.65 லட்சம் கோடி சொத்துகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது இடத்தில் உள்ளார். அதேநேரத்தில் அதானி 23-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 பேரில் இந்தியாவில் இருந்து முகேஷ் அம்பானி மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

    இந்த பட்டியலில் சைரஸ் பூனாவாலா 46-வது இடத் திலும், சிவ் நாடார் 50-வது இடத்திலும், லட்சுமி மிட்டல், எஸ்.பி.ஹிந்துஜா ஆகியோர் 76-வது இடத்திலும் உள்ளனர். திலீப் ஷங்வி 98-வது இடத்திலும், ராதாகிஷன் தமானி 107-வது இடத்திலும், குமார் மங்கலம், உதய் கோட்டக் ஆகியோர் 135-வது இடத்திலும் உள்ளனர்.

    உலக அளவிலான பெரும் பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 5 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. அமெரிக்கா 32 சதவீதத்தை கொண்டுள்ளது. பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கையை பொருத்தவரை சீனா முதலிடத்தில் உள்ளது.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூட்டம் நடந்தது.
    • முன்னதாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இதே பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. இதில் பல்வேறு விவாதங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. சோதனைகளை கண்டித்து பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, கேரள காங்கிரஸ், தேசிய மாநாடு, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), ம.தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட 16 கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் அதானி விவகாரம், மத்திய அரசு என்.ஐ.ஏ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பும் போது 16 கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இதே பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கூட்டம் நடப்பதற்கு முன்பு காங்கிரஸ் எம்.பி.க்கள் சோனியா காந்தி மற்றும் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோரை சந்தித்து இது தொடர்பாக விவாதித்தனர்.

    • சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதியின்மை, வன்முறையைப் பரப்புவதற்கான முயற்சியாகும்.
    • அதானி பிரச்சினையை திசை திருப்பவே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பீகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

    வட மாநிலத் தொழிலாளா்கள் குறித்து வதந்தி பரப்புபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு பாஜக தான் காரணம் என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக துரை வைகோ கூறியதாவது:

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதியின்மை, வன்முறையைப் பரப்புவதற்கான முயற்சியாகும். வதந்திகளைப் பரப்பும் இந்த முயற்சியானது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்குவதற்கும் வட இந்தி பேசும் மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்குமான முயற்சியாகும்.

    வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு பாஜக தான் காரணம். ஆனால் திமுக கூட்டணி கட்சிகள் காரணம் என அண்ணாமலை பேசி வருகிறார். அதானி பிரச்னையை திசை திருப்பவே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார். இவ்வாறு துரை வைகோ கூறினார்.

    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது.
    • 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 33-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்னும் நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ந் தேதி வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதிநிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாகக் காட்டி பங்குச்சந்தையில் ஆதாயத்தைத் தேடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை கிளப்பியது.

    இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்துக்குச் சொந்தமான 7 நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்தன.

    அதானி குழும நிறுவனங்களின் நன்மதிப்பைப் பாதுகாக்கும் நோக்கில் நிலுவையில் இருந்த கடன்களை அந்நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தின. எனினும், ஆய்வறிக்கை வெளியீட்டுக்கு பின்னான கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது. இத்தொகை, இந்தியாவின் 2-ஆவது பெரிய நிறுவனமான டாடாவின் டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்புக்கு ஈடாகும் எனக் கூறப்படுகிறது.

    ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 120 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 3-ம் இடத்தில் அதானி இருந்து வந்தார். ஆனால், குழுமத்தின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சி காரணமாக சுமார் 80 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்து 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 33-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

    இந்தியாவின் மற்றொரு பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, 80 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 10- வது இடத்தில் உள்ளார்.

    • சீலிட்ட உறையில் மத்திய அரசு அளிக்கும் ஆலோசனையை ஏற்க நீதிபதிகள் ஏற்க மறுப்பு
    • இந்த விவகாரத்தில் விவகாரத்தில் வெளிப்படுத்த தன்மை இருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து

    புதுடெல்லி:

    அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் அதானி குழும முறைகேடு குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரிக்கக் கோரி எம்.எல்.சர்மா, பிரசாந்த் பூஷன், காங்கிரசைச் சேர்ந்த ஜெயா தாக்கூர், வழக்கறிஞர் விஷால் திவாரி உள்ளிட்டோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணைக்கு முன்னதாக மத்திய அரசின் சார்பில், இந்த விவகாரத்தை முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க தயாராக இருப்பதாகவும், முதலீட்டாளர்களின் நலனை கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

    இதனை நீதிபதிகள் நிராகரித்ததுடன், மனுதாரர்களின் யோசனையை கேட்டது. இந்த விவகாரத்தில், குறிப்பாக இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் உயர் அதிகாரம் படைத்த குழு விசாரிக்க வேண்டும் என மனுதாரர் விஷால் திவாரி தெரிவித்ததையும், உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் அதானி குழுமம் மீதான அறிக்கை குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்தையும் நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர்.

    9 மத்திய விசாரணை அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதில் தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு எவ்வித குழுவையும் அமைக்க மாட்டோம் என தெளிவுபடுத்தினர். மேலும், ஹிண்டன்பெர்க் அறிக்கையை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று கூறினர்.

    இந்த விவகாரத்தில் வெளிப்படுத்த தன்மை இருக்க வேண்டும் என விரும்புகிறோம். முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீலிட்ட உறையில் மத்திய அரசு அளிக்கும் ஆலோசனையை ஏற்க மாட்டோம். குழுவை நாங்களே ஏற்படுத்துவோம். இந்த விவகாரத்தில் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தோல்வி என கருத முடியாது, என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • நாடு முழுவதும் 'அதானி', 'அதானி', 'அதானி' தான்... அதானி எந்த தொழிலிலும் இறங்குவார், ஆனால் தோல்வியடைய மாட்டார்.. இது எப்படி என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.
    • பாதுகாப்பு துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானிக்கு பல ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து மூன்று நாட்கள் முடங்கிய நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. பாஜக மக்களவை உறுப்பினர் சி.பி.ஜோஷி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டுவந்தார். முன்னதாக, துருக்கி - சிரியா பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்களவை உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர். மக்களவையில் ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சி.பி.ஜோஷி வாசித்துக் கொண்டிருக்கும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் மையத்திற்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, மதியம் 1.30 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.

    இதனையடுத்து தொடங்கிய மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், "இந்திய ஒற்றுமை யாத்திரையின் (பாரத் ஜோடோ யாத்ரா) போது நாங்கள் நாடெங்கிலும் உள்ள மக்களின் குரல்களைக் கேட்டோம், யாத்திரையில் தொடக்கத்தில் சிறிது கடினமாக இருந்தது. அதே நேரத்தில் யாத்திரையின் போது குழந்தைகள், பெண்கள், முதியவர்களிடம் அவர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தோம். ஒற்றுமை யாத்திரையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் குறைகளை கூறினர். அவர்கள் வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று தெரிவித்தனர். அவர்களின் நிலம் பறிக்கப்படுகிறது, பழங்குடியினர் மசோதா பற்றி கேள்வி எழுப்பினர். அக்னிவீர் திட்டம் ராணுவத்தின் மீது திணிக்கப்படுவதாக இளைஞர்கள் தெரிவித்தனர். வேலையில் இருந்து பலர் அகற்றப்பட்டு வருவதாக தெரிவித்தனர். வேலை கிடைக்காதவர்களுக்கு அதற்கான காரணத்தை விளக்க வேண்டி இருந்தது. மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், பின்னர் மீண்டும் சமூகத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், இது வன்முறைக்கு வழிவகுக்கும் என்று ஓய்வு பெற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மக்கள் அக்னிவீர் திட்டத்தைப் பற்றியும் பேசினர், ஆனால் இந்திய இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களை வெளியேறச் சொன்னதைப் பற்றி எங்களிடம் கூறினார். அக்னிவீர் யோஜனா ஆர்.எஸ்.எஸ்., உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்தது என்றும் ராணுவத்தில் இருந்து அல்ல என்றும் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் (ஓய்வு பெற்ற அதிகாரிகள்) தங்கள் மனதில் அக்னிவீர் திட்டம் ராணுவத்தில் இருந்து வரவில்லை என்றும், என்எஸ்ஏ அஜித் தோவல் அந்த திட்டத்தை ராணுவத்தின் மீது வற்புறுத்தினார் என்றும் கூறுகின்றனர். ஜனாதிபதி உரையில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற வார்த்தைகள் இல்லை. தமிழ்நாடு, கேரளா முதல் இமாச்சலப் பிரதேசம் வரை எங்கும் 'அதானி' என்ற ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் 'அதானி', 'அதானி', 'அதானி' தான்... அதானி எந்த தொழிலிலும் இறங்குவார், ஆனால் தோல்வியடைய மாட்டார்.. இது எப்படி என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். பிரதமருக்கும் அதானிக்கு என்ன தொடர்ப்பு..? ஒவ்வொரு தொழிலிலும் எப்படி வெற்றி பெறுகிறார். அதானி இப்போது 8-10 துறைகளில் இருக்கிறார் என்றும், 2014 முதல் 2022 வரை 8 பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லியன் டாலரை எட்டியது எப்படி என்றும் இளைஞர்கள் எங்களிடம் கேள்வி எழுப்பினர். பாதுகாப்பு துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானிக்கு பல ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் முதல் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நாம் நடந்து செல்லும் சாலைகள் வரை அதானி விவகாரம் மட்டுமே பேசப்படுகிறது" என்று அவர் கூறினார்.

    • சென்னையில், எல்.ஐ.சி - எஸ்.பி.ஐ. வங்கி அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 5 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    சென்னை:

    அதானி குழும முறைகேடு தொடர்பாகவும் அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்தது, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் கடன் வழங்கியது தொடர்பாகவும் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் சென்னையில், எல்.ஐ.சி - எஸ்.பி.ஐ. வங்கி அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 5 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவன் அருகே ஜி.பி.சாலையில் உள்ள எல்.ஐ.சி.அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    இதில், பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, மாநில செயலாளர்கள் எஸ்.ரஞ்சித் குமார், அயனாவரம் சரவணன் மற்றும் எஸ்.சி.துறை மாநில துணைத் தலைவர் புரசை வின்சென்ட், பொதுக்குழு உறுப்பினர் உமாபாலன், சூளை ராஜேந்திரன் பங்கேற்றனர்.

    தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அடையாறு டி.துரை தலைமையில், அடையாறு சாஸ்திாி நகர், எஸ்.பி.ஐ வங்கி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    மாநில துணைத் தலைவர்கள் ஆர்.தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் சுபாஷினி, அமிர்தவர்ஷினி, மாநில செயலாளர் அனுசுயா, மாவட்ட துணைத் தலைவர்கள் திருவான்மியூர் பி.எல்.கதிரேசன், தரமணி மணி, தசரதன், விஷ்ணுகுமார், மாணிக்கவாசகம், அனுகிரகாகண்ணன், பக்திசிங், ஸ்டீபன் பங்கேற்றனர்.

    வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில், ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை சிக்னல் அருகே எல்.ஐ.சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், பொதுச்செயலாளர் எஸ்.கே.வாசு, மாநில செயலாளர் மணிப்பால் மற்றும் ஆர்.கே.நகர் சையத், சக்தி, நாகேந்திரன், நஜ்மா ஷெரீப், வீரா செட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில், போரூர் எஸ்.பி.ஐ வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம், பிரபாகரன், இலக்கியப் பிரிவு துணைத் தலைவர் ஆர்.பூங்கொடி, சாய்ராம், சுரேஷ், முரளி, பீர் முகமது, அம்பத்தூர் பிரகாஷ், கராத்தே ரவி, காமராஜ், மணி, ஆறுமுகம், மேஸ்திரி, மோகன் குரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெ.டில்லி பாபு தலைமையில், வியாசர்பாடி அம்பேத்கர் சட்டக் கல்லூரி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, இமயா கக்கன் உள்ளிட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • கடந்த 4 நாட்களில் மட்டும் அதானியின் டோடல் கேஸ் பங்குகள் மட்டும் 50 சதவீதம் சரிந்துள்ளன.
    • எனது முதலீட்டாளர்கள் நலன் மிகவும் முக்கியமானது. மற்ற அனைத்தும் 2-ம் பட்சம்தான்.

    புதுடெல்லி:

    அதானி குழுமத்தின் மீது ஹின்டன்பர்க் நிறுவனம் பல்வேறு முறைகேடு புகார்களை கூறியது.

    இந்த ஆய்வறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 30 சதவீதத்திற்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் அதானியின் சொத்து மதிப்பும், ரூ.3.28 லட்சம் கோடி குறைந்துள்ளது. இதனால் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 15-வது இடத்திற்கு அதானி தள்ளப்பட்டார்.

    கடந்த 4 நாட்களில் மட்டும் அதானியின் டோடல் கேஸ் பங்குகள் மட்டும் 50 சதவீதம் சரிந்துள்ளன. அதானி குழுமத்தின் பங்குகள் உண்மையான நிலையை அறியும் வரை தொடர்ந்து சரிந்து கொண்டேதான் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே அதானி குழுமங்களில் ஒன்றான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் பங்கு சந்தையில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி திரட்டுவதற்காக புதிய பங்குகளை வெளியிட இருந்தது.

    முதலீட்டாளர்களும், பங்குகளை வாங்க விண்ணப்பித்து பணம் செலுத்தியிருந்தனர். இந்நிலையில் பங்கு சந்தையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் புதிய பங்கு விற்பனையை ரத்து செய்வதாக அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கவும், அதானி குழுமம் முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக அதானி என்டர்பிரைசஸ் தலைவர் கவுதம் அதானி வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்கு சந்தை முன் எப்போதும் இல்லாத வகையில் உள்ளது.

    நாளடைவில் ஏற்ற இறக்கமாக இருப்பதால் அசாதாரண சூழ்நிலை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனது முதலீட்டாளர்கள் நலன் மிகவும் முக்கியமானது. மற்ற அனைத்தும் 2-ம் பட்சம்தான்.

    எனவே எந்த ஒரு சாத்தியமான நிதி இழப்புகளில் இருந்தும், அவர்களை பாதுகாக்க எப்.பி.ஓ.(பாலோ ஆன் பப்ளிக் ஆபர்) உடன் செல்ல வேண்டாம் என்று அதானி வாரியம் முடிவு செய்துள்ளது என கூறப் பட்டுள்ளது.

    மேலும் அதானி வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோ அறிக்கையில், ஒரு தொழிலதிபராக எனது பயணத்தில், அனைத்து பங்குதாரர்களிடம் இருந்தும், குறிப்பாக முதலீட்டாளர்கள் சமூகத்தின் அமோக ஆதரவை பெறுவதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற உள்ளது.
    • இந்த ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 20 ஆண்டு கால அளவிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்து 5ஜி சேவையை வழங்க முடியும்.

    5ஜி தொலைதொடர்பு சேவை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தியாவில் தற்போது வரை, 4ஜி அலைக்கற்றை மூலம் இணைய சேவை மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சரவை அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியது.


    வருகிற ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 20 ஆண்டு கால அளவிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்து 5ஜி சேவையை வழங்க முடியும்.

    அந்த வகையில் இந்த ஏலத்தில் பங்கேற்க ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ள நிலையில், தற்போது அதானி குழுமமும் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்து உள்ளது. இதன்மூலம் 5ஜி அலைக்கற்றையை கைப்பற்ற கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 20 முதல் 25 முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நன்கொடையாக வழங்கும் ரூ.60 ஆயிரம் கோடி, அதானியின் மொத்த சொத்து மதிப்பில் வெறும் 8 சதவீதம் ஆகும்.
    • இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் வழங்கப்படும் மிகப்பெரும் நன்கொடைகளில் இதுவும் ஒன்றாகும்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பெரும் கோடீசுவரர்களில் ஒருவரான கவுதம் அதானிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) 60-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி அவரது குடும்பத்தினர் ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை அளிக்க முடிவு செய்து உள்ளனர். சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளுக்கு இந்த நன்கொடை வழங்கப்படுகிறது. அதானி அறக்கட்டளை சார்பில் இந்த பணிகள் நிர்வகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கவுதம் அதானியின் தந்தை சாந்திலால் அதானியின் பிறந்தநாள் நூற்றாண்டு மற்றும் கவுதம் அதானியின் 60-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு சமூக நலன்களுக்காக அதானி குடும்பம் ரூ.60,000 கோடி நன்கொடை அளிக்க உறுதிபூண்டுள்ளது' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    நன்கொடையாக வழங்கும் ரூ.60 ஆயிரம் கோடி, அதானியின் மொத்த சொத்து மதிப்பில் வெறும் 8 சதவீதம் ஆகும். இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் வழங்கப்படும் மிகப்பெரும் நன்கொடைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் மூலம் மார்க் ஜூக்கர்பெர்க், வாரன் பெப்பட் போன்ற உலக கோடீஸ்வரர்களின் வரிசையில் கவுதம் அதானியும் இடம்பெற்று உள்ளார்.

    ×