search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakhimpur-Kheri Violence"

    • விவசாயிகளின் காயத்தில் உப்பை தேய்த்தது போன்று பாஜக செயல்பட்டு இருக்கிறது
    • கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக விவசாயிகளுக்கு எதிரானவர்கள்

    விவசாயிகள் மீது விபத்து ஏற்படுத்தி கொலை செய்த ஆஷிஷ் மிஸ்ராவின் தந்தை அஜய் மிஸ்ராவை, மக்களவை தேர்தலுக்காக லக்கிம்பூர் கேரி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    "விவசாயிகளின் காயத்தில் உப்பை தேய்த்தது போன்று பாஜக செயல்பட்டு இருக்கிறது. இந்த மக்களவை தேர்தலில் அஜய் மிஸ்ராவையும், பாஜகவையும் நாங்கள் ஒருசேர எதிர்க்க போகிறோம். கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக விவசாயிகளுக்கு எதிரானவர்கள். விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் விவசாயிகள் சங்க தலைவர் சர்வான்சிங் பாந்தர் அறிவித்துள்ளார்.

    2022-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உடன் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தனர். அவர்கள் செல்லும் வழியில் கேரி என்ற கிராமத்தில் மத்திய அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர்.

    அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் மகன் வாகனம் புகுந்ததில் 4 விவசாயிகள் உடல் நசுங்கி இறந்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர். மொத்தமாக இந்தச் சம்பவங்களில் 8 பேர் வரை உயிரிழந்தனர்.

    அமைச்சரின் மகன் இருந்ததாகக் கூறப்படும் கார், விவசாயிகள் மீது ஏறிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

    இதனையொட்டி, அஜய் மிஸ்ரா தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பாஜக விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அஜய் மிஸ்ராவுக்கு பாஜக வாய்ப்பளித்ததை கண்டு விவசாயிகள் கோபமடைந்துள்ளனர். தனது வேட்பு மனுவை அவர் வாபஸ் பெற வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ஒரு பக்கம் பாரத ரத்னா விருது கொடுத்து விட்டு, இன்னொரு பக்கம் விவசாயிகளை கொன்றவரின் தந்தைக்கு எம்.பி சீட்டு கொடுக்கிறது பாஜக. இது பாஜகவின் பாசாங்குத்தனம் என்று விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மிட்டல் தெரிவித்துள்ளார்.

    ×