search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actress jaya prada"

    சமாஜ்வாடி கட்சியில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் பா.ஜனதாவில் சேர்ந்ததால் இழந்த கவுரவம் மீண்டும் கிடைத்துள்ளதாகவும் நடிகை ஜெயப்பிரதா கூறியுள்ளார். #ActressJayaPrada
    இந்தி, தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயப்பிரதா. அரசியலில் நுழைந்த இவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் 2 முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறார்.

    முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ராம்பூரில் ஒன்பதாவது முறை எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆசம் கான். சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான இவர், இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜெயப்பிரதாவை பா.ஜனதா நிறுத்தியுள்ளது.

    ஆசம்கானால் தனது அரசியல் ஆசானான அமர்சிங்குடன் சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேறியவர் ஜெயப்பிரதா. இவருக்கும் ஆசம்கானுக்கும் இடையே ராம்பூரில் ஏப்ரல் 23 நடைபெறவுள்ள தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜெயப்பிரதா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    கேள்வி:- சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இந்த தொகுதியில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

    பதில்:- எனக்கு இந்த பகுதி மக்களை 2004 முதல் தெரியும். அவர்களுக்கும் நான் சமாஜ்வாடி கட்சியில் எப்படி இருந்தேன் என்பதும் தெரியும். நான் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து பார்த்ததே இல்லை. என் பிறந்தநாளின் போது கோவிலுக்கு செல்லும் போது மசூதிக்கும் செல்வேன்.

    ஆனால் ஆசம்கான் அப்படி இல்லை. எனக்கு இந்துக்கள், முஸ்லீம்கள் என இரு தரப்பிலும் இருக்கும் செல்வாக்கை பார்த்து பயந்துதான் 2009 முதல் அந்த கட்சியில் என்னை தனிமைப்படுத்தினார்.

    கே:- சமாஜ்வாடி கட்சிக்கும் பா.ஜனதா கட்சிக்கும் என்ன வித்தியாசம்?

    ப:- பா.ஜனதா என்பது தேசிய கட்சி. சமாஜ்வாடி மாநில கட்சி. ஒரு பெண் பிரபலமாகவும் அரசியல் வாதியாகவும் பா.ஜனதா கட்சியில் என் கவுரவமும் மரியாதையும் மீட்டெடுக்கப்பட்டு இருக்கிறது. சமாஜ்வாடி கட்சியில் நான் அவமானப் படுத்தப்பட்டேன். அங்கே நான் இழந்த கவுரவம் இங்கே கிடைத்துள்ளது. சமாஜ்வாடி கட்சியின் மோசமான விதி முறைகளால் எனது சினிமா வாழ்க்கையை இழந்தேன்.

    கே:- பொதுக் கூட்டங்களில் சினிமாவில் நீங்கள் பேசிய வசனங்களை பேச சொல்லியோ பாட சொல்லியோ கேட்கிறார்களா?

    ப:- இல்லவே இல்லை. இந்த மக்களுடன் ஒரு அரசியல்வாதியாக 2004 முதல் இருக்கிறேன். தொடக்கத்தில் இதுபோன்ற கோரிக்கைகள் இருந்தன. இப்போது இல்லை. இந்த மக்கள் என்னை அவர்களது குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள். ஆசம் கான் போன்றவர்கள்தான் என்னை சினிமாக்காரராக பார்க்கிறார்கள்.

    கே:- ஒருவேளை நீங்கள் எம்.பி.யாகி, மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்தால் உங்களை மோடி அமைச்சரவையில் பார்க்க முடியுமா?

    ப:- அப்படி ஒரு எதிர்பார்ப்போ எண்ணமோ என்னிடம் சுத்தமாக இல்லை. பா.ஜனதாவை பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்க வைப்பதே என்னுடைய நோக்கம். ஆனால் மோடி பிரதமரானால் எந்த பணி கொடுத்தாலும் அதில் ஈடுபட தயாராக இருக்கிறேன்.

    கே:- ஜெயா பச்சன் சமாஜ்வாடியில் இருக்கிறாரே?

    ப:- அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். அவருடன் எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #ActressJayaPrada
    ×