search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajyasabha election"

    • பொது விடுமுறை குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு.
    • சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கும் விடுமுறை.

    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ம் தேதி சென்னை உயர்நீதிம்னறத்திற்கு விடுமுறை விடுத்து உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்களவை தேர்தல் 2024 மற்றும் 233ல் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற விலவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, 2024, ஏப்ரல் 19ம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவற்றுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • சோனியா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
    • சோனியாவை போல காங்கிரஸ் மூத்த தலைவர்களும் மேல்-சபை எம்.பி.யாக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மேல்-சபையான மாநிலங்களவைக்கு எம்.பி.க்களை தேர்வு செய்ய பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து எம்.பி.க்களை தேர்வு செய்வார்கள். இந்த எம்.பி. தேர்தலுக்கான மனு தாக்கல் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. வருகிற 15-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    மாநிலங்களவை தேர்தலை சந்திக்கும் வகையில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. காங்கிரஸ் சார்பிலும் வேட்பாளர்களை அறிவிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் 10 மேல்-சபை எம்.பி.க்களை பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    இதற்கிடையே தற்போதைய மேல்-சபை தேர்தல் மூலம் சோனியா காந்தியை மேல்-சபை எம்.பி.யாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பினார்கள்.

    இதையடுத்து சோனியா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேல்-சபை எம்.பி.யாக அவர் விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இமாச்சல பிரதேசத்தில் இருந்து அவர் மேல்-சபைக்கு தேர்வாக விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனியாவை போல காங்கிரஸ் மூத்த தலைவர்களும் மேல்-சபை எம்.பி.யாக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான் தெலுங்கானாவில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. மனுசிங்வி ராஜஸ்தானில் போட்டியிட உள்ளார்.

    மத்திய பிரதேசத்தில் இருந்து மேல்-சபைக்கு தேர்வாக கமல்நாத் ஆதரவு திரட்டி வருகிறார்.

    • 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவடைகிறது.
    • தேர்தல் நடைபெறும் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

    பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா, உத்தரபிரதசேம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவடைகிறது.

    இந்நிலையில், மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
    • அதில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 3 பேரும் போட்டியின்றி தேர்வாகினர் .

    புதுடெல்லி:

    கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 11 பேர் நடப்பு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து, காலியாகவுள்ள அந்த 11 மாநிலங்களவை இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடத்துவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்கான தேர்தல் ஜூலை 24-ம் தேதி நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

    இவர்களில் மத்திய மந்திரியான சுப்ரமணியம் ஜெய்சங்கர் கிருஷ்ணசுவாமி ஆகஸ்டு 18-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, மத்திய வெளிவிவகார மந்திரியான ஜெய்சங்கர் குஜராத்தின் காந்தி நகரில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    காலியாகவுள்ள இந்த இடங்களுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு ஜூலை 13-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்றே கடைசி நாளாகும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற ஜூலை 24-ம் தேதி நடத்தப்படும்.

    இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவற்றில் மேற்கு வங்காளத்தில் 6 இடங்கள், குஜராத்தில் 3 இடங்கள் மற்றும் கோவாவில் ஓர் இடத்தில் வாக்கெடுப்பு எதுவும் நடைபெறாது. ஏனெனில், இந்த இடங்களில் போட்டி வேட்பாளர்கள் யாரும் இல்லை.

    பா.ஜ.க.வில் 5 வேட்பாளர்கள், திரிணாமுல் காங்கிரசில் 6 வேட்பாளர்கள் என மொத்தம் 11 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களில் எஸ். ஜெய்சங்கர் இரண்டாவது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    கே.எஸ்.அழகிரியை பொறுத்தவரை பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் என்று கட்சியின் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த இடத்துக்கு வந்தவர்.
    சென்னை:

    மேல்சபை காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டு இன்று மனுதாக்கலும் செய்து விட்டார்.

    இந்த பதவியை கைப்பற்ற பலர் முயற்சித்தாலும் கடைசி வரை போராடியது ப.சிதம்பரமும், கே.எஸ்.அழகிரியும்தான். இருவரும் டெல்லியிலேயே முகாமிட்டு காய்களை நகர்த்தினார்கள். இருவரும் தனித்தனியாக சோனியாவை சந்தித்து பேசினார்கள்.

    கே.எஸ்.அழகிரியை பொறுத்தவரை பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் என்று கட்சியின் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த இடத்துக்கு வந்தவர். 3 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். பொதுவாக காங்கிரஸ் தலைவராக யார் இருந்தாலும் அவரை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்குவார்கள். இப்போது அப்படி எதுவும் நடைபெறவில்லை.

    எம்.பி. தேர்தலிலும், எம்.எல்.ஏ. தேர்தலிலும் காங்கிரசுக்கு குறிப்பிட்டத்தக்க வெற்றியும் கிடைத்தது. 9 எம்.பி.க்கள், 18 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர்.

    இதனால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதினார். கடைசி நேரத்தில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கே.எஸ்.அழகிரியை பொறுத்தவரை இந்த மாதிரி கடைசி நேரத்தில் ஏமாற்றத்தை சந்திப்பது இது 3-வது முறையாகும்.

    1980 சட்டமன்ற தேர்தலில் முகையூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தும் கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றப்பட்டார்.

    அதே போல் 1984 சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் சிவாஜி மன்றத்தினர் பிடிவாதமாக அந்த தொகுதியை கேட்டதால் கடைசி நேரத்தில் வாய்ப்பு பறிபோனது.

    3 முறை ஏமாற்றம் அடைந்துள்ளார். அதே நேரம் 1991, 1996 ஆகிய 2 முறை எம்.எல்.ஏ.வாகவும், 2009-ல் எம்.பி.யாகவும் வெற்றி பெற்றார்.

    ஒரு காலத்தில் ப.சிதம்பரத்தின் சிஷ்யராக இருந்தவர்தான் கே.எஸ்.அழகிரி. இப்போது நடந்த போட்டியில் குரு வென்றுள்ளார்.

    எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி.மு.க. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    சென்னை:

    மேல்சபை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் நேற்று மாலை அறிவிக்கப்பட்டார்.

    முன்னதாகவே மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கட்சி மேலிடம் அவரிடம் சொல்லி உள்ளது. எனவே ப.சிதம்பரம் அதற்கான பணிகளில் ஈடுபட்டார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை உள்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்.

    தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த சோனியாவுக்கு எனது உளமார்ந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதே போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி.மு.க. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    இன்று பகல் 12 மணியளவில் தலைமை செயலகத்தில் சட்டசபை செயலாளரிடம் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வேட்பாளர் பெயரை முன்மொழிந்து கையெழுத்து போட்டனர். மற்ற எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ப.சிதம்பரம் வாழ்த்து பெற்றார்.

    நீண்ட நாட்கள் கட்சியில் இருப்பதால் தனக்கு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடிகை நக்மா இருந்தார். ஆனால் அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் இருந்து வந்தது.
    புதுடெல்லி:

    தமிழ் திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகையாக இருந்தவர் நக்மா. நடிகை ஜோதிகாவின் அக்காவான இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர்.

    தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்று திகழ்ந்தார். தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்தவர் என்ற பெருமையும் நக்மாவுக்கு உண்டு. இவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே அவர் திடீரென அரசியலில் குதித்தார். கடந்த 2004-ம் ஆண்டு இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இடையில் சிறிது காலம் அவர் ஆன்மீக பாதைக்கு திரும்பினார்.

    தியானம் மற்றும் கிறிஸ்தவ ஜெப கூட்டங்களில் கலந்து கொண்டாலும் அதன்பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டார். பல நடிகர்களுடன் காதல் “கிசு கிசு”வில் சிக்கினாலும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் கட்சிக்காக தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார்.

    காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேர்தல் பிரசாரமும் செய்தார். இதனால் திரைஉலகை போல காங்கிரஸ் கட்சியில் அவர் தனக்கென ஒரு இடத்தை பெற்றார். இதன்மூலம் காங்கிரஸ் அவருக்கு மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்து அழகு பார்த்தது.

    நீண்ட நாட்கள் கட்சியில் இருப்பதால் தனக்கு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள மேல்-சபை எம்.பி. தேர்தலில் எப்படியும் கட்சி மேலிடம் தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கும் என எதிர்பார்த்து காத்து இருந்தார். ஆனால் கடைசியில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    நேற்று வெளியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் நடிகை நக்மா பெயர் இடம் பெறவில்லை.

    தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப,சிதம்பரம் உள்ளிட்ட 10 பேர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    இத்தனை ஆண்டு கட்சிக்காக உழைத்தும் தன்னை மேலிடம் “கை” விட்டு விட்டதே என நக்மா கண்ணீர் மல்க தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கட்சிக்கு எதிராக பகிரங்கமாக டுவிட்டர் பதிவு வெளியிட்டு உள்ளார்.

    அந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

    2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த போது எனக்கு மேல்சபை எம்.பி. பதவி கொடுக்கப்படும் என சோனியா காந்தி உறுதி அளித்தார். அதன்பேரில் நான் அக்கட்சியில் இணைந்தேன்.

    ஆனால் உறுதி அளித்த படி இன்னும் எனக்கு எம்.பி பதவி கொடுக்கவில்லை, 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்? மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தற்போது இம்ரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவரை விட எனக்கு எந்த விதத்தில் தகுதி குறைச்சல் உள்ளது. 18 ஆண்டு காலம் தவம் இம்ரான் முன் பொய்த்து விட்டது.

    இவ்வாறு நக்மா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

    அவரின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நடிகை நக்மா தற்போது ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் புதுவை மாநிலங்களுக்கு மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ளார். மேலும் மும்பை காங்கிரஸ் துணை தலைவராகவும் உள்ளார்.

    கடந்த 2004-ம் ஆண்டு நக்மாவை முதலில் பாரதிய ஜனதா தங்கள் கட்சியில் சேருமாறு அணுகியது. அப்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவரை ஜதராபாத் தொகுதியில் நிறுத்துவதற்கான முயற்சியையும் மேற்கொண்டது.

    ஆனால் அதனை அவர் ஏற்காமல் காங்கிரஸ் மீது இருந்த ஈர்ப்பு காரணமாக காங்கிரசில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்போது கட்சி மீது அவர் பரபரப்பான குற்றச்சாட்டினை தெரிவித்து உள்ளதால் அவர் கட்சியில் தொடர்ந்து நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரை பா.ஜனதாவில் இழுப்பதற்கான முயற்சியில் மீண்டும் அக்கட்சி ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி ஆகிய 3 பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த 3 பேரும் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. இதனால் ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இது தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த பவன் கேரா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், என்னுடைய தவம் எதுவும் தவறி இருக்கலாம் என தனது அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.

    ராஜஸ்தானில் இருந்து எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் வேட்பாளராக நிறுத்தப்படாததற்கு என்ன காரணம் என்பதை காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என அக்கட்சி எம்.எல்.ஏ.சன்யம் லோதா கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதே போல பலரும் தங்கள் எதிர்ப்பை காட்டி உள்ளனர்.

    காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசலை ஒழிக்கும் வகையில் ஜி-23 எதிர்ப்பு அணி தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டவர்களுக்கு எம்.பி. பதவி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கும் இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

    இந்த அணியில் கபில்சிபல் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். அவருக்கு அக்கட்சி சார்பில் மேல்சபை எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 245 உறுப்பினர்களில் பாஜகவுக்கு தற்போது 95 எம்பிக்களும், காங்கிரசுக்கு 29 உறுப்பினர்களும் உள்ளனர்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் உள்பட மாநிலங்களவையின் பல உறுப்பினர்கள் ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 1 வரை ஓய்வு பெறுகிறார்கள். 

    இதையடுத்து தமிழகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரா உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது

    மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை இன்று முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்கள் குறித்து அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. லண்டனில் உள்ள ராகுல்காந்தி காணொலி மூலம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதன் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.  

    மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. 

    குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, விவேக் தங்கா, அஜய் மக்கன், ராஜீவ் சுக்லா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோரும் களத்தில் உள்ளதாக தெரிகிறது. மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் போட்டியிட சிதம்பரத்திற்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. 

    வேட்பாளர் பட்டியல் வெளியானவுடன் இன்று ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். 

    மாநிலங்களவைத் தேர்தலில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். ஜார்க்கண்டில் இருந்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வுக்கு ஆதரவு அளிக்குமாறு காங்கிரஸ் விடுத்துள்ள கோரிக்கைக்கு அவர் சாதகமான பதிலை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    காங்கிரஸ் தலைமை ப.சிதம்பரத்தை வேட்பாளராக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை சென்று மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி சிதம்பரத்திடம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    டெல்லி மேல்சபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு இடத்துக்கு காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் போட்டி நிலவியது. வாய்ப்பு கேட்டு பலரும் காய்நகர்த்தி வந்தார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ம், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் இந்த ரேசில் முன்னணியில் இருந்தனர்.

    ப.சிதம்பரத்துக்கும் எம்.பி. பதவி நிறைவடைவதால் அவருக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆரம்பத்தில் இருந்தே பேச்சு அடிபட்டது. பாராளுமன்றத்தில் பொருளாதாரம், அரசியல் உள்பட அனைத்து துறைகள் சார்ந்த விஷயங்களையும் விவாதிக்க ப.சிதம்பரமே தகுதியானவர். அவர் பாராளுமன்றத்தில் இருக்கவேண்டும் என்ற கட்டாய சூழல். இதனால் அவருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டுவந்தது.

    இதற்கிடையில் பேரறிவாளன் விடுதலையும் அதை தி.மு.க.வினர் வரவேற்று கொண்டாடியதும் காங்கிரஸ் தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது. எம்.பி. பதவியை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற கோஷங்களும் ஒலித்தன. இதனால் காங்கிரஸ் எம்.பி. பதவியை ஏற்குமா என்ற கேள்வியும் எழுந்தது.

    ஆனால் அரசியலில் கூட்டணி என்று வரும்போது சில விஷயங்களில் சமரசம் ஆவதை தவிர வழியில்லை என்று மேலிடத்தலைவர்கள் மவுனம் காத்தனர்.

    இதற்கிடையில் எம்.பி. பதவிக்கு யாரை தேர்வு செய்யலாம் என்ற விவாதங்களும் தொடர்ந்தன.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம் இருவரும் டெல்லியில் முகாமிட்டு இருந்தனர். இருவரும் தனித்தனியாக சோனியாவையும் சந்தித்தனர்.

    காங்கிரஸ் தலைமை ப.சிதம்பரத்தை வேட்பாளராக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை சென்று மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி சிதம்பரத்திடம் தெரிவித்துள்ளனர். அவர் நேற்று இரவே சென்னை திரும்பினார்.

    வேட்புமனுவை முன்மொழிய 10 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து தேவை. அதற்காக இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை மறுநாள் (திங்கள்) தலைமை செயலகத்தில் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    சென்னை:

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 2 பேரை தேர்வு செய்ய முடியும். இந்த 2 பதவிகளுக்கும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.

    சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா உள்பட பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    2 எம்.பி. வேட்பாளர்களை தேர்வு செய்ய இதுவரை அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. தென்மாவட்டத்தை சேர்ந்தவருக்கு பதவியை கொடுக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மேல்சபை எம்.பி. தேர்தல் வேட்பாளர் போட்டி சுமூக முடிவு எட்டப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே நாளை அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலைக்கு மேல்சபை எம்.பி. பதவி கொடுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
    சென்னை:

    பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைவதால் வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க. 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. ஆனால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளரும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

    காங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம் மேல்சபை எம்.பி. பதவியை கேட்டு வருகிறார். அதுபோக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரும் எம்.பி. பதவிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளும் பதவி கேட்கிறார்கள்.

    இதுதொடர்பாக இன்று சோனியா, ராகுல் ஆலோசனை நடத்துகிறார்கள். அதன்பிறகு இதில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ப.சிதம்பரத்துக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை தேர்வு செய்ய கடந்த சில தினங்களாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை. வேட்பாளர் தேர்வில் அவர்கள் இருவருமே பிடிவாதமாக இருப்பதால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கடும் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    வேட்பாளரை முடிவு செய்வதற்காக சமீபத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் 27 பேர் சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் கூடி பேசினார்கள். வேட்பாளர் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். என்றாலும் அந்த கூட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. வேட்பாளர்களை ஏக மனதாக தேர்வு செய்ய முடியாத நிலையே நீடிக்கிறது.

    அ.தி.மு.க. வேட்பாளர் 2 பேரில் ஒருவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராகவும், மற்றொருவர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராகவும் இருப்பார் என்று முதலில் தகவல்கள் வெளியானது. தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு எம்.பி. பதவி வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் தீவிரமாக உள்ளார். ஆனால் இந்த விசயத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலைக்கு மேல்சபை எம்.பி. பதவி கொடுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் மேலும் ஒருவரை தேர்வு செய்வதில்தான் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

    அ.தி.மு.க.வின் மற்றொரு வேட்பாளராக முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள் விரும்புகிறார்கள். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. சி.வி. சண்முகத்துக்கு வாய்ப்பு அளித்தால் மேல்சபை எம்.பி.க்கள் இருவருமே வட மாவட்டத்தை சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதை ஏற்க இயலாது என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சொல்கிறார்கள். எனவே தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் தனக்கு மேல்சபை எம்.பி. பதவி வேண்டும் என்று இன்பதுரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேனி மாவட்ட செயலாளர் சையதுகானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது.

    சையது கானை எம்.பி.யாக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. சையதுகான் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவரை எம்.பி. ஆக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    வேட்பாளர் தேர்வில் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால் வேட்பாளர் தேர்வு தள்ளி போகிறது. நேற்று இதில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சி.வி. சண்முகம் தொடர்ந்து வலியுறுத்துவதால் இன்னமும் முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து சிக்கல் நீடித்தபடி உள்ளது.

    மேல்சபை எம்.பி. பதவிக்கு விண்ணப்பிக்க 31-ந்தேதி வரை அவகாசம் உள்ளது. நாளை முகூர்த்த நாள் என்பதால் அதற்குள் அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாகி உள்ளனர்.

    இதுவரை பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அ.தி.மு.க வேட்பாளர் தேர்வு மீண்டும் மீண்டும் தள்ளி போகிறது. எனவே மனுதாக்கல் முடிவடைவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்புதான் அ.தி.மு.க. வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ராகுல்காந்தியின் முடிவு முக்கியமானதாக கருதப்படுகிறது. அவர் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். இன்று இரவுதான் டெல்லிக்கு திரும்புகிறார்.
    சென்னை:

    பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.க்களில் 57 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

    இதையொட்டி புதிதாக 57 எம்.பி.க்களை தேர்வு செய்ய தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் மாநிலங்களவை தி.மு.க. எம்.பி.க்களான டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜே‌ஷ்குமார், அ.தி.மு.க. எம்.பி.க்களான ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக்காலம் வருகிற ஜூன் 29-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

    காலியாகும் இந்த 6 இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை)தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மே 31. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ந்தேதி, மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    போட்டி இருக்கும் பட்சத்தில் வாக்குப்பதிவு ஜூன் 10-ந்தேதி நடைபெறும். தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜூன் 13-ந்தேதி நிறைவடையும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் தி.மு.க.வுக்கு 4 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு அதன் கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்புடன் 2 இடங்களும் கிடைக்கும். தனக்கு கிடைக்க உள்ள 4 இடங்களில் ஒன்றை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு தி.மு.க. தலைமை அளித்துள்ளது.

    தி.மு.க. வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ஆர்.கிரிராஜன் ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர்கள் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    மேல்சபை தேர்தலில் இரு இடங்களில் போட்டியிட உள்ள அ.தி.மு.க. இதுவரை வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கவில்லை. இன்று (திங்கள் கிழமை) அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல ஓரு இடத்தில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரின் பெயரை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிலும் எம்.பி. பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

    தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனக்கு எம்.பி. பதவி வேண்டும் என்று ஏற்கனவே சோனியா, ராகுலிடம் தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு அவர் இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசி இருந்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து எம்.பி. பதவிக்கு தேர்வான ப.சிதம்பரம் தமிழகத்தில் இருந்து தேர்வாக வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளார்.

    ப.சிதம்பரம் எம்.பி.யாகும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் பா.ஜனதா கட்சியின் பொருளாதார கொள்கைக்கு காங்கிரஸ் சார்பில் சரியான பதிலடி கொடுக்க முடியும் என்று மேலிட தலைவர்கள் கருதுகிறார்கள்.

    எனவே மேல்சபை எம்.பி. பதவியை ப.சிதம்பரத்துக்கு கொடுக்க மேலிட தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் மேல்சபை எம்.பி. பதவியை கேட்கிறார். இதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றுள்ளார். இன்று (திங்கட்கிழமை) அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேச உள்ளார். அப்போது எம்.பி. பதவியை கேட்டு அவர் சில விளக்கமும் அளிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

    கே.எஸ்.அழகிரி மூன்று விஷயங்களுக்காக தனக்கு மேல்சபை எம்.பி. பதவி தர வேண்டும் என்று கூறுவதாக தெரிகிறது.

    1. மூன்று ஆண்டுகள் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்கும் தனக்கு எதிராக யாரும் எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை. இந்த 3 ஆண்டுகளில் எதிர்ப்பு கோஷ்டியினர் யாரும் தன்னை பதவி விலக சொல்லவில்லை.

    2. இந்த 3 ஆண்டு காலத்தில் தமிழக காங்கிரசுக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை பெற்று கொடுத்து இருப்பதால் காங்கிரசுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்து உள்ளேன். இதை கருத்தில் கொண்டு மேல்சபை எம்.பி. பதவி தர வேண்டும்.

    3. பாராளுமன்ற தேர்தல் 2019-ம் ஆண்டு நடந்தபோது தேர்தலில் போட்டியிடாமல் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன். அப்போது எம்.பி. பதவியை தியாகம் செய்து இருந்தேன். எனவே மேல்சபை எம்.பி. பதவி தர வேண்டும்.

    இப்படி 3 விதமான கோரிக்கைகளை கே.எஸ்.அழகிரி தெரிவித்து வருகிறார்.

    கே.எஸ்.அழகிரியின் இந்த கோரிக்கையால் காங்கிரஸ் மேல்சபை வேட்பாளர் தேர்வில் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி இடையே கடும் போட்டி உருவாகி இருக்கிறது. கே.எஸ்.அழகிரியின் கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும். இதற்கிடையே சுதர்சன நாச்சியப்பன், இளங்கோவன், விஸ்வநாதன் ஆகியோரும் மேல்சபை எம்.பி. பதவியை கேட்கிறார்கள்.

    தமிழகத்தில் இருந்து மேல்சபைக்கு காங்கிரஸ் சார்பில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. எனவே தனக்கு அந்த வாய்ப்பு தர வேண்டும் என்று விஸ்வநாதன் வலியுறுத்தி வருகிறார். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் வாய்ப்பு ப.சிதம்பரத்திடம் இருந்து நழுவி செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ராகுல்காந்தியின் முடிவு முக்கியமானதாக கருதப்படுகிறது. அவர் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். இன்று இரவுதான் டெல்லிக்கு திரும்புகிறார். நாளை அவர் மேல்சபை எம்.பி. வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.

    ஏற்கனவே கர்நாடகா உள்பட பல மாநில காங்கிரஸ் தலைவர்கள் மேல்சபை எம்.பி. பதவி கேட்டு டெல்லியில் குவிந்து இருக்கிறார்கள். தமிழக தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.

    எனவே நாளை ராகுல் தலைமையில் விறுவிறுப்பான ஆலோசனை நடைபெற உள்ளது. அப்போது தமிழக மேல்சபை வேட்பாளர் குறித்து முடிவாகிறது. என்றாலும் வேட்பாளர் பெயர் விவரம் வெளியாக ஓரிரு நாட்கள் தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

    ×