search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "river"

    • சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகள் மழையின் காரணமாக கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டது.
    • கன மழையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன குளங்களும் நிரம்பிவிட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பருவ மழை கள் வழக்கத்தை விட குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் நீர்மட்டம் குறைந்தது. நாகர் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை மைனஸ் அடிக்குச் சென்றது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து இருந்தது. முக்கடல் அணையும் பிளஸ் அளவிற்கு வந்தது. தொடர்ந்து பெய்த மழை நேற்று முன்தினம் விடிய விடிய கொட்டித் தீர்த்தது.

    குறிப்பாக மலைப்பகுதிகளில் பெரும் மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிலும் சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகள் மழையின் காரணமாக கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளான பள்ளியாறு, பரளியாறு, தாமிரபரணி ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியது.

    திற்பரப்பு அருவியிலும் காட்டாற்று வெள்ளம் கொட்டியதால் நேற்று 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கால்வாய்களும் நிரம்பியதால், மறுகால் பாய்ந்து சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த சூழலில் நேற்று பகல் முதல் மழையின் தாக்கம் குறையத் தொடங்கியது. ஆனால் வெள்ளத்தின் அளவு குறையவில்லை. கன மழையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன குளங்களும் நிரம்பிவிட்டது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக சிற்றாறு-2 அணை பகுதியில் 34.2 மி. மீ. மழையும், சிற்றாறு-1 அணை பகுதியில் 24.6 மி. மீ. மழையும், பெருஞ்சாணி அணை பகுதியில் 19.8 மி. மீ. மழையும் பதிவாகி உள்ளது. புத்தன் அணை பகுதியில் 17.6 மி.மீட்டரும், பேச்சிப்பாறை அணையில் 12.4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு தொடர்கிறது. இன்று காலை நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 37.84 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 66.60 அடியாகவும் உள்ளது. சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணைகள் உச்ச அளவை எட்டி உள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1451 கன அடி நீரும், பெரு ஞ்சாணி அணைக்கு 1180 கன அடி தண்ணீரும் வந்து கொண்டி ருக்கிறது. நேற்று சிற்றாறு-1 அணையில் இருந்து உபரி நீர் விநாடிக்கு 500 கன அடி திறந்து விடப்பட்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் பழையாறு, வள்ளி ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரை யோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிக அளவு விழுவதால், 5-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் மழை குறைந்தபோதிலும், வெள்ளத்தின் தாக்கம் குறையாமலேயே உள்ளது. திக்குறிச்சி, முன்சிறை பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தே உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர்.

    மழை பெய்யும் போதெல்லாம் தங்கள் குடியிருப்பு பகுதி இதே நிலையை தான் சந்திக்கிறது. இதுபற்றி பலரிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை என அங்கு வசிப்போர் வேதனை தெரிவிக்கின்றனர். மழைக்கு விளவங்கோடு தாலுகாவில் 5 வீடுகளும், திருவட்டாரில் 4 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. 3 இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சிவலோகம் (சிற்றாறு-2) 34.2 சிற்றாறு-1 24.6, பெருஞ்சாணி 19.8 புத்தன் அணை 17.6 பேச்சிப்பாறை 12.4, பாலமோர் 5.2 முள்ளங்கினாவிளை 4.6 திற்பரப்பு 4.5, தக்கலை, களியல், மாம்பழத்துறையாறு 3.2. 

    • மூடப்படாத பள்ளத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருந்து வந்தது.
    • நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி கடந்த ஒரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாதாள சாக்கடை பணியின் போது பல்வேறு இடங்களில் சரிவர மூடப்படாத பள்ளத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருந்து வந்தது. மேலும் பல்வேறு இடங்களில் பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து குடிநீர் குழாயும் அவ்வப்போது உடைந்து தண்ணீர் வீணாவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக போடப்பட்ட பாதாள சாக்கடை பள்ளம் திடீரென உள் வாங்கி அதிலிருந்து குழாய் உடைந்து குடிநீரானது வீணாக ரோட்டில் ஆறு போல் ஓடியது. இது குறித்து நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பொது பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    • தளவாய் பாளையம் அருகே புது ஆற்றில் 35 மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ஆற்றில் மிதந்த உடலை கைபற்றிபிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை காவல் சரகம், தளவாய் பாளையம் அருகே புது ஆற்றில் 35 மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் மிதந்த உடலை கைபற்றிபிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் முடி வெட்டி முகவரம் செய்திருந்த நிலையில் இருந்தார்.

    இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் காணப்படவில்லை உடலில் காயம் எதுவும் இல்லாததால் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கி இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் இறநதவரின் உடல் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கங்களாஞ்சேரியில் உள்ள வெட்டாற்றில் குளிக்க சென்றுள்ளார்.
    • அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள இலவங்கார்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24).

    இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இரண்டு நாள் விடுமுறையில் கார்த்திக் வீட்டிற்கு வந்துள்ளார்.

    நேற்று மாலை தனது தம்பி கணேஷ், நண்பர் முகேஷ் ஆகியோருடன் கங்களாஞ்சேரியில் உள்ள வெட்டாற்றில் குளிக்க சென்றுள்ளார்.

    3 பேரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் உள்ள பள்ளத்தில் கார்த்திக் நீந்தியபோது திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்த உடன் வந்தவர்கள் கார்த்திக்கை மீட்க முயன்றும் முடியவில்லை.உடனடியாக அவர்கள் கரைக்கு வந்து நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நன்னிலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து கார்த்திக்கை தேடினர்.இரவு வெகுநேரமாகி விட்டதால் போதிய வெளிச்சம் இன்றி தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை தீயணைப்பு துறையினர் மீண்டும் கார்த்திக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது 20 அடி ஆழத்தில் புதைந்திருந்த கார்த்திக்கை பிணமாக மீட்டனர்.

    பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறையில் ஊருக்கு வந்த வாலிபர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தீர்வு கிடைக்குமா? விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
    • நொய்யலாற்றுக்கு காஞ்சனா நதி என்ற மற்றொரு சிறப்பு பெயரும் உள்ளது.

    நீலாம்பூர்,

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை யொட்டிய அடிவாரத்தில் சாடிவயல் என்ற பகுதியில் இருந்து சிற்றோடைகள் இணைந்து நொய்யல் ஆறு உருவெடுக்கிறது.

    அங்கு உருவெடுத்து சமவெளி பகுதியாக செல்லும் நொய்யாலானது கோவை, சூலூர், பல்லடம், மங்கலம், திருப்பூர், ஈரோடு வழியாக சென்று கரூர் அருகே உள்ள நொய்யல் என்ற கிராமத்தில் கலந்து காவிரியுடன் சங்கமம் ஆகிறது.

    சுமார் 180 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த நொய்யாலானது பயணிக்கி றது. இவ்வளவு கிலோமீட்டர் தூரம் பயணித்து காவிரி ஆற்றில் கலக்கும் ஒரே ஆறு என்ற அருமை நொய்யலாற்றுக்கே உள்ளது. இந்த நதிக்கு காஞ்சனா நதி என்ற மற்றொரு சிறப்பு பெயரும் உள்ளது.

    மழைக்காலங்களில் இந்த ஆற்றின் வழியாக காட்டா ற்று வெள்ளம் பெரு க்கெடுத்து ஓடும். இந்த நொய்யல் ஆற்றை சுற்றிலும் 32 அணைக்கட்டுகளும் 40-க்கும் மேற்பட்ட குளங்களும் உள்ளன. இவை அனைத்தும் நொய்யல் ஆற்றை சார்ந்தே இருக்கிறது.

    மேலும் இந்த நொய்யல் ஆறு பயணிக்க கூடிய கிராம ஆற்றுப்படுக கைகளிலும் தடுப்பு அணை களும் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆற்றின் மூலம் நொய்யல் ஆறு செல்லும் வழியில் இருபுறங்களிலும் உள்ள விவசாய நிலங்களும் பயன் அடைந்து வருகிறது. இதுதவிர குடிநீருக்கும் இந்த தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இப்படி பல்வேறு சிறப்புகளுடன், மக்களுக்கு பயனளித்து வந்த நொய்யல் ஆறு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுகள் கலந்து மாசற்று கிடக்கிறது. நொய்யல் ஆற்றில் தற்போது, தண்ணீர் நுரையுடன் செல்வதை காண முடிகிறது. போதிய மழை இல்லாததால் ஆறும் வறண்டு காணப்படுகிறது. அப்படியே தண்ணீர் வந்தாலும் அதனை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது.

    நொய்யல் ஆற்றை காப்பாற்றும் விதமாக இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். ஆனாலும் கழிவுகள் ஆற்றில் கலந்து கொண்டு தான் இருக்கிறது என கூறுகின்றனர் விவசாயிகள்.

    நொய்யல் ஆறு தொடங்கிய பகுதியில் சிறிது மாசு ஏற்பட்டாலும் ஆறு செல்ல செல்ல கோவையின் புறநகர் பகுதியில் உள்ள சூலூர், சாமளாபுரம், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் முழுவதுமாக சாக்கடையாக மாறிவிடுகிறது. அதேபோல இதனை சார்ந்துள்ள குளங்களும் சாக்கடை நீர் நிறைந்ததாகவே காணப்டுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    இங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நீர் ஆதாரமாகவும், கால்நடைகளுக்கான நீர் ஆதாரமாகவும் நொய்யல் ஆறு விளங்கி வருகிறது. தொழிற்சாலை மற்றும் சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் ஆறு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் எங்களால் விவசாயமும் செய்ய முடியாத நிலையே உள்ளது. பலமுறை விவசாயிகள் போராட்டம் நடத்தியும், மாசு கட்டுப்பாட்டு வா ரியம், பொதுப்பணித்துறை இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    மேலும் தற்போது உள்ள காலகட்டத்தில் குளத்தில் தண்ணீர் இருந்ததா என வருங்கால சமுதாயம் கேட்கும் நிலை உருவாகும். நொய்யல் ஆற்றில் வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து குளத்தில் விட வேண்டும். அதற்கான சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும் அதுவே இதற்கான தீர்வு எட்ட முடியும் அவ்வாறு அமைத்தால் மட்டுமே கொங்கு மண்டலத்தை காப்பாற்ற முடியும் இல்லை என்றால் கொங்கு மன்ற த்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலைமை உருவாகும்.

    எனவே அரசு நொய்யல் ஆற்றை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    இது குறித்து பேசிய ஆறுகள் பாதுகாப்பு மற்றும் கவுசிகா நதி பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த செல்வராஜ் கூறும்போது, சூலூர் பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்கள், வாழை மரங்கள் உள்ளிட்டவை இந்த நீர் நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் அனைத்தும் விஷத்தன்மை உடையதா கவும், தென்னை மரங்களில் தென்னை காய் காய்க்கக்கூடிய அளவில் கூட இல்லை. அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வில் பயன்ப டுத்தக்கூடிய நிலத்தடி நீரின் தன்மை மாறி உள்ளது உப்புத்தன்மை நிறைந்ததாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அபிராமி, மீரா ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதால் மாயமாகினர்.
    • நேற்று மாலை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ளவளையப்பேட்டை, மல்லப்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் அபிராமி (வயது 22),இவருடைய உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி மகள்கள் மீரா (23), மற்றும் கீர்த்திகா, ரத்தினம் மகள் பாலா , சுபாஷ்சந்திரபோஸ் மகன்கள் ஹரிஹரன் , சந்தோஷ் ஆகிய 6 பேரும் நேற்று அருகிலுள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

    அப்போது அவர்களில் அபிராமி மற்றும் மீரா ஆகிய 2 பேரும் ஆழமானப் பகுதிக்கு சென்றதால், அவர்கள் 2 பேரும் மாயமானார்கள். இதனையறிந்த அவருடன் வந்த பாலா, அவர்கள் 2 பேரையும் காப்பாற்ற முயன்ற போது, ஆற்றில் அடித்துதச் செல்லப்பட்டார். இதனையறிந்த கரையிலிருந்தவர்கள், பாலாவை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அருகிலுள்ளவர்கள், சுவாமிமலை போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் அந்த இடத்திற்கு வந்த கும்பகோணம் தீயணைப்பு துறையினர், ஆற்றில் தேடி வந்த நிலையில், அபிராமி உடலை மட்டும் மீட்டனர். மாயமான மற்றொரு பெண் மீராவை நேற்று மாலை வரை தேடி வந்தனர். மீரா கிடைக்காத காரணத்தால் நேற்று மாலை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது அதனை தொடர்ந்து இன்று காலை இரண்டாவது நாளாக தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நேரடி நெல்விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்தும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டை தாலுகா இடும்பாவனத்தில் மறைக்கா கோரையாறு உள்ளது.

    மேலபெருமழை, பள்ளிமேடு, தில்லைவிளாகம், தொண்டியக்காடு, இடும்பாவனம் போன்ற பகுதிகளில் உள்ள சாகுபடி நிலங்களுக்கு இந்த ஆற்றின் மூலம் தான் தண்ணீர் செல்கிறது.

    கடைமடை பகுதிகளான இப்பகுதியில் நேரடி நெல்விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தற்போது இந்த ஆற்றில் தண்ணீர் செல்லமுடியாதவாறு ஆகாயதாமரைகள் படர்ந்து ஆக்கிரமித்துள்ளது.

    இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தண்ணீர் திறப்பதற்கு முன்பே ஆற்ைற ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அகற்றவில்லை.

    தற்போது ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்தும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடும்பாவனம் மறைக்கா கோரையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தண்ணீர் அதிகமாக சென்றதில் சந்திரசேகர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
    • இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை பாதியில் கைவிட்டு சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குருவாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்திராபதி மகன் சந்திரசேகர் (வயது 65). விவசாயி.

    இவர் நேற்று காலை 11 மணியளவில் முடிகொண்டான் ஆற்றில் இறங்கி அக்கரையில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு நண்பர்கள் சிலருடன் சென்றுள்ளார்.கோவிலில் சாமி தரிசனம் செய்து மீண்டும் மாலை 3 மணி அளவில் திரும்பி ஆற்றில் இறங்கி வந்துள்ளார்.

    அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதில் சந்திரசேகர் அடித்து செல்லப்பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் திருமருகல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் திருமருகல் தீயணைப்புத் துறையினர் மற்றும் திட்டச்சேரி போலீசார் சந்திரசேகரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை பாதியில் கைவிட்டு சென்றனர். இருப்பினும் கிராம மக்கள் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.கோவிலுக்கு சென்றவர் ஆற்றில் மூழ்கி முதியவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கூடலுார் தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் மரம் விழுந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • அவசர காலத்தில், 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், ஊட்டி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அவ்வப்போது சாலைகளில் மரங்கள்; மூங்கில்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி-பர்சன்ஸ்வேலி சாலை, தீட்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை மரம் விழுந்தது. கூடலுார் தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் மரம் விழுந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து தமிழக-கேரளா-கர்நாடக இடையே இயக்கப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தீயணைப்பு துறையினர் வந்து, மரங்களை அறுத்து அகற்றிய பின், ஒரு மணி நேரத்துக்கு பின்பு போக்குவரத்து சீரானது. பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில் தொடரும் மழையால் கடும் மேக மூட்டம் நிலவுவதால், வாகனங்கள் 'மிஸ்ட் லைட்' பயன்படுத்தி இயக்கப்படுகின்றன.

    மேலும், கூடலுாரில் உற்பத்தியாகும் பாண்டியார்-புன்னம்புழா ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றோர பகுதிகளுக்கு குளிக்கவும், துணி துவைக்கவும் மக்கள் செல்ல கூடாது; சிறுவர்களை ஆற்றோரத்துக்கு பெற்றோர் அனுப்ப கூடாது என வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஊட்டி பூங்கா, படகு இல்லம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கடும் குளிர் நிலவுவதால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளூர் மக்கள் அவதிப்படுகின்றனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி, தேவாலாவில் 55 மி.மீ. கூடலுாரில் 44 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா கூறுகையில், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாண்டியார்-புன்னம்புழா ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றில் குளிக்கவும், கடக்கவும் யாரும் செல்ல கூடாது. அவசர காலத்தில், 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.

    • பஸ் ஏற வெட்டாற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
    • தட்டிப்பாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆபத்தான முறையில் பெண்கள் கடந்து சென்று வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஒக்கூர் ஊராட்சியில் விளா ம்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது.

    இக்கிராம த்தில் சுமார் 100- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இக்கிராமத்திற்கு இதுநாள் வரை அரசு, தனியார் பஸ்களோ கிடையாது. நாகப்பட்டினம் செல்வதற்கு 10 கிலோ மீட்டர் நடந்து வந்து கீழ்வேளூரில்தான் பஸ் ஏற வேண்டும்.

    விளாம்பாக்கத்தில் இருந்து கீழ்வேளூர், நாகப்ப ட்டினம், திருவாரூரில் படிக்கும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், வயல் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் ஆற்றுக்கு அடுத்துள்ள கோகூர் சென்று பஸ் ஏற வெட்டா ற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இதற்காக கிராமத்தினரே தட்டிப்பாலம் அமைத்து சென்று வருவதும் மழை, வெள்ளக் காலத்தில் அந்த தட்டிப்பாலம் ஆற்றில் அடித்து செல்வதுமாக தொடர்கதை யாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஆற்றில் தற்போது உள்ள உடைந்த தட்டிப்பாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆபத்தான முறையில் மாணவர்கள் மற்றும் பெண்கள் கடந்து சென்று வருகின்றனர்.

    எனவே உடனடியாக ஒரு ஆம்புலன்ஸ் செல்லும் அளவுக்காவது சிமெண்ட் பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
    • நீண்ட நேரம் தேடி ராணுவ வீரர் உடலை மீட்டனர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மகிமைபுரம் பூண்டி, புதுத்தெருவை சேர்ந்தவர் ஆரோன் இளையராஜா (வயது38).

    இவர் திருச்சியில் உள்ள ராணுவ பட்டாலி யனில் ஹவில்தாராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    நேற்று தனது அண்ணன் மகன்களான சூர்யா (18), ஹரீஷ் (12) மற்றும் மனைவி சுகன்யாவுடன் அந்த பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார்.

    இவர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது சூர்யாவும், ஹரீசும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.

    அப்போது அவர்கள் 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

    இதை பார்த்த ஆரோன் இளையராஜா, ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த அண்ணன் மகன்கள் 2 பேரையும் மீட்டார். பின்னர் அவர் கரைக்கு செல்ல முயன்ற போது தண்ணீரில் மூழ்கி மாயமானார்.

    இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் திருக்காட்டு ப்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடி ராணுவ வீரர் ஆரோன் இளையராஜா உடலை மீட்டனர்.

    தகவல் அறிந்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெகதீசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிர மணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆரோன் இளையராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சோகம் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    கபிஸ்தலம்:

    காவிரி டெல்டா பாசனத்–துக்காக முன்கூட்டியே இன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 

    இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டுத் தெரு மண்ணியாறு தலைப்பு பகுதிகளிலும், 

    கொட்டையூர் காவிரி ஆற்று பகுதிகளிலும், காவிரி ஆற்றில் இரு புறமும் ஏற்பட்ட அரிப்புகளை தடுக்கும் வண்ணம் தடுப்பு சுவர் அமைக்கும் பணியும், கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகில் காவிரி ஆற்றில் நீர் ஒழுகி மற்றும் நடைபாதை அமைக்கும் பணியும் ரூ.30 கோடி செலவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வழக்கத்தைவிட முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுவதால் பணிகள் தீவிரமாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துமணி, உதவி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்தக்காரர்களிடம் அறிவுறுத்தி இரவு பகலாக பார்வையிட்டு வருகின்றனர். 

    உதவி பொறியாளர் வெங்கடேசனிடம் இதுகுறித்து கேட்டபோது மேட்டுதெரு மண்ணியாறு தலைப்பு பகுதியில் காவிரி இரு பக்கமும் நடைபெற்று வரும் தடுப்புசுவர் பணி நீர் மட்ட அளவு முடிக்கப்பட்டு விடும்.

     இந்த நீர் மட்ட அளவு முடிந்தாலே காவிரியில் தண்ணீர் செல்வதற்கு எந்த தட்டுப்பாடும் இல்லாமல் இருக்கும். மேலும் விவசாய பணிகளுக்கு தண்ணீர் எந்தவித பாதிப்புமின்றி செல்லும் என தெரிவித்தார்.


    மேலும் மேட்டு தெரு மண்ணியாறு தலைப்பு பகுதி, கொட்டையூர் பகுதி மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகில் நடைபெற்று வரும் பணிகள் காவிரி தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு வருவதற்கு முன்பு இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    ×