search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namakkal accident"

    • நிலைதடுமாறி சதீஷ் மோட்டார்சைக்கிளுடன் சாலையோரம் உள்ள கல் மீது விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எரையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சதீஷ் (வயது 22). மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த சதீஷ் தனது நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சேலத்துக்கு சென்று விட்டு அங்கிருந்து நேற்று மாலையில் வீடு திரும்பினார்.

    சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகலூர் கேட் அருகே உள்ள வெற்றி நகர் பகுதியில் சதீஷ் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சதீஷ் மோட்டார்சைக்கிளுடன் சாலையோரம் உள்ள கல் மீது விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோட்டோரம் இருந்த ஒரு நிழற்குடையில் ஜீப் நிலைதடுமாறி மோதி விபத்தானது.
    • ஜீப்பில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வனவராக பணியாற்றி வந்தவர் ரகுநாதன் (40). கேரளாவைச் சேர்ந்த மர வியாபாரி மார்த்தாண்டம் ராஜன் (43), கொல்லிமலை அரியலூர் நாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (43). இவர்கள் 3 பேரும் நேற்றிரவு சேலம் நோக்கி ஜீப்பில் வந்து கொண்டிருந்தனர்.

    அவர்கள் இரவு 11.30 மணியளவில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ரோட்டோரம் இருந்த ஒரு நிழற்குடையில் அவர்கள் வந்த ஜீப் நிலைதடுமாறி மோதி விபத்தானது. இதில் ஜீப்பில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இதுகுறித்து தகவல் தெரிந்ததும் பேளுக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்கள் எதற்காக சேலம் சென்றார்கள்? விபத்தான ஜீப்பை ஓட்டி வந்தது மர வியாபாரியான மார்த்தாண்டம் ராஜனா? அல்லது வேறு யாராவது ஓட்டி வந்தார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்கள் இருக்கிறதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தி தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
    • நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய், மகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள சின்னஅய்யம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி (50). இவரது மகள் கீர்த்தனா அனுஸ்ரீ(10). இருவரும் நேற்று நாமக்கல்-திருச்செங்கோடு ரோடு பெரசபாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுமி கீர்த்தனா அனுஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தி தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில், நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய், மகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • பொய்யேரிக்கரை சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செல்லிபாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மகன் பெரியசாமி (வயது 37). கட்டிட மேஸ்திரி. இருவருக்கு பிரேமா என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பிரேமாவுக்கு திடீரென காதில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவியை அழைத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் மோகனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக பெரியசாமி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பொய்யேரிக்கரை சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த பெரியசாமி மனைவி கண்முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி பிரேமா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னால் சென்று கொண்டிருந்த கரும்பு லோடு டிராக்டரை இந்துமதி முந்தி செல்லும்போது எதிரே திடீரென லாரி வந்தது.
    • டிராக்டர், கண் இமைக்கும் நேரத்திற்குள் மொபட் மீது ஏறி இறங்கியது. இதில் இந்துமதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த சின்னாரபாளையத்தை சேர்ந்தவர் ராஜவேலு. விவசாயியான இவருக்கு தவமணி (வயது 50) என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர்.

    மூத்த மகள் இந்துமதி (25), சென்னையில் உள்ள பிரபல தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இந்துமதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    நேற்று மாலை தனது சொந்த ஊரான சின்னாரபாளையத்தில் உள்ள வீட்டிலிருந்து தவமணியும், இந்துமதியும் திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் சென்றனர். இந்துமதியின் தங்கையை பார்த்துவிட்டு இவருவரும், மொபட்டில் இரவு வீட்டுக்கு திரும்பினர்.

    இரவு 7 மணி அளவில் கொக்கராயன்பேட்டையை அடுத்துள்ள கோம்புமேட்டில் இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கரும்பு லோடு டிராக்டரை இந்துமதி முந்தி செல்லும்போது எதிரே திடீரென லாரி வந்தது. இதனால் நிலை தடுமாறிய இந்துமதி மொபட்டுடன் கீழே விழுந்தார்.

    அப்போது டிராக்டர், கண் இமைக்கும் நேரத்திற்குள் மொபட் மீது ஏறி இறங்கியது. இதில் இந்துமதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தாய் தவமணி பலத்த காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதிக்க டாக்டர்கள், தவமணி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்துமதி, தவமணி உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி பஸ் மோதி 5-ம் வகுப்பு குழந்தை இறந்த சம்பவத்தை அடுத்து செம்மண்காடு பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • ஆஸ்பத்திரியில் பிரபாகரன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மெட்டாலா, செம்மண்காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 10).

    இந்த குழந்தை, ஆயில்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தது. வழக்கம்போல் இன்று காலை பிரபாகரன் பள்ளிக்கூடம் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு, செம்மண்காடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள நிழற் கூடத்தில் பஸ்சுக்காக காத்திருந்தான். மேலும் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டி அங்கு நின்று கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் அந்த வழியாக தனியார் கல்லூரி பஸ் ஒன்று அதிவேகமாக வந்தது. அதே நேரத்தில் எதிரே லாரி ஒன்றும் வேகமாக வந்தது. அப்போது திடீரென கல்லூரி பஸ்சும், லாரியும் செம்மண்காடு பஸ் நிறுத்தம் அருகே நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    மோதிய வேகத்தில் கல்லூரி பஸ் நிலைதடுமாறி பள்ளி மாணவர்கள் நின்று கொண்டிருந்த நிழற் கூடத்தில் மின்னல் வேகத்தில் புகுந்தது. அந்த பஸ் நிற்காமல் சென்று மாணவர்கள் மீது மோதியது. இதில் நிழற்கூடத்தில் பள்ளிக்கூடம் செல்ல வேண்டி உட்கார்ந்திருந்த பிரபாகரன் மீது பஸ்சின் டயர் ஏறி இறங்கியது. இதில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானான்.

    இதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காயம் அடைந்த மாணவர்களை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆயில்பட்டி போலீசார், அங்கு விரைந்து வந்து மாணவன் பிரபாகரன் உடலை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கல்லூரி பஸ் மோதி 5-ம் வகுப்பு குழந்தை இறந்த சம்பவத்தை அடுத்து செம்மண்காடு பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆஸ்பத்திரியில் பிரபாகரன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நாமக்கல்லில் கார் விபத்தை ஆய்வு செய்தபோது வேன் மோதியதில் 2 போலீசார் உயிரிழந்தனர்.
    • நாமக்கல்லில் வேன் மோதி பலியான போலீசார் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்.

    சென்னை:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் இருந்த போலீசார் மீது சுற்றுலா வேன் மோதியதில் போலீஸ்காரர் தேவராஜன், சிறப்பு எஸ்.ஐ சந்திரசேகர் ஆகியோர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், நாமக்கல் அருகே வேன் மோதி உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    மேலும், உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    • நாமக்கல்லில் கார் விபத்தை ஆய்வு செய்தபோது வேன் மோதியதில் 2 போலீசார் உயிரிழந்தனர்.
    • வேன் மோதிய விபத்தில் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாமக்கல்:

    ராசிபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் இருந்த போலீசார் மீது சுற்றுலா வேன் மோதியதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தனர்.

    ராசிபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அணைப்பாளையம் பிரிவு சாலை உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதையொட்டி இணைப்புச் சாலை அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து ஓசூருக்கு சென்ற கார், சாலையில் திசை திருப்புவதற்காக வைக்கப்பட்டு இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்கு உள்ளானது. தகவல் அறிந்த ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சத்திரம் போலீஸ் நிலைய சிறப்பு-சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், ராசிபுரம் போலீஸ்காரர் தேவராஜன் ஆகியோரும் அங்கு வந்து வாகன போக்குவரத்தை சரிசெய்தனர்.

    மேலும் அந்த வழியாக சென்ற லாரி ஒன்றை, சாலையோரம் நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது திருநள்ளாரில் இருந்து சேலம் மாவட்டம் இளம்பிள்ளைக்கு சென்ற சுற்றுலா வேன் ஒன்று அந்த வழியாக அதிவேகமாக வந்தது.

    கண் இமைக்கும் நேரத்தில் சுற்றுலா வேன் லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்த போலீசார் மற்றும் லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் போலீஸ்காரர் தேவராஜன்(வயது 37) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர்(55) பலத்த காயம் அடைந்தார். அவரை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சந்திரசேகர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் மற்றொரு போலீஸ்காரர் மணிகண்டன் மற்றும் சுற்றுலா வேனில் பயணம் செய்த 3 பேரும் காயமடைந்தனர். அவர்கள் 4 பேரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், நாமக்கல் டி.எஸ்.பி. சுரேஷ் ஆகியோர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விபத்தில் பலியான போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

    விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகருக்கு, வனிதா என்ற மனைவியும், ஹரிபிரசாத் என்ற மகனும், பார்கவி என்ற மகளும் உள்ளனர். போலீஸ்காரர் தேவராஜனுக்கு, அமுதா என்ற மனைவியும், சுஜித் (8) என்ற மகனும், மோஷிகா (6) என்ற மகளும் உள்ளனர். தேவராஜனின் மனைவி அமுதா மங்களபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வக்கீல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    நாமக்கல்:

    கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சையத் இப்ராஹிம் (50). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு காரில் சேலத்திலிருந்து கரூர் நோக்கி சென்றார்.

    காரை முகமது மீரான் (26). ஓட்டினார். கார் நாமக்கல் முதலைப்பட்டி பைபாஸ் நல்லிபாளையம் அருகே சென்ற போது காரின் முன்பு சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வழக்கறிஞர் சையத் இப்ராஹிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டது. கார் மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது. தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான சையத்இப்ராஹிம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரியை கீரம்பூர் சுங்கசாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    விபத்தில் பலியான வக்கீல் சையத் இப்ராஹிம் பள்ளப்பட்டி தி.மு.க. முன்னாள் சேர்மனாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாமக்கல் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலாயுதபாளையம் பகுதியை சேர்ந்தவர் மதுபாலன். இவர் பொட்டலாபுரத்தில் வி.ஏ.ஓவாக உள்ளார். இவரது மனைவி கோசலை. இவர்களுக்கு வைணவ ரோசன் (4) என்ற மகனும், தமிழினி (2) என்ற மகளும் உள்ளனர். மதுபாலன் இன்று காலை குடும்பத்துடன் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் மனைவியின் ஊரான துத்திக்குளத்திற்கு பை-பாஸ் ரோட்டில் சென்றனர். அப்போது சென்னையில் இருந்து கரூரை நோக்கி சென்ற கார் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மதுபாலன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்து குறித்து அருகில் உள்ளவர்கள் பார்த்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது 4 வயது சிறுவன் வைணவ ரோசன் பலியானது தெரியவந்தது. காயமடைந்த மற்றவர்களை மீட்டு நாமக்கலில் உள்ள தனியார் ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    வைணவ ரோசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரை ஓட்டி வந்த கங்காசலத்தை பிடித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×