search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Miss India"

    • ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது அழகியான நந்தினி குப்தா, ‘மிஸ் இந்தியா’ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார்.
    • தன் வாழ்க்கையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் தொழில் அதிபர் ரத்தன் டாடா என்று நந்தினி குப்தா கூறி உள்ளார்.

    மும்பை:

    'மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023' அழகி போட்டியின் இறுதிச்சுற்று மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது

    இந்த போட்டியில் 'மிஸ் இந்தியா' அழகியாக ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவைச் சேர்ந்த நந்தினி குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார்.

    இதில் இரண்டாவது இடம் டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சாவுக்கு கிடைத்துள்ளது. மூன்றாவது இடம், மணிப்பூரைச் சேர்ந்த தவ்னாவ்ஜாம் ஸ்ட்ரேலா லுவாங்குக்கு கிடைத்துள்ளது.

    அழகி போட்டி நிகழ்ச்சியில் இந்தி பட உலக நட்சத்திரங்கள் கார்த்திக் ஆர்யன், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் இடம் பெற்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    முன்னாள் அழகிகள் சினி ஷெட்டி, ரூபல் ஷெகாவத், ஷினட்டா சவுகான், மனசா வாரணாசி, மனிகா சியோகந்த், மான்யா சிங், சுமன்ராவ், ஷிவானி ஜாதவ் ஆகியோர் கண்கவர் உடையில் வந்து பார்வையாளர்களை வசீகரித்தனர்.

    'மிஸ் இந்தியா 'அழகியாக மகுடம் சூட்டப்பட்டுள்ள நந்தினி குப்தாவுக்கு வயது 19. இவர் ஒரு மாடல் அழகி ஆவார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

    தன் வாழ்க்கையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் தொழில் அதிபர் ரத்தன் டாடா என்று நந்தினி குப்தா கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "மனித குலத்துக்காக எல்லாவற்றையும் செய்வதுடன், சம்பாதிப்பில் பெரும்பகுதியை சமூக பணிகளுக்காக நன்கொடையாக அளிப்பவர். கோடிக்கணக்கான மக்களின் நேசத்துக்கு உரியவர் ரத்தன் டாடா" என தெரிவித்தார்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடக்கிற 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் நந்தினி குப்தா கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஆண்டுதோறும் அமெரிக்காவாழ் இந்தியர்கள் பங்கேற்கும் அழகி போட்டி நடைபெறும். இதில் தனிஷா பங்கேற்பது வழக்கம்.
    • இந்த ஆண்டுக்கான போட்டி நியூ ஜெர்சியில் உள்ள ராயல் ஆல்பர்ட் அரண்மனையில் நடந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம், ஏற்றமானூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசர்மா.

    நாராயணசர்மாவின் மனைவி மஞ்சிமா கவுசிக். இவர்களின் மகள் தனிஷா. இவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.

    நாராயண சர்மா சமீபத்தில் இறந்து விட்டார். என்றாலும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசித்து வந்தனர்.

    அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஆண்டுதோறும் அமெரிக்காவாழ் இந்தியர்கள் பங்கேற்கும் அழகி போட்டி நடைபெறும். இதில் தனிஷா பங்கேற்பது வழக்கம்.

    இதற்கு முன்பு நடந்த போட்டியில் தனிஷாவுக்கு மிஸ் திறமைச்சாலி பட்டம் கிடைத்தது. இந்த ஆண்டுக்கான போட்டி நியூ ஜெர்சியில் உள்ள ராயல் ஆல்பர்ட் அரண்மனையில் நடந்தது.

    இந்த போட்டியில் 30 மாநிலங்களில் இருந்து 74 பேர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் மிஸ் அழகிய முகம் போட்டியில் தனிஷாவுக்கு முதல் பரிசு கிடைத்தது.

    பட்டம் வென்ற தனிஷாவை போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பலரும் வாழ்த்தினர்.

    உலக அழகி பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றுத்தருவேன் என்று இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக கல்லூரி மாணவி அனுகீர்த்தி வாஸ் தெரிவித்தார். #MissIndia #AnukreethyVas
    சென்னை:

    ‘மிஸ் இந்தியா’ எனப்படும் இந்திய அழகியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி மும்பையில் கடந்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி நடைபெற்றது. இதில் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி அனுகீர்த்தி வாஸ் (வயது 19) இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதனையடுத்து சென்னைக்கு நேற்று வந்த அனுகீர்த்தி வாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய அழகி போட்டி நடத்தப்பட்ட 30 நாட்களும் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. இந்த இடத்துக்கு நான் வருவதற்கு என்னுடன் பங்கேற்ற 29 போட்டியாளர்களும், அமைப்பும் தான் காரணம். பல வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.



    தமிழக பிரதிநிதியாக பங்கேற்றதே எனக்கு பெருமையான விஷயம். அதிலும் வெற்றி பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி. ‘மிஸ் இந்தியா’ போட்டி பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் குறைவாக இருக்கிறது. விழிப்புணர்வு இருந்தால் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். மற்றொரு இந்திய அழகி மற்றும் உலக அழகி தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார் என்று உறுதியாக கூறுகிறேன்.

    உலக அழகிப்போட்டி சீனாவில் வருகிற டிசம்பர் மாதம் நடக்க உள்ளது. எனக்காக பல்வேறு நிபுணர்கள், குழுவினர் பணியாற்றி வருகிறார்கள். நான் என்னால் முடிந்த அளவு அனைத்து துறையிலும் சிறந்தவளாக மாறிக்கொண்டு வருகிறேன். அதற்காக எனக்கு பல்வேறு தரப்பினரும் உதவிபுரிகிறார்கள். இந்தியாவின் சார்பில் வெளிநாட்டு மண்ணில் பங்கேற்கும் பிரதிநிதி என்பதால் உடல் தகுதி உள்பட அனைத்து தகுதிகளையும் சிறப்பான முறையில் மேம்படுத்தி வருகிறேன்.

    உலக அழகி போட்டியை கவனத்தில் வைத்தே என்னுடைய பயணம் தொடர்கிறது. 17 வருடங்களுக்கு பின்னர் நமது நாட்டை சேர்ந்த மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்று மகுடம் சூட்டினார். தற்போது அதனை தொடருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதே என்னுடைய பொறுப்பு.

    அதற்காக முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவேன். உலக அழகி பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றுத்தருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய அழகி பட்டத்தை வெல்பவர்கள் பணக்காரர் களாக தான் இருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். பணம் ஒரு பொருட்டல்ல. திறமைகளை வைத்தே அதில் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. இந்திய அழகி பட்டத்தை பெற்றதற்கு எனது தாயாருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஒரு பெண்ணை தனியாக வளர்ப்பதே பெரிய விஷயம். அதிலும் உன் கனவு எதுவோ அதை நிறைவேற்று, உன்னால் முடியும் என்று சொல்லி வளர்ப்பது பெரிய விஷயம். எனது அம்மாவினாலேயே நான் இந்த அளவுக்கு வந்திருக்கிறேன்.

    நான் லயோலா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் (பிரெஞ்சு) 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். இந்திய அழகி பட்டம் பெற்றிருப்பதால், உலக அழகி போட்டிக்கு என்னை தயார்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன். அதனால் என்னுடைய படிப்பை மாற்றுகிறேன், நிறுத்த மாட்டேன்.

    உலக அழகி போட்டி முடிந்த பின்னர் படிப்பை முடிப்பேன். ஏனென்றால் அதுவும் நான் ஆசைப்பட்டு எடுத்த பாடம். முடிவு இல்லாமல் எதையும் விடமாட்டேன். கண்டிப்பாக அதனை முடித்து விடுவேன்.

    என்னை மனதார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. உங்கள் (தமிழக மக்கள்) ஒவ்வொருவருடைய வாழ்த்துகள் தான் என்னை மேலும் வளர்ச்சியடைய செய்கிறது. மேலும் ஊக்குவிப்பதாகவும் இருக்கிறது. என்னுடைய பாட்டி வாழ்த்தியது தான் சிறப்பான வாழ்த்தாக அமைந்தது. நான் ஊரில் இருந்து வீட்டுக்கு வந்ததும் பாட்டி, என்னை கட்டி அணைத்து அழத்தொடங்கிவிட்டார். அவர் தான் இந்த மாதிரி உடை உடுத்தக்கூடாது, ‘மேக்கப்’ போடக்கூடாது என்று சொன்னவர். அவர் இன்று நான் வளர்ந்திருப்பதை பார்த்து பெருமைப்பட்டு அழுதது, என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

    குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் குறைந்திருக்கிறது. கல்வி, சுகாதாரம் உள்பட அனைத்திலும் தமிழகம் வளர்ந்து கொண்டே வருகிறது. கல்வி மேம்பட, மேம்பட மற்ற காரணிகளும் குறையும். அதுபோல தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் தமிழகத்தில் குறைந்து வருகிறது.

    எளிதில் அணுகுபவராக இருப்பவரே என்னை பொறுத்த வரையில் உலக அழகி, இந்திய அழகி. உதவி என்று வருபவர்களுக்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும். உலக அழகி போட்டியில் பங்கேற்பதற்கு தமிழ் மொழி ஒரு கூடுதல் பலனாக இருக்கும். ஏனெனில் தமிழ் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று. தமிழின் கலாசாரம், இலக்கியம், தொன்மை தெரிந்தவர்களுக்கு தான் அதன் முக்கியத்துவம் தெரியும்.

    தமிழில் இருப்பதுபோல சிறப்பு அம்சங்கள் வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழ் மொழியை கற்பது கஷ்டம். தமிழன் எங்கு சென்றாலும் அந்த மொழியை கற்றுக்கொள்வான். அந்த வகையில் இது எனக்கு கூடுதல் பலன் அளிக்கும் என்று நம்புகிறேன்.

    திருநங்கைகளின் சம உரிமைகளுக்காக பணியாற்ற விரும்புகிறேன். அழகை வைத்து மட்டுமே இந்திய அழகிகள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. நீங்கள் யார்? நீங்கள் எப்படி? என்ன செய்கிறீர்கள்? என்பதை வைத்தே அது தீர்மானிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பல்வேறு சமுதாய பங்களிப்புகளை செய்து வரும் இந்திய அழகி அனுகீர்த்தி வாஸ், விரைவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளார்.  #MissIndia #AnukreethyVas #Tamilnews 
    ×