search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RSS rally"

    • அனைத்து இடங்களிலும் மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் ஊர்வலம் தொடங்குகிறது.
    • ஊர்வலம் புறப்படும் இடங்களில் இருந்து குறைந்தபட்சம் 3 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கினார்கள். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் 53 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. இதில் வட தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வாழப்பாடி, நாமக்கல், ஈரோடு, கோபி, கள்ளக்குறிச்சி, திண்டிவனம், கடலூர், சென்னை உள்பட 31 இடங்களில் நடக்கிறது.

    தென் தமிழ்நாட்டில் கருங்கல் தக்கலை, செங்கோட்டை, திசையன்விளை உடன்குடி, கோவில்பட்டி, ராஜபாளையம், மதுரை மேலூர், கம்பம், கொடைக்கானல், மதுரை, பரமக்குடி, காரைக்குடி, அறந்தாங்கி, திருமயம், நாகப்பட்டினம், மன்னார்குடி, பேராவூரணி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம், துறையூர், திருச்சி, கரூர், மடத்துக்குளம், திருப்பூர், கோத்தகிரி, எருமாடு, கோவில்பாளையம் ஆகிய 22 இடங்களில் நடக்கிறது.

    சென்னையில் கொரட்டூரில் உள்ள டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் காலேஜ், மணலி, குரோம்பேட்டை விவேகானந்தா பள்ளி ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. அனைத்து இடங்களிலும் மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலத்தின் முன்பு ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் படம் எடுத்துச் செல்லப்படும். அதையடுத்து பேன்ட் வாத்திய இசையும் அதன் பிறகு தொண்டர்கள் சீருடையுடன் அணிவகுப்பார்கள்.

    அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஏற்ப பேன்ட் இசைக்கும். ஊர்வலம் புறப்படும் இடங்களில் இருந்து குறைந்தபட்சம் 3 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும். ஊர்வலம் நிறைவடைந்ததும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    சேலத்தில் இன்று மாலை 4 மணியளவில் ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலம் மரவனேரி மாதவம் வளாகத்தில் இருந்து நடக்கிறது. இந்த ஊர்வலம் அம்பேத்கார் சிலை வழியாக சங்கர் நகர், தமிழ்சங்கம் சாலை வழியாக மீண்டும் மரவனேரி மாதவம் வளாகத்திற்கு வந்து அடைகிறது.

    பின்னர் மரவனேரி பிரதான சாலையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி பஸ்நிலையம், சேலம் சாலை சந்திப்பு, பாவடி வீதி, கிழக்கு ரதவீதி சந்திப்பு, பூக்கடை சந்திப்பு, ஆறுமுகசாமி கோவில், வன்னியர் தெரு, திருச்செங்கோடு நகர காவல் நிலையம், வேலூர் சாலை, சங்ககிரி சாலை வழியாக 2.8 கி.மீ. தூரம் வந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைகிறது. அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.

    • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை முன்னிட்டு சேலம் மாநகர துணை கமிஷனர்கள் தலைமையில் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சேலத்தில் இன்று ஆர்.எஸ்.எஸ். சார்பில் மாலை 4 மணியளவில் ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலம் மரவனேரி மாதவம் வளாகத்தில் இருந்து நடக்கிறது. இந்த ஊர்வலம் அம்பேத்கார் சிலை வழியாக சங்கர் நகர், தமிழ்சங்கம் சாலை வழியாக மீண்டும் மரவனேரி மாதவம் வளாகத்திற்கு வந்து அடைகிறது.

    பின்னர் மரவனேரி பிரதான சாலையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். மாநில செயற்குழு உறுப்பினர் விவேகானந்தன் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் செந்தில்குமார் செய்து வருகிறார்.

    ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை முன்னிட்டு சேலம் மாநகர துணை கமிஷனர்கள் மதிவாணன், பிருந்தா ஆகியோர் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இதே போல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி பஸ் நிலையம், சேலம் சாலை சந்திப்பு, பாவடி வீதி, கிழக்கு ரதவீதி சந்திப்பு, பூக்கடை சந்திப்பு, ஆறுமுகசாமி கோவில், வன்னியர் தெரு, திருச்செங்கோடு நகர காவல் நிலையம், வேலூர் சாலை, சங்ககிரி சாலை வழியாக 2.8 கி.மீ. தூரம் வந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைகிறது.

    இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆர்.எஸ்.எஸ். பேரணியை முன்னிட்டு 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தினால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.
    • ஊர்வலத்தில் சீருடை இல்லாத யாரையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனுமதிக்கக்கூடாது.

    சென்னை:

    விஜயதசமி மற்றும் தேசிய தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 22 மற்றும் 29-ந் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு அந்தந்த மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் மனு கொடுத்தனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜா, ஜி.கார்த்திகேயன், வக்கீல் ரபுமனோகர் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

    போலீஸ் தரப்பு அட்வகேட் ஜெனரல் செய்த வாதத்தில், 'அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கேட்கும் ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை. தேவாலயம், மசூதி, திராவிடர் கழக அலுவலகம் இருக்கும் வழியாக ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டுள்ளனர். மேலும், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை இணைத்து அகண்ட பாரதம் கட்டமைப்போம் என்று வரைபடங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ளனர்'' என்றார்.

    அதற்கு நீதிபதி, "அகண்ட பாரதம் என்று அவர்கள் கூறுவதால் அரசுக்கு என்ன பிரச்சினை? அதை அவர்கள் விரும்புகின்றனர்" என்று கருத்து தெரிவித்தார்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல், "இது மிகவும் தீவிரமானது. இதுபோன்ற கோரிக்கை முன்வைக்கும் இவர்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும். இமாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கோருகிறது. இமாச்சல பிரதேசத்தை தன் நாட்டு வரைப்படத்துடன் இணைத்து, இது எங்களுடையது என்கிறது. அதுபோலத்தான் இதுவும்'' என்றார்.

    தலைமை குற்றவியல் அரசு வக்கீல், 'ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தினால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது' என்றார்.

    அதற்கு நீதிபதி, 'சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசின் கடமை. அணி வகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் கேட்கப்பட்ட விவரங்களை போல பிற அமைப்புகளிடம் கேட்கப்படுமா?' என்று கேள்வி எழுப்பினார்.

    பின்னர், நீதிபதி பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிற 22 மற்றும் 29-ந் தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கும் போலீசார் கூறும் காரணங்களை ஏற்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை நேரில் அழைத்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை செய்து, அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நிலவரப்படி நிபந்தனைகளுடன் ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும்.

    இந்த ஊர்வலத்தில் சீருடை இல்லாத யாரையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனுமதிக்கக்கூடாது. போலீசார் விதிக்கும் நிபந்தனைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். அமைதியான முறையில் ஊர்வலம் நடத்த வேண்டும். இதற்கு தகுந்த பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். 22-ந் தேதி நடக்கும் ஊர்வலத்தின் வழித்தடத்தை 20-ந் தேதிக்குள்ளும், 29-ந் தேதி ஊர்வல வழிதடத்தை 24-ந் தேதிக்குள்ளும் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

    • பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.
    • மனு விரைவில் பட்டியலிடப்பட்டு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

    மதுரை:

    வருகிற 23-ந்தேதி அன்று ஆயுதபூஜை, 24-ந்தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை உள்ளிட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.

    இந்த பேரணியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், காக்கி பேண்ட், வெள்ளை நிற சட்டை, தொப்பி அணிந்து பங்கேற்கவும், மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ள வழித்தடத்தில் பேரணியாக செல்லவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் பட்டியலிடப்பட்டு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

    • நாமக்கல்லில் நேற்று ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது.
    • நாமக்கல் பூங்கா சாலை, அம்மா உணவகம் அருகில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடங்கியது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் நேற்று ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது. நாமக்கல் பூங்கா சாலை, அம்மா உணவகம் அருகில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடங்கியது. நாமக்கல் பஸ் நிலையம், மணிக்கூண்டு, திருச்சி சாலை, ஸ்டேட் பேங்க் ரோடு, பி.எஸ்.என்.எல். சாலை, மோகனூர் சாலை, அய்யப்பன் கோவில் வழியாக பரமத்தி சாலை எம்.ஜி.ஆர் சிலை, காந்தி சிலை, உழவர் சந்தை வழியாக மீண்டும் பூங்கா சாலையை அடைந்தது.

    அம்மா உணவகத்தின் முன்பு நிகழ்ச்சி முடிந்தது. அங்கு அணிவகுப்பு மரியாதை செய்து சொற்பொழிவாற்றி நிகழ்ச்சியை முடித்தனர். இதையொட்டி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலை செல்வன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு வழங்கி இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஊர்வலம் நடைபெறும் இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி போலீசார் 12 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமது அளித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறுகிறது.

    சென்னையில் 2 இடங்களில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த அந்த அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். கொரட்டூர் மற்றும் ஊரப்பாக்கத்தில் ஊர்வலம் நடத்தப்படுகிறது.

    இதேபோன்று தமிழகம் முழுவதும் மொத்தம் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பினர் செய்துள்ளனர்.

    அனைத்து இடங்களிலும் மாலை 4 மணி அளவில் ஊர்வலத்தை தொடங்க திட்டமிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுமார் 1 மணி நேரத்துக்குள் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போட்டியாக யாரும் திடீரென எதிர் ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    ஊர்வலம் நடைபெறும் இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி போலீசார் 12 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளனர். ஊர்வலத்தில் செல்பவர்கள் நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்கிறார்களா? என தீவிரமாக கண்காணிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் நாளை மதியம் 2 மணிக்கு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற உள்ளது.
    • கோபி வாய்க்கால் மேடு ஸ்ரீவித்யா பள்ளியில் இருந்து ஊர்வலம் தொடங்கி பார்க் வீதி, அரசு மருத்துவமனை வீதி, கச்சேரி வீதி, ஈரோடு-சக்தி ரோடு மெயின் ரோடு வழியாக முத்து மஹாலில் ஊர்வலம் நிறைவடைகிறது.

    கோபி:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் சென்னை உள்பட 45 இடங்களில் நாளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அந்த அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு போலீசார் கடும் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளனர். திட்டமிட்டபடி நாளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற உள்ளது. கோபி வாய்க்கால் மேடு ஸ்ரீவித்யா பள்ளியில் இருந்து ஊர்வலம் தொடங்கி பார்க் வீதி, அரசு மருத்துவமனை வீதி, கச்சேரி வீதி, ஈரோடு-சக்தி ரோடு மெயின் ரோடு வழியாக முத்து மஹாலில் ஊர்வலம் நிறைவடைகிறது.

    ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள், ஒரு ஏ.டி.எஸ்.பி, 10 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் நாளை கோபிசெட்டிபாளையம் பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. முக்கியமான பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறியதாவது:-

    நீதிமன்ற உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் நாளை கோபிசெட்டிபாளையத்தில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சட்ட- ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எனது தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கோபிசெட்டிபாளையம் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த ஊர்வலத்திற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு போலீஸ் சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை அவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.
    • பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதனை ஏற்கும் வகையில் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் உறுதி மொழி அளிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு ஐகோர்ட்டு அளித்திருந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னை உள்பட 45 இடங்களில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அந்த அமைப்பினர் முடிவு செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து திட்டமிட்டபடி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற உள்ளது.

    சென்னையில் 2 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறுகிறது. கொரட்டூர் விவேகானந்தா பள்ளி மற்றும் ஊரப்பாக்கம் சங்கராபள்ளி ஆகிய இடங்களில் இருந்து ஊர்வலமாக செல்கிறார்கள். முடிவில் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு 12 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். இது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கடுமையான நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன அதன் விவரம் வருமாறு:-

    * ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தின் போது தனி நபர்களை குறிப்பிட்டோ சாதி, மதம் பற்றியோ எக்காரணம் கொண்டும் யாரும் தவறாக பேசக் கூடாது.

    * இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்தவித கருத்துக்களையும் வெளிப்படுத்தி பேசக்கூடாது. நமது நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த செயலையும் யாரும் செய்யக்கூடாது.

    * பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

    * ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் யாருக்கும் காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்திச் செல்லக்கூடாது.

    * ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் குடிநீர் வசதி, முதல் உதவி, நடமாடும் கழிவறைகள், கேமராக்கள், தீயணைப்பு கருவிகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொள்ள போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்பினருடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்.

    * அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இடதுபுறமாக மட்டுமே ஊர்வலமாக செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே ஊர்வலத்துக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    * ஊர்வலத்தை நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், ஊர்வலத்தில் செல்பவர்களை ஒழுங்குப்படுத்தவும் போலீசுக்கு உதவும் வகையில் போதுமான தன்னார்வலர்களை நியமித்திருக்க வேண்டும்.

    * போலீஸ் அனுமதி அளித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலமாக செல்வதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    * பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒலி சத்தம் 15 வாட்சுகளுக்கு மிகாமல் இருப்பது அவசியம். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.

    * ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.

    * பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதனை ஏற்கும் வகையில் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் உறுதி மொழி அளிக்க வேண்டும்.

    * இந்த நிபந்தனைகள் எதையும் ஊர்வலத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது. அப்படி மீறும் வகையில் செயல்பட்டால் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு விதித்துள்ளனர்.

    காவல் துறை அலுவலகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றிக்கையில் சென்னை ஐகோர்ட்டு விதித்துள்ள உத்தரவின் படியே மேற்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்படுகிறது.
    • அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்காததை தொடர்ந்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் ஐகோர்ட்டை நாடினர்.

    இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

    இதைதொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர்.

    இதையடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்படுகிறது.

    இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத நல்லிணக்க மனித சங்கிலி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதனால் சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த முறையும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போட்டியாக யாரும் பேரணி, ஆர்ப்பாட்டங்களை அறிவிக்க வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பேரணி நடைபெறும் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநகர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுஉள்ளார்.

    • ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளிக்காததால் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீண்டும் ஐகோர்ட்டை நாடி கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர்.
    • தமிழக அரசு, ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று நடத்துவதற்கு அந்த அமைப்பினர் திட்டமிட்டனர்.

    தமிழகத்தில் சென்னை உள்பட 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த முடிவு செய்யப்பட்டி ருந்தது. இதற்காக அனைத்து இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போலீசாரிடம் உரிய அனுமதியை கேட்டு விண்ணப்பித்தனர்.

    அதே நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மனித சங்கிலி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    இதையடுத்து போலீசார் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி 6 இடங்களை தவிர 44 இடங்களில் உள்ள அரங்குகளில் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதனை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் ஏற்க மறுத்து விட்டனர். அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். 2 நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. தனி நீதிபதிகளின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் ஒழுக்கத்தை கடைபிடித்து பேரணி நடத்த வேண்டும் என்றும், பிறரை தூண்டும் வகையில் செயல்பாடுகள் இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கிடைத்தது.

    கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணை நடைபெற்றபோது தமிழக அரசு சார்பில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? என்பது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.

    தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி உளவுத்துறை தகவல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களின் அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது என்றும், சென்னை ஐகோர்ட்டு பேரணிக்கு அனுமதித்ததை ஏற்க முடியாது என்றும் வாதிட்டார்.

    பேரணியை அனுமதிப்பதா? வேண்டாமா? என்று முடிவெடுக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டது.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஆஜராகி வாதாடிய வக்கீல் மகேஷ் ஜெத்மலானி தமிழக அரசின் முடிவு ஒரு தனிப்பட்ட காரணம் என்றும், கூட்டணி கட்சிகளின் மனித சங்கிலிக்கு அனுமதி அளித்து விட்டு ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு மட்டும் தடை விதிப்பது எப்படி சரியாகும் என்று வாதிட்டார்.

    இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த மே மாதம் 27-ந்தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட் டது.

    இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் மூலம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது. இதனால் விரைவில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் விரைவில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது. இதன் பிறகு பேரணி தொடர்பான புதிய அறிவிப்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக, தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக, தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • நிபந்தனைகள் விதித்ததால் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
    • மற்ற அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மனு

    சென்னை:

    தமிழகத்தில் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்திருந்தார். உளவுத்துறை அறிக்கைகளை ஆய்வு செய்த பின் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை, பல்லடம் ஆகிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் உள்ளரங்கில் அணிவகுப்பை நடத்திக்கொள்ளலாம் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார். மேலும் பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இவ்வாறு நிபந்தனைகள் விதித்ததால் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை 44 இடங்களில உள்ளரங்க நிகழ்வாக நடத்தலாம் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், ஊர்வலத்திற்கு அனுமதி கோரியும் ஆர்எஸ்எஸ் சார்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் அணிவகுப்பை உள்ளரங்க நிகழ்வாக நடத்த தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார், என ஆர்எஸ்எஸ் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×