search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MR Radha"

    • ஒரு நாள் ராதா விடுதலையானார். போலீஸ் அதிகாரி “சார் நீங்கள் உடனே கிளம்பலாம்” என்றார்.
    • ‘பழகின இடம். டக்குனு போகமுடியுமா? இருங்க குளிச்சிட்டு வாரேன்’ என்று நிதானமாகவே கிளம்பினாராம் ராதா.

    1975ஆம் ஆண்டு வந்த அவசரநிலை சட்டத்தால் (மிசா) எம்.ஆர். ராதா கைது செய்யப்பட்டார். இந்தச் சட்டத்தால் கைதான இந்தியாவின் ஒரே நடிகர் அநேகமாக ராதா ஒருவர்தான்.

    வீட்டில் தூங்கி கொண்டிருந்த எம்.ஆர்.ராதா அவர்களை இரவில் எழுப்பி மிசாவில் கைது செய்து சிறையில் அடைந்தார்கள்.

    சிறையில் அவரை பார்க்க வந்த அவரது மனைவி, "இனிமே இப்படி செய்யமாட்டேன்னு" எழுதிக் கொடுத்தா விட்டுருவாங்கலாமே... நீங்க எழுதிக் கொடுக்க வேண்டியதுதானே? என்று புலம்பினார்.

    எம்.ஆர்.ராதா பதில் சொன்னார்; "அட நீ வேற...தூங்கிக்கிட்டு இருந்தவனை தூக்கிட்டு வந்து ஜெயிலிலே போட்டுருக்காங்க. இனிமே தூங்கமாட்டேன்னா எழுதி கொடுக்கமுடியும்..?அவனா புடிச்சான்...அவனே விடட்டும்!"

    நடிகவேள் ராதாவின் மரண கலாய்!

    ஒரு நாள் ராதா விடுதலையானார். போலீஸ் அதிகாரி "சார் நீங்கள் உடனே கிளம்பலாம்" என்றார்.

    'பழகின இடம். டக்குனு போகமுடியுமா? இருங்க குளிச்சிட்டு வாரேன்' என்று நிதானமாகவே கிளம்பினாராம் ராதா.

    இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பாவிக்கும் துறவு மனநிலையை ராதா பெற்றிருந்தார்.

    -வள்ளியம்மை

    • காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்த பெரியார், அண்ணா, சம்பத் மூவரும் தரையில் அமர்ந்தே ‘இழந்த காதல்’ என்ற அந்த நாடகத்தை ரசித்தனர்.
    • திராவிடர் கழக மாநாடுகள் நூறு நடத்துவதும் சரி.. எம்.ஆர்.ராதா நாடகம் ஒன்னு நடத்துறதும் சரி என்று பாராட்டிப் பேசிவிட்டு அமர்ந்தார்.

    நடிகவேள் எம்.ஆர்.ராதா இந்திய வரலாற்றிலேயே ஒப்பிட முடியாத தனித்துவம் மிக்க தைரியக்கலைஞன். அவர் வெறுமனே நடிப்பால் பெயர் பெற்றவரல்லர். கலகங்களை நிகழ்த்திய துணிச்சலாலும் தான் நம்பிய கொள்கைகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நேர்மைக்காகவும் பெயர் பெற்றவர். கதாநாயகர்கள் தொடங்கி தயாரிப்பாளர்கள் வரைக்கும் யாருக்கும் பயப்படாதவர்; பணிந்து போகாதவர். அவரை எந்த நடிகரோடும் ஒப்பிடவே முடியாது.

    தான் நடித்த எந்தப் படத்தின் வெற்றி விழாக்களிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. காரணம் கேட்டால் 'வியாபார ரீதியாக வசூலைக்குவித்த படங்களுக்கே விழா கொண்டாடப்படுகிறதே தவிர, நன்றாக நடித்திருக்கிறோம் என்று விழா கொண்டாடப்படுவதில்லையே' என்றார்.

    1966 -இல் தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாய் இருந்தது. ஆனால், 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே, விருது வாங்கமாட்டேன்' என்று மறுத்துவிட்டார் ராதா.

    நாடகத்தில் போலீஸ் வருவதுபோல காட்சி இருக்கும். அப்போது ராதா உடன் நடிப்பவர் பயப்படுவதுபோல நடிப்பார். உடனே ராதா வசனம் பேசுவார். 'ஏன்டா பயப்படுறே? போலீஸ்னா என்ன பெரிய கொம்பா? (ரசிகர்களைப் பார்த்து கைநீட்டி) எல்லாம் ஓசி டிக்கெட்ல முன்னாடி உட்கார்ந்திருக்கான் பாரு. காசு கொடுத்தவன்லாம் பின்னாடி உட்கார்ந்திருக்கான்' ராதாவின் இந்த நக்கல் தாங்காமல், ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள் எழுந்து செல்வதும் உண்டு.

    அப்போதைய அரசு ராதாவின் நாடகங்களைக் கண்காணித்து ரிப்போர்ட் அளிக்குமாறு சிஐடிகளை அனுப்பியது. அவர்களும் நாடகம் ஆரம்பிக்கும் முன்னரே முதல் வரிசையில் வந்து குறிப்பெடுக்க அமர்ந்தார்கள். "எவன்டா அவன்? கவர்மெண்ட் ஆளு மாதிரி தெரியுது. போய் டிக்கெட்டு வாங்கியாரச் சொல்லு. முன்வரிசை டிக்கெட்15 ரூபாய்" தன் மேனேஜரிடம் சொல்லி அனுப்பினார் ராதா. அவரும் சிஐடிக்களிடம் சொன்னார். அவர்களும் டிக்கெட் வாங்கி வந்து பின் நாடகம் பார்த்தனர்.

    மறுநாள் கமிஷனர் அருள் ராதாவைக் கூப்பிட்டு அனுப்பினார். அவர் மிகவும் கண்டிப்பானவர். டிபார்ட்மெண்ட்டே அவரைப்பார்த்து தொடை நடுங்கிய காலம் அது. "நாடகத்துக்கு வந்த சிஐடிக்களை 15 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு வர சொன்னீங்களா?"

    " ஐயா நீங்க தப்பா நினைக்கக் கூடாது. சர்க்காருக்குப் புரியணும். நாங்க கலைஞர்கள். நாங்க பண்றது வியாபாரம். அந்த ஸ்தலத்திற்கு யார் வந்து உட்கார்ந்தாலும் காசு கொடுத்துத்தான் ஆகணும்"

    கமிஷனருக்கு ராதாவின் வாதம் நியாயமாகப்பட்டது. அன்றும் நாடகம் நடந்தது. இரண்டு சிஐடிகள் வந்தார்கள். முன்வரிசை டிக்கெட்டை 100 ரூபாய் ஆக உயர்த்தினார் ராதா. 200 ரூபாய் கொடுத்த பின்பே அவர்கள் உள்ளே நுழைய அனுமதித்தார் ராதா.

    குமாரபாளையத்தில் அப்போது நாடகம் நடந்துகொண்டிருந்தது. மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் மேலாளர் வேக வேகமாக ஓடி வந்தார். அவருக்கு மூச்சு வாங்கியது.

    " பெரியார் வந்திருக்கார். கூடவே அண்ணாவும் ஈவிகே சம்பத்தும் வந்திருக்காங்க"

    " எதுக்கு?"

    " நாடகம் பார்க்கத்தான்"

    " பார்த்துட்டுப் போகட்டும்"

    " உட்கார வைக்க இடம் இல்லையே"

    " அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்ற? இஷ்டம் இருந்தா தரையில் உட்கார்ந்து பார்க்கட்டும். இல்லைன்னா போகட்டும்"

    " இல்ல அவங்க ரொம்பப் பெரியவங்க.." "என்னை விடப் பெரியவங்களா வேற யாரையும் நான் நினைத்துக்கூட பார்க்கறதில்லை"

    மேனேஜருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை. காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்த பெரியார், அண்ணா, சம்பத் மூவரும் தரையில் அமர்ந்தே 'இழந்த காதல்' என்ற அந்த நாடகத்தை ரசித்தனர்.

    இடைவேளை நேரம்... மேடையேறினார் அண்ணா... "அழையா வீட்டில் நுழையா சம்பந்திகள் போல நாங்கள் வந்துள்ளோம். திராவிடர் கழக மாநாடுகள் நூறு நடத்துவதும் சரி.. எம்.ஆர்.ராதா நாடகம் ஒன்னு நடத்துறதும் சரி" என்று பாராட்டிப் பேசிவிட்டு அமர்ந்தார். ராதாவுக்கு மகிழ்ச்சி. நாடகத்தை முழுதாகப் பார்த்து விட்டே அவர்கள் கிளம்பினார்கள்.

    -அம்ரா பாண்டியன்

    • மளமளவென்று சிவாஜியுடனும் எம்.ஜி.ஆருடனும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து முடித்தார் எம்.ஆர். ராதா.
    • தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பல்வேறு கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து, பல சாதனைகளையும் சரித்திரங்களையும் படைத்தார்.

    ரத்தக்கண்ணீர்.. எம்.ஆர். ராதாவின் அட்டகாசமான நடிப்பில் 1954-ல் வெளியான அந்தப்படம் அபாரமான வெற்றியை பெற்று ஆரவாரத்தோடு அதிக நாட்கள் ஓடியது.

    ஆனாலும் அதற்குப் பின்னரும் எந்த பட அதிபரோ இயக்குனரோ எம்.ஆர்.ராதாவை நடிக்க அழைக்கவில்லை.

    ஒரு பக்கம் பயம்.

    எம்.ஆர். ராதாவை நம்மால் சமாளிக்க முடியுமா ?

    இன்னொரு பக்கம் சந்தேகம்.

    ரத்தக்கண்ணீரில் நடித்தது போல இன்னொரு வேடத்தில் அவரால் சிறப்பாக நடிக்க முடியுமா?

    ஓரிரு மாதங்கள் அல்ல. மூன்று ஆண்டுகள் இப்படியே ஓடிப் போனதாம். எவரும் அவரை நடிக்க கூப்பிடவில்லை.

    எம்.ஆர்.ராதாவும் அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. ஆனாலும் அவரது நண்பர்கள் கவலைப்பட்டார்கள்.

    "அண்ணே, இவ்வளவு சிறப்பா நடிச்சும் உங்களை யாரும் நடிக்க கூப்பிடலியே, அதனால ஏதாவது கோவிலுக்கு போய் நீங்க வேண்டிக்கிட்டா..."

    இடை மறித்தார் எம்.ஆர்.ராதா.

    "கோவிலுக்கு போய் வேண்டிக்கிட்டா..? பூசாரி புரொடுயூசர் ஆகி சான்ஸ் கொடுப்பாரா? இல்ல சாமி பைனான்ஸ் பண்ணி படம் எடுக்குமா ?"

    நண்பர்கள் வாயடைத்து நின்றார்கள்.

    "ஏண்டா பேச மாட்டேங்கறீங்க ?டேய், கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய் இருந்தாலும் இருப்பேனே தவிர கோவிலுக்குள்ளே போய் ஒரு நாளும் நிக்க மாட்டேண்டா !"

    ஆம். எம்.ஆர்.ராதா சொன்னது போலவே தனக்கான சினிமா வாய்ப்புகளை வேண்டி எந்தக் கோவிலுக்கும் போகவில்லை. எந்த சாமியையும் கும்பிடவில்லை.

    அவர் முன் அப்போது இருந்த கடமைகளை குறைவில்லாமல் நிறைவுடனே செய்து கொண்டிருந்தார் எம்.ஆர். ராதா. இடைவிடாமல் தொடர்ந்து தனது குழு மூலம் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார்.

    இந்த நேரத்தில் ஏ.பி.நாகராஜன், வி.கே.ராமசாமி இருவரும் சேர்ந்து 'லட்சுமி பிக்சர்ஸ்' என்ற பெயரில் எம்.ஆர்.ராதாவை கதாநாயகனாக நடிக்க வைத்து "நல்ல இடத்து சம்பந்தம்" என்ற படத்தைத் தயாரித்தார்கள்.

    குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம், நிறைய நாட்கள் ஓடி ஏகப்பட்ட லாபத்தை தயாரிப்பாளர்களுக்கு சம்பாதித்து கொடுத்து இருக்கிறது.

    அவ்வளவுதான்.

    காலம் மாறியது.

    கதவுகள் திறந்தது.

    "மாறுபட்ட வேடங்களிலும் எம்.ஆர். ராதா சிறப்பாக நடிப்பார். குறுகிய காலத்தில் படத்தைத் தயாரிக்க ஒத்துழைப்பு தருவார்" என்ற நம்பிக்கை பட அதிபர்களிடையே ஏற்பட ஆரம்பித்தது.

    அப்புறம் என்ன ?

    போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்து எம்.ஆர்.ராதாவை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்தார்கள் தயாரிப்பாளர்கள்.

    1959-ல், சிவாஜி கணேசனுடன் எம்.ஆர்.ராதா இணைந்து நடித்த "பாகப்பிரிவினை" வெளி வந்தது.

    படம் சூப்பர் ஹிட்.

    எம்.ஆர். ராதாவின் வாழ்க்கையிலும் அது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    மளமளவென்று சிவாஜியுடனும் எம்.ஜி.ஆருடனும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து முடித்தார் எம்.ஆர். ராதா.

    தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பல்வேறு கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து, பல சாதனைகளையும் சரித்திரங்களையும் படைத்தார்.

    கடமையை கண்ணும் கருத்துமாக செய்வது என்பதுதான், ஆழ்மனதுக்கும், இந்த பிரபஞ்சத்துக்கும் பிடித்த அற்புதமான பிரார்த்தனை. அதை மட்டும் சரியாக செய்து வந்தால் காலம் ஒரு நாள் கை கொடுக்கும்...

    -ஜான்துரை ஆசிர் செல்லையா

    ×