search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thai Poosam"

    தைப்பூசத் திருவிழாவையொட்டி வருகிற 20, 21 ஆகிய 2 நாட்கள் மட்டும் சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

    பாதயாத்திரைக்கு பிரசித்திப்பெற்ற இவ்விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள முருகப்பக்தர்கள் விரதம் இருந்து பழனி முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக பல நூறு மைல்கள் கடந்து பழனிக்கு வருகிறார்கள்.

    இந்த விழாவில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இவ்விழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ஏராளாமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும், குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரப்பயணத்திறக்கு ரெயில் பயணம் செய்வதே வசதியாக உள்ளது.

    தற்போது பழனி வழியாக பாலக்காடு- சென்னை அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில், பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரெயில், மதுரை - கோவை பயணிகள் ரெயில் என 3 ரெயில்கள் மட்டுமே பழனி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த ரெயில்கள் பயணிகளுக்கு போதுமானதாக இல்லை. ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு தேவையான ரெயில்களை இயக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

    கடந்த மாதத்திலிருந்தே பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக போதுமான ரெயில்கள் இயக்கப்படவில்லை, இதன் காரணமாக ரெயில்களில் பயணிகள் இருக்க இடமின்றி பார்சல் வேன்களிலும் நின்று சென்றனர். கூடுதல் பெட்டிகளை சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தற்போது தைப்பூசத் திருவிழாவையொட்டி வருகிற 20, 21 ஆகிய 2 நாட்கள் மட்டும் சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.

    நாளை (20- ந்தேதி) அன்று காலை 8.15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் பயணிகள் ரெயில் காலை 11.15 மணிக்கு பழனிக்கு வந்து சேருகிறது. அதே ரெயில் இரவு 8.00 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு மதுரையை சென்றடைகிறது. 21- ந்தேதியும் இதே போல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே மதுரை கோட்டத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை பூசத்திருவிழா வருகிற 13-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 21-ந் தேதி நடக்கிறது.
    நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும். இங்கு சுவாமி சுயம்புவாக அருள்புரிந்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் தை பூசத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    13-ந் தேதி காலை சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை அலங்கார மண்டபத்தில் எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை, யானை மீது கொடிபட்டம் ஊர்வலம், கொடியேற்றம் நடக்கிறது. இரவு விநாயகர் வீதி உலா, சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை இந்திர விமானத்தில் வீதி உலா, சமய சொற்பொழிவு நடக்கிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை, இரவு விநாயகர் வீதி உலா, சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ஆகியோர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ந் திருநாளான 21-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று தேரோட்டம் நடக்கிறது. பின்னர் தீர்த்தவாரியும், சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது. 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை பஞ்சமூர்த்தி வீதி உலாவும், இரவில் தெப்ப திருவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 
    ×