search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smart City"

    • மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற 2023-ம் ஆண்டுக்கான இந்தியா ஸ்மார்ட் சிட்டிகள் மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.
    • ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை மத்தியபிரதேசத்துக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார்.

    இந்தூர்:

    நாட்டில் 100 நகரங்களில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்புகளை உலகத்தரத்தில் உயர்த்தும் நோக்குடன் 'ஸ்மார்ட் சிட்டிகள்' எனப்படும் 'பொலிவுறு நகரங்கள்' திட்டத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்ற 2023-ம் ஆண்டுக்கான இந்தியா ஸ்மார்ட் சிட்டிகள் மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.

    அப்போது அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் 66 விருதுகளை வழங்கினார். அதில் 31 விருதுகள் நகரங்களுக்கும், 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் 7 நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

    நாட்டின் 100 ஸ்மார்ட் சிட்டிகளில் சிறந்த நகரத்துக்கான 'தேசிய ஸ்மார்ட் சிட்டி விருதை' இந்தூருக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார். குஜராத் மாநிலத்தின் சூரத்துக்கு 2-வது இடத்துக்கான விருதும், உத்தரபிரதேசத்தின் ஆக்ராவுக்கு 3-வது இடத்துக்கான விருதும் அளிக்கப்பட்டன.

    மாதிரி சாலைகள் அமைப்பு, ஏரிகள் மீட்பு, புதுப்பிப்புக்கான சூழல் உருவாக்க பிரிவு விருதும், தென்மண்டல ஸ்மார்ட் சிட்டி விருதும் தமிழ்நாட்டின் கோவை மாநகருக்கு வழங்கப்பட்டன.

    குளங்கள் பாதுகாப்புக்காக தஞ்சாவூருக்கு கலாசார விருதும், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் மின் கண்காணிப்புக்காக தூத்துக்குடிக்கு சமூக அம்சங்கள் விருதும் கிடைத்தன.

    'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை மத்தியபிரதேசத்துக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார். தமிழ்நாட்டுக்கு 2-வது இடத்துக்கான விருது வழங்கப்பட்டது. ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்களுக்கு 3-வது இடத்துக்கான விருது கூட்டாக வழங்கப்பட்டது.

    இந்த மாநாட்டில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார மந்திரி ஹர்தீப் சிங் பூரி, மத்தியபிரதேச கவர்னர் மங்குபாய் படேல், முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
    • நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது.

    நெல்லை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கே சுமார் 120 வடமாநில பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தற்போது மழைக்காலம் தொடங்கி விட்ட காரணத்தினால் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி, சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் சுகாதார தூய்மை பணியாளர்கள் அடங்கிய குழுவினர் கொண்டு கூட்டு துப்புரவு பணி மற்றும் தீவிர கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.

    இதற்காக கொசுப்புகை மருந்து வாகனம் மற்றும் 4 புகை மருந்து மூலம் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    டவுன் மார்க்கெட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    டவுன் மண்டலத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர் இளங்கோ முன்னிலையில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து டெங்கு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    டவுன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் உரிமையாளர்கள் மற்றும் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அங்கு நடந்த முகாமில் டெங்கு பாதிப்பு குறித்து விளக்கி பேசினார்.

    பின்னர் அவரது மேற்பார்வையில் 4 கொசு மருந்து எந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது. டவுன் மார்க்கெட் பகுதிகள் முழுவதும், நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது. அந்த பகுதியில் கட்டிட பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில்

    மேஸ்திரி அருணாச்சலம், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் சங்கர் மற்றும் பரப்புரையாளர்கள் மாயாண்டி, சோமசுந்தரம், வேலு பிரபாகரன் மற்றும் பணியாளர்கள், பயிற்சி கல்லூரி மாண வர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். 

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ஆங்கிலத்தில் வரவேற்பு பலகை வைக்கப்பட்டுள்ளது தமிழ் ஆட்சி மொழி சட்ட அரசாணையை மீறும் செயலாகும்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, உதவி கமிஷனர் தாணுமூர்த்தி, உதவி பொறியாளர் வாசு தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாளை கே.டி.சி. நகர் மேம்பாலத்தின் இருபுறமும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இரும்பு சட்டங்களால் 'திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி' என ஆங்கிலத்தில் வரவேற்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இது நெல்லை மாநகராட்சி ஆணையாளரின் தமிழ் ஆட்சி மொழி சட்ட அரசாணையை மீறும் செயலாகும். எனவே அங்குள்ள ஆங்கில எழுத்துக்களை அகற்றி விட்டு தமிழிலில் வரவேற்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    34-வது வார்டு கவுன்சிலர் சர்மிளா கொடுத்த மனுவில், எனது வார்டுக்குட்பட்ட சமாதான புரம் முதல் மிலிட்டரி லைன் வரையிலான 60 அடி சாலையில் 20 அடிகள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    மேலும் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்ற செல்லும் போது அங்கு இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடி யாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 

    • என்.ஆர். இலக்கிய பேரவை வலியுறுத்தல்
    • பொதுமக்கள் மட்டுமின்றி, இங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும் பெரும் நன்மை உண்டாகும் என்பது நிதர்சன உண்மை.

    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தற்போது 133 பணிகள் ரூ. 930 கோடி நிதியில் நடைபெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

    புதுச்சேரி பஸ் நிலையம், அண்ணா திடல், பெரிய மார்க்கெட், பழைய ஜெயில் போன்ற இடங்கள் இத்திட்டத்தின் மூலம் புதுப்பொலிவு பெற்று, நமது புதுச்சேரி மக்களுக்கு மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனளிப்பதாகும்.

    இந்த மத்திய அரசின் திட்டம் நமது புதுச்சேரி மாநிலத்திற்கு ஒரு வரப் பிரசாதம் என்றே கூறலாம். இதன் மூலம் பொதுமக்கள் மட்டுமின்றி, இங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும் பெரும் நன்மை உண்டாகும் என்பது நிதர்சன உண்மை.

    ஆனால், இதற்கு முன் மாநில அரசால் தொடரப்பட்ட பல பணிகளும், தற்போது ஸ்மார்ட் சிட்டி மூலம் பணி நடைபெற்று வரும் ரூ.12 கோடியே 19 லட்சம் மதிப்பிலான, அண்ணா திடல் பணிகளும் தாமதமானதை முன் உதாரணமாகக் காட்டி, மேற்கண்ட புதிய பணிகளும் தாமதமாகும் என வியூகத்தின் பேரில், வியாபாரம் பாதிக்கும் என்று வியாபாரிகள் போராட்டம் உள்ளிட்டவை நடத்தி திட்டப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவது வருந்தத்தக்கதாக உள்ளது.

    இந்த திட்டங்கள் நிறைவு பெற்றால், நீண்ட காலத்திற்கு, தற்போதிருப்பதை விட சிறப்பாக வியாபாரம் செய்ய முடியும், வருங்கால சந்ததியினரும் பயனடைவார்கள் என்பதை வியாபாரிகள் சிந்திக்க வேண்டும்.

    புதுவை நகரப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடர்பாக தொடர்ந்து அவ்வப்போது தகராறுகள் ஏற்படுவதால் பணிகளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் பெரிய மார்க்கெட் கட்டுமான பணி தொடர்பாகவும் இன்னும் முடிவு எடுக்கப்படாமல் இழுபறி நிலையே நீடித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    எனவே, புதுச்சேரி மாநிலத்திற்கு நீண்ட காலத் தீர்வாக, பல்வேறு நன்மைகளை உருவாக்கும் நல்லதொரு மத்திய அரசின் திட்டம் நிறைவேற, வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இடித்து புதிதாக கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.
    • பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் இருந்து சில டவுன் பஸ்களை இயக்கபட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முழுமையாக இடித்துவிட்டு ரூ. 79 கோடியில் புதிதாக கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    கட்டுமான பணிகள்

    பல்வேறு பிரச்சினைகளை கடந்து அங்கு கட்டுமான பணிகள் பெருமளவில் முடிவுற்ற நிலையில், கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக பஸ் நிலையம் திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக சுமார் 6 ஆண்டுகளாக சந்திப்பு பகுதியில் பஸ்களை உள்ளே இயக்க முடியாத நிலை இருந்தது.

    மாற்று ஏற்பாடாக தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்ததால் சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.

    கமிஷனர் ஆய்வு

    இதனால் அப்பகுதி வியாபாரிகள் தச்சை மண்டல முன்னாள் சேர்மனும், கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன் தலைமையில் மாநகராட்சியை முற்றுகையிட்டு மனு அளித்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், பஸ் நிலையத்தை திறக்க கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நாளை முதல்....

    இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி சந்திப்பு பஸ்நிலையத்தின் வெளிப்பகுதியில் இருந்து சில வழித்தடங்களுக்கு டவுன் பஸ்களை இயக்கபட உள்ளது. இதற்காக ராஜா பில்டிங் சாலையில் கட்டுமான பணிக்காக சுற்றி அமைக்கப்பட்டு இருந்த தகர சீட்டுகள் அகற்றப்பட்டு, சற்று உள்ளே தள்ளி அமைக்கப்பட்டது.

    இந்த பகுதியில் பஸ்கள் வந்து செல்வதற்கு வசதியாக பொக்லைன் உதவியுடன் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தவுடன் நாளை முதல் இங்கிருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    தொடர்ந்து அடுத்த வாரத்தில் தென்காசி, கடையம், பாபநாசம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையத்திற்குள் செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • . இந்த பணி–களை ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர் கிரன் குராலா ஆய்வு மேற்கொண்டார்.
    • நொய்–யல் நதியில் இருபுறமும் சாலைகள் அமைத்து பொழுது போக்கு அம்சங்களுடன் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நொய்யல் நதியில் இருபுறமும் சாலைகள் அமைத்து பொழுது போக்கு அம்சங்களுடன் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர் கிரன் குராலா ஆய்வு மேற்கொண்டார். மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் உடனிருந்தனர்.

    நொய்–யல் ஆற்றின் சிறப்பு குறித்தும், கரையின் இருபுற–மும் சாலைகள் அமைத்து மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்தும் மேயர் எடுத்துக்கூறினார். திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் தரத்துடன் மேற்கொள்ள திட்ட இயக்குனர் உத்தரவிட்டார்.

    • 100 நகரங்களை ‘ஸ்மார்ட் சிட்டி’களாக மாற்றும் திட்டத்தை கடந்த 2015-ல் மத்திய அரசு தொடங்கி வைத்தது.
    • 78 நகரங்களின் பணியும் இன்னும் 4 மாதங்களுக்குள் செய்துமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஆக்ரா, வாரணாசி, அகமதாபாத், சென்னை, கோவை உள்பட 100 நகரங்களை 'ஸ்மார்ட் சிட்டி'களாக மாற்றும் திட்டத்தை கடந்த 2015-ல் மத்திய அரசு தொடங்கி வைத்தது.

    இந்த திட்டத்தின் கீழ் கட்டமைப்பு வசதிகள், சுற்றுப்புற சூழல், மக்கள் வாழ்க்கைக்கு தேவையான நவீன வசதிகள் அனைத்தும் செய்யப்படும்.

    முதற்கட்டமாக தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, வேலூர் ஆகிய 8 நகரங்கள் மற்றும் போபால், இந்தூர், வாரணாசி, ஆக்ரா உள்பட 22 நகரங்களின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

    அடுத்தமாதம் (ஏப்ரல்) இந்த 22 நகரங்களும் ஸ்மார்ட் சிட்டிகளாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 78 நகரங்களின் பணியும் இன்னும் 4 மாதங்களுக்குள் செய்துமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 322 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 804 பணிகள் தேர்வு செய்யப்பட்டது. அதில் 5,246 பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த திட்டங்களை நிறைவேற்ற இதுவரை ரூ.36,447 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதில் ரூ.32,095 கோடி செலவிட்டு 88 சதவீத பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

    • நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • வர்த்தக மையத்தில் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்துவதற்கு 2 பெரிய அரங்குகள் கட்டப்பட்டு உள்ளன

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான திட்டப்பணிகள் முடிவடைந்த நிலையில் அவை மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டு விட்டன.

    வர்த்தக மையம்

    அந்த வகையில் டவுன் எஸ்.என்.ஹைரோட்டில் நெல்லை மாநகராட்சி பிரதான அலுவலகம் எதிரே கட்டப்பட்டு வரும் வர்த்தக மையம் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.

    இந்த இடமானது திறந்த வெளியாக இருந்த நிலையில், அங்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் 45 நாட்கள் பொருட்காட்சி நடைபெற்று வந்தது. இதனை மாநகர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் சென்று கண்டுகளித்து செல்வது வழக்கம்.

    ரூ.56.71 கோடி மதிப்பு

    இந்நிலையில் அந்த இடத்தில் ரூ.56.71 கோடியில் வர்த்தக மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதன் முன்பு இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் முழுமையாக இடித்து தள்ளப்பட்டு அங்கு கட்டுமான பணிகள் தொடங்கின. தற்போது அந்த பணிகள் சுமார் 80 சதவீதத்தை எட்டி உள்ளது.

    இந்த மையத்தில் அரசு, தனியார் நிறுவன கருத்தரங்குகள், உணவு கண்காட்சி, புத்தக திருவிழா, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்துவதற்கு 2 பெரிய அரங்குகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த அரங்குகளுக்கு இடையே நடந்து செல்ல பாதை, அமர்ந்து உணவு சாப்பிடும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    குளிர்சாதன வசதி

    இதில் ஒரு அரங்கம் குளிர்சாதன வசதி கொண்டதாக வும், மற்றொன்று குளிர்சாதன வசதி இல்லாததாகவும் கட்டப்பட்டு உள்ளது. இங்கு நிர்வாக அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கண்ணாடிகள் பொருத்தி அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலையில் இருந்து உள்ளே செல்பவர்களை வரவேற்கும் விதமாக பொதுமக்களை கவரும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் நுழைவு வாயில் ஆர்ச் அமைக்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதியின் மத்திய பகுதியில் அமைந்துள்ளதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    விசாலமான கார் பார்க்கிங்

    இந்த வர்த்தக மையத்தின் கீழ்தளத்தில் சுமார் 370 கார்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு விழாக்கள் நடத்துவதற்கும் இந்த கட்டிடம் பெரிதும் உதவியாக இருக்கும். இதனால் இதுபோன்ற விழாக்களுக்கு தனியார் மண்டபங்களை நாடி செல்லவேண்டிய தேவை இருக்காது. அதே நேரத்தில் மாநகராட்சிக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.

    வர்த்தக மையத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு வர்த்தக மையம் திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
    • சமீபத்தில் பெய்த மழையால் சாலைகள் மீண்டும் மோசம் அடைந்தது.

    நெல்லை:

    ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    புழுதி பறக்கும் சாலைகள்

    குறிப்பாக பழைய பேட்டை முதல் தொண்டர் சன்னதி, நயினார்குளம் சாலை, எஸ்.என்.ஹைரோடு வரை சாலைகள் மோசமாக காட்சி அளிக்கிறது. இதனை அவ்வப்போது தற்காலி கமாக சீரமைத்தனர்.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் இந்த சாலைகள் மீண்டும் மோசம் அடைந்தது. இதனை உடனடியாக சீரமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே எஸ்.என்.ஹைரோட்டில் செல்லும் போது கடுமையான புழுதி பறக்கிறது. இதனால் ஆஸ்மா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்க வியா பாரிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக மாநக ராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    நெல்லை மாநக ராட்சி பகுதியில் நெடுஞ் சாலைத்துறைக்கு சொந்தமான 112 கிலோமீட்டர் தூர சாலை உள்ளது. இதில் பழையபேட்டை முதல் கே.டி.சி.நகர் வரையிலான சாலைகளும் அடங்கும். இந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறையினர் தான் சீரமைக்க வேண்டும்.

    மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.29 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியினை கொண்டு நெல்லை, தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படுகிறது.

    முதல் கட்டமாக ரூ.10.66 கோடி மதிப்பீட்டில் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 2-ம் கட்டமாக ரூ.17.92 கோடி மதிப்பீட்டிற்கான பணிகளுக்கு டெண்டர் விடப்படுகிறது. வருகிற வாரம் இதற்கான பணிகள் தொடங்கும்.

    இதன்படி சந்தி பிள்ளை யார் கோவில் முதல் காட்சி மண்டபம் வரை சாலைகள் போடப்பட்டது. இதேபோல் டவுன் சத்தியமூர்த்தி தெரு உள்ளிட்ட சாலைகளிலும் புதிதாக பணிகள் நடை பெற்றுள்ளது.

    நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருவனந்தபுரம் சாலை, தாழையூத்து பகுதிகளில் சாலைகள் புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சத்துவாச்சாரி, மந்தவெளி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது
    • பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட சத்துவாச் சாரி மந்தைவெளி, காந்திநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.12 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைதிட்டம், தார்சாலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய் மற்றும் நடை பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மந்தைவெளி மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அருகே பாதாள சாக்கடை குழாய்கள் சரியான ஆழத்தில் புதைக்கப்படவில்லை. அதனால் சாலை அமைப்பதற்கு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும்போது பாதாள சாக்கடைக்காக பதிக்கப்பட்ட குழாய்களில் உடைப்பு ஏற்படுவதாகவும், இதனை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் மாநகராட்சி மேயர் சுஜாதா அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில இடங்களில் குறிப்பிட்ட ஆழத்தில் குழாய்கள் பதிக்காமல் மேலோட்டமாக பதிக்கப்பட்டிருந்தது.

    மேலும் வீட்டில் இருந்து பாதாள சாக்கடை குழாய்களுக்கு இணைப்புகொடுக் கப்படவில்லை. இதுதொடர்பாக மேயர் சுஜாதா, மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர், பாதாள சாக்கடை திட்ட பணிகளை முழுவ தும் முடித்த பின்னரே சாலை அமைக்க முடியும். எனவே அந்த பணிகளை எவ்வித குறைகளும் இன்றி விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது 2-வது மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், கவுன்சிலர் சதீஷ்குமார் பாச்சி, உதவிபொறியாளர் செல்வ ராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர். 

    • வாகனம் நிறுத்துவதற்கு என்று பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்களில் மீது வாகனங்களை நிறுத்துமாறு மேயர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    • சங்கரப்பேரி குளத்தையும், நீர் வழித்தடத்தையும் மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் முடிவற்ற சாலைகளான அண்ணா நகர் மெயின் ரோடு, ஜெயராஜ் ரோடு,போல்டன்புரம் ரோடு, தேவர்புரம் ரோடு, வி.இ.ரோடு, பாலவிநாயகர் கோவில் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்கு வரத்திற்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சாலை யின் இருபுறம் வாகனம் நிறுத்துவதற்கு என்று பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்களில் மீது வாகனங்களை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் அந்த சாலையின் இருபுறமும் பதிக்கப்பட்ட பேவர் கற்களில்1.5 மீட்டரானது பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும் நடந்து செல்வதற்கு மட்டுமே, எனவே மீதமுள்ள இடமானது வாகனம் நிறுத்துவதற்கான பகுதியாகும். ஆகவே குழந்தை களும், பொதுமக்களும் நடந்து செல்வதற்கும், வாக னங்களை நிறுத்துவதற்கும் தடை ஏற்படுத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

    இந்நிலையில் மாநகரத்திற்குள் மழை நீர்வராமல் இருக்க புற வழிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி களையும், மழையினால் அதிக நீர் தேங்கும் பகுதிகளான முத்தம்மாள் காலனி, கதிர்வேல் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மழைநீர் வரும் புறநகர் பகுதிகளையும், சங்கரப்பேரி குளத்தையும், நீர் வழித்தடத்தையும் மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அதிகாரி களிடம் நீர்வழி தடங்களை தூர் வரவும்,குளத்தை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தவும், உத்தர விட்டார். ஆய்வின் போது மாநகர அதிகாரிகள், அலு வலர்கள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் பிரபாகரன், ஜாஸ்பர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு
    • மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட பா.ஜ.க அரசு தொடர்பு பிரிவு சார்பில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மனோகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு குழு ஆயிரத்து 349 கோடி ஒதுக்கியது. அந்த நிதியை மாநகராட்சி நிர்வாகம் சரியாக பயன்படுத்தவில்லை. இதனால் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    வேலூர் மாநகராட்சியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது தற்போது பருவ மழை தொடங்க உள்ளதால் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    மணல் குவாரியில் முறைகேடு

    வேலூர் பிள்ளையார் குப்பத்தில் அமைக்கப்பட்ட மணல் குவாரியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது.

    இதனை தடுத்து நிறுத்த வேண்டும். வேலூர் மாநகரத்தில் காட்பாடி முதல் பாகாயம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் எஸ். எல்.பாபு உள்பட கலர் கலந்து கொண்டனர்.

    ×