search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monkeypox Virus"

    • குரங்கு அம்மை நோய் பரவி வருவதோடு உயிர்பலியையும் ஏற்படுத்தியுள்ளது.
    • குரங்கு அம்மைக்கு முறையான சிகிச்சைகள் இல்லை.

    உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, குரங்கு அம்மை உலகளவில் பரவும் திறன் கொண்டது. இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் பரவி வருவதோடு முதல் உயிர்பலியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்களை பார்ப்போம்.

    குரங்கு அம்மை நோய் என்றால் என்ன?

    1958-ம் ஆண்டு ஆய்வக நோக்கக்களுக்காக பயன்படுத்தப்பட்ட குரங்குகளில் இருந்து இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால் குரங்கு அம்மை என்று பெயரிடப்பட்டது.

    இந்த நோய் பொதுவாக மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. தற்போது உலகமெங்கும் பரவ தொடங்கியுள்ளது.

    குரங்கு அம்மை நோய் எவ்வாறு பரவுகிறது?

    இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. நோய் பாதிப்புக்குள்ளான நபருடன் தொடர்புகொள்வது, அவர்கள் பயன்படுத்திய அசுத்தமான படுக்கையை தொடுவது, நோய் பாதிப்புக்குள்ளான விலங்கு கடிப்பது, பாதிக்கப்பட்ட நபரின் ஆடைகளை தொடுவது போன்றவை மூலம் நோய்த்தொற்று ஏற்படக்கூடும்.

    குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் என்னென்ன?

    முகம் அல்லது உடலின் பிற பகுதிகளில் தடிப்பு, கொப்புளங்கள் உருவாகுவது, காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகுவலி, உடல் குளிர்ச்சி அடைவது, சோர்வு ஏற்படுவது, வீக்கம் உண்டாவது போன்றவை குரங்கு அம்மை நோயின் சில அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் வெளிப்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

    குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லா வயதினரும் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பது கண்டறியப்பட்டால், உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல் பிறந்த குழந்தைகள், சிறு வயது குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்களும் எளிதில் பாதிப்புக்கு ஆளாவார்கள்.

    குரங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?

    இது பொதுவாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது. குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளானால் சோர்ந்து விடாமல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதற்கேற்ப உடல் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். குரங்கு அம்மை தொற்றை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

    குரங்கு அம்மை பாதிப்பை எவ்வாறு தடுக்கலாம்?

    பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது மனிதர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது. தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். சோப் பயன் படுத்தி கைகளை கழுவ வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். அடிக்கடி பயன்படுத்தும் பகுதிகளை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் மற்றவர்களிடம் இருந்து விலகி, தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

    குரங்கு அம்மை பாதிப்பு ஏன் கவலைக்குரியது?

    ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் இந்த வைரஸ் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட பத்து நோயாளிகளில் ஒருவர் இறக்கிறார். அவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினராக உள்ளனர். இருப்பினும் லேசான அறிகுறிகள் கொண்டவர்கள் சில வாரங்களில் முழுமையாக நோய் பாதிப்பில் இருந்து மீண்டுவிடுவார்கள். இந்த வைரஸ் பொதுவாக சுவாசப் பாதை, கண்கள், மூக்கு அல்லது வாய் பகுதியில் வீக்கம், காயங்களை ஏற்படுத்தும். மருத்துவ ஆலோசனையை முறையாக பின்பற்றுவதன் மூலம் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம்.

    எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம்?

    குரங்கு அம்மைக்கு முறையான சிகிச்சைகள் இல்லை. இருப்பினும், பெரியம்மை தடுப்பூசி மூலம் இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம்.

    குரங்கு அம்மையை ஏற்படுத்தும் வைரஸ், பிளவிவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது. ஒட்டுண்ணிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் மூலம் பரவுகிறது. மனிதர்கள் மற்றும் குரங்குகள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். முதன் முதலில் 1957-ம் ஆண்டு கர்நாடகாவின் கியாசனூர் வனப்பகுதியில் பல குரங்குகள் இறந்தன. அதன் பின்னர் மக்கள் நோய்வாய்ப்பட்டனர்.

    • குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது.
    • குரங்கு அம்மை பரவலைத் தடுக்க இதையெல்லாம் செய்யக்கூடாது

    உலகமெங்கும் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக உலகளாவிய பொது சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.

    இந்த நோய் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. 8 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்த நோய் பாதிப்புக்குள்ளான ஒரு வாலிபர் கேரளாவில் உயிரிழந்தும் உள்ளார்.

    இந்த நிலையில் இந்தியாவில் இந்த தொற்று நோய் பரவலை தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    என்ன செய்ய வேண்டும்?

    குரங்கு அம்மை பாதிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றால்:-

    * குரங்கு அம்மை பாதித்த நபர்களை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும்.

    * கைகளை அடிக்கடி கிருமிநாசினி அல்லது சோப்பு, தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வர வேண்டும்.

    * நோய் தாக்கிய நபர் அருகே செல்கிறபோது வாயை நன்றாக மறைக்கிற விதத்தில் முககவசமும், கைககளில் கையுறைகளையும் அணிந்து கொள்ள வேண்டும்.

    * குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளான நபர் இருப்பிட சுற்றுப்புறங்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

    என்ன செய்யக்கூடாது?

    குரங்கு அம்மை பரவலைத் தடுக்க என்னவெல்லாம் செய்யக்கூடாது என்றால்-

    * குரங்கு அம்மை பாதித்த நபரின் படுக்கை, உடைகள், துண்டுகள் உள்ளிட்டவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.

    * குரங்கு அம்மை பாதித்தவர்களின் துணிகளுடன் மற்றவர்களின் துணிகளை துவைக்கக்கூடாது.

    * குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது.

    * குரங்கு அம்மை பாதித்த நபர்களை, பாதிப்பு இருக்கலாமோ என சந்தேகிக்கிற நபர்களை களங்கப்படுத்தக்கூடாது. தவறான தகவல்களை, வதந்திகளை நம்பக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உயிரிழந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருந்தது உண்மை தான்.
    • இதுவரை குரங்கு அம்மையால் இறப்பு பதிவாகவில்லை.

    சென்னை :

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது:-

    ரூ.3.8 லட்சம் செலவில், ஆஸ்பத்திரி மருத்துவக் கல்லூரிகளுக்கு வருகிற தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு 3 தங்கும் அறைகள், ரூ.5.85 லட்சத்தில் விசாகா குழு அலுவலகம், அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிகிற டாக்டர்களுக்கு உணவருந்துவதற்கும், இடைவெளி நேரங்களில் ஓய்வு எடுப்பதற்கும் ரூ.18.5 லட்சத்தில் 2 அறைகள், அதே போல் ரூ.6.8 லட்சம் செலவில் சுற்றுச்சுவருடன் கூடிய ராட்சத மீன் தொட்டி, ரூ.14.9 லட்சம் செலவில் சிறப்பு சிகிச்சை அறை ஒன்றும் இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் மருத்துவ கல்வியாளர்களுக்கு தங்களது கற்பிக்கும் திறனை வளர்க்க இந்தியா முழுவதும் மருத்துவர்களுக்கு தொழில்நுட்பத்திற்கான தேசிய மருத்துவ கவுன்சிலின் மூலம் மண்டல மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்பட்டிருந்தது.

    முதல்முறையாக மாநில அரசாங்கங்கள் நடத்துகின்ற மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கு 2 இடங்களில் மண்டல மையம் அமைக்க மத்திய அரசு, வாய்ப்பு அளித்துள்ளது.

    அந்தவகையில் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 4-ம், தனியார் கல்லூரிகள் 7-ம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தலா 2 ஆஸ்பத்திரிகளும் இன்று இணைக்கப்பட்டு 15 மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், பயிற்சி பெறுவதற்கான மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    கேரளாவில் குரங்கு அம்மை நோயால் வாலிபர் ஒருவர் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார் என்பது உறுதி படுத்தப்படவில்லை. கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் இதுகுறித்து பேசும்போது, உயிரிழந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருந்தது உண்மை தான். ஆனால் அதனால் தான் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் பாதிப்பால் உயிரிழந்தாரா? என்பது குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். விரைவில் இது குறித்து தெரிய வரும் என்றார்.

    ஆப்பிரிக்க நாடுகளை தவிர்த்து ஏறக்குறைய 77 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்புள்ளது. இந்த நாடுகளில் இதுவரை குரங்கு அம்மையால் இறப்பு பதிவாகவில்லை. இந்தியாவில் முதல்முறையாக அவ்வாறு ஏற்பட்ட இறப்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுவரை இதை குரங்கு அம்மைக்கான இறப்பு என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஆய்வறிக்கை வந்த பிறகு தான் ஏற்றுக்கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது அண்டை நாடான இலங்கை ஊரடங்கிற்கு பிறகு திவாலாகிவிட்டது.
    • குரங்கு அம்மை கர்நாடகத்தில் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

    பெங்களூரு:

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்று வருகிற 28-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி தொட்டபள்ளாப்புராவில் பிரமாண்ட மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் 4 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஓராண்டில் பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தியுள்ளார்.

    இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவி பெரும் சவால் ஏற்பட்டது. அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளோம். நமது அண்டை நாடான இலங்கை ஊரடங்கிற்கு பிறகு திவாலாகிவிட்டது.

    ஆனால் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவவில்லை. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களை கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

    இந்த குரங்கு அம்மை கர்நாடகத்தில் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஜெயதேவா ஆஸ்பத்திரி இயக்குனராக டாக்டர் மஞ்சுநாத் பணியாற்றி வருகிறார். அவரது பணியை நீட்டிப்பு செய்வது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்வார்.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.

    • விலங்குகளிடம் இருந்தே இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது.
    • இந்நோய் 5 முதல் 21 நாட்கள் வரை இருக்கும்.

    குரங்கு அம்மை நோய் ஒருவித வைரசால் ஏற்படுகிறது. இந்த வைரசில் இரண்டு தனித்தனி மரபியல் பிரிவுகள் உள்ளன. முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்கா நாடுகளிலும், 2-வது பிரிவு மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளிலும் கண்டறிப்பட்டது.

    நோய் பரவுவது எப்படி?

    பொதுவாக விலங்குகளிடம் இருந்தே இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடுவதன் மூலமும், அதன் உடல் திரவங்கள் மூலமும் பரவுவதாக கூறப்படுகிறது.

    குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளில் இறைச்சியை சரியாக வேகவைக்காமல் சாப்பிட்டாலும் இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது.

    அறிகுறிகள்

    குரங்கு அம்மை நோய் பாதித்தவர்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படும். அதோடு தலைவலி, உடல் வலியுடன் முதுகு வலியும் இருக்கும். மேலும் உடல் நடுக்கம், சோர்வடைதல் போன்றவையும் இந்நோயின் அறிகுறிகளாகும்.

    இந்நோய் பாதிப்பு ஏற்பட்டதும் உடலில் சிகப்பு நிற புள்ளிகள் தோன்றும். பின்னர் அவை கொப்புளங்களாக மாறும். 2 அல்லது 3 நாட்களில் இந்த கொப்புளங்கள் உதிர்ந்து விடும்.

    குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் 2 முதல் 4 வாரங்கள் வரை இருக்கும். பொதுவாக நோய் பாதிப்புக்குள்ளாகி 7 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறி வெளிப்படும். இந்நோய் 5 முதல் 21 நாட்கள் வரை இருக்கும்.

    செய்யக்கூடாதவை என்ன?

    குரங்கு அம்மை நோய் பாதித்தவரின் படுக்கை உள்ளிட்ட எந்தவொரு பொருட்களையும் தொடக்கூடாது.

    பாதிக்கப்பட்ட நோயாளியிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடக்கூடாது.

    கைகளை எப்போதும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் போது பாதுகாப்பு உடைகளை அணிந்து செல்ல வேண்டும்.

    முக கவசம் அணியவேண்டும்.

    உடலில் தோன்றும் தோல் வெடிப்புகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

    வாய்புண்களை வெதுவெதுப்பான உப்பு நீர் மூலம் கொப்பளிக்க வேண்டும்.

    • இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது.
    • உலக நாடுகளில் குரங்கம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.

    லண்டன்:

    ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், இங்கிலாந்தில் குரங்கம்மை பாதிப்பு 500-ஐ கடந்துள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அங்கு குரங்கு அம்மையால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது.

    • உலக நாடுகளில் குரங்கம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.
    • இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது.

    லண்டன்:

    ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில்பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

    இந்நிலையில் இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது.

    இதை தொடர்ந்து உலக நாடுகளில் குரங்கம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.

    • முதலில் காய்ச்சல் தொடங்கிய மூன்று நாட்களுக்குள் சொறி பிரச்சினை தோன்றும்.
    • குரங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ் உமிழ்நீர் மூலம் பரவுகிறது.

    கொரோனா வைரஸ் பல்வேறு மாறுபாடுகளுடன் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் குரங்கு காய்ச்சல் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நோய் பற்றிய விரிவான விவரங்களை காண்போம்.

    'மங்கி பாக்ஸ்' எனப்படும் இது ஒரு வகை வைரஸ் ஜூனோடிக் நோயாகும். அதாவது இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. மனிதர்களுக்கு இடையேயும் பரவலாம்.

    மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள வெப்பமண்டல மழைக் காடுகள் மற்றும் அங்கு வாழும் விலங்குகள் மூலம் இந்த வைரஸ் பரவக்கூடியது. அந்த பகுதியில் இருந்து பிற நாடுகளுக்கு பயணிப்பவர்கள் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

    காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை வலி, முதுகுவலி, உடலில் ஸ்டெமினா (ஆற்றல்) குறைவது, நிண நீர் சுரப்பிகளில் வீக்கம், சருமத்தில் வெடிப்பு, காயம், கொப்புளம் ஏற்படுவது குரங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாகும். முதலில் காய்ச்சல் தொடங்கிய மூன்று நாட்களுக்குள் சொறி பிரச்சினை தோன்றும். பின்பு புண்கள், கொப்புளங்கள் உருவாகும். அவை மஞ்சள் நிற திரவத்தால் சூழப்பட்டதாகவோ இருக்கலாம்.

    அந்த சமயத்தில் உடலில் புள்ளி, புள்ளியாக கொப்புளங்கள் நெருக்கமாக உருவாகிக்கொண்டிருக்கும். முகம், உள்ளங்கை, கால்களில் சொறி உணர்வு ஏற்படும். இந்த அறிகுறிகள் நான்கு வாரங்கள் கூட நீடிக்கலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது அவசியமானது.

    பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் சில வாரங்களுக்குள் தானாகவே மறைந்து விடும். பச்சிளம் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள், குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் கொண்டவர்கள் முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயிரிழக்க நேரிடும். குரங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் சரும நோய்த்தொற்றுகள், நிமோனியா, கண்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஆகியவை பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 3 முதல் 6 சதவீதம் பேர் மரணத்தை தழுவி இருக்கிறார்கள். குரங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வும், கண்காணிப்பும் குறைவாக இருப்பதும் இறப்பு அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது.

    குரங்கு காய்ச்சல் அறிகுறிகளை கொண்டிருப்பவர்கள், காய்ச்சல் பாதிப்பு ஆளானவர்கள் (இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள்) ஆகியோருடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பவர்கள் நோய்வாய்ப்படக்கூடும். குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்களின் உடலில் ஏற்படும் புண்களில் இருந்து வழியும் சீழ், ரத்தம் போன்றவை மூலம் நோய்த்தொற்று பரவக்கூடும்.

    அவர்கள் பயன்படுத்தும் உடைகள், படுக்கை அறை, துண்டுகள், உண்ணும் பாத்திரங்கள், உணவுகள் போன்ற பொருட்களை பயன்படுத்துவதன் மூலமும் பரவக்கூடும். நோய் பாதிப்புக்குள்ளான நபரின் வாயில் இருக்கும் புண்கள் கூட தொற்று நோயை பரப்பலாம். அதாவது குரங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ் உமிழ்நீர் மூலம் பரவுகிறது. அதனால் தொற்று பாதிப்புக்குள்ளான நபர்களுடன் நெருங்கி பழகுபவர்கள் எளிதில் பாதிப்புக்கு ஆளாவார்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் நஞ்சுக்கொடி மூலம் கருவில் வளரும் குழந்தைக்கும் பரவக்கூடும். குழந்தையை பெற்றெடுத்த பிறகு சரும தொடர்பு மூலமும் பரவும்.

    1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடம் முதன்முதலில் கண்டறியப்பட்டதால், இந்த நோய் மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் இது 1970-ல் மனிதர்களிடம் கண்டறியப்பட்டது.

    தமிழக சுகாதாரத்துறை சென்னை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் அறிகுறிகளை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    சென்னை:

    தென்ஆப்பிரிக்காவில் உருவான குரங்கு அம்மை நோய் மேற்கத்திய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது.

    குவைத், சார்ஜா, டாக்கா ஆகிய நாடுகளிலும் தற்போது பரவத் தொடங்கியதால் இந்திய சுகாதாரத்துறை விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளது.

    உலக அளவில் இதுவரையில் 500 பேருக்கு மேல் இந்நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்தியாவிலும் பரவாமல் தடுக்க முன்எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.

    இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை சென்னை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் அறிகுறிகளை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் சோதனை செய்யப்படுகிறார்கள்.

    குறிப்பாக சார்ஜா, குவைத், டாக்கா நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிரமாக காய்ச்சல், கொப்பளம் ஏதாவது உள்ளதா என்று சோதனை செய்கிறார்கள். மருத்துவ குழுவினர் பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. ஆனாலும் அதற்கான அறிகுறிகள் யாருக்காவது இருக்கிறதா? என்று சோதனை செய்யப்படுகிறது. காச்சல் இருந்தாலே சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு குரங்கு அம்மைக்கான பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொரோனா வைரசின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ள நிலையில் குரங்கு அம்மை நோய் தொடங்கி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது-

    குமரி மாவட்டத்தில் மருத்துவதுறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் கருவிகள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது குரங்கம்மை நோய் பரவி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ள நிலையில் குரங்கு அம்மை நோய் தொடங்கி உள்ளது. கொரோனா வைரசை பொறுத்த மட்டில் கொரோனா, ஆல்பா, டெல்டா பிளஸ், ஒமைக்கிரான் மற்றும் ஒமைக்கிரானில் 7 வகை வைரஸ்கள் அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது குரங்கம்மை என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கியுள்ளது .

    பொதுவாக இது பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை. பதட்டப்பட தேவையில்லை என்ற அறிவுறுத்தலை நான் தெரிவித்துக்கொள்கிறேன். ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகளில் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த நாடுகளை பொறுத்த மட்டில் ஏற்கனவே இது போன்ற வைரஸ்கள், புதிய தொற்றுகள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்துதான் பயமுறுத்தும். ஆனால் இது முற்றிலுமாக அந்த நாடுகளை தவிர்த்து புதிதாக இங்கிலாந்து,  அமெரிக்கா நாடுகளில் இருந்து தோன்றியுள்ளது. அந்த நாடுகளிலும் இந்த நோயால் எந்த உயிரிழப்பும் இல்லை. குறிப்பிட்ட இந்த நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களை கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளோம்.

    தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணித்து அவர்களது முகங்களில் உடல்களிலும் மாற்றம் தெரிந்தால் அவர்களை சோதனைக்கு உட்படுத்தி அதை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்ப துறையின் செயலாளர் மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.

    ×