search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Rains"

    • தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 93 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    • ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை, தென்மேற்கு பருவமழை 40 சென்டிமீட்டர் வரை பதிவாகியுள்ளது

    சென்னை:

    கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, தென்மேற்கு பருவமழை 40 சென்டிமீட்டர் வரை பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 88 சதவீதம் அதிகம் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், இதுவரை அதிகளவில் 1906 ஆம் ஆண்டில் 112 சென்டிமீட்டர் மழையும், 1909ம் ஆண்டு 127 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டில் 93 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், இதுவே கடந்த 113 ஆண்டுகளில் பதிவாகியுள்ள அதிகளவிலான மழை என்பது குறிப்பிடத்தக்கது.

    செப்டம்பர் 5ம் தேதி வரை தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    விட்டு விட்டு கனமழை  பெய்து வருவதால், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலுர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய  மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு வெள்ள அபாய ஏற்படலாம் என மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரித்துள்ளது. 
    வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 25 நாட்களில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பொழிவை கொடுத்துள்ளது. கடந்த 5-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பின. கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
    சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
    சென்னை:

    வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்கக்கூடும்.

    வானிலை நிலவரம்

    இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள்,  பதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

    இன்று தென்மேற்கு வங்கக்கடல், தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். இதேபோல் நாளை தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர்  கூறினார்.

    தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும் என அமித் ஷாவிடம் டி.ஆர்.பாலு எம்பி கோரிக்கை விடுத்தார்.
    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டிற்கு மழை வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி கடிதம் கொடுத்தார். 

    ‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 25 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 12 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் சராசரி அளவை விட 52 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. மழையால் 49 ஆயிரத்து 757 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும். மழை வெள்ள பாதிப்பை சீரமைக்க ரூ.2079 கோடி வழங்க வேண்டும். மழை வெள்ள நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.550 கோடி வழங்க வேண்டும்’ என கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
    சேலம், டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி பருவ மழை தொடங்கிய நாளில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்தது. சென்னையில் இயல்பை விட அதிக மழை பெயதுள்ளது.

    இந்நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக நெல்லை, குமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

    வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வானிலை நிலவரம்

    சேலம், டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமார் பகுதியில் 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினத்தில் இருந்து இடைவிடாது மழை கொட்டியது. நேற்று முன்தினம் இரவிலும், நேற்று காலையிலும் மிக பலத்த மழை பெய்தது. இன்று ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

    சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்தது.

    மழை பாதிப்பு

    இந்நிலையில், தமிழகத்திற்கான மழை முன்னறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:-

    தெற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கரையை நெருங்கக் கூடும். இதன் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

    திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோவை, கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்

    தமிழகத்திற்கு இயல்பை விட அதிக மழைப்பொழிவு கிடைத்துள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார்.


    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஒட்டிய பகுதியில் வரும் நவம்பர் 9ம் தேதி அன்று புதியதாக குறைந்த காற்றுழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை: 

    மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், வரும் 9ம் தேதி வரை தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சென்னையை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

    வானிலை நிலவரம்

    மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில், வரும் நவம்பர் 9ம் தேதி அன்று புதியதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால்,  ஆந்திரா, கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீச இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டிருப்பதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன. வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். எனினும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

    இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 8ம் தேதிவரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

    லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  உள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 8ம் தேதி வரை மழை நீடிக்கும்.

    சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், ஒருசில சமயங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 13 செமீ மழை பெய்துள்ளது. அம்பாசமுத்திரம் 9 செமீ, மகாபலிபுரம், மண்டபம், பாளையங்கோட்டையில் தலா 8 செமீ மழை பதிவாகி உள்ளது.
    தமிழ்நாட்டில் கன மழைக்கு விவசாயி உள்பட 4 பேர் இறந்தனர். #ChennaiRain
    சென்னை:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் கம்மாபுரத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் (வயது 60) மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் ராமச்சந்திரன் உடல் கருகி பலியானார்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா ரெட்டியபட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி கலா (44). நேற்றுமுன்தினம் இரவு திடீரென்று பெய்த கன மழையால் கண்மாயில் கட்டி இருந்த மாடுகளை மீட்டு வருவதற்காக ஜெயராஜூம், கலாவும் சென்றனர். மாடுகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கலா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.



    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குப்பட்டி பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தபோது தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த சுப்புத்தாய் என்பவர் மின்னல் தாக்கி தனது கணவர் கண்முன்னே பலியானார்.

    திருப்பூரை சேர்ந்தவர் குருமூர்த்தி (31). இவர் தனது உறவினர் சந்தோஷ்குமார் (21) என்பவருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் செல்போனில் பேசியபடி சென்றார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் குருமூர்த்தி உயிரிழந்தார். சந்தோஷ்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருப்பூரில் பெய்த பலத்த மழையின் காரணமாக 60-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து பொதுமக்கள் சிலர் தங்களது வீட்டின் மாடிகளில் உள்ள அறைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    நம்பியூர் பகுதியில் நேற்றுமுன்தினம் பெய்த மழையால் செட்டியம்பதி குளம் நிரம்பி, அந்த குளத்தில் இருந்து வெளியேறிய உபரிநீர் அருகே நம்பியூர் பெரியார்நகரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.

    கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம், பூசாரிவலசு பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஈரோடு-சத்தி மெயின்ரோட்டில் உள்ள தரைப்பாலத்தை மழை வெள்ளம் மூழ்கடித்தது. பொலவக்காளிபாளையத்தில் உள்ள 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியில் பெய்த மழையில் வீடு இடிந்து சேதம் அடைந்தது. மேலும் சங்கரன்கோவில் அருகே ஒரு வீடும், கடையத்தில் ஒரு வீடும் இடிந்தது.

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஜமீன் இலந்தைகுளத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவருடைய வீட்டின் மாடி அறை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வீட்டின் அருகே இருந்த மின்கம்பமும் சேதம் அடைந்தது.

    அம்பை மேலப்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது வீடு மழையால் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.

    இதேபோல் அம்பை பண்ணை சங்கரய்யர் நகரில் ஓடு தயாரிக்கும் ஆலையின் காம்பவுண்டு சுவர் இடிந்து, பக்கத்தில் வசிக்கும் இளங்கோ என்பவரது வீட்டின் காம்பவுண்டு சுவர் மீது விழுந்தது. இதில் அவர் வீட்டுக்கு வந்திருந்த சங்கர் தெருவை சேர்ந்த ஐசக் (38) என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

    ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினத்தில் உள்ள ஜெபக்குமார் என்பவருடைய வீட்டின் ஒரு பகுதி மழையில் இடிந்து விழுந்தது.

    அம்பை தீயணைப்பு நிலைய கட்டிடத்தை மின்னல் தாக்கியதில், மின்கம்பிகளில் தீப்பிடித்து மின் விசிறிகள், மின்விளக்குகள், டி.வி., டெலிபோன் இணைப்புகள் சேதம் அடைந்தன.

    ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த மாயாண்டி (40) என்பவருடைய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் பெய்த கனமழையால் மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாயினர்.

    கனமழையில் மதுரையில் பல இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. கனமழையால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு ஆடி வீதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது.

    ஈரோட்டில் திங்களூர் அருகே உள்ள போலநாயக்கன்பாளையம், பாப்பம்பாளையத்தில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த பலத்த மழையில் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பின.

    விருதுநகர் மாவட்டத்தில் பெய்த கனமழையில் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது.

    திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையில் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    குன்னத்தூர் பகுதியில் பெய்த பலத்த மழையில் 17 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 3 வீடுகள் முற்றிலும் இடிந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த 3 வீடுகளிலும் வசித்த 9 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் தங்க வைக்கப்பட்டதால் உயிர் தப்பினார்கள்.

    குன்னத்தூர் அருகே கருமஞ்செறை ஆதிதிராவிடர் காலனியில் கனமழையால் 38 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கருக்குப்பாளையத்தில் கனமழையால் 15 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. 
    ×