search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NR Cong - BJP Ministers"

    • புதுவையில் ஆளும் கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதாவினர் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
    • புதுவையில் பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும் என்றும், முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் பகிரங்கமாக கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆளும் கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதாவினர் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டது. பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியதில் ஊழலும் முறைகேடும் நடந்ததாக சட்டசபையில் பகிரங்கமாக புகார் செய்தார்.

    அதோடு பா.ஜனதா விற்கு ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன், கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் ஆகியோரும் தங்களது தொகுதியில் கோவில் அறங்காவலர் குழு, வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவற்றில் தாங்கள் புறக்கணிப்பதாக புகார் அளித்தனர்.

    இந்த நிலையில், கடந்த வாரம் பா.ஜனதாஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் தனது தொகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி சட்டசபையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது தான் பா.ஜனதாவை ஆதரிப்பதால் முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுமென்றே தன்னை புறக்கணிப்பதாகவும், புதுவையில் பா.ஜனதா வளர்ச்சியடைய கூடாது என ரங்கசாமி கருதுவதாகவும் புகார் கூறினார்.

    மேலும் புதுவையில் பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும் என்றும், முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் பகிரங்கமாக கூறினார். அங்காளன் போராட்டம் நடத்தியபோது அவருக்கு ஆதரவாக பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரமும் போராட்டத்தில் ஈடுபட்டார். முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரும் விமர்சனம் செய்தார்.

    இந்த நிலையில், முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை வெளிப்படையாக கூறியது என்.ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிருப்தியும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    இதனையடுத்து அவர்கள் அமைச்சர் லட்சுமிநாராயணன் அறையில் ஒன்று திரண்டனர். பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்கு ஆதரவாக பா.ஜனதா எம்.எல்.ஏ. பேசுவதா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

    சுயேட்சை எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் டெல்லி சென்றுள்ள சபாநாயகர் ஏம்பலம் செல்வம் புதுவை திரும்பியவுடன் அவரையும் பா.ஜனதா அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோரிடம் இதுகுறித்து முறையிட போவதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில், புதுவை திரும்பிய சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சட்டசபையில் உள்ள அவரது அறையில் அமைச்சர்கள் லட்சுமி நாராயனன், தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், திருமுருகன், லட்சுமிகாந்தன், பாஸ்கர், கே.எஸ்.பி ரமேஷ் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.

    அப்போது என்.ஆர் காங்கிரஸ் தரப்பினர் கூட்டணி ஆட்சி நடைபெறும் போது முதல்-அமைச்சரை பகிரங்கமாக விமர்சிப்பது சரியா, அதுவும் சுயேட்சை

    எம்.எல்.ஏ. விமர்சிக்கும்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. அவருடன் இணைந்து குற்றம் சாட்டலாமா என கேள்வி எழுப்பினர்.

    அப்போது பா.ஜனதா தரப்பில் என்.ஆர் காங்கிரஸ், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து, தேர்தலில் நிற்கட்டும் என கூறியது சரியா என்றும், இருதரப்பிலும் ஒருமித்த கருத்துடன் கூட்டணி வைத்துவிட்டு வெற்றி பெற்ற பிறகு எங்களால் தான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என கூறியது சரியா என்றும் கேட்டனர்.

    இருப்பினும் கூட்டணி கட்சிகள் ஒன்றுக்கொண்டு மோதிக்கொள்வது புதுவை மக்களிடம் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால் ஏதேனும் குறைகள் இருந்தால் தலைமையிடம் முறையிட்டு தீர்வு காண வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    ×