search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summer health"

    • இளநீர் உலகின் சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
    • இளநீரின் வழுக்கையானது புரதச்சத்து நிறைந்ததாகும்.

    கோடையின் சூட்டை தணிக்க இயற்கை வழங்கியுள்ள பானம் இளநீர். இது உடலுக்கு உடனடி ஆற்றல் தரும் இயற்கை குளுக்கோஸ். வெயிலுக்கு இதமான, தாகத்தை தணிக்கும் இளநீர் பானம் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது முதல் புற்றுநோயை தடுப்பது வரை உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் தரும்.

    இளநீர் உலகின் சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கோடையில் குளிர் பானங்களுக்கு செலவிடுவதை இளநீருக்கு செலவிடுங்கள், ஆரோக்கியமாக இருங்கள். சத்துக்கள் நிறைந்த இளநீர் குறைந்த கலோரியும், குறைந்த சர்க்கரையும் கொண்ட பானம். இதில் ஒரு கப்-ல் 45 கலோரி ஆற்றல், 11 மி.கி., சர்க்கரை சத்து மட்டுமே உள்ளது. கொழுப்பு இல்லை. சோடியம் (25 மி.கி.), பொட்டாசியம் (470 மி.கி.,) ஆகிய சத்துகள் அதிகளவிலும், கால்சியம் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் ஓரளவுக்கு இளநீரில் உள்ளதால், உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் சிறந்த பானமாக உள்ளது.

    நீர்ச்சத்து இழப்பால் ஏற்படும் சோர்வை நீக்கி, உடனடியாக ஆற்றலை மீட்டுத்தரும் இளநீர் நோயாளிகளுக்கு ஏற்றது. நிறைய மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வோர், இளநீர் பருகினால் உடலில் மருந்து நன்கு கிரகிக்க உதவும். இளநீரின் வழுக்கையானது புரதச்சத்து நிறைந்ததாகும். இதில் நுண்சத்துகளும் அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கர்ப்ப காலத்தில் நீரிழப்பு, தலைவலி, பிடிப்புகள், வீக்கம், சுருக்கம் உட்பட பல்வேறு சிக்கல்கள் உண்டாகும். அதை சமாளிக்க இளநீர் உதவும்.

    கோடைக்கால நோய்களான வயிற்றுக்கடுப்பு, நீர்க் கடுப்பு, மஞ்சள் காமாலை, அம்மை நோய், தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் இளநீருக்கு உண்டு.

    அம்மை நோய், வயிற்றுப் போக்கு, காலரா போன்றவை ஏற்படும்போது குறையும் நீர்ச்சத்தை ஈடுகட்ட இளநீர் சிறந்தது. இளநீர் பருக சிறுநீர் நன்றாக வெளியேறும். வளரும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் இளநீர் சிறந்த டானிக்.

    வியர்க்குரு, தீக்காயங்கள், அமிலத்தால் ஏற்பட்ட காயங்கள் போன்றவற்றின் மீது இளநீரை தடவினால் விரைவில் குணமடையும். இளநீரில் உள்ள லாரிக் அமிலம் படர்தாமரை, கிளமீடியா ஹெலிகோபேட்டர் உள்ளிட்ட நோய்க்கிருமிகளை அழிக்க உதவுகிறது. மேலும் இளநீர் குடல்புழுக்களை அழிக்கிறது.

    இது உடலில் நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கும். இதனால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்றது. உடற்பயிற்சி செய்தபின் உற்சாக பானங்களுக்கு பதில் இளநீர் அருந்தினால், சிறந்த பலன்கள் கிடைக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீர் அருந்துவதால், அதில் நிறைந்துள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைகிறது.

    • ஏப்ரல் மாதம் தொடங்கி மே, ஜூன், ஜூலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.
    • இயற்கை வழியில் நீங்கள் பாதுகாப்பை தேட முடியும்.

    வெயில் மண்டையை பிளந்து வருகிறது. அனல் காற்று பாடாய் படுத்துகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கி மே, ஜூன், ஜூலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், கோடை வெயிலுக்கு இதமாக சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

    1.தர்பூசணி : இது கோடை காலத்தில் உடலை 'ஹைட்ரேட்' (நீரேற்றம்) செய்யும் ஒரு சூப்பர் ஹைட்ரேஷன் உணவாகும். தர்பூசணிகள் அதிகப்படியான நீரை கொண்டுள்ளன. மேலும் அவை உங்களை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றன. மேலும் தர்பூசணி சூரிய வெப்பத்தால் தோல் சேதமடையாமல் பாதுக்காக்கிறது.

    2.தக்காளி : கோடை வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க பலர் எப்போதும் சன்ஸ்கிரீன் போன்ற செயற்கை பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்கை வழியில் அதற்கு நீங்கள் பாதுகாப்பை தேட முடியும். ஆம் தக்காளி மற்றும் பிற சிவப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் உங்கள் தோலுக்கு கூடுதல் பாதுகாப்பை நீங்கள் பெற முடியும். ஏனெனில் இது லைகோபினை கொண்டுள்ளது. தக்காளியை சிவப்பு நிறமாக்கும் கரோட்டினாய்டு மற்றும் அதிக லைக்கோபீனை உட்கொள்வதன் மூலம் உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்க முடியும்.

    3. முலாம் பழம் : கோடை கால ஆரோக்கிய உணவுகளில் முலாம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை ஊட்டச்சத்துக்கள், நீர் மற்றும் அதிக சுவையையும் கொண்ட பழமாக உள்ளது. எனவே ஆரோக்கியமான சுவையான கோடை கால உணவாக முலாம் பழம் விளங்குகிறது. குறிப்பாக முலாம்பழம் உடலில் நீரிழப்பை குறைக்கிறது.

    4.பெர்ரி : ஸ்ட்ராபெர்ரி, ப்ளு பெர்ரி, ப்ளாக் பெர்ரி என அனைத்து வகையான பெர்ரி பழங்களிலும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளன. ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளுபெர்ரி இரண்டு அதிக பிளாவனாய்டுகளை கொண்டுள்ளன. இவை சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்துகிறது. ப்ளாக் பெர்ரி மற்றும் ராஸ் பெர்ரி இரண்டிலும் அதிகமான நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

    5. சிட்ரஸ் பழங்கள் : சிட்ரஸ் பழங்கள் கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் பருவகால பழங்கள் அல்ல என்றாலும் ஆரஞ்சு போன்ற கனிகளில் அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது கோடையில் உங்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. நமக்கு வெயில் காலங்களில் அதிகப்படியான வியர்வை ஏற்படும்போது நமது உடல் பொட்டாசியத்தை இழக்கிறது. இதனால் நமது தசைப்பிடிப்புகளில் ஆபத்து ஏற்படலாம். எனவே உடலை நீரேற்றமாக்கவும், புத்துணர்ச்சி ஆக்கவும் இது உதவுகிறது. அதே போல குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். அல்லது சோடா குடிப்பதற்கு பதிலாக எலுமிச்சை சாற்றை அருந்தலாம். கோடை காலங்களில் மீன் போன்ற இறைச்சி வறுவல்களில் எலுமிச்சையை பிழிந்து விட்டு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கூடுதல் வைட்டமின்-சி கிடைக்கிறது.

    6. இனிப்பு சோளம் : கோடை காலத்தில் வரும் பருவ கால காய்கறிகளில் இனிப்பு சோளமும் ஒன்றாகும். நீங்கள் அதை வேகவைத்தாலும் க்ரில் செய்தாலும் அது இனிப்பு சுவையிலேயே இருக்கும். மேலும் இது அறியப்படாத பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. கண்புரை மற்றும் வயது சார்ந்து ஏற்படும் தசை சிதைவை இது தடுக்கிறது. மேலும் இது உங்கள் கண்களை வெயில் பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

    7. அவகாடோ : உங்கள் ஆரோக்கிய உணவுப்பட்டியலில் கண்டிப்பாக இருக்க கூடிய ஒரு உணவாக அவகாடோ உள்ளது. ஏனெனில் அவகாடோ மோனோசாச்சுரேட் கொழுப்பு, போலெட் மற்றும் பைபர் ஆகியவற்றை கொண்ட சுவையான மூலமாக உள்ளது. கூடுதலாக அவை இயற்கையாகவே ஒவ்வாமை எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளன.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கோடை காலத்தில் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • கோடை காலத்தில் சாப்பிடும் உணவுகள் விஷத்தன்மையாக மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன

    வெயிலோடு உறவாடி....

    வெயிலோடு மல்லுக்கட்டி

    ஆட்டம்போட்டோமே....

    இந்த பாடல் வரிகள் கிராமப்புற சிறுவர்களின் வாழ்வியலை அப்படியே படம்பிடித்து காட்டியிருந்தது.

    கோடை விடுமுறை விட்டால்போதும், குழந்தைகள் வீட்டை துறந்து, வெயிலை மறந்து நண்பர்களுடன் காடு....கரையெல்லாம் ஓடியாடி விளையாட சென்றுவிடுவார்கள்.

    வீட்டில் உள்ள பெரியவர்கள், இப்படி வெயிலில் விளையாடுகிறாயே உடம்புக்கு ஏதாவது ஆகிவிடப்போகுது என்பார்கள். அதையெல்லாம் பிள்ளைகள் ஒரு பொருட்டாக கருதியது இல்லை.

    பொதுவாக வெயில் காலத்தில் நமக்கு தெரிந்த நோய் என்பது வியர்க்குரு உள்ளிட்ட தோல் நோய்களும், வயிற்றுப்போக்கு, நீர்க்கடுப்பு போன்ற சில நோய்களும்தான்.

    இதையெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள், 'சூட்டுனால வருது... நல்லெண்ணெய் போடு சரியாகிவிடும் என்பார்கள்'.

    இதைத்தாண்டி, கோடை காலத்தில் சாப்பிடும் உணவுகள் விஷத்தன்மையாக மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் சூடான, ஈரப்பதமான கால நிலையால் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமி மற்றும் ரசாயான நச்சுக்கள் உண்ணும் உணவு மூலம் உடலுக்குள் புகுந்து, வயிற்று கோளாறுகள், குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

    இது தவிர வெப்பம் மிகுதியால் வரும் கண்நோய்கள். இந்த நோய்கள் வந்தால், ஒருவித வைரஸ் தொற்றால் இமைகளின் வெளிப்புற சவ்வு மற்றும் உள் கண்ணிமை பாதித்து விடும். இதனால் கண்ணில் ஒருவித கூச்ச உணர்வு ஏற்பட்டு கண்கள் சிவந்து நீர் வடியும்.

    அடுத்ததாக கோடையில் வருகின்ற ஒருவித மனச்சோர்வு. இதனால் ஏற்படும் பசியின்மை, எடை இழப்பு , தூங்குவதில் சிரமம் போன்றவை படாய் படுத்தி விடும். மேலும் கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பு என்பது முக்கிய பிரச்சினை.

    நமது உடலில் உள்ள நீர்த்தன்மைதான் நமது உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன. உடலில் ஓடும் ரத்தமும் நீர்தன்மை வாய்ந்ததே. ஆனால் கோடைக்காலத்தில் நாம் அறியாமலேயே வியர்வையின் மூலம் அதிகளவு நீர் மற்றும் உப்புக்களை இழக்கிறோம்.

    பொதுவாக உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உட்கொள்ளும் அளவை விட அதிகமாக இருந்தால், அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.

    இந்த நீரிழப்பு தன்மை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால், அவரது வாய் மற்றும் நாக்கு வறட்சியாக மாறும். கடுமையான சோர்வு, பசியின்மை, தலைவலி ஏற்பட்டு விடும். இது தவிர காதுகளுக்கு முன்னால் உள்ள பரோடிட் சுரப்பி பாதிக்கப்படும். இதன் விளைவாக குறிப்பிடத்தக்க வீக்கம், காய்ச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து சூடான அனல் காற்றை சுவாசிக்கும்போது, சுவாசப்பாதைகள் சுருங்கி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

    சூரியனில் இருந்து அதிகளவில் வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் நமது தோல் பகுதியில் ஆபத்தான நோய்களை விளைவிக்கும்.

    இதுபோன்ற கோடைகால நோய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடிய சாதாரண நோய்தான்.

    அதைவிட மிகவும் ஆபத்தானது 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்ப பக்கவாதம் தான்.

    இதை மருத்துவர்கள் சன் ஸ்ட்ரோக் என்றும் ஹைபர்தர்மியா என்றும் சொல்கின்றனர்.

    அது என்ன 'ஹீட் ஸ்ட்ரோக்'?

    பொதுவாக ஒருவர் கொளுத்தும் வெயிலில் வேலை செய்யும் போது, தலைவலி , தலைச்சுற்றல் மற்றும் பலவீனங்கள் ஏற்படுகின்றது. இதுதான் ஹீட் ஸ்ட்ரோக்கிற்கு முந்தைய அறிகுறி என்கின்றனர்.

    இந்த நிலைகள் தொடரும்போது, இருதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகள செயலிழப்பு, சுயநினைவின்மை ஏற்பட்டு விடும். அப்புறம் என்ன....மரணம்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற 23 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுவும் ஹீட் ஸ்ரோக் மூலம் ஏற்பட்ட இழப்பு என்றே கருதப்படுகிறது.

    திடீர் நெஞ்சுவலி போலவே இந்த வெப்ப பக்கவாத நோய் படு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். நன்றாக பேசிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று மயக்கமடைந்து சாய்ந்து விட்டால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது என்று கூறிவிடுகிறோம். அதுபோலவே இந்த நோயும் ஒன்றாக காணப்படுகிறது. இதனால் ஹார்ட் அட்டாக் எது ஹீட் ஸ்ட்ரோக் எது என்று அடையாளம் காண முடியாமல் போய் விடுகிறது.

    நம் உடலின் உள் வெப்பநிலையும், பி.எச் அளவும், எப்போதும் குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும். அப்போதுதான், ரத்தத்திலுள்ள ரசாயனங்கள் அனைத்தும் சரியாக வேலைசெய்யும். ரத்தத்தின் வெப்பம் குறைந்து, குளிர்ந்தநிலைக்குச் சென்றுவிட்டால் ரத்தம் உறையத்தொடங்கி விடும். இது அபாய நிலை.

    நமது உடல் வெப்பநிலையைச் சரியான அளவில் பராமரிக்க, நம் மூளையிலுள்ள ஹைப்போதாலமாஸில் ஒரு தெர்மோஸ்டாட் இருக்கிறது. தேவைப்படும்போது நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் நம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது.

    இந்த தெர்மாஸ்டாட் செயலிழந்துபோகும் நிலைக்குத்தான் ஹீட் ஸ்ட்ரோக் என்று கூறுகின்றனர். இதில் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக், மற்றும் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் என்று இரண்டு வகை.

    எந்த செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண சுற்றுப்புறச்சூழலில் இருக்கிற வெப்பத்தின் தாக்கத்தால் மட்டும் ஏற்படுவதுதான் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக். இது உடலில் சூரிய ஒளி படுவதால் மட்டுமே உண்டாகும். பெரும்பாலும் இந்த வகை ஸ்ட்ரோக் வயதானவர்களுக்குத்தான் ஏற்படும். ஆனால் இளவயது காரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதற்கு அவர்கள் வெயிலில் நீண்ட தூரம் ஓடுவது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களை சொல்லலாம்..

    குழந்தைகளை பொறுத்தவரை தெர்மோஸ்டாட் சுரபி வளர்ச்சியடைந்திருக்காது. அதனால் கோடை காலத்தில் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களுக்கு தெர்மோஸ்டாட் செயலிழந்து போயிருக்கும். இது நல்லநிலையில் இருந்தாலும், வெளிப்புற செயல்பாடுகளின் மூலமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே வெயில் காலத்தில் நாம் வெளியே நடமாடுவதில் கவனம் கட்டாயம் தேவை. இல்லை எனில் சுட்டெரிக்கும் வெயிலால் உயிர் குடிக்கும் நோயான ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் உருவாகிவிடும் அல்லவா?

    இதற்காகத்தான் கோடை காலத்தில் சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நமது உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவைவிட 500 மி.லி அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதுபற்றி மருத்துவர்கள் மேலும் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

    • குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.
    • குழந்தைகளுக்கு மெல்லிய பருத்தி ஆடைகளை உபயோகிப்பதே நல்லது.

    நட்சத்திரம் ஆரம்பித்து விட்டதால் முன்பை விட வெயில் அதிகமாக வாட்டி வதைக்கின்றது.குழந்தைகளுக்கும் கோடை விடுமுறை என்பதால் அவர்களை வீட்டில் அதிக நேரம் பூட்டி வைக்க முடியாது.அதற்கு மேல் பூட்டி வைத்தால் அவர்களின் விளையாட்டு மொபைல் போன்களிலும்,தொலைக்காட்சிகளிலும் கழியும். ஆனால்,அது குழந்தைகளின் உடல் நலனை பாதிக்கும்.அதனால் குழந்தைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் விளையாட அனுமதிப்பதே சிறந்தது.அதே நேரம் குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.

    குழந்தைகள் பொதுவாக விளையாடும் ஆர்வத்தில் உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்துவதை மறக்கின்றனர்.அதே நேரம் விளையாடும் பொழுது உடலில் உள்ள தண்ணீர் வியர்வையாக அதிகம் வெளியேறுகின்றது.எனவே உடலுக்குள் செல்வதைவிட அதிக அளவு திரவம் வெளியேறும்போது உடலில் நீர் வறட்சி ஏற்படுகின்றது. அதிக தாகம் எடுத்தல்,சிறுநீர் சிறிது சிறிதாக வெளியேறுதல் மற்றும் அடர்மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் ஆகியவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு குடிக்க அதிக அளவில் தண்ணீர்,இளநீர் மற்றும் ஓ. ஆர் .எஸ் பவுடர் முதலியவற்றை கொடுக்கலாம். இது உடலுக்கு தேவையான மினெரல் மற்றும் உப்பு ஆகியவற்றை தக்க வைத்துக்கொள்ள உதவும்.

    வெப்பத்தின் தாக்கம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிகமாக இருக்கும். எனவே,அந்த நேரத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்கலாம்.ஆறு மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லாமல் இருப்பதே சிறந்தது. ஏ.சி அறை என்றால், குளிர் 24 டிகிரி அளவில் இருப்பது போல் வைக்க வேண்டும். எப்போதும் ஏ.சி அறையிலேயே வைத்திருப்பதும் கூடாது.குழந்தைகள் வெளியில் செல்ல நேர்ந்தால் 15 நிமிடங்களுக்கு முன்பே சன் ஸ்கிரீன் பூசி விட வேண்டும்.

    வெயில் காலத்தில் குழந்தைகளை அதிகமான துணிகள் கொண்டு சுற்றினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்ககூடும். எனவே, குழந்தைகளுக்கு மெல்லிய பருத்தி ஆடைகளை உபயோகிப்பதே நல்லது.மிக மிருதுவான ஒரு பருத்தித் துணியால் போர்த்தினால் போதும். குழந்தைகளின் உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் கனமான கவுன் முதலியவைகளை அணிய கூடாது.இரவு நேரத்தில் இன்னும் கூடுதலாக கவனம் தேவை.

    கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுபொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ராகி, கம்பு,பார்லி போன்ற உணவு பொருட்கள் கோடை காலத்தில் உண்பதற்கு ஏற்றவை.அதே போல சீரகம், கொத்துமல்லி முதலியவற்றையும் சாப்பிடலாம்.குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு பின் திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது மேற்கண்ட பொருட்களை உணவுடன் சேர்த்து பார்லி வாட்டர், ராகி கஞ்சி, கம்பு கஞ்சி போன்ற வித விதமாவிதமான ரெசிபிக்களை சமைத்து கொடுக்கலாம். அதே போல் தண்ணீர்ச்சத்து அதிகமுள்ள, பழங்களையும் சாப்பிட அடிக்கடி கொடுக்க வேண்டும்.

    • உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது குடலின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்.
    • வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும்போது வயிறு தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும்.

    கோடை காலத்தில் வயிறு தொடர்பான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது குடலின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், குடல் எரிச்சல், சிரோசிஸ் போன்ற இரைப்பை குடல் நோய்களுக்கு வழிவகுக்கும். "வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும்போது வயிறு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கை உயரத்தொடங்கும்.

    அப்படி வெப்பநிலை உயர்வது நோய் எதிர்ப்பு அமைப்பையும் பலவீனப் படுத்திவிடும். உடலில் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கும். சமைத்த உணவு 4-5 மணி நேரத்திற்கு பிறகு கெட்டுப்போய்விடும். அதனால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்று பிரச்சினை தவிர்க்கமுடியாததாகிவிடும்" என்கிறார், மருத்துவ நிபுணர் ராம் ஆஷிஷ் யாதவ்.

    வெப்பநிலை உயர்வு குடல் நோய்களுக்கு வழி வகுக்கும் என்பதால் இரைப்பையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

    சமைத்த உணவுகளை 4 மணி நேரத்திற்குள் உட்கொண்டுவிட வேண்டும். குறிப்பாக மதியம் சமைத்த உணவை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    சமைத்த உணவு மற்றும் தண்ணீர் நிரப்பி இருக்கும் பாத்திரங்களை எப்போதும் மூடி வைக்க வேண்டும்.

    நறுக்கிய காய்கறிகள், பழங்களை இரவில் குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    அதிக உடல் உழைப்பு கொண்ட வேலைகளில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது சூரிய ஒளி உடலில் படும்படியான வேலைகளை மேற்கொண்டிருந்தாலோ குறைந்தது 5 லிட்டர் தண்ணீராவது பருகவேண்டும். மற்றவர்கள் 4 லிட்டர் வரை தண்ணீர் பருகுவது அவசியமானது.

    வீட்டை விட்டு வெளியே செல்லும்போது சூரிய ஒளி தலையில் விழாமல் இருப்பதற்கு குடையையோ, தொப்பியையோ பயன்படுத்துவது நல்லது.

    தண்ணீரை தவிர கரும்பு சாறு, பதநீர், மோர், பழச்சாறுகள் போன்ற பானங்களை பருகுவது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும். உணவில் தயிரை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    மசாலா மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளையும் தவிர்த்துவிடலாம்.

    கோடைகாலத்தில் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க மற்றொரு சிறந்த வழி பருவ காலத்தில் கிடைக்கும் பழங்களை உட்கொள்வதுதான். அவற்றில் உள்ளடங்கி இருக்கும் நீர்ச்சத்து உடலுக்கு குளிர்ச்சி தரும். தர்ப்பூசணி, முலாம் பழம், ஸ்டாபெர்ரி, பிளம்ஸ், பப்பாளி, அன்னாசி, கொய்யா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம். ஜூஸாக தயாரித்தும் பருகலாம். சாலட்டுகளாகவும் சாப்பிடலாம்.

    இரைப்பை குடல் நோய் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும். அது நிலைமையை மோசமாக்கும். இரண்டு நாட்களுக்கு மேல் வயிறு தொடர்பான அசவுகரியங்களை எதிர்கொண்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

    கோடை காலத்தில் குழந்தைகள் உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்களை அடிக்கடி வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள். அவர்கள் உட்கொள்ளும் உணவை கண்காணிப்பதும் அவசியம்.

    • கோடை காலத்தில் உணவுக்கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம்.
    • பல உணவுகள் நீரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

    கோடை காலத்தில் நிலவும் வெப்பநிலையை உடல் சமாளிப்பதற்கு உணவுக்கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். ஏனெனில் பல உணவுகள் நீரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உடல் உபாதைகளுக்கு ஆளாக்கிவிடும். வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது தவிர்க்க வேண்டிய 10 உணவுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...

    1. காபி

    நீரிழப்புக்கு வழிவகுப்பதுடன் உடலின் வெப்பநிலையை கூட அதிகரிக்க செய்துவிடும். வெயில் சுட்டெரிக்கும் கோடை காலங்களில் காபியை தவிர்ப்பது நல்லது. முழுவதுமாக கைவிட முடியாவிட்டாலும், காபி பருகும் அளவை குறையுங்கள்.

    2. ஊறுகாய்

    சோடியம் அதிகம் கலந்திருக்கும் ஊறுகாய் நீரிழிவை ஏற்படுத்தும். மேலும் கோடையில் ஊறுகாயை அதிகமாக சாப்பிடுவதும் அஜீரணத்தை உண்டாக்கும்.

    3. உலர் பழங்கள்

    உலர்பழங்கள் ஊட்டச்சத்து மிகுந்தவைதான் என்றாலும் கோடையில் அவற்றின் பயன்பாட்டை குறைத்துவிடுங்கள். ஏனெனில் அவை உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். தேவையற்ற அசவுகரியங்களுக்கு ஆளாக்கிவிடும்.

    4. பானங்கள்

    கார்பனேற்றப்பட்ட பானங்களை கோடையில் அதிகமாக பருகுவதற்கு பலரும் விரும்புவார்கள். அவற்றுள் அதிக சர்க்கரை கலந்திருக்கும். சட்டென்று நீரிழப்புக்கு வித்திடும்.

    5. மில்க் ஷேக்குகள்

    மில்க் ஷேக்குகளும் கோடை காலத்தில் விரும்பி உட்கொள்ளப்படும் பானங்களாக இருக்கின்றன. அதிக பால் சேர்க்கப்பட்ட மில்க் ஷேக்குகள் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி அவை கலோரிகளால் நிரம்பி இருக்கும். அவை உடலுக்கு ஆரோக்கியமற்றவை. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் உள்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

    6. காரமான உணவுகள்

    வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் சமயங்களில் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றுள் கலந்திருக்கும் கேப்சைசின் என்னும் சேர்மம் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. நீரிழப்பு, உடல் சூடு, அஜீரணம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

    7. பொரித்த உணவுகள்

    பஜ்ஜி, வடை, சமோசா மற்றும் பிரெஞ்ச் பிரை போன்ற எண்ணெய்யில் பொரித்தெடுக்கப்படும் அனைத்து வகையான உணவுகளும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். எளிதில் செரிமானம் ஆகாது. எனவே கோடையில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    8. பழச்சாறு

    பழச்சாறு பருகுவதில் தவறில்லை. ஆனால் பழங்களை சாப்பிடாமல் வெறுமனே பழச்சாறு உட்கொள்வது நல்லதல்ல. உடலுக்கு தேவையான நார்ச்சத்து பழங்களில் இருந்துதான் கிடைக்கும். பழச்சாறுகளில் அதன் வீரியம் குறைந்திருக்கும். அதனால் பழச்சாறுகளை விட பழங்கள் மற்றும் காய்கறிகள் சிறந்த தேர்வாக அமையும்.

    9. மது

    மது உட்கொள்வது நீரிழப்புக்கு வழிவகுக்கும். தொண்டை வறட்சி, தலைவலி போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். கோடையில் மது அருந்துவது அதிக வியர்வையை வெளிப்படுத்தும். அதனால் உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும்.

    10. உப்பு உணவுகள்

    உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொண்டால் உடல் நீரிழப்புக்கு ஆளாகும். உணவு மற்றும் உடலில் இருக்கும் தண்ணீரை உப்பு உறிஞ்சிவிடும். அதிகப்படியான உப்பு சேர்ப்பது சோம்பல், மயக்கம் போன்ற பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தினமும் இருமுறை குளிப்பது நல்லது.
    • கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    கொஞ்சம் உஷாராக இருந்தால் கத்திரி வெயிலை சமாளித்து விடலாம்.

    இதோ சில யோசனைகள்...

    • வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக இருக்கும் என்பதால், உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். மோர், கரும்புச்சாறு, இளநீர் போன்றவற்றை அருந்துங்கள்.

    • ஆரஞ்சு, தர்ப்பூசணி, திராட்சை, எலுமிச்சை, சாத்துக்குடி பழச்சாறு உடலுக்கு தேவையான தாதுப்பொருட்களை, வைட்டமின்களையும் அளிப்பதால், அதை அடிக்கடி அருந்தலாம்.

    • கூடுமானவரை காபி, டீயை தவிர்ப்பது நல்லது.

    • காரமான உணவு வகைகளை தவிர்த்து வெள்ளரிக்காய், கேரட், புடலங்காய், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    • கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சியையும் தரும்.

    • மாமிச உணவு வகைகள் உஷ்ணத்தை அதிகரித்து, வயிற்றுக் கோளாறை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை தவிர்ப்பது நல்லது.

    • சுட்டெரிக்கும் வெயிலில் வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்த்து விடுங்கள். கடை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருவதாக இருந்தால் காலை 10 மணிக்குள் போய்விட்டு திரும்பிவிடுவது நல்லது.

    • வெளியே செல்லும் போது மறக்காமல் குடையை எடுத்துச் செல்லுங்கள். (அதை திருப்பி கொண்டு வர மறந்துவிடாதீர்கள். ஏனெனில் குடையும் மறதியும் இரட்டைப் பிறவிகள்). குடை இல்லாத பட்சத்தில் தொப்பிஅணிந்து செல்லுங்கள். கிராமப்புறங்களில் வெளியே செல்லும் பெரியவர்களும், வயல்களில் வேலை செய்பவர்களும் தலைப்பாகை அணிவது வழக்கம். இது வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும்.

    • மென்மையான, தளர்வான பருத்தி ஆடைகளையே அணியுங்கள்.

    • தினமும் இருமுறை குளிப்பது நல்லது.

    • படுக்கை அறை நன்கு காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக ஜன்னலை திறந்து வைத்து அதன் அருகில் தலைவைத்து படுக்காதீர்கள். திருடர்கள் கைவரிசையை காட்டிவிடக்கூடும்.

    • வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சூடு தணியும்.
    • ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் தினமும் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. அனல் காற்று வீசுகிறது.

    கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர். பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெப்பத்தில் இருந்து பிள்ளைகளை காத்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடு செய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்தும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.

    கோடைக்கால நோய்களை தவிர்க்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் விடுத்து வருகின்றன. அந்த வகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய எளிய சில வழிமுறைகளை அறிவித்து உள்ளன.

    குறிப்பாக நடப்பு ஆண்டு சுட்டெரிக்கும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமானது. வெயிலில் அதிக நேரம் செல்ல வேண்டிய நிலைமை இருந்தால் வெப்பத்தை தடுக்கும் ஆடைகளை அணியுங்கள்.

    குறிப்பாக பருத்தி ஆடைகளே சிறந்தது. அடர் நிறம் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள். சன்ஸ்கிரீன் பூசுவதற்கு மறக்காதீர்கள். மதுபானம் அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். மது அதிகம் அருந்தினால் நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.

    மருத்துவ உதவியை நாடுங்கள்

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் மிக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடாதீர்கள். மின்சார உபகரணங்களை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். அவையும் வெப்பத்தை உருவாக்கி வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துவிடும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அவை வெப்ப பக்கவாதத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

    போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். மொட்டை மாடி போன்ற கான்கிரீட் தளம் கொண்ட மேற்பரப்புகளில் அதிக நேரத்தை செலவிடாதீர்கள். அவை சூரியனின் கதிர்களை அதிகம் பிரதிபலிக்கும். உங்கள் உடலை சட்டென்று வெப்பமாக்கிவிடும். பகல் வேளையில் வீட்டின் ஜன்னல்களை மூடிய நிலையில் வைக்காதீர்கள். ஏனெனில் இது வெப்பத்தை அதிகப்படுத்தி அறையை இன்னும் சூடாக மாற்றும்.

    அதிக நேரம் சூரிய ஒளி

    வெயில் காலத்தில் நீர் நிலைகளில் நீந்துவது உடலை இதமாக்கும். எனினும் பாதுகாப்பான சூழல் கொண்ட நீர்நிலைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வெயில்படும்படியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் உலோகப் பொருட்களைத் தொடாதீர்கள். அவை அதிக வெப்பமடைந்து தீக்காயங்களை ஏற்படுத்தும். முகம் மற்றும் கண்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி, கண்ணாடி அணிய மறக்காதீர்கள். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளை உண்ணாதீர்கள்.

    ஏனென்றால் இந்த உணவுகள் மந்தமாக உணர வைக்கும். மேலும் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். அதிக நேரம் சூரிய ஒளி சருமத்தில் படும்படி வைத்துக்கொள்ளாதீர்கள். அது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    கொளுத்திவரும் கோடை வெயிலை பொதுமக்கள் எவ்வாறு சமாளித்து வருகிறார்கள் என்பது பற்றி சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:-

    வீட்டில் இருந்தபடி வேலை

    கொசப்பேட்டையை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் நிர்மல் - பிரியா தம்பதி கூறும் போது, 'கோடையில் உணவு பழக்கத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் திட உணவுகளை குறைத்துவிட்டு திரவ உணவுகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். அதேபோல் சாலையின் ஓரத்தில் விற்பனை செய்யப்படும் பதநீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதுதவிர குழந்தைகளுக்கும் தேவையில்லாதவற்றை வாங்கி தருவதைவிட கோடைக்கு ஏற்ற தர்பூசணி பழம், கிர்ணி பழங்கள் வாங்கி தருகிறோம். அதேபோல் நிறுவனத்திலும் வீட்டில் இருந்து பணி செய்ய கூறியிருப்பதால் வெளியே செல்வது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா காலத்தில் வழங்கியபடி வாய்ப்புள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவிடலாம். இதன் மூலம் ஓரளவு கோடையின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்க முடியும்' என்றார்.

    சிக்கனுக்கு டாடா

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றும் தனலட்சுமி, பிரித்தி ஆகியோர் கூறும் போது, 'கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக தினசரி பதநீர், நுங்கு வாங்கி சாப்பிடுகிறோம். இதுதவிர வீட்டில் எலுமிச்சை பழ ஜூஸ் அடிக்கடி குடித்து வருகிறோம். அத்துடன் வீட்டில் சிக்கன் சூடு என்பதால் கோடையில் சிக்கனுக்கு டாடா சொல்லப்பட்டு உள்ளது. அதேபோல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள குடிநீரை சுத்தமாக பயன்படுத்துவதில்லை. வெதுவெதுப்பான குடிநீரை தான் பயன்படுத்துகிறோம். குடிநீரும் வெளியே எங்கும் சாப்பிடாமல் தேவையான குடிநீரை வீட்டில் இருந்தே கொண்டு வந்து பருகுவதால் கோடையின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பித்து வருகிறோம். வீட்டை விட்டு வெளியே போய்விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மதிய வேளைகளில் வெளியில் சென்றால் வியர்வையிலேயே குளிக்கும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது' என்றனர்.

    பழங்கள், காய்கறிகள்

    அமைந்தகரை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை (இந்திய மருத்துவம்) சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வெண்தாமரை செல்வி கூறும் போது, 'கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டால் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்து குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். அதேபோல் வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சூடு தணியும். உணவு முறையை பொறுத்தவரையில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து மிக்சியில் அரைத்து அதனை பாலில் கலந்து காய்ச்சி அருந்துவதன் மூலம் உடல் சூடு குறையும்.

    திராட்சை, கிர்ணிப்பழம், தர்பூசணி பழங்கள் மற்றும் கீரைகள், புடலங்காய், பீர்க்கன்காய், வெண் பூசணி, மஞ்சள் பூசணியை அதிகம் பயன்படுத்த வேண்டும். அத்துடன் சின்ன வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) நல்எண்ணெய், கடுகு, உளுந்து போட்டு வதக்கி சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். கண் எரிச்சல் அதிகம் இருப்பதாக உணருபவர்கள் இரவில் உள்ளங்காலில் வெண்ணெய் தடவி கொண்டு படுத்தால் கண் எரிச்சல் குறையும். ஆடைகளை பொறுத்தவரையில் காட்டன் ஆடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வெயிலில் செல்பவர்களுக்கு ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் என்பதால் நீர்மோர், தண்ணீர் அதிகம் குடித்துவிட்டு, குடைகள் மற்றும் தலையில் வைப்பதற்கான தொப்பிகளை எடுத்து செல்ல வேண்டும். வியர்வை துர்நாற்றத்தை போக்குவதற்கு குளிக்கும் தண்ணீரில் நலுங்கு மாவை கலந்து குளிக்க வேண்டும். சிறுநீர் கடுப்பு ஏற்பட்டால் வெட்டிவேரை இரவில் குடிநீரில் கலந்து காலையில் குடிக்கலாம். அதேபோல், எலுமிச்சம்பழம் பிழிந்து நன்னாரி சர்பத் அடிக்கடி குடிக்கலாம். காபியை தவிர்த்துவிட்டு டீயில் ஏலக்காய் போட்டு குடிப்பதால் சூட்டை தணித்து கோடையில் எந்தவித ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது' என்றார்.

    சூடுபிடித்த நுங்கு- பதநீர் வியாபாரம்

    எழும்பூரில் நுங்கு- பதநீர் வியாபாரம் செய்யும் தென்காசி செல்வா கூறும் போது, 'கோடை வெயில் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருப்பதால் நுங்கு, பதநீர் வியாபாரம் நன்றாக இருக்கிறது. தேவைப்படும் நுங்கு தென்காசியில் இருந்தும், பதநீர் மேல்மருவத்தூரில் இருந்தும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வியாபாரம் வருகிற ஜூலை மாதம் வரை இருக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக நுங்கு, பதநீர் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர்' என்றார்.

    கூடுதல் குடிநீர்

    மந்தைவெளியைச் சேர்ந்த வணிகர் பாலகிருஷ்ணன்-லதா தம்பதிகள் கூறும் போது, 'கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் தேவையில்லாமல் பகல் பொழுதில் வெளியே செல்ல வேண்டாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் வணிகராக இருக்கும் நான் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க முடியாது. ஆனால் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரவேண்டி இருக்கிறது. எனவே தினசரி கூடுதல் தண்ணீர் குடிக்கிறேன். இதுதவிர வெளியே வந்தால் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்யும் நுங்கு, பதநீர், பழ ஜூஸ், நீர்மோர் போன்றவற்றை வாங்கி குடித்து ஓரளவு கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்து கொள்கிறோம். இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் தினசரி காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளும் குளிக்கிறோம். கோடை வெப்பம் தணியும் நாளை எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கிறோம்' என்றனர்.

    வெளியில் தலைகாட்டவில்லை

    விருகம்பாக்கம் சொர்ண லட்சுமி கூறும் போது, 'கோடை என்றாலே விடுமுறை கொண்டாட்டம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் கோடை வெப்பத்தின் தாக்கம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அதுவும் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு பழக்கத்தையும் சற்று மாற்றி வருகிறோம். தண்ணீர் ஆகாரத்தை தான் அதிகம் சாப்பிட்டு வருகிறோம். டாக்டர்கள் கூறியபடி தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்வதில்லை. பழங்கள் மற்றும் கீரைகளையும் அதிகம் பயன்படுத்துவதால் பெரிய அளவில் கோடை வெப்பத்தால் பாதிக்கப்படவில்லை. இன்றும் ஓரிரு மாதங்களில் இதே உணவு பழக்கத்தை தான் கடைப்பிடிப்போம். வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டிலே இருக்கிறோம். இதனால் வெளியில் தலை காட்ட முடியவில்லை' என்றார்.

    • கோடை வெப்பத்தை சமாளிப்பதற்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.
    • அடர் நிறம் கொண்ட துணிகள் அணிவதை தவிர்க்கவும்.

    கோடை காலத்தில் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகளை சமாளிப்பதற்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம். அதன் மூலம் உடல் ஆற்றலை அதிகரித்துக்கொள்ளலாம். தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து உடலை தற்காத்தும் கொள்ளலாம். அதற்கு செய்ய வேண்டிய 10 விஷயங்கள்:

    1. அடர் நிறம் கொண்ட துணிகள் அணிவதை தவிர்க்கவும். வெளிர் நிறத்திலும் வெள்ளை நிற ஆடைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

    2. காபின் அதிகம் கொண்ட பானங்கள் நீரிழப்பை ஏற்படுத்தும். அந்த பானங்கள் பருகுவதற்கு இதமாக இருந்தாலும் கோடை காலத்தில் அவற்றை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. மதுப்பழக்கத்தையும் தவிர்க்கவும். அதுவும் நீரிழப்பை அதிகப்படுத்திவிடும்.

    3. வெயிலின் தாக்கத்தால் உடலில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான வியர்வை உடலில் இருந்து சோடியம் மற்றும் பொட்டாசியத்தை இழக்க வழிவகுக்கும். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர், ஸ்வீட் கார்ன், தர்பூசணி, வெள்ளரி ஆகியவை கோடைகால உணவில் அவசியம் இடம் பெற்றிருக்க வேண்டும். இவை இழந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை மீட்டெடுக்க உதவும்.

    4. புரதம் மற்றும் கொழுப்பு கொண்ட உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். மேலும் அவை உடலின் அடிப்படை வெப்பநிலையையும் அதிகப்படுத்திவிடும். இந்த கோடை வெப்பத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது சிறப்பானது.

    5. மூன்று வேளை சாப்பிடும் உணவுகளை கோடை காலத்தில் ஐந்து முறையாக பிரித்து சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவது செரிமானம் இலகுவாக நடைபெற உதவும். நாள் முழுவதும் உடல் ஆற்றலுடன் செயல்படவும் வித்திடும்.

    6. நேரடி சூரியத் தொடர்பைத் தவிர்க்கவும். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்க்கவும். தலையை பாதுகாக்க குடை மற்றும் தொப்பியைப் பயன்படுத்தவும். சன்ஸ்கிரீன் பூசுவதற்கும் மறந்துவிடாதீர்கள்.

    7. மாய்ஸ்சுரைசர் போடுவது சருமத்திற்கு கூடுதல் சுமையாகத் தோன்றலாம். ஆனால் அது சருமத்தை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். மென்மையான கிரீம் அல்லது கற்றாழை ஜெல் சருமத்திற்கு இதமளிக்கும்.

    8. கோடையில் எல்லோரும் விரும்பும் பயிற்சிகளில், முதன்மையானது நீச்சல். அது உடலை வெப்பத்தில் இருந்து காக்கும். காலை அல்லது மாலையில் நடைப்பயிற்சி செய்வது, சைக்கிள் ஓட்டுவது கூட புத்துணர்ச்சி அளிக்கும்.

    9. காதுகளின் பின்புறம், மணிக்கட்டு, கழுத்து, முழங்கைகள், முழங்கால்கள் போன்ற பகுதிகளில் ஐஸ்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த பாட்டிலை உருட்டியும் மசாஜ் செய்யலாம். அது உடலை விரைவாக குளிர்விக்க உதவும்.

    10. அடிக்கடி தண்ணீர் பருக மறக்காதீர்கள். கோடையை சமாளிக்க தினமும் போதுமான அளவு ஓய்வெடுங்கள்.

    • கோடை காலத்தில் ‘டேபிள் பேன்’ பயன்படுத்துவது நல்லது.
    • தேவையில்லாமல் விளக்குகளை எரியவிடக்கூடாது.

    கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெப்பத் தாக்கம் வீட்டின் உள்ளேயும் வெளிப்படும். அப்போது மின் விசிறியை உபயோகித்தாலும் அனல் காற்றுதான் அறைக்குள் சுழன்று கொண்டிருக்கும். வீட்டில் 'எக்ஸாஸ்ட் பேன்' இருந்தால் அதை உபயோகப்படுத்துவது நல்லது. பெரும்பாலும் சமையல் அறையில்தான் 'எக்ஸாஸ்ட் பேன்' பயன்பாட்டில் இருக்கும். சமையல் முடிந்ததும் அதனை அணைத்துவிடாமல் சில மணி நேரங்கள் ஓட விடுவது வீட்டில் இருக்கும் வெப்பம் சூழ்ந்த காற்றை வெளியேற்ற உதவும். அதனால் அறைக்குள்ளும் வெப்பத்தாக்கம் குறையும்.

    கோடை காலத்தில் 'டேபிள் பேன்' பயன்படுத்துவது நல்லது. அது அதிக அளவில் வெப்ப காற்றை வெளியேற்றாது. அதன் முன்பு அகன்ற பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளை கொட்டி வைக்கலாம். டேபிள் பேனில் இருந்து வெளிப்படும் காற்று ஐஸ்கட்டிகளில் பரவி அறையில் குளிர்ந்த காற்றை வீசச்செய்யும்.

    கோடை காலத்தில் சிந்தடிக், பாலியஸ்டர் போன்ற துணிகளால் ஆன திரைச்சீலைகளை பயன்படுத்தினால் அது அதிக வெப்பத்தை உமிழும். திரைச்சீலைகள் மட்டுமின்றி சோபா கவர், மெத்தை, தலையணை உறை போன்றவற்றுக்கும் காட்டன் துணிகளை பயன்படுத்தவேண்டும். மின் சாதனங்களும் வெப்பத்தை உமிழக்கூடியவை என்பதால் கோடை காலத்தில் அவற்றின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். பகல்வேளையிலும், இரவு வேளையிலும் தேவையில்லாமல் விளக்குகளை எரியவிடக்கூடாது.

    வீட்டில் கணினி இருந்தால் அதனை உபயோகித்து முடித்ததும் அணைத்துவிட வேண்டும். பிரிட்ஜும் வெப்பத்தை உமிழும் என்பதால் அதில் அதிக பொருட்களை சேமித்துவைக்கக்கூடாது. அவை அதன் செயல்பாட்டை அதிகரிக்க செய்து அதிக வெப்பத்தையும் வெளியேற்றும். வீட்டில் தேவையற்ற பொருட்கள் சேர்வதற்கும் அனுமதிக்கக்கூடாது. அவையும் வெப்பத்தை கடத்தும். வீட்டை சுற்றி காலி இடம் இடம் இருந்தால் ஆங்காங்கே செடிகள் வளர்க்கலாம்.

    அவை வீட்டுக்குள் குளிர்ச்சி தன்மை நிலவ உதவும். அறைக்குள் ஆங்காங்கே கண்ணாடி டம்ளர்கள், குவளைகளில் கூழாங்கற்களைப் போட்டு வைத்தாலும் வீட்டில் குளுமை தென்படும். வீட்டின் மொட்டை மாடி தரைத்தளத்தில் மாலை வேளையில் தண்ணீர் தெளித்தால், இரவு வேளையில் சீலிங் வழியாக வெப்பம் கீழே வருவது தடுக்கப்படும். அடிக்கடி தரைத்தளத்தை 'மாப்' போட்டு துடைத்து வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதும் நல்லது. அறைகளுக்குள் காற்று விசாலமாக புகும்விதத்தில் வீட்டை வடிவமைத்து கட்டுவது மிக அவசியம்.

    • வெப்பம், வறண்ட வானிலை ஆகியவை சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.
    • கோடை காலத்தில் பெரும்பாலான மக்கள் நீரிழப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்.

    கோடை கால நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து வேலூர் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை ஆயுர்வேத டாக்டர் சுபஸ்ரீ பியூலா விளக்கம் அளித்துள்ளார்.

    ஆயுர்வேத டாக்டர்

    வேலூர் சத்துவாச்சாரி அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனையில் ஆயுர்வேத டாக்டராக பணிபுரிபவர் சுபஸ்ரீ பியூலா. இவர் பெண்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் நோய்களும், அதிலிருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் கூறினார்.

    அவர் கூறியதாவது:-

    கோடை காலம் வந்துவிட்டது, அதிகரித்து வரும் வெப்பநிலை பல நோய்களை கொண்டு வரலாம். இந்தியாவில், கோடைக்காலம் ஆண்டின் வெப்பமான பருவமாகும். பொதுவாக மார்ச் முதல் ஜூன் வரை வெப்பமான வானிலை இருக்கும். இந்த நேரத்தில் தோல், கண்கள் மற்றும் இரைப்பை அமைப்பு உள்பட முழு உடலையும் வெப்பம் பாதிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால், கடுமையான வெப்பம் மற்றும் இடைவிடாத வறட்சி ஆகியவை பொதுவான கோடைக்கால நோயைக் கொண்டுவரும். கோடையில் ஏற்படக்கூடிய சில நோய்கள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

    கோடையில் ஏற்படும் நோய்கள்

    கோடை காலத்தில் பெரும்பாலான மக்கள் நீரிழப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். ஒருவர் அருந்தும் நீர் அவரது உடல் தேவையை பூர்த்தி செய்யாதபோது நீரிழப்பு ஏற்படுகிறது. நீரிழப்பு சிறுநீர் பாதை தொற்றுகளுக்கு வழிவகுக்கும். எனவே கோடையில் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். கோடை காலத்தில் வானிலை வெப்பமாக இருக்கும். இது கிருமிகள் அல்லது பாக்டீரியாக்கள் வளர ஏற்றதாக இருக்கும்.

    கோடை மாதங்களில் வெப்பம், வறண்ட வானிலை ஆகியவை சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும். சிறுநீரகக் கல் உருவாவதற்கான ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. இருப்பினும், 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் கோடையில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெண்களை விட ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    கோடை காலத்தில் சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு முதன்மையான காரணம் நீர்ச்சத்து குறைபாடுதான். நம்மில் பெரும்பாலோர் ஆண்டு முழுவதும் மற்ற பருவங்களை விட வெப்பமான மாதங்களில் வெளியில் இருக்கிறோம். இதன் விளைவாக அதிக வியர்வை வெளியேறுகிறது. சரியான நீரேற்றம் இல்லை என்றால், உடல் திரவங்கள் உணவு தாதுக்களுடன் அதிக செறிவூட்டப்பட்டு கற்களாக மாறக்கூடும்.

    அன்றாட செயல்பாடுகளைத் தொடரவும், நீர் இழப்பை ஈடுகட்டவும் அதிக தண்ணீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகள், மோர் மற்றும் இளநீர் ஆகியவற்றை அருந்த வேண்டும்.

    தோல் பிரச்சினைகள்

    நமது தோலில் வெளிப்படும் பகுதி குளிர்காலம் மற்றும் கோடைக்காலம் ஆகிய இரண்டிலும் பாதிக்கப்படுகிறது. நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தீங்கு விளைவிக்கும். சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் தோலில் ஊடுருவி பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும், உடலில் மெலனின் உள்ளடக்கம் குறைவாக உள்ளவர்கள் மெலனோமா (ஒரு வகை தோல் புற்றுநோய்) போன்ற கடுமையான தோல் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தோல் எரிச்சல், வறட்சி மற்றும் வெடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.

    சளி, தட்டம்மை, சின்னம்மை, சொறி, தோல் கொப்பளம் போன்றவை கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான நோய்களாகும். வெப்பத் தடிப்புகள் பொதுவாக ஆடைகளால் மூடப்பட்ட பகுதிகளில் ஏற்படும். குழந்தைகளுக்கு இந்த தொற்று அடிக்கடி வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்துகிறது.

    இரைப்பை குடல் அழற்சி

    வெப்பம் அதிகரிக்கும் போது, ஒருவரது செரிமான கொள்ளளவு குறைந்து சில செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் உணவுப் பழக்கத்தை கவனித்துக்கொள்வது மற்றும் வெப்பத்தை வெல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது அவசியம்.

    வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றுக் குடல் அழற்சி பொதுவாக எல்லா வயதினருக்கும் காணப்படும். அதன் அறிகுறிகளில் சில வாந்தி, வயிற்றுப்போக்கு, மலத்தில் ரத்தம், நீர்ப்போக்கு மற்றும் வயிற்று வலி ஆகியவை அடங்கும்.

    மூலிகை, பழங்கள்

    நீங்கள் காரமான, வறுத்த, உணவுகளின் பிரியராக இருக்கலாம், ஆனால் கோடையில் அவற்றைத் தவிர்க்க வேண்டும். அவை குடல் புண், வீக்கம் மற்றும் வயிற்று அழற்சியை கூட ஏற்படுத்தும். புரோபயாடிக்குகள் குடலுக்கு உகந்த பாக்டீரியாவைக் கொண்டிருப்பதால் உதவியாக இருக்கும். மோரில் புரதம் நிரம்பியுள்ளது. அதில் உள்ள பாக்டீரியாக்கள் உங்கள் செரிமான செயல்முறையை எளிதாக்கும். வயிற்றுப்போக்கை நீக்கும்.

    கோடையில் உடல் சூட்டைத் தணிக்க நன்னாரி, வெட்டிவேர், பூசணிக்காய், கற்றாழை, தர்பூசணி, வெள்ளரி, நெல்லிக்காய் போன்ற மூலிகை மற்றும் பழங்களை சாப்பிடலாம்.

    உடற்பயிற்சி

    கோடைகாலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட உணவு முறை, வானிலைக்கு ஏற்ப புதிய உடற்பயிற்சி முறை. வெப்பமான காலநிலையின் ஆரம்பம் உங்கள் உடலை பல்வேறு வகையான நோய்களுக்கு உள்ளாக்கும். எனவே ஆரோக்கியமான கோடைக்காலத்திற்கு நான் கூறிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும். அவ்வாறு செயல்பட்டால் கோடை வெப்பத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுப்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சன்ஸ்கிரீன் பூசிவிடவும். அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை பூசவேண்டியது அவசியம்.
    கோடை என்றாலே `உஷ்.. என்ன வெயில்!' என்று, முகம் சுளிக்கவேண்டாம். ஒரு ஐஸ்கிரீம் சுவைப்பது போன்ற உணர்வுடன் `ஜில்லென்று' கோடைகாலத்தை ஜாலியாக கழிக்கவும் வாய்ப்பிருக்கிறது. கோடை காலத்தில் குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். காலை 11 மணிக்கு முன்பும், மாலை 4 மணிக்கு பிறகும் குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுமதிக்கவேண்டும். சூரியன் உச்சத்தில் இருக்கும் இதர நேரங்களில் இன்டோர் கேம்ஸ்களை வீட்டிற்குள்ளே விளையாட ஊக்குவியுங்கள்.

    குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுப்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சன்ஸ்கிரீன் பூசிவிடவும். அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை பூசவேண்டியது அவசியம். சூரிய கதிர்கள்பட்டு சரும பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இந்த சன்ஸ்கிரீன் உதவும். சூரிய கதிர்களின் கடுமையான தாக்கத்தால் குழந்தைகளின் சருமத்தில் `சன் பர்ன்' காயம் ஏற்பட்டால் அந்த இடங்களில் ஐஸ்கட்டிகளால் ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த தண்ணீரையும் அந்த இடத்தில் ஊற்றலாம்.

    குழந்தைகள் கடுமையான உஷ்ணத் தாக்குதலுக்கு உள்ளானால் தலைச்சுற்றல், மயக்கநிலைகூட ஏற்படலாம். அப்போது அவர்களுக்கு உடல்வெப்ப நிலை அதிகரிக்காது. ஆனால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். கோடைகாலத்தில் பருகும் தண்ணீரின் அளவு குறைவதுதான் இதற்கான காரணம். இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட குழந்தையை உடனே காற்றோட்டமிக்க பகுதிக்கு கொண்டு சென்று, ரத்த ஓட்டம் அதிகரிக்கும் விதத்தில் தலையை சற்று தாழ்த்திவைக்கவேண்டும். குளிர்ந்த நீரில் முக்கிய டவலால் முகம் மற்றும் உடல்பகுதியை துடைத்துவிடுங்கள். சத்தமாக அழைத்தும் குழந்தை பதில் குரல் தராவிட்டாலும், சுவாசம் சரியாக நடந்துகொண்டிருக்கிறதா என்று பாருங்கள். சுவாசத்தில் தடை ஏற்பட்டிருந்தால் முதலுதவி அளித்துவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுங்கள்.

    கோடையில் குழந்தைகளை போதுமான அளவு தண்ணீர் பருகவையுங்கள். அவர்களுக்காக சிப்பர் பாட்டில் வாங்கி, அதில் தண்ணீரை நிறைத்துக்கொடுங்கள். மதியத்திற்குள் குறிப்பிட்ட அளவில் பருகிவிட்டால் பரிசு தருவதாக கூறி, தினமும் தேவையான அளவில் நீரை பருகவைத்து விடுங்கள். எலுமிச்சை சாறில் உப்பும் தண்ணீரும் கலந்துகொடுங்கள். கஞ்சிதண்ணீர், மோர் போன்றவைகளையும் குடித்துக்கொண்டிருக்கச் செய்யலாம். பழச்சாறும் பருகக் கொடுக்கலாம்.
    ×