search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tension"

    • பதற்றமான பகுதிகளில் வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, அரமங்காடு, கோவிலூர், மருதங்காவெளி உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்கா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக ஆசாத்நகர் சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது. ஊர்வலத்தை முன்னிட்டு போலீஸ் துறை சார்பில் கடந்த ஒரு வார காலமாக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட வருவாய் துறை சார்பிலும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள். பதற்றமான பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஊர்வலத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    • இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் இருக்கும்.
    • தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.

    திரிகோணாசனம் என்பது ஆங்கிலத்தில் triangle pose என்று அழைப்பார்கள். இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் உடல் இருக்கும்படி செய்யும் இந்த ஆசனம் ஜீரணத்தை மேம்படுத்தவும், தொப்பையை குறைக்கவும், இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதற்கும் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு கொடுக்கிறது.

    உடல் தசைகளை நன்கு நீட்டி மடக்கும் இலகுவான தன்மையையும் உடலுக்கு நல்ல நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும். குறிப்பாக தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.

    ஜீரணக்கோளாறுகள் தான் உடலில் நிறைய பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றன. அவற்றை சரிசெய்யவும் ஜீரண ஆற்றலை மேம்படுத்தவும் திரிகோணாசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    கை, கால், இடுப்பு, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றை வளைத்து நீட்டி செய்கின்ற இந்த ஆசனம் அடிவயிற்று பகுதி மற்றும் ஜீரண மண்டலத்தை தூண்டும் வேலையை செய்கிறது.

    முக்கோணம் போன்ற நிலையில் இருக்கும் இந்த திரிகோணாசத்தை செய்வதன் மூலம் சுவாச மண்டலத்தில் இருக்கும் அடைப்பு போன்றவை நீங்கும். ஆழமாக சுவாசிக்க உதவி செய்யும்.

    நன்கு மூச்சை இழுத்து அதிகமான ஆக்சிஜன் அளவைப் பெற முடியும். இதனால் நுரையீரலுக்கும் அதிக அழுத்தம் ஏற்படாமல் அதன் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும். ஆஸ்துமா, வீசிங் போன்ற சுவாச மண்டல பிரச்சினை இருப்பவர்கள் இந்த திரிகோணாசனத்தை செய்து வருவது நல்லது.

    முதுகு வலி பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த திரிகோணாசனம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். இந்த ஆசனம் செய்யும்போது மார்பு பகுதி விரிவடைந்து மூச்சு விடுவது மிக எளிதாக இருக்கும். ஆழமாக மூச்சை இழுத்து விட முடியும். இதனால் மார்பு மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்படும் அழுத்தம் குறைந்து இடுப்பு மற்றும் முதுகுவலி குறைய ஆரம்பிக்கும்.

    இந்த திரிகோணாசனம் செய்யும் போது உடல், மனம் இரண்டுமே ரிலாக்சாக இருக்கும். இது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் மன அழுத்தம், பதட்டம், டென்ஷன், மனச்சோர்வு ஆகியவை குறையும்.

    சிலருக்கு இடுப்பை வளைத்து செய்யும் எந்தவித வேலைகளும் செய்யவே முடியாது. ஏனெனில் இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் மிகவும் இறுக்கமாக இருக்கும். இந்த இறுக்கத்தை குறைத்து இடுப்பு தசைகளை நெகிழ்வுத் தன்மையோடும் வலுவாகவும் வைத்திருக்க உதவும்.

    திரிகோணாசனம் செய்யும் போது ஒட்டுமொத்த உடலும் வலிமை அடையும். அதோடு இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்தும். குறிப்பாக இடுப்பு தசைகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கச் செய்து தொப்பையை குறைக்க உதவி செய்கிறது.

    • தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.
    • சீனா தைவான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகிறது,

    சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. 2-ம் உலக போரின் போது சீனாவில் இருந்து தைவான் தனியாக பிரிந்து ஆட்சி அமைத்தது. ஆனால் தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

    மற்ற நாடுகளுடன் தைவான் வைத்திருக்கும் நட்புறவையும் சீனா கண்டித்து வருகிறது.

    மேலும் தைவானை சுற்றி தனது ராணுவத்தினரை குவித்து சீனா போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் தைவான் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சீனா தைவான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகிறது,

    இந்நிலையில் நேற்று சீனாவின் ஜே-10, ஜே-11, ஜே-16 உள்ளிட்ட ரக விமானங்கள் மற்றும் குண்டு வீசும் விமானங்கள் உள்பட 24 போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்து மீறி பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. சீன விமானங்களை தைவான் தனது போர் கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள் மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    • நேற்று மாலை 5 மணி அளவில் குழாய் சீரமைக்ககப்பட்டது.
    • மீண்டும் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணத்தில், பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு நிலையம் (சி.பி.சி.எல்.) உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கப்பல்களுக்கு கச்சா எண்ணெய்யை கொண்டு செல்ல நரிமணத்தில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து சாமந்தான்பேட்டை வழியாக நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை கடற்கரையில் எண்ணெய் குழாய் புதைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி நள்ளிரவு பட்டினச்சேரி கடற்கரையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனால் கடல் நீர் முற்றிலுமாக கருப்பு நிறமாக மாறியது. இதனால் பொது மக்களும், கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சி.பி.சி.எல். மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து குழாய் உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நேற்று மாலை 5 மணி அளவில் குழாய் சீரமைக்ககப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் நேற்று அடைக்கப்பட்டதாக கூறிய அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மீண்டும் அதே இடத்தில் பழுது நீக்க பணியில் இயந்திரங்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு பணி நடைபெற்று வருகிறது.குழாயில் கசிவு ஏற்படுமா என சோதனை செய்ய சிபிசிஎல் நிர்வாகம் கச்சா எண்ணெயை குழாயில் அழுத்தத்துடன் செலுத்திய போது கசிவு ஏற்பட்டது.

    அதனால் உயர் அழுத்தத்தில் குழாயில் ஆயில் செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும்

    தொழில்நுட்ப குழுவினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • 7 மாவட்டங்களில் இணைய சேவை 48 மணி நேரத்திற்கு முடக்கம்
    • மோதல் நடந்த இடத்தில் 144வது பிரிவின் கீழ் கட்டுப்பாடுகள் விதிப்பு.

    கவுகாத்தி:

    அசாம் எல்லையையொட்டி உள்ள மேகாலயா மாநில ஜெய்ன்டியா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை அசாம் வனக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து முக்ரோக் கிராமத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் வனத்துறையினர் மீது கற்களை வீசி தாக்கினர். அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

    இந்த கலவரத்தில் முக்ரோக் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பழங்குடி கிராம மக்கள் மற்றும் அசாமைச் சேர்ந்த ஒரு வனக் காவலர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இரு மாநில எல்லையில் நிகழ்ந்த இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்திருந்தார். 


    இந்நிலையில் அசாம்-மேகாலயா எல்லையில் நிலைமை தொடர்ந்து பதற்றமாக உள்ள போதிலும்,பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 144வது பிரிவின் கீழ் மோதல் நடந்த இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் அடுத்த 48 மணி நேரத்திற்கு நீடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள்.
    • தினமும் உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்.

    சோர்வின்றி உற்சாகமாக வேலை செய்வது எப்படி? என்பதை இந்த கட்டுரையில் விளக்கியிருக்கிறோம்.

    1.சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்

    தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். எந்த தொந்தரவும் இல்லாமல் குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதனை செய்ய பழகுங்கள்.

    2. 10 ஆயிரம் 'ஸ்டெப்ஸ்'

    ஒரு நாளைக்கு நீங்கள் நடந்து செல்லும் தூரம் 10 ஆயிரம் 'ஸ்டெப்ஸ்' என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் என்பது 7.5 கிலோமீட்டர். உங்கள் வீட்டு மாடிப்படி ஏறுவது துவங்கி, உங்கள் அலுவலகத்தில் காபி அருந்த கேன்டீனுக்கு செல்வது வரை அனைத்தையும் சேர்த்து இந்த அளவு நடந்தால் போதுமானதாக இருக்கும்.

    3. தினசரி ஒரு புகைப்படம் எடுங்கள்

    தினசரி உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அல்லது உங்களுக்கு பார்க்க அழகாக தோன்றும் ஒரு விஷயத்தை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். இதே போல் 30 நாட்களும் புகைப்படம் எடுங்கள். அது மிகப்பெரிய போட்டோகிராபியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. செல்போன் புகைப்படமே போதுமானது.

    4. ஒரு நாவல் எழுதுங்கள்

    ஒரு நாளில் உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை 1500 வார்த்தைகளில் எழுத துவங்குங்கள். 30-வது நாள் 50 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட ஒரு நாவல் உங்கள் பெயரில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதுமையான விஷயங்களுக்கு நீங்கள் மாறிய விதம் புரியும்.

    5. காதலிக்க பழகுங்கள்

    உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற‌ நேரங்களில் வேலையை பற்றிய‌ நினைவு இல்லாத உற்சாகமான வேலைகளில் நாட்டம் செலுத்துங்கள். நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடாமல் நேரில் உரையாட பழகுங்கள். மனதிற்கு நெருக்கமான நபருடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள்.

    • இந்த கோவிலில் கூடுதலாக கட்டிடம் கட்ட வழிபாடு நடத்தும் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கினர்.
    • கல்லூரி நிர்வாகம் சார்பில், கோவில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கல்லூரியில் கலந்தாய்வு, சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இந்த கல்லூரி வளாகத்தில் பூக்கார தெருவில் உள்ள பொதுமக்கள் வழிபாடு நடத்தும் செங்கமலை நாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் இந்த கோவிலில் கூடுதலாக கட்டிடம் கட்ட வழிபாடு நடத்தும் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கினர். ஆனால் இதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இன்று பணியை தொடங்குவதற்காக மக்கள் சிலர் வந்தனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. தகவல் அறிந்த நகர துணை போலீஸ் ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில், கோவில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் தற்போது கல்லூரியில் கலந்தாய்வு நடந்து வருகிறது. இதனால் தற்போது கோவில் கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு பூக்கார வழிபாடு நடத்தும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் இரு தரப்பினிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முடிவில் கலந்தாய்வு முடியும் வரை கோவில் கட்டுமான பணியை தொடங்கக்கூடாது என பேசி முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை பார்க்கலாம் என கூறினர். இதனால் கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #DelhiMetro
    புதுடெல்லி: 

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
     
    இதையடுத்து காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்ககூடாது என கூறப்பட்டது. அத்துடன், காஷ்மீரின் ஸ்ரீநகர், லே, பதான்கோட் ஆகிய விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இன்று காலை பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து போர் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இதேபோல், பாகிஸ்தானிலும் லாகூர், முல்தான், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்நாட்டு, சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை முதல் டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், ரெயில் நிலையங்களில் சந்தேகத்துக்கு உரிய விதத்தில் பொருட்கள் கிடந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. #DelhiMetro
    ×