search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ukraine"

    • இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 139 பேர் பலியானார்கள்.
    • ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

    ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய அதிபர் புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது.

    இந்த நிலையில் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, "மாஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம்.

    இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பரதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன" என்றார்.

    • உடலை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
    • வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

    உக்ரைனுக்கு எதிராக ரஷியா சார்பில் போரில் ஈடுபட்ட இந்தியர் உயிரிழந்தார். இதனை ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ரஷியா - உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியர், ஐதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான் ஆவார். ஆனால், அவர் எதற்காக ரஷியா சென்றார், அங்கு அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    "இந்தியர் ஸ்ரீ முகமது அஸ்ஃபான் என்பவர் உயிரிழந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் ரஷிய அதிகாரிகள் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டிருக்கிறோம். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று ரஷியாவுக்கான இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.



    அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்ட இந்தியர்களில் ஒருவர் அஸ்ஃபான் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். அஸ்ஃபான் உயிரிழந்த தகவல் அவர்களுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் அசாதுதீன் ஒவைசி மூலமாக தெரிந்து கொண்டதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஒவைசி வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பலர் இந்த விவகாரம் தொடர்பாக ஏமாற்றப்பட்டுள்ளனர். ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு வேலை கொடுக்காமல் போரில் பங்கேற்க கட்டாயப்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    ஒவைசி எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவு துறை அமைச்சகம், ரஷியாவில் சிக்கி தவிக்கும் 20 இந்தியர்கள் உதவி கோரியுள்ளதாகவும், அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. துபாயை சேர்ந்த ஃபைசல் கான் என்பவரே இந்தியர்களை அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும் என கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

    • உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.
    • உக்ரைன் ஆரம்பத்தில் இருந்தே பதிலடி கொடுக்க துவங்கியது.

    உக்ரைன் மீது ரஷியா போரை துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றது. ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை என துவங்கி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடுமையான போராக இது மாறி இருக்கிறது. ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் காரணமாக அங்குள்ள மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    ரஷிய - உக்ரைன் போர் தற்போதைக்கு முடிவுக்கு வருமா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவை ரஷியாவுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளன. அந்த வகையில், ரஷியா - உக்ரைன் போர் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை குறித்து தொடர்ந்து பார்ப்போம்..

     


    பிப்ரவரி 24, 2022-ம் ஆண்டு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவை தொடர்ந்து ரஷிய படைகள் உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. ஆரம்பக் கட்டத்தில் கீவ், கார்கீவ் மற்றும் ஒடீசா என முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷிய தாக்குதலை தீவிரப்படுத்தியது.

    ரஷிய தாக்குதலை எதிர்கொண்ட உக்ரைன், ஆரம்பத்தில் இருந்தே பதிலடி கொடுக்க துவங்கியது. போர் துவங்கிய சில வாரங்களில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ரஷியா தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசியும், வான்வழி தாக்குதல்களையும் நடத்தியது. இதில் பெரும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

     


    தற்போது ரஷியா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், அமெரிக்கா ரஷியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. போர் துவங்கியதில் இருந்து ஒரே நாளில் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க அதிக கட்டுப்பாடுகளை விதித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    புதிய கட்டுப்பாடுகள் ரஷிய ராணுவம் மற்றும் அவர்களின் போர் முயற்சிகளை முடிந்தவரையில் குறைக்க செய்யும் வகையில் உள்ளது. அமெரிக்கா தவிர ஐரோப்பிய யூனியன் சார்பில் ரஷியாவுக்கு எதிராக 13-வது முறையாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இவை ரஷியாவை மேலும் தனிமைப்படுத்தும் வைகயில் அமைந்துள்ளன.

     


    ஐரோப்பிய யூனியனின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக, ரஷியா சார்பில் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    "ரஷியாவின் போர் நடவடிக்கைகளை குறைக்கும் வகையிலும், சண்டையிடுவதை மேலும் கடுமையாக்கும் வகையிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன," என்று அமெரிக்க அதிகாரியான வேலி அடிமோ தெரிவித்துள்ளார்.

    ரஷியாவில் செயல்பட்டு வரும் 500 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ரஷியாவின் ராணுவ துறையை சேர்ந்தவை ஆகும்.

    இந்த போர் காரணமாக உக்ரைனின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. முதல் ஆண்டிலேயே அந்நாட்டின் பொருளாதாரம் 30 முதல் 35 சதவீதம் வரை சரிந்துள்ளது. உக்ரைன் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள நாடுகளிலும் பொருளாதாரம் பாதிப்படைய செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ரஷியப் படைகள் உக்ரைன் எல்லைக்குள் வேகமாக ஊடுருவதை தடுப்பதில் துரிதமாக செயல்பட்டவர்.
    • இவரது தலைமையில் பதில் தாக்குதலில் ரஷியாவிடம் இருந்து சில பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியது.

    உக்ரைன் நாட்டின் ஆயுதப்படை தலைமை தளபதியாக இருந்தவர் வலேரி ஜலுன்ஸ்யி. இவரை அந்நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி அதிரடியாக நீக்கியுள்ளார். இருவருக்கும் இடையில் உரசல் இருந்து வந்த நிலையில் தற்போது ஜெலன்ஸ்கி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

    ரஷியப் படைகள் உக்ரைன் எல்லைக்குள் நுழைந்தபோது இவரது தலைமையிலான ஆயுதப்படை சிறப்பாக செயல்பட்டது. இதனால் இரும்பு தளபதி என அழைக்கப்பட்டார்.

    ரஷியாவை தொடக்கத்தில் சமாளித்த போதிலும், அதன்பின் ரஷியப்படைகள் உக்ரைனுக்குள் சென்று பேரழிவை ஏற்படுத்தியது.

    ரஷியாவுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் நிலையில், தலைமை தளபதி நீக்கப்பட்ட நிலையில், புதிதாக நியமிக்கப்படும் நபர் எப்படி படைகளை வழிநடத்திச் செல்வார் என எதிர்பார்ப்புடன் கூடிய கேள்வி எழுந்துள்ளது.

    ரஷியப்படைக்கு எதிராக உக்ரைன் எதிர்தாக்குதல் என்ற யுக்தியை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. ரஷிய படைகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தாத போதிலும், உக்ரைன் படையால் சிறிய அளவிலேயே முன்னேற முடிந்தது. தொடர்ந்து முன்னேற முடியாமல் தவித்து வருகிறது. உக்ரைன் போரில் சுமார் 1000 கி.மீட்டரை இழந்துள்ளது.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

    புதிதாக நியமிக்கப்படும் தளபதி தலைமையில் உக்ரைன புதிய வியூகத்தின் போரை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுதம் வழங்க உத்தரவாதம் வழங்காத நிலையில், ரஷியா தொடர்ந்து டிரோன் தாக்குதல் மூலம் வளங்களை அழிப்பதை தடுக்க உக்ரைன் அதிக அளவில் செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

    டிரோன்கள் மற்றும் பிற மேம்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் மட்டுமே உக்ரைன் ரஷ்யாவின் மிகப்பெரிய ராணுவத்துடன் போட்டியிட முடியும் என வலேரி ஜலுஸ்ன்யி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஆயுதம் தாங்கிய வாகனங்களுக்கு பெருமளவு சேதம்.
    • 18 ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலை.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போர் காரணமாக பொது மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில், ரஷியா உக்ரைன் இடையேயான போரில் இதுவரை ரஷிய ராணுவப்படையை சேர்ந்த 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமுற்று இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது ரஷிய ராணுவத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல்களில் தெரியவந்துள்ளது. மேலும் போர் காரணமாக ரஷிய வாகனங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்களுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

     


    இதன் காரணமாக ரஷியாவின் போர் வாகனங்களின் நவீனத்தன்மை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ரஷியா போருக்காக பயன்படுத்திய அதிநவீன வாகனங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்கள் பெரும்பாலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.

    போர் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் பைடன், "உக்ரைனை தனித்துவிட மாட்டேன், அமெரிக்கர்களும் அப்படி செய்ய மாட்டார்கள்," என்று தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனுக்கு கூடுதலாக 200 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.  

    • ரஷியா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பு.
    • ரஷிய கொடுமைகள் தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பு.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷியா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனும் தன் பங்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிய தாக்குதலை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில், உக்ரைனின் சில பகுதிகள் ரஷிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷியா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

    போர் நடைபெற்று வரும் உக்ரைனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் விசாரணை ஆணையத்திற்கு எரிக் மோஸ் தலைமை வகிக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக ரஷிய ஆயுதப்படை மேற்கொண்டு வரும் கொடுமைகள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

    சில பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொடுமைகளால் உயிர்பலி ஏற்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். எரிக் மோஸ் தலைமையிலான குழு ரஷியா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வுகளில் ரஷிய அதிகாரிகளால் நடத்தப்படும் காவல் மையங்களில் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    இது பற்றிய குற்றச்சாட்டுகளை ரஷியா முழுமையாக மறுத்து இருக்கிறது. இது தொடர்பாக ஆணையத்தில் பதில் அளிக்க ரஷியாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. எனினும், ரஷியா தரப்பு அதிகாரி யாரும் ஆணையத்தில் ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • உள்நாட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரஷியா நடவடிக்கை
    • யூரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக அமைப்பில் உள்ள நாட்டிற்கு இந்த தடை இல்லை

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இதற்கிடையே மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு பொருளாதார அளவில் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷியாவில் பணவீக்கம், விலைவாசி ஏற்றம் அதிகரித்து மக்கள் அவலநிலையை எதிர்கொண்டு வருகிறார்கள்.

    ரஷியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷியா தற்காலிக தடை விதித்துள்ளது.

    ரஷியா ஒரு நாளைக்கு 9 லட்சம் பேரல்கள் என்ற வகையில் டீசலை ஏற்றுமதி செய்கிறது. 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேரல்கள் என்ற வகையில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த உத்தரவு வந்த நிலையில், ரஷியாவில் எரிபொருள் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது. இந்த தற்காலிக தடையால் உலக மார்க்கெட்டில் விலை உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    யூரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக அமைப்பில் உள்ள அர்மேனியா, பெலாரஸ், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு இந்த தடை கிடையாது.

    • ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடைபெறுகிறது.
    • ஸ்டார்லின்க் நிறுவனம் உக்ரைனுக்கு இணைய சேவையை வழங்க துவங்கியது.

    உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ரஷிய கடற்படை தளத்தை உக்ரைன் தாக்காமல் இருக்க நான் தான் காரணம் என்று தெரிவித்து இருக்கிறார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், கடந்த ஆண்டு மாஸ்கோ அருகில் உள்ள கருங்கடல் பகுதியில் இணைய வசதியை செயல்படுத்துமாறு உக்ரைன் சார்பில் தனக்கு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். எனினும், இதன் விளைவை கருத்தில் கொண்டு இணைய வசதியை செயல்படுத்தவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போர் துவங்கிய குறுகிய காலக்கட்டத்திலேயே எலான் மஸ்க்-இன் ஸ்டார்லின்க் எனும் செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவை வழங்கும் நிறுவனம் உக்ரைனுக்கு இணைய சேவையை வழங்க துவங்கியது.

    "செவஸ்டாபோல் வரை ஸ்டார்லின்க் சேவையை செயல்படுத்துமாறு அரசு அதிகாரிகளிடம் இருந்து அவசர கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ரஷியாவின் கடற்படை தளத்தை முழுமையாக மூழ்க செய்வது தான். நான் அவர்களின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டு இருந்தால், போரில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட ஸ்பேஸ்-எக்ஸ் முக்கிய காரணமாக மாறி இருக்கும்," என்று எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.

    • ரஷிய- உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது
    • இரு நாடுகளும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன

    ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் தனது ராணுவத்தால் ஆக்ரமித்தது.

    சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிட்டு ரஷியா மேற்கொண்ட இந்த ஆக்ரமிப்பிற்கு எதிர்வினையாக உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது.

    இந்த ரஷிய-உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்து பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சில மாதங்களாக தாக்குதல்களில் இரு நாடுகளும் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன.

    இந்நிலையில் உக்ரைன் இரு டிரோன்களை ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி ஏவியது. இவற்றை ரஷியாவின் விமானப்படை தாக்கி அழித்தது. மாஸ்கோவின் தெற்கு புறநகரில் உள்ள டொமோடிடோவோ (Domodedovo) பகுதியின் மீது ஏவப்பட்ட ஒரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது.

    தலைநகரின் மேற்கு பகுதியில் உள்ள மின்ஸ்க் நெடுஞ்சாலையின் மேலே இன்னொரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது. வீழ்த்தப்பட்ட டிரோன்களின் பாகங்கள் தாக்கப்பட்டு காயமடைந்ததாகவோ அல்லது உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல்கள் இல்லை.

    ரஷியாவின் மாஸ்கோ நகரை குறிவைத்து ஒரே வாரத்தில் 3-வது முறையாக உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பின்வாங்காமல் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்
    • ஆனால் துறைமுகத்தில் தாக்குதல் நடைபெற்றதாக ரஷியா தெரிவிக்கவில்லை

    ரஷிய- உக்ரைன் போர் 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இரு தரப்பிலும் உயிர்ச் சேதமும், கட்டிட சேதங்களும் தொடர்கின்றன. ஆனாலும், பின்வாங்காமல் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கருங்கடல் பகுதியின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ரஷியாவின் மிகப்பெரிய துறைமுகம் நோவோரோசிஸ்க் (Novorossiysk). உக்ரைனின் உளவுத்துறையும், கடற்படையும் இணைந்து நடத்திய கடல் டிரோன் தாக்குதலில் ரஷியாவின் பெரிய கப்பலான ஒலெனெகோர்ஸ்கி கோர்னியாக் (Olenegorsky Gornyak) தாக்கப்பட்டது.

    450 கிலோ டைனமைட் வெடிப்பொருளுடன் சென்ற உக்ரைனின் ஆளில்லா சிறுகப்பல்கள் (Sea Drone) தாக்கியதில், அந்த கப்பல் பலத்த சேதமடைந்திருப்பதாகவும், அது தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இனி பயன்படாது எனவும் உக்ரைன் தரப்பு தெரிவிக்கிறது.

    இரு ஆளில்லா விமானங்களை இடைமறித்து வீழ்த்தியதாக தெரிவித்த ரஷியா, துறைமுகத்தில் தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கவில்லை.

    ரஷிய ஏற்றுமதிகளுக்கு நோவோரோசிஸ்க் துறைமுகம் ஒரு முக்கியமான இடம். 2-ம் உலகப் போரின்போது கட்டமைக்கப்பட்ட 'லேண்டிங் ஷிப்' எனப்படும் வகையை சேர்ந்த ஒலெனெகோர்ஸ்கி கப்பல், ராணுவ தளவாடங்களை நீர் மற்றும் நிலத்தில் இருந்து எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    எனவே இப்படி ஒரு தாக்குதலை உக்ரைன் இலக்காக வைத்திருப்பதாக தெரிகிறது.

    • டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை (port of Izmail) ரஷியா டிரோன்கள் மூலம் தாக்கியது
    • உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு ஈடாக வேறு ஒரு நாடு ஏற்றுமதி செய்ய முடியாது

    ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் ஆக்ரமித்தது.

    இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு பல அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். ரஷிய- உக்ரைன் போர் தற்போது 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகின்றது.

    இந்நிலையில், உக்ரைன்- ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை (port of Izmail) ரஷியா டிரோன்கள் மூலம் தாக்கியது. இதனால் அத்துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றி செல்லும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இஸ்மாயில் துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றி செல்ல கப்பல்கள் அத்துறைமுகத்திற்கு உள்ளே வர இருந்தபோது இந்த தாக்குதல் நடைபெற்றது.

    "ஆப்பிரிக்கா, இஸ்ரேல் மற்றும் சைனா ஆகிய நாடுகளுக்காக தானியங்களை ஏற்றி செல்ல கப்பல்கள் வர இருந்தன. இத்தாக்குதல்களால் 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதமாகியிருக்கிறது. டானுபே துறைமுகத்தின் கட்டமைப்பு பெருமளவில் சேதமடைந்திருக்கிறது. உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு ஈடாக வேறு ஒரு நாடு ஏற்றுமதி செய்ய முடியாது" என்று இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் துணை பிரதமர் ஒலெக்ஸாண்டர் குப்ரகோவ் (Oleksandr Kubrakov) தெரிவித்தார்.

    "உலகத்திற்கே சர்வ நாசத்தை விளைவிக்கும் ஒரு போரை ரஷியா நடத்தி வருகிறது. அவர்களின் இந்த வெறியாட்டத்தால் உலக உணவு சந்தை அழிந்துவிடும். அதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள். தானிய வினியோகம் பாதிக்கப்படுவதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்" என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ரஷியா, "அந்த துறைமுகம் அயல்நாட்டு பயங்கரவாதிகளுக்கும், ராணுவ தளவடங்களுக்கும் புகலிடமாக திகழ்ந்தது" என கூறியிருக்கிறது.

    உயிர்ச்சேதம் எதுவும் இல்லையென்றாலும் அங்கிருந்து வெளிவரும் புகைப்படங்களில், உடைந்த கட்டிடங்களும், பெரும் தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்களும் மற்றும் மிக பரவலாக சிதறிக்கிடக்கும் தானியங்களும் காணப்பட்டது.

    உலகளவில் தானியங்களுக்கு தட்டுப்பாடும், தானியங்களின் விலைகள் கடுமையாக உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 97,000 போர் குற்றச்சாட்டு அறிக்கைகளை உக்ரைன் ஆராய்ந்தது
    • "வாட்டர் போர்டிங்" எனப்படும் தீவிர சித்ரவதையையும் கையாண்டனர்

    கடந்த 2022-ம் ஆண்டு ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.

    இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. போர் 525-ம் நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் ரஷியா மீது புதிய குற்றச்சாட்டை உக்ரைன் வைத்துள்ளது.

    ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கெர்ஸன் பகுதி உக்ரைன் நாட்டால் மீட்கப்பட்டது. இங்கு ரஷியாவால் அடைக்கப்பட்டிருந்த போர் கைதிகளிடம் உக்ரைன் விசாரணை நடத்தியது. உக்ரைன் அதிகாரிகளுடன் இணைந்து மனித உரிமை சட்டங்களுக்கான குளோபல் ரைட்ஸ் கம்ப்ளையன்ஸ் எனும் சர்வதேச அமைப்பின் மொபைல் ஜஸ்டிஸ் டீம் குழுவினர் செயலாற்றினர்.

    இதில் கைதிகளை ரஷியா உடல் ரீதியான சித்ரவதைகளுக்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கியதாக இந்த குழு கண்டுபிடித்துள்ளது.

    சுமார் 97,000 போர் குற்றச்சாட்டு அறிக்கைகளை உக்ரைன் ஆராய்ந்து ரஷியாவை சேர்ந்த 220 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட உக்ரைன் நாட்டவர்களை பல்வேறு விதமாக ரஷியர்கள் சித்ரவதை செய்துள்ளனர். கைதிகளை அடிப்பது, அவர்களின் உடலில் மின்சாரம் பாய்ச்சுவது, அவர்களின் பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்துவது மற்றும் ஒரு கைதி பாலியல் கொடுமை செய்யப்படுவதை பிற கைதிகளை பார்க்க வைப்பது போன்ற துன்புறுத்தல்களை கையாண்டனர்.

    மேலும் கைதிகளின் முகத்தை மெல்லிய துணியால் மூடி மூச்சு திணறும் அளவிற்கு அதிவேகமாக நீரை பாய்ச்சும் "வாட்டர் போர்டிங்" எனப்படும் தீவிர சித்ரவதையையும் கையாண்டனர்.

    இக்குற்றச்சாட்டுகளில் பெரும் குற்றம் புரிந்தவர்கள் மீது நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரத்திலுள்ள சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். இந்த நீதிமன்றம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக ஏற்கனவே கைது உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஷியாவால் கைது செய்யப்பட்டவர்களில் உக்ரைன் ராணுவத்தை சேர்ந்தவர்களை தவிர தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ பணியாளர்கள், கல்வி பணியில் உள்ளவர்களும் அடங்குவர்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ரஷியா மறுத்துள்ளது.

    ×